செல்லக்குட்டி நெத்திலி, கூத்தாடி சூரையன், மவராசன் இறால்!

By சமஸ்

கடலுக்கும் மனித இனத்துக்கும் உள்ள இணைப்புப் பாலம் என்று மீன்களைச் சொன்னால், அந்த வர்ணனை மிகையாக இருக்காது என்று நினைக்கிறேன். கடலோடிகளின் உலகில் எவ்வளவு சுவாரசியங்கள் உண்டோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத சுவாரசியம் கொண்டது மீன்கள் உலகம்.

உங்களுக்கு எத்தனை தெரியும்?

உலகில் மொத்தம் 35,000 மீன் இனங்கள் இருப்பதாக அறிவியல் உலகம் சொல்கிறது. இவற்றில் 2,500 இனங்கள் தமிழகக் கடற்கரைப் பகுதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருகாலத்தில், தமிழகக் கடற்கரையோரக் கிராமப் பெரியவர்கள் யாரைக் கூப்பிட்டுக் கேட்டாலும், அநாயாசமாக ஐநூறுக்கும் மேற்பட்ட மீன்களின் பெயர்களைப் பட்டியலிடுவார்

களாம். இன்றைக்கெல்லாம் நூறு மீன்களின் பெயர்களைச் சொல்லும் மீனவர்களையே தேட வேண்டி யிருக்கிறது. பாரம்பரிய அறிவை இழத்தல் என்பது நம் சமூகத்தின் எல்லாத் தரப்பிலும் நடந்துகொண்டிருப்பதன் சாட்சியங்களில் ஒன்று இது. நூற்றுக்கும் மேற்பட்ட மீன் இனங்களை நாம் ஒவ்வொருவரும் பார்த்திருந்தாலும், அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய - நம் வாழ்க்கையோடு நெருக்கமான - சில மீன்களின் உலகை மட்டும் இங்கே கொஞ்சம் பார்க்கலாம்.

செல்லக்குட்டி நெத்திலி

அளவில் சின்ன மீனான நெத்திலி உலகின் பெருங் கடல்கள் அத்தனையிலும் காணக் கிடைக்கும் இனம். மீன் உணவு அறிமுகமே இல்லாத சைவப் பிரியர்களைக்கூடச் சுண்டியிழுக்கும் மணமும் ருசியும் கொண்டவை நெத்திலி மீன்கள். நெத்திலிக் கருவாட்டு வருவல் என்றால் இன்னும் விசேஷம்! மீன் ருசியர்களுக்கு மட்டுமல்ல; மீனவர்களுக்கும்கூட நெத்திலிகள் செல்லங்கள். நெத்திலி மீன்பாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் சங்கடம் என்னவென்றால், அது கூடவே மழையையும் கூட்டிக்கொண்டு வரும் என்பது. கூட்டம்கூட்டமாகப் பிடிபடும் பல்லாயிரக் கணக்கான நெத்திலிகளை உடனே விற்கவும் முடியாது; கருவாடாக்குவதும் சிரமம் என்கிறார்கள்.

பறக்கும் கோலா

கோலா என்றால், கரையில் உள்ளவர்களுக்கு மீன் கோலா உருண்டை ஞாபகத்துக்கு வரலாம். கொஞ்சம் வயதான கடலோடிகளைச் சந்தித்தால், “அது ஒரு வீர விளையாட்டு அல்லா?” என்று சிரிப்பார்கள். இப்போதுபோல, அந்நாட்களில் வலை கொண்டு கோலாவைப் பிடிக்க முடியாதாம். ஆழ்கடல் தங்கலுக்குச் சென்று கோரிதான் பிடிப்பார்களாம். விரதம் இருந்து, வீட்டிலிருந்து வேப்பங்குழை எடுத்துச் சென்று, கயிற்றில் கட்டி கடலில் மிதக்க விட்டு, “ஓ வேலா, வா வேலா, வடிவேலா...” என்று கூப்பிட்டுக் காத்திருந்தால், ஒரு கோலா மீன் வருமாம். அதைப் பிடித்து, மஞ்சள் தடவி வணங்கி, “ஓ வேலா, வா வேலா, கூப்பிட்டு வா வேலா...” என்று நீரில் விட்டால், அது கூட்டத்தையே கூட்டிவருமாம். கோலா மீன்கள் புயல் வேகத்தில் பறக்கக் கூடியவை. அதுவும் கூட்டம்கூட்டமாக. பறக்க ஆரம்பித்தால் ஆயிரம் அம்புகள் படகு நோக்கிப் பாய்வதுபோல இருக்கும்; அதைச் சமாளித்துப் பிடிப்பதுதான் சவால் என்கிறார்கள்.

