கட்டுமரக்காரர் எனும் சாகசக்காரர்!

By சமஸ்

இந்த உலகையே சூழ்ந்திருக்கும் கடலை, ஒரு மரத் துண்டைக் கொண்டு கையாள முடியுமா? முதன்முதலில் கட்டுமரத்தை அத்தனை நெருக்கமாகப் பார்த்தபோதும், அதில் ஏறியபோதும் ஆச்சரியமாக இருந்தது. நான்கு மரத் துண்டுகள் இணைத்துக் கட்டப்பட்ட ஒரு கலம். எவ்வளவு எளிமையான ஒரு கருவி இது. மீனவர்கள் வேகவேகமாகத் தொளுவை (துடுப்பு) போட்டபோதும், கரையிலிருந்து நீரில் தளும்பித் தளும்பி முன்னேறியபோதும்கூட, கட்டுமரத்தை ஒரு மிதவைக் கலனாக மட்டுமே நினைத்திருந்தேன். அலைகள் மீது ஏறி, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் நுழைந்தபோதுதான் தெரிந்தது, கட்டுமரம் என்பது மிதவைக் கலன் மட்டும் அல்ல; காற்றின் கலன். ஒரு கட்டுமரத்தின் இயக்கம் எளிமையானது மட்டும் அல்ல; நுட்பமானது!

மீன் பிடிப்பவர் எல்லோரும் மீனவரா?

இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களில், கடலில் செல்லும் எல்லா மீன்பிடிக் கலங்களையும் படகு என்ற ஒரு சொல்லால் அழைப்பது எப்படித் தவறு என்பதும் கட்டுமரம், வள்ளம், இயந்திரப் படகு, விசைப்படகு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதும் படங்களுடன் விளக்கப்பட்டிருந்தன. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் எல்லோரையும் மீனவர் என்று அழைப்பதும்கூட அப்படியானதுதான்.

ஒரு கட்டுமர மீனவரை ஒருபோதும் வள்ளம், இயந்திரப் படகு, விசைப்படகு ஆகியவற்றில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களோடு ஒப்பிட முடியாது. கடினமான உழைப்பையும் பாரம்பரியத் தொழில் அறிவையும் கோருவது கட்டுமர மீன் தொழில். அடிக்கும் காற்று, நீரோட்டத்தில் தொடங்கி கடல் நீரில் தென்படும் மாற்றங்கள், வானில் தெரியும் நட்சத்திரங்கள் வரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தங்களை வைத்திருப்பவர்கள் கட்டுமர மீனவர்கள்.

ஒரு கட்டுமர மீனவர் நடுக்கடல் சென்று திரும்புவது உண்மையில் பெரிய சாகசம். ஆனால், அதை அனாயாசமாகச் செய்பவர்கள் அவர்கள். அதேசமயம், தன்னுடைய தேவைக்கு மேல் ஆசைப்படாதவர்கள். இன்றைக்கு இவர்களுடைய எண்ணிக்கை அருகிக்கொண்டிருக்கிறது என்பதும் இயந்திரப் படகுகளிலோ, விசைப்படகுகளிலோ செல்லும் மீனவர்கள் தங்கள் பாரம்பரியத் தொழில் அறிவை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும்தான் துயரம்.

ஒரு கட்டுமரத்தின் கதை

நாம் ஒரே வார்த்தையில் கட்டுமரம் என்று அடக்கப் பார்த்தாலும், கட்டுமரங்களில், ஒருவர் செல்லும் மரமான ஒத்தனாமரத்தில் தொடங்கி ஏராளமான வகைகள் உண்டு. ஒத்தனாமரமேகூட சென்னையில் ஒரு மாதிரி இருக்கிறது; கோவளத்தில் ஒரு மாதிரி இருக்கிறது. நெத்திலி மீன்பிடியில் தொடங்கி சுறா வேட்டை வரை எல்லா வகையான மீன்பிடிக்கும் பொருத்தமான துணைவன் என்பதுதான் கட்டுமரத்தின் மிகப் பெரிய சிறப்பம்சம்.

ஒரு கட்டுமரத்தின் முன்பகுதியைக் காட்டி, “இதான் அணியம்” என ஆரம்பித்து, அடைப்பலகை, ஆலாத்தி, நடுக்கெட்டி, வாரிக்கல், தலைவடம், தொரம், தாமான், பாய், மறுக்கு, கத்து, பருமல் என்று ஒவ்வொன்றாகச் சொல்லி, “இது பின்தலை” என்று கட்டுமரத்தின் பின்பகுதியைச் சுட்டிக்

காட்டினார் மீனவர் அந்தோணி. எனக்குத் தலைசுற்றியது.

“நெனப்புல இருக்குமா?” என்று சிரித்தார்.

“வாய்ப்பே இல்லை. கட்டுமரத்தோட முன்பகுதிக்குப் பேர் அணியம், பின்பகுதிக்குப் பேர் பின்தலை. அவ்வளவுதான் ஞாபகம் இருக்கு...” என்றேன்.

“இந்தப் பேருங்க ஒவ்வொண்ணுக்கும் பின்னாடி ஒவ்வொரு தேவை இருக்கு. கட்டுமரத்தைக் கையாளணும்னா, கடலோடிங்க ஒரே எடத்துல உட்கார்ந்து தொளுவ போட முடியாது. காத்தோட தன்மைக்கும் நீரோட்டத்தோட தன்மைக்கும் ஏத்தமாரிதான் கட்டுமரம் ஓடும். ஒரு கடலோடி எப்பவும் காத்தோடையும் நீரோட்டத்தோடையும் போராடணும். மேல மழை கொட்டினா, அதோடவும் சேர்ந்து போராடணும்... “ என்றவர் தன்னுடைய மரத்தை வாஞ்சையுடன் பார்க்கலானார். “இந்த மரம் எங்க ஐயா போட்டது. எங்க வகையறால எங்க ஐயாதான் மொத மொதல்ல மரம் போட்டாரு. முன்னலாம் ஒரு கட்டுமரம் போடுறது சாதாரணமில்ல. காலங்காலமா கூலிக்கு மத்தவங்க மரத்துக்குப் போய்ட்டிருந்த எங்க மக்கள்ல, ஐயா ரொம்ப சிரமப்பட்டு இந்த மரத்தைப் போட்டார்.”

“ஏன் கட்டுமரம் விலை ரொம்ப அதிகமோ?”

“அப்படியில்லீங்க. எங்க ஐயா இந்த மரத்தை வாங்கும்போது பத்தாயிரம் ரூவா. ஆனா, பத்துக்கும் இருவதுக்கும் பொழப்பு ஓடிக்கிட்டுருக்கையில, அந்தக் காசு பெரிய காசில்ல? அப்புறம், மரம் போடுற காசு மட்டும் இல்ல. மரத்துல கூட ஓடுற ஆளுகளுக்கும் முன்காசு கொடுக்கணும். ஆபத்துசம்பந்து பார்க்கணும். அந்த வசதியெல்லாம் வேற வேணும். வசதிவாய்ப்பு இல்லாதவங்க அண்ணன் தம்பிய உடன் பொறந்திருந்தாலாவது சமாளிக்கலாம். எங்க ஐயாவுக்கு அந்த வழியும் இல்ல. தனியா ஓடியே ரொம்பக் காலம் சமாளிச்சார்...”

“எந்த மரத்துல இதைச் செய்வாங்க?”

“அல்பீஸானு ஒரு மரம். கேரளத்துலேர்ந்து வாங்கியாருவம்...”

“கட்டுமர முதலாளிக்கு என்ன கிடைக்கும்?”

“அய்யோ, கட்டுமரத் தொழில்ல இந்தத் தொழிலாளி - மொதலாளிங்குற வார்த்தையெல்லாம் கிடையாதுங்க. எல்லாமே உறவுக்காரங்க மாரிதான். மூணு பேரு போறோம்னு வைச்சுக்குங்க. கெடைக்குற வருமானத்தை நாலு பங்கா போடுவோம். மூணு பேருக்கும் மூணு சரி பங்கு. கூடுதல் ஒரு பங்கு மரம், வலை வெச்சுருக்குறவருக்கு. அவ்ளோதான். காசு பெரிய விசயம் இல்லீங்க. மரம் இருந்தா மனசுக்குப் பெரிய பலம்.

ஐயா சொல்லுவாரு, ‘ஒரு கடலோடிக்கு எது போனாலும் கட்டுமரம் தொணை. வலையே போனாலும் தூண்டில் போட்டுக்கலாம். கட்டுமரத்தை வுட்டுடக் கூடாது'ன்னு. ஒருவகையில இவுங்க நமக்கு அண்ணன் மாதிரி. ஐயா சொல்லுவாரு, ‘உனக்கு முன்னாடி வந்தவருடோய்'னு. அப்ப அண்ணன் மாரிதானே? இன்னைக்கு நாம வள்ளம் வாங்கியாச்சு. ஆனா, ஐயா நெனைப்பா கட்டுமரத்தை அப்படியே வெச்சிருக்கம். வள்ளத்துல போனாக்கூட கடல்ல எறங்கும்போது, ஜெபம் பண்ணா மனசுல வர்றது இந்த மரம்தான். மாதாவே...”

அந்தோணியை ஆமோதிப்பதுபோல், அடிக்கும் அலைநீர் அவர்மீது படாமல் அலை மீது ஏறி இறங்கி, தம்பியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறது அந்த அண்ணன்!.

(அலைகள் தழுவும்...)

-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்