மாநில உரிமைகளை, சிறுபான்மை உரிமைகளை பொது சிவில் சட்டம் பாதிக்கும்: திமுக

By செய்திப்பிரிவு

மாநில உரிமைகளையும், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் உரிமைகளையும் பாதிக்கும் என்பதால் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதுதான் திமுகவின் இறுதியான - தீர்க்கமான கொள்கை பிரகடனம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இதை வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு கடிதத்துக்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எழுதிய பதில் இது:

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம், மக்களவையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்துடன், சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கி வரும் கட்சியாகும். பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்கு, சம்பிரதாயங்கள், பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், பிறப்பின் அடிப்படையிலான வேற்றுமைகள் ஆகியவற்றுக்கு எதிரான வலிமையான குரலை திமுக எழுப்பி வந்துள்ளது.

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, மந்திரங்கள் ஓதி திருமண செய்யும் முறைக்கு மாற்றாக மக்களின் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்து கொள்ளும் சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்படி செல்லத்தக்கதாக்கியது. சாதி கடந்து அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்குரிய “சமத்துவபுரங்கள்” தி.மு.கழக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் பரவலாக அமைக்கப்பட்டன.

அதேநேரத்தில், இந்திய மக்கள் பல்வேறு மத, மொழி, இனக் குடும்பமாக, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற அடிப்படையில் அவரவர் பழக்கவழக்கங்களை அவரவர் பின்பற்றுவதை ஆதரித்து வந்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பிரிவு 25-ன்படி குடிமக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மத வழக்கங்களைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை பெற்றவர்களாவர். இத்தகைய வேறுபாடுகள் நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை வலிமையாக்கி உள்ளது.

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஒரு முறை “தி.மு.க என்பது, பல ஆறுகள் கலப்பினும் தன்னுடைய தனித் தன்மையை இழக்காத கடல் போன்றது” என்று குறிப்பிட்டார். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் “ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு” என்ற கொள்கையின் விளைவாக ‘பொது சிவில் சட்டத்தை’ அறிமுகப்படுத்தும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும்.

21வது சட்ட ஆணையம், பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் விரிவான கேள்விகளை முன்வைத்தும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டும், அதனடிப்படையில் பொது சிவில் சட்டம் அவசியமானதுமல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என்று முடிவெடுத்தது. பொது சிவில் சட்டத்தை திமுக வலிமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 44 குறிப்பிடும் பொது சிவில் சட்டம், பொதுவான மதம் சாராத பல்வேறு சமூகச் செயல்களுக்கு, குறிப்பாக இரு நபரிடையே ஒப்பந்தங்கள், சொத்துப் பரிமாற்றத்துக்கான சட்டங்கள், பணப் பரிமாற்ற ஆவணங்கள், கருவிகள் குறித்த சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரத்தை வழங்குகிறதே தவிர, மத வழக்கங்களுக்கானதல்ல.

இந்திய அரசியல் நிர்ணய சபை, இந்தப் பிரிவு 44 குறித்த விவாதத்தை மேற்கொண்டபோது, சென்னை மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் போக்கர் பகதூர், “இந்தியாவில் பல்வேறு மக்கள் குழுக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடைபிடித்து வந்த பல்வேறு பழக்க வழக்கங்களை ஒரே அடியில் வீழ்த்திவிட முயற்சிக்கிறீர்கள். இதனால் நீங்கள் அடையவிருக்கும் நன்மை என்ன? அவர்கள் காலங் காலமாகப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களைக் கொன்று அவர்களது மனசாட்சியையும் கொல்வதைத் தவிர வேறு என்ன பயன் ஏற்படும்?

இத்தகைய கொடுங்கோன்மை மிக்க ஒரு பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறக் கூடாது. இந்து மதத்திலேயே உள்ள பல்வேறு குழுவினர், இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் நிலையில், நான் பேசுவதை காட்டிலும் கடுமையாக அவர்கள் பேசும் நிலையில் இந்தப் பிரிவு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறக் கூடாது. பெரும்பான்மை மக்கள் இச்சட்டப் பிரிவிவை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னாலும், அதுவும் தவறான வாதம்தான். பெரும்பான்மை மக்களின் கடமை, சிறுபான்மை மக்களின் புனிதப் பழக்க வழக்கங்களைப் பாதுகாப்பதுதான். சிறுபான்மை மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்துவது ஜனநாயகம் என்று கூற முடியாது. அது மிகப் பெரிய கொடுங்கோன்மை” என்று பேசினார்.