கூத்தாடி சூரையன்

நமக்குக் கிடைக்கும் மீன்களிலேயே அதிக புரதச் சத்து மிகுந்தது சூரை. மாலத்தீவில் ஏக மவுசுள்ள மாசிக் கருவாடு என்பது சூரைக் கருவாடுதான். சரியான கூத்தாடியான சூரைதான் மீன் இனத்திலேயே அதிக வேகத்தில் நீந்தும் மீன். மஞ்சள் சூரை மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும் என்கிறார்கள். திமிங்கிலங்களுக்கும் சுறாக்களுக்கும் பிடித்தமான உணவு சூரை. ஆனால், ஓங்கல்கள் (டால்பின்கள்) சூரைக் கூட்டத்தோடு உற்சாகக் கூத்தடிக்கும். எப்போதுமே சுறாக்கள், சக திமிங்கிலங்கள் மத்தியில் ஓங்கல்களுக்குக் கொஞ்சம் ‘பயம்' உண்டாம். இதனாலேயே புத்திசாலி சூரைகள் என்ன செய்யுமாம் என்றால், ஓங்கல்களைத் துணைக்கு அழைத்துக்கொள்ளுமாம். ஓங்கல்கள் எங்கே வட்டம் இடுகின்றனவோ அங்கே வலையைப் போட்டால், சூரையன்கள் கூட்டம்கூட்டமாகப் பிடிபடுவான்கள் என்கிறார்கள்.

சாளையோ சாளை

அளவில் சின்னதும் ருசியில் அலாதியானதுமான சாளை மீன்கள் உடலில் நிறைய எண்ணெய்ப் பசை உள்ளவை. இவை, நினைவிழத்தல் உள்ளிட்ட முதுவயது நோய்களைத் தடுக்கும் என்கிற மீனவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றன சமீபத்திய அறிவியல் ஆய்வுகள். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் சாளை மீன்களுக்கு உண்டு என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அதிரடித் திருக்கை

உடல் வலிக்கு நல்ல மருந்து என்று திருக்கை மீன்களைச் சொல்வது உண்டு. ஆனால், கடலில் திருக்கைகளை எதிர்கொள்வது உயிர் சவால். கண்கள் மட்டும் வெளியே தெரிய உடல் முழுவதையும் மணலில் புதைத்துக்கொண்டு, மறைந்திருந்து வேட்டையாடும் திருக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இவற்றில் சில வகைகள் மின்சாரம் பாய்ச்சி எதிரிகளைக் கொல்லக் கூடியன. திருக்கையின் மிகப் பெரிய பலம் அதன் வால். திருக்கையின் நீண்ட வாலில் உள்ள நுண்ணிய முட்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும்.

கனவான் கணவா

மீன் அல்ல; மீன் மாதிரி உள்ள மீன் கணவா. எட்டுக் கரங்கள், இரண்டு உணர்கொம்புகள், உறிஞ்சிகள் என வித்தியாசமாகத் தோற்றம் தரும் கணவாவுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. ஆனால், கூண்டு வைத்து மீன் பிடிப்பவர்களுக்குச் சிம்ம சொப்பனம் கணவா. ‘கடல் பச்சோந்தி’யான கணவா, எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள இடத்தின் நிறத்துக்கேற்பத் தன் தோலின் நிறத்தை மாற்றிக்கொண்டு அசையாமல் கிடக்கும். தனித்துவம் மிக்க இதன் இரு கண்களில் ஒன்று, உணர்கொம்பின் உதவியுடன் முன்புறம் பார்க்க, மற்றொன்று பின்புறம் பார்க்கும். எதிரி நெருங்கிவிட்டதாகக் கணிக்கும்போது, கருப்புத் திரவம் ஒன்றைப் பாய்ச்சும். கூடவே, நரம்புகளுக்கு அதிர்வு கொடுத்து ஸ்தம்பிக்க வைக்கும். மீறி அதைப் பிடித்தால், அதன் ஒவ்வொரு கரங்களையும் வெவ்வேறு இடத்தில் பாய்ச்சி, கீழ்நோக்கி இழுக்கும் என்கிறார்கள்.

இறால் மகராசன்

ஒருகாலத்தில் அதிகம் சீண்டப்படாத இறால்கள்தான் இன்றைக்குத் தமிழக மீனவர்களுக்கு வாரித்தரும் மகராசன்கள். “ஆனி, ஆடி, ஆண்ட புரட்டாசி” என்று மீனவர்களால் வர்ணிக்கப்படும் கச்சான் காலம்தான் இறால் பருவம். கடலடி அதிகம் விழும் காலம் இது. பால்போல ஆழி பொங்கும். ஆனால், இறால் பாடும் இப்போதுதான் அதிகம் இருக்கும். ஆகையால், “கச்சான் காலத்தில் மச்சான் துணையுண்டு” என்று பாடிக்கொண்டே கடலுக்குள் செல்கிறார்கள் மீனவர்கள்.

(அலைகள் தழுவும்)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்