அரசு வங்கிகளுக்கு மறுமுதலீடு: அவசியமான நடவடிக்கையா?

By அஜீத் ராணடே

ரசுத் துறை வங்கிகளுக்கு மறு முதலீடு அளிப்பது வரவேற்கத்தக்க நல்ல நடவடிக்கைதான் என்றாலும், சில சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல் இதை மட்டும் செய்வதால் பலன் இருக்காது. பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது என்பதற்கு உண்மையான உதாரணம் உணவுப் பண்டங்கள் தவிர்த்து, மற்றவற்றுக்காகப் பெறப்படும் கடன்கள் உயர வேண்டும். அப்படி அதிகரித்தால் அது நிறுவனங்களுக்கான முதலீடாகவும் உற்பத்திக்கான செலவாகவும் மாறும். கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடன் கோரும் விண்ணப்பங்கள் இந்த ஆண்டு மிகமிகக் குறைவாகவே இருக்கின்றன.

பொருளாதாரம் மந்தமாகிவிட்டதற்கு இதுவே நேரடி சாட்சி. சுழற்சியில் இருக்கும் பணத்தின் அளவும் கடந்த 55 ஆண்டுகளில் இந்த அளவுக்குக் குறைவாக இருந்ததில்லை. பணமதிப்பு நீக்கம், பொதுச் சரக்கு-சேவை வரி அமல் ஆகியவற்றுக்கு இதில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பண்டங்களுக்குக் கேட்பும், பண்டங்களின் அளிப்பும் குறைவாக இருப்பது; தொழிற்சாலைகள் மிகக் குறைந்த அளவுக்கே உற்பத்திசெய்வது என்று வேறு பல காரணங்களும் உண்டு.

வாராக் கடன் சுமை

கடன் அளிப்பைப் பொறுத்தவரையில், வாராக் கடன்களின் சுமை அதிகமாக இருப்பதும் ஒரு முக்கியக் காரணம். கடந்த ஆறு ஆண்டுகளாகவே ஜிடிபிக்கும் வாராக் கடனுக்குமான விகிதம் மோசமாகிக்கொண்டே வருகிறது. இது இன்னமும் கூட அதிகமாகலாம். வாராக் கடன்களை ஆராய்ந்தால் அதற்கு 5 காரணங்கள் இருப்பது புரிகிறது.

1. சாலை, பாலம் அமைத்தல், தகவல் தொடர்புவசதிகளை அளித்தல், மின்சார உற்பத்தி உள்ளிட்ட அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்கு கோடிக்கணக்கில் வங்கி கள் கடன் கொடுத்தது முதல் காரணம். இந்தத் திட்டங்களை முடிக்க நீண்ட காலம் பிடிக்கும், வெவ்வேறு காரணங்களால், திட்ட அமலில் தடங்கல்களும் தொய்வுகளும் ஏற்படும், குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாததால் திட்டமிட்டதைவிட செலவு அதிகரித்து மேலும் மேலும் பணம் தேவைப்படும். இத்தகைய திட்டங்களுக்கு வங்கிகளிடமிருந்து கடன் பெற்றிருக்கவே கூடாது. இந்தக் கடன்களுக்கு ஈடாகக் காட்டப்படும் சொத்துகளுக்கும் வாங்கிய கடன் அளவுக்கும் மலைக்கும் மடுவுக்கு மான வித்தியாசம் இருக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சி செய்தபோது, அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்குக் கடன் தருமாறு வங்கிகளுக்கு நெருக்குதல் தரப்பட்டது. இத்தகைய திட்டங்களுக்கு நீண்டகாலக் கடன் பத்திரங்கள் மூலம்தான் நிதி திரட்டப்பட்டிருக்க வேண்டும். அல்லது உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிதியமைப்புகளிடம் நீண்டகாலத் தவணையில், குறைந்த வட்டியில் கடன் வாங்கப்பட்டிருக்க வேண்டும்.

2. ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து நிலக்கரி வெட்டி எடுக்க அளித்த ஒப்பந்தங்களையும் அலைக்கற்றைப் பயன்பாட்டு ஒப்பந்தங்களையும் நீதிமன்றங்கள் திடீரென ரத்துசெய்துவிட்டு, புதிதாக ஒப்பந்தப் புள்ளிகள் கோருமாறு உத்தரவிட்டது அடுத்த காரணம். மறு ஏலம் மூலம் ஒப்பந்தங்கள் மாற்றப்பட்ட தால் மின்னுற்பத்தி, உருக்கு, தொலைத் தகவல் தொடர்புத் துறைகளுக்குப் பெரும் நிதிச் சுமை ஏற்பட்டுவிட்டது.

