பெண்களுக்கு சம நீதி கிடைக்க ‘பொது சிவில் சட்டம்’ அவசியம்: வானதி சீனிவாசன்

By Guest Author

பொது சிவில் சட்டம் இல்லையென்றால் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் முன்னேற்றம் பெரிதும் தடைபடும் என்றும், சம நீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் அவசியம் என்றும், மதத்துக்கொரு சட்டம் இருந்தால் பெண்களுக்கு சமூக நீதி எப்போதும் எட்டாக்கனியாகி விடும் என்றும் தெரிவித்திருக்கிறார் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவரும், வழக்கறிஞருமான வானதி சீனிவாசன். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்த கட்டுரை இது..

இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி கருத்து தெரிவிக்குமாறு, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனி நபர்களுக்கு 22-வது இந்திய சட்ட ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நாடெங்கும் பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. பொது சிவில் சட்டம் வேண்டும் என்பதை, கட்சி தொடங்கிய காலம் முதலே பாஜக வலியுறுத்தி வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும், அதனை மக்கள் முன் வைத்து வருகிறது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு, முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் நாடு வந்த பிறகு, இந்திய அரசியல் என்பது, சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலாக மாறிப்போனது. 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. அவர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்தது என்பது வேறு விஷயம்.

பொது சிவில் சட்டம் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் அது சிறுபான்மையினருக்கு எதிரானது, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற பிரச்சாரம் செய்வதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக போன்ற கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளன. பொது சிவில் சட்டம் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய சட்ட ஆணையத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், "சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு, மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன. எனவே, மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடம் கூட, பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன. எனவே, அவர்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் மத சட்டங்களில் மாற்றங்கள் சாத்தியம் இல்லை. எனவேதான், அரசியலமைப்பின் 44-வது பிரிவில் ஒரு முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள, பொது சிவில் சட்டம் மீண்டும் மீண்டும் எதிர்க்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

"பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத, கலாசார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகவே கருதுகிறேன்" என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரிகளை முதல்வர் ஸ்டாலின் மீண்டுமொரு முறை படித்தால், அவருக்கே அது நெருடலை ஏற்படுத்தியிருக்கும். 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்து மதம், இந்து கலாசாரம், இந்து கோயில்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகம் அறிந்தது. சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டு கடந்து விட்டது. ஆனாலும், ஹிந்துக்களுக்கு வழிபாட்டுச் சுதந்திரம் கிடைக்கவில்லை. எந்தவொரு மதத்தின் வழிபாட்டிலும் கொஞ்சமும் தலையிடாத மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு, இந்து மத கோயில்களை மட்டும் விடாப்படியாக தன் கட்டுக்குள் வைத்து அழிச்சாட்டியம் செய்து வருகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயில் நிர்வாகத்தில், அதன் மத நடைமுறைகளில் தலையிடுகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்களை திமுக அரசு மிரட்டுகிறது. ஆனால், பொது சிவில் சட்டம் என்றதும், "மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது" என்கிறார் முதல்வர் ஸ்டாலின். சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் தலையிடும்போதும், தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றிய போதும், எந்த மத சமூகங்களின் ஒப்புதலை திமுக அரசு பெற்றது என்பதை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். திமுகவின் இரட்டை நிலை இந்த விஷயத்திலும் அம்பலமாகி நிற்கிறது.

அரசியல் ஆதாயம் ஒன்றையே மனதில் கொண்டு முடிவுகளை எடுக்கும் திமுகவுக்கு, தேசத்தின் நலன் ஒன்றையே மனதில் கொண்டு செயல்படும் பாஜகவின் முடிவு கசக்கத்தான் செய்யும். இந்தியாவில் பல்வேறு மொழிகள், மதங்கள், இனங்கள், கலாசாரங்களை கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்ல, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் என அனைத்து மதத்தினர்களும் வெவ்வேறு விதமான கலாசாரங்களை பின்பற்றுகின்றனர்.

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைகளை தத்தெடுத்தல், சொத்துரிமை என அனைத்திலும் வெவ்வேறு விதமான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இப்படி வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் நம் இந்திய கலாசாரத்தின் தனிச்சிறப்பு. இதனை பாஜக பெரிதும் மதிக்கிறது. ஒவ்வொரு சமூகத்தின் தனித்த அடையாளங்களும், கலாசாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. பிறகு ஏன் பொது சிவில் சட்டம்?

நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட போதே டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பொது சிவில் சட்டம் பற்றி சிந்தித்துள்ளனர். அதுபற்றி விவாதித்துள்ளனர். இந்தியாவுக்கு என்றாவது ஒருநாள் பொது சிவில் சட்டம் தேவை என்பதை, சுதந்திர இந்தியாவை செதுக்கிய டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் உணர்ந்திருந்தனர். அதனால்தான், இந்திய அரசியலமைப்பின் பகுதி 4 மற்றும் பிரிவு 44-ல் அனைத்து மதங்கள், சமூகங்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்து மதத்திலேயே பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேரு ஆட்சியில், 'இந்து குடும்பச் சட்டம்' கொண்டு வரப்பட்டது. இந்து குடும்பச் சட்டம் என்பது, பொது சிவில் சட்டம் போன்றதுதான். அதனை கொண்டு வந்த காங்கிரஸே இன்று, பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறது.

சட்டங்கள் என்பது மக்களின் தேவைக்கேற்பவே உருவாக்கப்படுகிறது. மக்களுக்கு தேவையில்லாத எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்துவது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சாத்தியம் அல்ல. முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டபோது, காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற அரசியல் கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால், முத்தலாக் நடைமுறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு அச்சட்டம், அருமருந்தாக அதாவது தேவையானதாக இருந்தது. அதனால்தான், முத்தலாக் தடை சட்டம், உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடான இந்தியாவில் வெற்றிகரமாக அமல்படுத்த முடிந்தது. முஸ்லிம் பெண்கள் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டாடுகின்றனர்.

அதுபோலதான் பொது சிவில் சட்டம் இன்று அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. இன்றைய சமூக சூழலில் மதங்கள், மொழிகள், இனங்கள், சமூகங்களை கடந்ததாக திருமணம் மாறியிருக்கிறது. இருவேறு மதங்களுக்கு இடையே திருமண உறவு ஏற்படும்போது பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. விவகாரத்து, சொத்துரிமை, குழந்தைகளை தத்தெடுப்பது போன்றவற்றில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால், மதம் கடந்த திருமணத்தில் யாராவது மதம் மாற வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. இதை தவிர்த்து தனி மனிதர்களின் உரிமைகளை நிலைநாட்ட, அவர்கள் விரும்பியபடி வாழ்வியலை அமைத்துக் கொள்ள பொது சிவில் சட்டம் அவசியமாகிறது.

வானதி சீனிவாசன்

சிறுபான்மை மதத்தினரின் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்துடனேயே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படுவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றன. பாஜகவுக்கும், சிறுபான்மை மதத்தினருக்கும் இடையே மோதலை உருவாக்க வேண்டும், சிறுபான்மையினரிடம் பாஜக மீது வெறுப்பை விதைக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு பாஜக எதிரி என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்க வேண்டும் என்பதை அறிவிக்கப்படாத கொள்கையாகவே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைத்துள்ளன. அதனால், தேச ஒற்றுமை என்ற நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்படும் பொது சிவில் சட்டத்தை, சிறுபான்மையினருக்கு எதிரானது என திரும்ப திரும்ப பிரசாரம் செய்து வருகின்றன.

பொது சிவில் சட்டத்தால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட எந்தவொரு மதத்தினரின் மத உரிமைகளும், பழக்க வழக்கங்களும், திருமண முறைகளும் மாறப்போவதில்லை. அதனை பாஜகவும் விரும்பவில்லை. ஆனால், பல்வறு வகையான 140 கோடி மக்கள் வாழும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியமானது. பொது சிவில் சட்டம் இல்லையென்றால் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் முன்னேற்றம் பெரிதும் தடைபடும். கால மாற்றத்திற்கேற்ப, யாரையும் பாதிக்காத வகையில் சட்டங்களை உருவாக்கிய நாடுகளே முன்னேற்றம் கண்டுள்ளன. திருமணம், வாரிசுரிமை, சொத்துரிமை, விவாகரத்து, குழந்தைகளை தத்தெடுத்தல் போன்ற அம்சங்களில் அனைவருக்கும் பொதுவான சட்டத்தை கொண்டு வருவதே பொது சிவில் சட்டத்தின் நோக்கம். இதனால், எந்தவொரு மதத்தின் பழக்க வழக்கங்களும் மாறப்போவதில்லை.

