பொது சிவில் சட்டம் அவசியமா? - மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் எழுப்பும் கேள்வி

By Guest Author

பொது சிவில் சட்டம் அவசியமா என்ற கேள்வியை எழுப்புகிறார் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன். நாட்டில் எழும் சிவில் பிரச்சினைகளைக் கையாள போதுமான சட்டங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது...

மேனாள் நீதிபதிகள் கே.சந்துரு மற்றும் ஹரி பரந்தாமன் ஆகியோரின் வெவ்வேறு மேற்கோள்களுடன் இது தொடர்பாக ஒரு கட்டுரை முன்பே எழுதி உள்ளதாலும், அதிலிருந்து வேறுபட்ட கருத்து எனக்கில்லை என்பதாலும், அவர்களது கட்டுரைகளின் இணைந்த தொடராக என் கருத்தை இங்கே முன்வைக்கிறேன். எனவே, அவர்கள் மேற்கோள் காட்டிய விபரங்களை மீண்டும் எழுதாமல் என் பார்வையில் இதை எழுதுகிறேன்.

முதலில் ஒரு சட்டத்தின் தேவையை உணரும் முன், அது இயற்றப்படும் தேசத்தின் பூகோள, சமூக மற்றும் கலாச்சார வேறுபாடுகளையும், அது எவ்வாறு ஒன்றியமாக ஆனது என்ற அரசியலமைப்பு சட்ட பின்னணியையும் அறிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். இங்கு ஒன்றிய அரசும், மாநில அரசும் தனித்தனியாகவும், பொதுவாகவும் சட்டமியற்றும் அதிகாரம் பெற்றவை. எனவே, இந்தியாவின் அரசியலமைப்பு ஒரே மொழி, ஒரே இனம், ஒரே தேசம், ஒரே சட்டம் என்ற அடிப்படையில் கட்டப்பட்டதல்ல.

அரசியலமைப்புச் சட்டம் பகுதி 4-ல் சொல்லப்பட்ட வழிகாட்டுதல் என்பது வெறும் வழிகாட்டுதலே. அது மூன்றாவது பகுதியில் கூறப்பட்ட அடிப்படை உரிமை போல நீதிமன்றம் மூலம் நடைமுறைப்படுத்த இயலாதது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4-ல் உள்ள பிரிவு 44-ல் சொல்லப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் ( அதாவது திருமணம், சொத்துரிமை, வாரிசு உரிமை, விவகாரத்து, குழந்தை தத்தெடுத்தல் போன்ற தனி மதம் சார்ந்த சமூகப் பழக்க வழக்கங்கள் ) ஒன்றாக ஒரே போல இருக்க வேண்டிய அவசியமல்ல. இந்து மற்றும் அது சார்ந்த மதங்கள், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களைச் சார்ந்தவர்களுக்கு தற்போதே தனிச்சட்டங்கள் இருக்கின்றன. இந்து திருமணச் சட்டம், ஷரியத், கிறிஸ்தவ திருமணச் சட்டம் போன்றவை முன்பே இருக்கின்றன.

ஒருவேளை மக்களே தான் விரும்பிய திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தில் பதிந்தால் அவர்களுக்கு ஒரு பொது சட்ட உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதை சற்று விரிவுபடுத்தி மக்களின் விருப்பமாக்கினால் போதும். இதற்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை. அது ஆப்ஷன் ஆக இருக்கலாம். இந்தியாவில் எல்லா சட்டங்களும் ஒரே மாதிரி பொதுவானதாக இல்லை. ஒரு மாநில சட்டமும் அதே சம்பந்தப்பட்ட விஷயத்தில் மற்றொரு மாநிலம் இயற்றும் சட்டமும் வெவ்வேறாக இருக்கலாம். எனவே, பொதுப்பட்டியலில் உள்ள சட்டம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம். திருமணம், வாரிசு போன்ற விஷயங்கள் பொதுப்பட்டியலில் உள்ளதால் அது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடலாம்.

இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே மொழி , ஒரே சட்டம் என்பது பாஜக அரசின் இந்துத்துவா கொள்கையை தூக்கிப் பிடிக்கும் சதி வலையாகும். இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்றும் முயற்சி இது. தற்போது சட்ட ஆணையத்தின் பரிந்துரையோ அல்லது வேறு பரிந்துரையோ இல்லாதபோது பொது சிவில் சட்ட முயற்சி ஒரு பாசிச போக்குடைய முயற்சி. இதில் மற்றொரு நகை முரணைக் காணலாம்.