3. தொழிற்சாலைகள், அடித்தளக் கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதற்கும், சுற்றுச் சூழல் துறையின் ஒப்புதலைப் பெறுவதற்கும் ஆன காலதாமதங்கள் வாராக் கடன் பெருக மூன்றாவது காரணம்.

4. இத்தகைய கடன்களுக்காக ஈடு காட்டப்பட்ட சொத்துகளின் உண்மை மதிப்பு என்ன என்று ஆராயுமாறு இந்திய ரிசர்வ் வங்கி 2015-ல் கட்டாயப்படுத்தியது நான்காவது காரணம்.

5. வங்கிகளின் உயர் நிர்வாகிகளுக்கும் கடன் பெற்ற சில தொழிலதிபர்களுக்கும் ஏற்பட்ட, உள்நோக்கமுள்ள கூட்டணியும் கடன் அதிகரிக்க மற்றொரு காரணம். கடன் கொடுப்பதிலும் கடனை வசூலிப்பதிலும் வங்கிகளைச் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடும் முக்கிய காரணம்; கடந்த காலக் கடன்களை வசூலிப்பதில் அக்கறை இல்லாமையும், கடன் தொகையைப் பரிசீலிக்கும்போது எச்சரிக்கையுடன் செயல்படாததும் பிற காரணங்களாகும். இந்தக் காரணங்களைத் தவிர, இதர விஷயங்களும்கூட கடன் சுமை அதிகரிக் கக் காரணங்களாக இருந்திருக்கக் கூடும்.

மேலும் சீர்திருத்தங்கள் தேவை

இந்தப் பின்னணியில்தான் வங்கிகளின் மறு முதலீட்டுக்காக ரூ.2.11 லட்சம் கோடியை அளிக்க மத்திய அரசு முன்வந்தது வரவேற்கப்படுகிறது. இது உடனே பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. சில வங்கிகளின் பங்கு மதிப்பில் 35% வரை உயர்வு ஏற்பட்டது. ஓராண்டுக்கு முன்னதாகவே இதைச் செய்திருக்க வேண்டும். அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையில் சட்டபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டிய பற்றாக்குறை அளவை அதிகரிக்கச் செய்யாதபடிக்கு இந்த மறுமுதலீடு வடிவமைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. மறு முதலீட்டுக் கடன் பத்திரங்கள் மூலம் இதில் பெரும்பகுதி திரட்டப்படவிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, வங்கிகளில் பணம் போடப்பட்டதால் எல்லா அரசு வங்கிகளிடமும் நிறையப் பணம் குவிந்திருக்கிறது. புதிய கடன் பத்திரங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பணம், பங்குத் தொகை யாக வங்கிகளில் சேர்க்கப்படும். வங்கி வாடிக்கையாளர்கள் போட்டிருக்கும் டெபாசிட்டே மீண்டும் முதலீடாக வருவது கவனிக்கத்தக்கது. இந்தக் கடன் பத்திரங் கள் எத்தனை ஆண்டுகளுக்கானது, இதை வாங்குவோருக்கு என்ன விகிதத்தில் வட்டி கிடைக்கும், இதை பங்குச் சந்தைகளில் விற்கலாமா, இது நிரந்தரமான கடன் பத்திரமாக மாற்றப்படுமா என்பதையெல்லாம் அரசு இனி தெளிவுபடுத்தும். ‘பேசல்-3’ விதிகளின்படி வங்கிகள் தங்களிடம் உள்ள டெபாசிட்டுகளுக்குப் பொருத்தமான அளவில்தான் கடன் வழங்க முடியும். வாராக் கடன் அளவு அதிகரித்தால் வங்கிகளால் புதிய கடன்களை வழங்க முடியாத நிலை ‘பேசல்’ விதிகளால் ஏற்பட்டுவிடுகிறது.

மறு முதலீடு மட்டும் போதாது, வங்கிகளின் நிர்வாகத்திலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். வங்கிகள் தங்களுடைய பங்குகளை வாங்கி வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கும் அரசுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவை. வங்கிகளின் நிர்வாகக் குழுக்கள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். வங்கிகள் கடன் வழங்கும் முறையில் சீர்திருத்தம் அவசியம். தொழில் செய்வதற்கான தடை கள் குறைந்து உலக அளவில் குறியீட்டெண்ணில் முன்னேறியிருக்கும் இந்தியா, வங்கிகளின் கடன் நிர்வாகத்திலும் அதே விதத்தில் இனி முன்னேற்றம் காணும் என்று நம்பிக்கைக் கொள்வோம்.

- அஜீத் ரானடே ,

பொருளாதார நிபுணர்,

சுருக்கமாகத் தமிழில் :

சாரி,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்