அந்த எதிர்ப்பு இன்றைக்கும் பொருத்தமானது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனிமனித உரிமைகளை பறிப்பது ஏற்புடையதல்ல. சிறுபான்மை மக்களை பாதிக்கும் ஒன்றாக மட்டும் நான் பார்க்கவில்லை. பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும். டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது, இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்பவர்கள், இதனைப் பின்பற்றலாம் என்றுதான் குறிப்பிட்டார். ஆனால், இந்த அரசு இச்சட்டத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீதும் திணிக்கும் முயற்சியை மேற்கொள்கிறது. இந்திய வாரிசுரிமைச் சட்டம்-1954, மத நம்பிக்கையற்றவர்களுக்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பொதுவான சட்டமாகும்.

மேலும், அடிப்படை உரிமைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் எந்தச் சட்டத்தையும் தி.மு.கழகம் ஏற்றுக் கொள்ளாது. அரசமைப்புச் சட்டப் பிரிவு-29, சொல்வது என்னவென்றால், இந்திய நிலப் பரப்பில் வாழும் ஒவ்வொரு குழுவினருக்கும், அவர்களுடைய மொழி, எழுத்து, பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் உரிமை உண்டு. தி.மு.கழக ஆட்சிக்காலத்தில் குடிமக்கள் யாரையும் பாதிக்காத வகையில் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, 1989ஆம் ஆண்டில் இந்த சொத்துரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்ற திருத்தத்தை நிறைவேற்றினார். பின்னர், ஒன்றிய அரசு அதே திருத்தத்தை 2005ஆம் ஆண்டு நாடு முழுமைக்கும் நடைமுறைப்படுத்தியது. அதுபோலவே, பலதார மணத்தைத் தடுக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றலாம். மணமுறிவு ஏற்படும்போது மனைவி, குழந்தைகள், பெற்றோர் ஆகியோருக்குத் தேவைப்படும் நிதியை வழங்குவதற்கு குற்றவியல் சட்டப் பிரிவு 125-ன்படி உரிமை இதற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு முக்கிய சட்டமாக தி.மு.கழக அரசு நிறைவேற்றிய சட்டம் “சிறப்புத் திருமணச் சட்டம்”. இதன்மூலம் சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்னுமொரு சீரிய நடவடிக்கை என்னவென்றால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற உத்தரவை பிறப்பித்து, அதன் மூலம் உரிய பயிற்சி பெற்ற யாராக இருந்தாலும், சாதிகளைக் கடந்து அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை ஏற்படுத்தி மானுடத்தை உயர்த்தியது. எங்களுடைய இன்னொரு ஆலோசனை என்னவெனில், மதங்களுக்கிடையேயான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன், ஒன்றிய அரசு இந்துமத சாதிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதிய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும் என்பது.

ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை பாதிக்கும் எந்த சட்டத்தையும் ஒன்றிய அரசு நிறைவேற்றக் கூடாது என்பதுதான். இந்த பொது சிவில் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 29 ஆகியவற்றை மீறிய சட்டமாக திராவிட முன்னேற்றக் கழகம் பார்க்கிறது. பொது சிவில் சட்டம், ஏற்கெனவே இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, பிரிவு-2(2)-ன்படி பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள் ஏனைய இந்துமத மக்களின் பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபட்டது எனினும், அவற்றைத் தடை செய்யக்கூடாது என்று கூறுகிறது. மேலும், இந்து மதத்தில் மட்டும்தான் கூட்டுக் குடும்ப முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையின் மூலம் வருமானவரித் துறை கூட்டுக் குடும்பத்தையே மொத்தமாக ஒரு வரி செலுத்துபவராக ஏற்றுக் கொண்டுள்ளது.

அரசமைப்புச் சட்ட அட்டவணை VI-ல் உள்ளபடி, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிஜோரம் ஆகிய மாநிலங்களுக்கு திருமணம், மணவிலக்கு, சமூகப் பழக்க வழக்கங்கள் ஆகியவை மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டவை. தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 87 சதவிகிதம், இஸ்லாமியர்கள் 6 சதவிகிதம், கிருத்தவர்கள் 7 சதவிகிதம். இந்த மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது சிவில் சட்டம் இத்தகைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு, நமது இந்திய நாடு என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக் கூடாது. எனவே, 22வது சட்ட ஆணையம் 21வது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று திமுக கூறுகிறது.

முந்தைய அத்தியாயம்: பொது சிவில் சட்டம் இல்லையென்றால் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் முன்னேற்றம் பெரிதும் தடைபடும் என்றும், சம நீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் அவசியம் என்றும், மதத்துக்கொரு சட்டம் இருந்தால் பெண்களுக்கு சமூக நீதி எப்போதும் எட்டாக்கனியாகி விடும் என்றும் தெரிவித்திருக்கிறார் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவரும், வழக்கறிஞருமான வானதி சீனிவாசன். | வாசிக்க > பெண்களுக்கு சம நீதி கிடைக்க ‘பொது சிவில் சட்டம்’ அவசியம்: வானதி சீனிவாசன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

27 days ago

மேலும்