அரசியலமைப்புச் சட்டம் 47-வது பிரிவில் மது அருந்துதல் உடல் ஆரோக்கியத்துக்கு கெடுதல்; எனவே, மது இல்லா மாநிலமாக மாற்ற சட்டமியற்ற வழிகாட்டப்பட்டுள்ளது. ஆனால், இன்று குஜராத் மாநிலம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு அமலில் இல்லை. அதாவது, அரசியலமைப்புச் சட்டத்தின் 47-வது விதியை அவை கடைப்பிடிப்பதில்லை. எனவே, வழிகாட்டுதல் நெறிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்டப் பகுதி 4 முழுவதும் அமல்படுத்தப்படவில்லை. குஜராத்தில்கூட முழு மதுவிலக்கு என்பதில் தற்போது தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, 44-வது பிரிவில் உள்ள பொது சிவில் சட்டம் தற்போதைக்கு அவசியமானது அல்ல. காலம் வரும் போது சிறுபான்மையினரின் ஒப்புதலுடன் அமல்படுத்தலாம்.

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன்

ஷா பானு வழக்கில் பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு ஜீவனாம்சம் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படை உரிமை 15(3)-ன் கீழ் ஜீவனாம்சம் வழங்குவதற்கு ஏற்ப CRPC 125-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. முத்தலாக் சட்ட விவகாரத்து நடைமுறையும் ஏற்கெனவே எடுக்கப்பட்டு பெண் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. அதுவே போதுமானது. இன்று இந்தியாவில் சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ப கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் 25 முதல் 30 வரையிலான பிரிவுகள் தற்போது கேலிப் பொருளாகிவிட்டன. தேவாலயங்களை இடிப்பது, மசூதிகளை இடிப்பது, முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் கொளுத்தப்படுவது போன்றவை இந்தியாவின் நிலையாண்மை, ஒற்றுமை, மதநல்லிணக்கம் போன்றவற்றை பொசுக்கிவிட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெரும்பான்மை அரசு பாசிசத்துடன் சிறுபான்மை மக்களையும், மனித உரிமை குரல் கொடுப்போரையும் நிர்மூலமாக்க முயற்சிக்கிறது. எனவே, தற்போதுள்ள எண்ணற்ற தனிச்சட்டங்கள் மற்றும் பொது நோக்கில் இயற்றப்பட்ட சட்டங்களே போதுமானவை. அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த இந்த 73 வருடங்களில் பொது சிவில் சட்டம் இல்லாததால் எந்தப் பிரச்சினையும் குடி மூழ்கிப் போகும் அளவுக்கு வரவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் வந்தபோதுகூட அவை சிறப்பு சட்டங்களால் பாதுகாக்கப்பட்டுவிட்டன.

தங்களின் நம்பிக்கை, அடையாளம் ஆகியவற்றை அழிக்க அல்லது அச்சுறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே பொது சிவில் சட்டத்தை இன்றைய அரசியல் சூழலில் சிறுபான்மையினர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பு நியாயமானதே. இலங்கையில் நடந்த இனப்படுகொலையைப் போல இந்தியாவிலும் சிறுபான்மையினர் நடத்தப்பட வாய்ப்புண்டு.

எனவே, சுதந்திரம் பெற்று சட்டப்படி இந்தியாவில் வாழ விரும்பிய சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்கிய பின் அவர்களை அச்சத்துக்கு உள்ளாக்குவது அரசியலமைப்புச் சட்ட குடியுரிமை சட்டத்துக்கு புறம்பானது. அதை பொது சிவில் சட்டம் மூலம் அடைய நினைப்பது சட்டத்துக்கு புறம்பானது. நாட்டை பெரு நிறுவனங்களுக்கு விற்று, மக்களாட்சியை ஆர்எஸ்எஸ் விருப்பத்துக்கு விட்டு, இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட சட்டத்தின் ஆட்சிக்கு புறம்பாக பொது சிவில் சட்டமியற்ற எத்தனிக்கும் மத்திய அரசின் நோக்கம் முழுவதும் தவறானது.

> முந்தைய அத்தியாயம்: பொது சிவில் சட்டத்துக்கு கோவா முன்னுதாரணம் அல்ல. ஏன்? - ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் | பகுதி 2

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE