நிலக்கரி அல்ல, விவசாயம்தான் வாழவைக்கும்!

By பெ.சண்முகம்

‘வாடிய பயிரைக் கண்டபோதெல் லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலார் வாழ்ந்து மறைந்த கடலூர் மாவட்டத்தில் கதிர் வரும் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு அழிக்கப்பட்டது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதியே அக்காட்சியைக் கண்டு கண்கலங்கியதாகக் கூறியிருக்கிறார்.


ஆட்சியாளர்கள் அல்லது நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) தரப்பில் என்ன காரணம் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்பட்ட செயல் எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. தார்மிகரீதியில் மட்டுமல்ல, சட்டப்படியும் அந்த நடவடிக்கை தவறு.

பொருந்தா வாதங்கள்: 2008-2009ஆம் ஆண்டி லேயே நிலத்துக்கான இழப்பீட்டை ஏக்கருக்கு ரூ.6 லட் சம் என்ற அடிப்படையில் கொடுத்துவிட்டதாகவும் ஆனால், நிலத்தைக் கையகப்படுத்தாமல் கருணை அடிப் படையில் விவசாயிகள் பயிர் செய்ய அனுமதித் திருந்ததாகவும் மாவட்ட ஆட்சியரும், என்.எல்.சி. நிர்வாகத்தினரும் கூறுகின்றனர்.

நிலத்துக்கு இழப்பீடு கொடுத்திருந்தாலும், விவசாயிகள் பயிர் செய்து வரும் நிலையில், ‘நிலத்தைக் கையகப்படுத்தப் போகிறோம்’ என்று சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். அல்லது பயிர் செய்வதற்கு முன்பே, ‘நிலத்தில் இந்த ஆண்டு என்.எல்.சி. பணிகளைத் தொடங்கவிருக்கிறது. எனவே, பயிரிடும் பணியை மேற்கொள்ளாதீர்கள்’ என்று விவசாயிகளிடம் தெரிவித்திருக்க வேண்டும்.

இப்படி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், காவல் துறை உயர் அதிகாரிகள் தலைமையில் பல நூற்றுக்கணக்கான காவல் துறையினர், வருவாய்த் துறையினரின் ஒத்துழைப்புடன் பயிர் அழிப்பு நடைபெற்றுள்ளது. நிலம் எடுக்கப்படுவது என்.எல்.சி. நிறுவனத்துக்காக என்றாலும், நிலத்தை எடுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ்நாடு அதிகாரிகள் முன் நின்று செய்கின்றபோது, விவசாயிகளின் கோபம் மாநில அரசுக்கு எதிராகத் திரும்பியிருப்பதைத் தவிர்க்க முடியாது. மாவட்ட அதிகாரிகளின் அலட்சியமான அணுகுமுறைதான் இதற்குக் காரணம்.

சட்டம் என்ன சொல்கிறது? - போர்க்கால அடிப்படையில் இரவு பகலாகக் கால்வாய் தோண்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சுரங்கத்திலிருந்து நீரை வெளியேற் றுவதற்குப் பரவனாறு விரிவாக்கம், வாய்க்கால் அவசியம் என்பது என்.எல்.சி. நிர்வாகத் தரப்பில் சொல்லப்படும் காரணம். உயர் நீதிமன்ற நீதிபதி சரியாகக் கேட்டிருப்பதைப் போல, அதை இரண்டு மாதங்கள் கழித்து - அறுவடைக்குப் பிறகு செய்திருக்க முடியாதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

இக்கேள்வியில் உள்ள நியாயத்தை யாராலும் புறக்கணிக்க முடியாது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2013ஆம் ஆண்டு புதிய சட்டம் இயற்றப்பட்டு, அது நடை முறைக்கு வந்துவிட்டது. அந்தச் சட்டப்படி எந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ, அதை ஐந்தாண்டு காலத்துக்குள் பயன்படுத்த வில்லை என்றால், சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே நிலத்தைத் திருப்பி ஒப்படைத்துவிட வேண்டும் (சட்டப் பிரிவு 24), நிலத்துக்கான இழப்பீட்டை விவசாயிகள் பெற்றிருந்தாலும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது. எனவே, இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்காக எடுக்கப்பட்ட நிலத்தைச் சட்டப்படி திரும்ப விவசாயிகளிடம் ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

தொலைநோக்குப் பார்வை அவசியம்: என்.எல்.சி. முதல் சுரங்கம் கிட்டத்தட்ட மூடப்படும் நிலையில் உள்ளது. இரண்டாவது சுரங்கம் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலக்கரி கிடைக்கலாம்; அதற்குப் பிறகு நெய்வேலி நிறுவனம் தொடர்ந்து செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. முதலாவது சுரங்கம் மூடப்பட்டாலும், அந்த நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனற்று வீணாகிவிடும்.

