‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ திறந்து காட்டும் மோசடிகளின் சொர்க்கம்!

By நீரை மகேந்திரன்

சமீபத்தில் வெளியான ரகசிய நிதி ஆவணங்களின் தொகுப்பு ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ பல நாடுகளில் சூறாவளியைக் கிளப்பியிருக்கிறது. ‘தி கார்டியன்’, ‘பிபிசி’ போன்ற 95 சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த 380 பத்திரிகையாளர்கள் இதற்காக ஒரு ஆண்டு செலவழித்துள்ளனர். இதுவரை வெளிவந்துள்ள ஊழல் ஆவணங்களில் இதுதான் மிகப் பெரியது. 1.34 கோடி ஆவணங்கள் உள்ளன. கடந்த ஆண்டு மொசாக் பொன்சேகா எனும் சட்ட நிறுவனத்திலிருந்து கசிந்த பனாமா பேப்பர்ஸ் தொகுப்பில் இருந்தது 1.15 கோடிப் பக்கங்கள்தான் என்பது கவனிக்கத்தக்கது. ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ பட்டியலில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் முதல் நம்ம ஊர் கார்த்தி சிதம்பரம் வரை உள்ளனர். இவர்களில் சிலர் முறைப்படி அரசுக்குத் தெரிவித்தும் தொழில் தொடர்பு வைத்திருந்திருக் கலாம். விசாரித்தால்தான் உண்மை தெரியவரும்.

180 நாடுகளைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க மனிதர்கள், தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பெரு நிறுவனங்கள் மேற்கொண்ட வரி ஏய்ப்புகள், வெளிநாடுகளில் வாங்கிய சட்ட விரோத சொத்துகள் குறித்து ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ வெளியிட்டிருக்கும் தகவல்கள் பலரையும் அலறவைத்திருக்கின்றன.

அலறவைக்கும் தகவல்கள்

பிரிட்டனின் கடல்கடந்த ஆட்சிப் பகுதிகளில் ஒன்றான பெர்முடாவைச் சேர்ந்த ‘ஆப்பிள் பை’ என்ற சட்ட நிறுவனத்திடமிருந்தும், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘ஆசியா சிட்டி’ நிறுவனத்திடமிருந்தும் அதிக ஆவணங் கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள்தான் இவர்களின் வரிஏய்ப்புக்கு உதவி செய்துள்ளன. 19 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ‘ஆப்பிள் பை’ நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், வங்கியாளர்கள் மற்றும் இதர துறையைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோத வரி ஏய்ப்புக்கு உதவியுள்ளனர். அதாவது, வரி ஏய்ப்பாளர்களின் வங்கிக் கணக்குகள், வெளிநாட்டுத் துணை நிறுவனங்களை நிர்வகிப்பது, வரி செலுத்தாமல் தவிர்க்க ஆலோசனை அளிப்பது போன்ற சேவைகளை அளித்திருக்கின்றனர். விமானங்கள், கப்பல்களைக் குறைவாக வரி செலுத்தி வாங்க தரகுப் பணிகளையும் ‘ஆப்பிள் பை’ செய்துள்ளது.

முதன் முதலில் ‘சுடூஸ்ச்சே ஜெய்டங்’ (Suddeutsche Zeitung) என்கிற ஜெர்மன் செய்தித்தாள் வெளியிட்ட செய்தியைக் கொண்டு சர்வதேச புலனாய்வுக் கூட்டமைப்பைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இவற்றைத் திரட்டியுள்ளனர். அவர்களின் offshoreleaks.icij.org இணையதளம் இவற்றை விரிவாக வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், ரஷிய பிரதமர், கனடா அதிபர், அமெரிக்க அரசின் வர்த்தகச் செயலர் வில்பர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ‘நைக்’, ‘ஆப்பிள்’, ‘டிவிட்டர்’ நிறுவனங்களும் உள்ளன. ராணி இரண்டாம் எலிசபெத் கைமன் தீவில் 13 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 84 கோடி) முதலீடு செய்திருக்கிறார். இந்த ரகசிய ஆவணங்களில் 714 இந்தியர்கள் பெயர் உள்ளன. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 180 நாடுகளில், அதிக நபர்களைக் கொண்டவர்கள் அடிப்படையில் இந்தியா 19-வது இடத்தில் உள்ளது. இதில், பாஜக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் பிரமுகர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தியர்களின் ‘பங்கு’

மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், எஸ்.ஐ.எஸ். நிறுவனத்தின் உரிமையாளருமான ஆர்.கே.சின்ஹா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர் விஜய் மல்லையா, கார்த்தி சிதம்பரம், முன்னாள் அமைச்சர் சச்சின் பைலட், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, நீரா ராடியா, நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா, தில்னாஷின் என்ற அவருடைய பழைய பெயரிலும் பட்டியலில் உள்ளார். சன் டிவி - ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு, எஸ்ஸார் - லூப் 2 ஜி வழக்கு, எஸ்என்எஸ் - லாவலின் தொடர்பான ஆவணங்களும் உள்ளன.

மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா அமெரிக்கா வைச் சேர்ந்த ‘ஒமிதியார் நெட்வொர்க்’ நிறுவனத்தில் இந்திய நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியவர். இந்த நிறுவனம் அமெரிக்காவின் ‘டி-லைட் டிசைன்’ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. ‘டி-லைட் டிசைன்’ நிறுவனம் கேமன் தீவுகளில் துணை நிறுவனங்களை வைத்துள்ளது. ஆனால் 2014 தேர்தலில் போட்டியிடும்போது ஆணையத்துக்கு அளித்த விண்ணப்பத்தில் இதை ஜெயந்த் சின்ஹா குறிப்பிடவில்லை. ஆனால் அப்போது வரை ‘ஒமிதியார்’ நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்துள்ளார்.

மால்டா தீவில் நீரா ராடியா இரண்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரப்ப மொய்லியின் மகன் ஹர்ஷா மொய்லியின் எம்.ஒய்.ஏ. நிறுவனத்துக்கு மொரீஷியஸ் வழியாக முதலீடுகள் வந்துள்ளன. சஞ்சய் தத்தின் மனைவி தில்னாஷின் பஹாமாஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட ‘நாஸ்ஜெய்’ நிறுவனத்தின் பொறுப்புகளில் இருப்பதும் ஆவணங்கள் வெளியாகி உள்ளன.

பட்டியலில் இந்தியாவில் பிரபல நிறுவனங்களான ‘ஜிண்டல் ஸ்டீல்’, ‘அப்போலோ டயர்ஸ்’, ‘ஹெவல்ஸ்’, ‘ஹிந்துஜா’ குழுமம், ‘வீடியோகான்’, ‘ஹிரா நந்தானி’ போன்ற நிறுவனங்களும் உள்ளன. ‘ஆப்பிள் பை’ நிறுவனத்தின் இரண்டாவது மிகப் பெரிய வாடிக்கையாளராக இருப்பது இந்தியாவைச் சேர்ந்த ‘சன்’ குழுமம். ஹரியாணாவின் குர்கானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

பஹாமா, மொரீஷியஸ் போன்ற தீவுகள் வரிச் சொர்க்க நாடுகள் என்பதால் இந்த நாடுகளுக்கு முதலீடுகள் கொண்டு செல்லப்படுகின்றன. அல்லது அந்த நாடுகள் வழியாக இந்தியாவுக்கு வருகின்றன. இந்த வழிகளில் மேற்கொள்ளப்பட்ட வரி ஏய்ப்புகள் குறித்த தகவல்கள் ஏற்கெனவே ‘விக்கிலீக்ஸ்’, ‘பனாமா பேப்பர்ஸ்’ போன்ற ரகசிய ஆவணங்கள் மூலம் கசிந்துள்ளன.

மத்திய அரசின் மெளனம்

கனடா பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. வெளிநாட்டில் சட்ட விரோத முதலீடுகள் செய்வதை சட்டப்படி ஆக்குங்கள் என்று பிரிட்டனில் தேசிய அளவில் விவாதம் எழுந்திருக்கிறது. அமெரிக்க ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதுகின்றன. வழக்கம்போல இந்தியாவில் இந்த ஆவணங்களுக்கு உடனடி மறுப்புகளைப் பார்க்க முடிகிறது. அறிக்கையை முழுவதுமாக பார்த்த பிறகே சொல்ல முடியும் என்று சொல்கிறார் நிதியமைச்சர் ஜேட்லி.

ஏற்கெனவே, விஜய் மல்லையா வங்கி நிதிகளை மோசடி செய்து, வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகளை வாங்கியுள்ளதைப் புலனாய்வு செய்தும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாமல் அரசு திணறி வருகிறது. பனாமா பேப்பர்ஸ் அறிக்கை வெளியாகி இந்தியர்களில் பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரிந்தும் விசாரணை கட்டத்தில்தான் இதற்கான நடவடிக்கைகள் உள்ளன.

அரசு அமைப்புகள் திரட்ட முடியாத பல ஆவணங்களை புலனாய்வு செய்தியாளர்கள் தங்களது அர்ப்பணிப்பான உழைப்பால் திரட்டி அளித்துள்ளனர். ஆனால் இப்போதும் அலட்சியமான போக்குதான் இந்தியாவில் உள்ளது. கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர முடியும் என்கிற பெயரில் 100 கோடி மக்களின் மீது ஒரே நாளில் தாக்குதல் நடத்த திடம் கொண்ட அரசுக்கு, பண விவகாரத்தில் உண்மையான அக்கறை இருக்குமானால் ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ ஆவணங்களில் சிக்கிய நிறுவனங்களின் பரிமாற்றங்களை வெளிக்கொண்டுவர வேண்டும். தவறு செய்தவர்களின் வரி ஏய்ப்பு சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும்.

- தொடர்புக்கு: maheswaran.P@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்