நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு: தமிழ்நாடு உணர வேண்டிய உண்மைகள்

By அ.நாராயணமூர்த்தி

அதிகரித்துவரும் விவசாயம் - பொருளா தார நடவடிக்கைகள் காரணமாக நீருக்கான தேவையும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஆனால், எதிர் காலப் பயன்பாட்டுக்குத் தேவையான நீரின் அளவு பல்வேறு மாநிலங்களில் வேகமாகக் குறைந்து வருகிறது. மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட் டுள்ள மதிப்பீட்டின்படி, 2050ஆம் ஆண்டுக்குள் தண்ணீரின் தேவைக்கும் அளிப்புக்குமான இடைவெளி மிக அதிகமாக இருக்கும் என்பது புலனாகிறது.

இதன் காரணமாக மழைக் காலங்களில் நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பிப்ரவரி 2023இல் மத்திய நீர்வள அமைச்சகத்தால் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள நீர்நிலைகள் பற்றிய முதல் மொத்தக் கணக்கெடுப்பு (First Census on Water Bodies), இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கிறது. குறிப்பாக, தனிநபர் சராசரி நீர் அளவின்படி தண்ணீா்ப் பஞ்சம் மிகவும் அதிகமாக உள்ள தமிழ்நாட்டில், நீர்நிலைகள் மிகவும் அதிமாக ஆக்கிரமிக் கப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பின் முடிவுகள்: இதுவரை எந்த ஆதாரங்களிலிருந்தும் கிடைக்காத பல முக்கியத் தரவுகளை நீர்நிலைகளின் முதல் மொத்தக் கணக்கெடுப்பு முதன் முதலாக வெளிக்கொண்டுவந்திருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 24,24,540 நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை குட்டைகள் (59.5%). இவற்றைத்தவிர, குளங்கள் (15.7%), அணைகள் (12.1%), மீதமுள்ள 12.7% மற்ற நீர் ஆதாரங்கள் என இக்கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது.

எதிர்பார்த்தபடி, கணக்கிடப் பட்டுள்ள மொத்த நீர்நிலைகளில், 97.1% கிராமப்புறங் களிலும் மீதமுள்ள 2.9% நகர்ப்புறங்களிலும் அமைந் துள்ளன. மொத்த நீர்நிலைகளில் 83.7% பயன்பாட்டில் இருக்கின்றன. மீதமுள்ள 16.3% (3,94,500) நீர்நிலைகள் வறட்சி, கட்டுமானம், வண்டல் மண் படிதல், பழுது பார்ப்பு, உப்புத்தன்மை, தொழிற்சாலைக் கழிவுகள் கலந்திருப்பது போன்ற காரணங்களால் பயன்பாட்டில் இல்லை.

நீர்நிலைகளின் உரிமையைப் பொறுத்தவரை, 55.2% தனியாருக்குச் சொந்தமானவை என்றும், மீதமுள்ள 44.8% பொதுத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பெரும்பாலான நீர்நிலைகள் (78%) மனிதர்களால் உருவாக்கப் பட்டவை. 22% மட்டுமே இயற்கையாக உருவானவை. பெரும்பாலான நீர்நிலைகள் மண்ணால் ஆனவை. இதன் கட்டுமானச் செலவு ரூ.1,00,000க்கும் குறைவாக இருக்கக் கூடும் என்கிறது இந்தக் கணக்கெடுப்பு. கிட்டத்தட்ட பாதி நீர்நிலைகளின் நீர் சேமிப்புத் திறன் 1,000 முதல் 10,000 கன மீட்டர்கள் வரை உள்ளது.

ஆக்கிரமிப்பு நிலை: நீர்நிலைகளின் முதல் மொத்தக் கணக்கெடுப்பின் முக்கியமான முடிவுகளில் ஒன்று, வெவ்வேறு மாநிலங்களில் எந்த அளவுக்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதைப் பற்றியதாகும். அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் - ஆராய்ச்சியாளர்கள் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பின் தீவிரத்தைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வந்தாலும், எந்த ஓர் அரசுத் துறையும் ஆக்கிரமிப்பின் அளவு குறித்த தரவுகளை இதுவரை வெளியிடவில்லை. நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக 38,496 நீர்நிலைகள் (பெரும்பாலும் குளங்கள், குட்டைகள்) ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இக்கணக்கெடுப்பின் தரவுகள் காட்டுகின்றன.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில், சுமார் 93% சிறிய நீர்நிலைகள் (குளங்கள், குட்டைகள், ஏரிகள்) என்பதால், இவை எங்கு அமைந்துள்ளன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானது. மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில், ஆக்கிரமிப்பு மிக அதிகமாகக் கண்டறியப்பட்ட முதல் ஐந்து மாநிலங்கள் உத்தரப் பிரதேசம் (15,213), தமிழ்நாடு (7,828), தெலங்கானா (2,748), ஆந்திரப் பிரதேசம் (2,733), மத்தியப் பிரதேசம் (1,765).