சட்டத்தின் முன்பு அனைவரும் சமமாக கருதப்படும் ஒரு நாட்டில்தான், ஒருவர், இன்னொருவரால் பாதிக்கப்படும்போது நீதி கிடைக்கும். சமுதாய வாழ்விலும் பெண்ளுக்கு சம நீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் அவசியமாகிறது. மதத்துக்கொரு சட்டம் இருந்தால் பெண்களுக்கு சமூக நீதி எப்போதும் எட்டாக்கனியாகி விடும். பொது சிவில் சட்டம் இருந்தால் குழந்தை திருமணமே இல்லாத நிலையை, நீதிமன்றங்களில் மட்டுமே விவாகரத்து பெறும் நிலையை உருவாக்க முடியும். குழந்தை இல்லாத தம்பதிகள், சட்டத்தின்படி முறையாக குழந்தையை தத்தெடுக்க முடியும். திருமண உறவு முறியும் நிலை ஏற்படும்போது ஜீவனாம்சம், சொத்துரிமையில் பெண்களுக்கு சம நீதி கிடைக்கும்.

திருமண உறவில் பிரச்சினைகள் உருவாகும்போது, அதற்கு நியாயமான தீர்வுகள் கிடைக்காத நிலை ஒருவரின் குறிப்பாக பெண்களின் வாழ்வையே தலைகீழாக மாற்றிவிடுகின்றன. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தார். இப்போது பொது சிவில் சட்டத்தை கொண்டுவர சட்ட ஆணையம் கருத்து கேட்டுள்ளது. பெண்களுக்கு சமூக நீதியை உறுதி செய்யும் ஒரு சட்டத்தை, பெண்ணுரிமை பேசும் திமுக எதிர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. பொது சிவில் சட்டம் வந்தால், திமுக அரசு கொண்டு வந்த பெண்களுக்கு சொத்துரிமை சட்டத்தால் அனைத்துமத பெண்களும் பயனடைய முடியும். குழந்தை திருமணங்களை சில மதங்கள் இன்னமும் வெளிப்படையாக ஆதரித்து பேசுகின்றன.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த தாரேஸ் அகமது தலைமையிலான 'மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் குழு' நான்கு ஆண்டுகளில் 450-க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்தியது. அதற்கெல்லாம் எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஆனால், 17 வயது முஸ்லிம் சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியபோது, இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. பொது சிவில் சட்டம் இருந்திருந்தால், இப்படியொரு எதிர்ப்பை மாவட்ட ஆட்சியர் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. தாரேஸ் அகமதுவின் பணிகளைப் பாராட்டி 2015-ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையான பாஜக அரசு, அவருக்கு சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கான பிரதமர் விருதை அளித்து பாராட்டியதை இந்த நேரத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

குழந்தை திருமணம் நடந்தால் இப்போது இந்துக்கள் மீது மட்டுமே இப்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். பொது சிவில் சட்டம் வந்தால் யார் குழந்தை திருமணம் செய்தாலும் நடவடிக்கை எடுக்க முடியும். குழந்தை திருமணம் தடுக்கப்பட்டால் அப்பெண் கல்வி பெற்று வாழ்வில் சாதிக்க முடியும்.

இவற்றையெல்லாம் உணர்ந்துதான் நமது அரசியலமைப்பு சட்டத்தில் பொது சிவில் சட்டம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதைதான் பாஜகவும் வலியுறுத்துகிறது. யாருக்கெல்லாம் பெண்ணுரிமை, தனி மனித உரிமை, மனிதநேயம், சமூக நீதி, தேசத்தின் ஒற்றுமை, தேசியம், மத நல்லிணக்கம், ஜனநாயகம், சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் உண்மையான நம்பிக்கையும், அக்கறையும் இருக்கிறதோ அவர்கள் கண்டிப்பாக பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பார்கள். யாரெல்லாம் சிறுபான்மை மதத்தினரை வாக்கு செலுத்தும் இயந்திரமாக கருதுகிறார்களோ, யாரெல்லாம் இந்திய சமூகங்களுக்கு இடையே இணக்கத்தை விரும்பவில்லையோ அவர்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கத்தான் செய்வார்கள். யார் தேசத்தின் மீது அக்கறை கொண்டவர்கள்?

யார் அரசியல் ஆதாயத்துக்காக தேசத்தின் நலன்களை பலி கொடுக்கவும் தயாராக இருப்பவர்கள் என்பதை அறிய மக்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இந்தியா வளர்ந்த நாடாக மாறாக, உலகின் பொருளாதார பலமிக்க நாடாக மாறாக பொது சிவில் சட்டம் தேவை. ஒரு பெண் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, இந்திய பிரஜையாக இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். - வானதி சீனிவாசன், பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவர், வழக்கறிஞர்.

முந்தைய அத்தியாயம்: பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர நினைக்கும் தற்போதைய மத்திய அரசின் நோக்கம் சரியானது அல்ல என்கிறார் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன். வாசிக்க > பொது சிவில் சட்டம் | “மத்திய அரசின் நோக்கம் சரியானது அல்ல” - முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்