மூன்றாவது சுரங்கம், நான்காவது சுரங்கம் என்று புதிது புதிதாகத் தோண்டிக்கொண்டே இருந்தால் தமிழ்நாட்டின் வரைபடத்தில் கடலூர் என்ற மாவட்டமே காலப்போக்கில் இல்லாமல் போய்விடும். இதனால் பாதிக்கப்படப் போகும் பல லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஆட்சியாளர்களால் மறுவாழ்வு ஏற்படுத்தித் தர முடியாது. எனவே, இந்தப் பிரச்சினையைத் தொலைநோக்குப் பார்வையோடு அணுக வேண்டும்.

2021 ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற உலகக் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில், நிலக்கரிப் பயன்பாட்டை இந்தியா படிப்படியாகக் குறைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியது குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமாதலுக்கான காரணங்களில் நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட படிவ எரிபொருள்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. உலகில் பல நாடுகள் அனல் மின் உற்பத்தியைக் கைவிட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றன.

நிலக்கரி மூலம் மின் உற்பத்தி என்பது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மாற்று வழியில் மின்சார உற்பத்திக்கு அரசு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மின் உற்பத்திக்காக நிலக்கரியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. காற்றாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி, புனல் மின்சாரம், அணு மின்சாரம் என எத்தனையோ மாற்று வழிகள் நடைமுறையில் இருக்கின்றன.

இறங்கிவராத என்.எல்.சி: என்.எல்.சி-க்காக இதுவரை 37,256 ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. நிலத்தை இழந்த விவசாயக் குடும்பங்கள், இந்த நிலத்தை நம்பியிருந்த விவசாயத் தொழிலாளர் குடும்பங்கள் என்ன கதிக்கு ஆளாகின என்பது குறித்து எவ்வித ஆய்வும் கிடையாது.

நிலத்துக்கான இழப்பீடாக வழங்கப்படும் சொற்பத்தொகையை வைத்துக்கொண்டு அந்தக் குடும்பங்களால் வாழ்நாள் முழுக்க வாழ இயலாது. நிலத்துக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கும், உண்மையான சந்தை நிலவரத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது.

ஏக்கருக்கு ரூ.1 கோடி கொடுத்தாலும், ஒரு யூனிட் மின்உற்பத்தி செலவில் 20 பைசா மட்டுமே நிலத்துக்கான செலவாக இருக்கும். ஆனால், என்.எல்.சி. நிறுவனம் இதில் தாராள மனதுடன் நடந்துகொள்ள மறுக்கிறது. உணவுப் பாதுகாப்பு என்பது எல்லாவற்றையும்விட முக்கியமானது. நெல் விளையும் பூமியை வேறு பணிகளுக்கு மாற்றுவது உணவு தானிய உற்பத்தியில் பெரும் பற்றாக்குறை ஏற்பட வழிவகுக்கும். தொடர்ந்து நிலக்கரி கிடைத்துக்கொண்டேயிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நெல் விளைந்து, அந்த நிலம் வயிற்றுக்குச் சோறிடும் என்பதற்கு உத்தரவாதம் உண்டு.

எனவே, என்.எல்.சி. நிர்வாகம் கால்வாய் தோண்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். அழிக்கப்பட்ட பயிர்களுக்கு முழுமையான இழப்பீட்டை வழங்க வேண்டும். விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதியை ஏற்படுத்துவது அவசியம். புதிதாக நிலம் கையகப்படுத்துவதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். காவல் துறையை ஏவி பொய் வழக்குப் போடுவது, சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது உடனடித் தேவை.

- தொடர்புக்கு: pstribal@gmail.com

To Read in English: It’s not lignite but agriculture which will keep people alive

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்