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய நான்கு தென் மாநிலங்களின் பங்கு, இந்தியாவில் மொத்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் சுமார் 40% (14,219) ஆகும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் ஏறக்குறைய 22%. இவை என்ன சொல்கின்றன? பல நூற்றாண்டுகளாகச் சிறிய நீர்நிலைகள், தென் மாநிலங்களில் மிக அதிகமாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

விளைவுகள்: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீர்நிலைகளின் நீர்பரப்புப் பகுதியில் (water spread area) பெருமளவில் ஆக்கிரமிப்பு நடப்பதால், நீர்க் கொள்ளளவுத் திறன் குறைந்து பாசனப் பரப்பளவைக் குறைத்துவிடுகிறது. பல்வேறு மாநிலங்களில் குளங்கள் மூலம் பாசனம் பெறும் பரப்பளவு பற்றிய தரவுகள் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு எந்த அளவுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, மொத்த மழையளவில் பெரிய மாற்றங்கள் இல்லாதபோதும், இந்தியாவில் குளங்கள் வழி பாசனப் பரப்பளவு 1960-61 இல் 46.30 லட்சம் ஹெக்டேரிலிருந்து 2019-20 இல் 16.68 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது.

இதேபோல், ஆக்கிரமிப்பு மட்டத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில், குளங்கள் மூலம் கிடைக்கும் பாசனப் பரப்பளவு 9.36 லட்சம் ஹெக்டேரிலிருந்து 3.72 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தெலங்கானா போன்ற பிற தென்னிந்திய மாநிலங்களிலும் இதேபோன்று குளங்களின் நீர்ப்பாசனப் பரப்பளவு தொடர்ந்து குறைந்துவருகிறது.

அரசுகளின் பொறுப்பு: ஆக்கிரமிப்பால் நீர்நிலைகளில் நீர்க் கொள்ளளவு குறைவதால் பாசனப் பகுதியில் அமைந்துள்ள கிணறுகளின் நீர் சுரக்கும் (recharging of wells) திறனும் குறைகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள பல்வேறு சிறிய நீர்நிலைகளின் நீர்ப்பாசனக் கணக்கெடுப்புகளில் இருந்து (Minor Irrigation Census) கிடைக்கும் தரவுகள், ஆக்கிரமிப்பு காரணமாகச்செயலிழந்த கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு காரணமாக மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதம் அதிகரித்துவருவதையும் சமீபத்திய அனுபவங்கள் கூறுகின்றன. எனவே, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை எவ்விதச் சமரசமும் இன்றி அகற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘நீர்நிலைகளைப் பழுதுபார்த்தல், புதுப்பித்தல் - மறுசீரமைத்தல்’ என்கிற மத்திய அரசின்நீர்வள நிலைக்குழுவின் 16வது அறிக்கையானது, பல்வேறு மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் அரசு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது. எனவே, தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையைக் கருத்தில்கொண்டு, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும்.நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு, செப்டம்பர் 6, 2014 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, நீர்நிலைகளில் அமைந்துள்ள நிலங்களில் தளவமைப்பு (layout), கட்டிடத் திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை மதித்து, மாநில அரசுகள் முழு அக்கறையோடு அதனைச் செயல்படுத்த வேண்டும். அதிர்ச்சியூட்டும் வகையில், மொத்தம் 10,95,913 நீர்நிலைகளில் நீண்ட காலமாக எந்தச் சீரமைப்பு வேலைகளும் செய்யப்படவில்லை என நீர்நிலைகளின் கணக்கெடுப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதற்கு மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, 11 ஆவது திட்டக் காலத்தில் செயல்படுத் தப்பட்ட நீர்நிலைகளைப் பழுதுபார்த்தல், புதுப்பித்தல் - மறுசீரமைப்பு செய்தல் (Repair, Renovation and Restoration) திட்டத்தை மீண்டும் கொண்டுவந்து, மராமத்துப் பணிகள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவசியம். காலநிலை மாற்றத்தால் மழைப் பொழிவின் அளவில் மாறுபாடு அதிகரித்துவருவதைப் பார்க்கிறோம். இந்தச் சூழலில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீரின் கொள்ளளவுத் திறனை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், வருங்காலத்தில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தண்ணீர்ப் பஞ்சம் மேலும் அதிகரிக்கும்.

- தொடர்புக்கு: narayana64@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE