நிறங்களைக் குறிப்பதற்குத் தமிழில் ஏராளமான சொற்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றையெல்லாம் தற்போது ‘ரெட், ப்ளூ, கிரீன்' எல்லாம் ஆக்கிரமித்துவிட்டன. ‘அவள் அப்படியொன்றும் கலரில்லை' என்று நிறத்துக்கும்கூட ‘கலர்' அடிக்கப்பட்டுவிட்டது.
நகரத்தில் மட்டுமல்ல, கிராமமும்கூட நிறம்மாறிவிட்டது. கிராமத்துப் பெண்கள் புடவை எடுக்கும்போது ‘நேவி ப்ளூ' புடவை, ‘மெரூன் கலர்' புடவை என்றெல்லாம் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனாலும், தமிழ் நிறங்களை இன்றும் உயிருடன் வைத்திருப்பவர்களும் அவர்கள்தான். மயில்கழுத்து நிறத்திலும், கத்திரிப்பூ நிறத்திலும், ஜவ்வு மிட்டாய் நிறத்திலும், ராமர் நிறத்திலும், நாவல்பழ நிறத்திலும் புடவைகள் கேட்கும் பெண்களும் உண்டு. பச்சையின் வகைகளை அழகழகாகச் சொல்வார்கள்: கிளிப்பச்சை, மயில்பச்சை, தளிர்ப்பச்சை, மாம்பச்சை, பாசிப்பச்சை, மரகதப் பச்சை, பாசிப்பயறு நிறம். ஒவ்வொரு வண்ணத்துக்கும் அதன் சிறு வேறுபாடுகளுக்கும் அழகழகான சொற்களையும் சொற்றொடர்களையும் வைத்திருக்கிறார்கள் பெண்கள். பெண்கள் சொல்லும்போது நிறத்துக்கு உணர்வே கிடைத்துவிடுகிறது. பெண்களும் சரி, வட்டாரத் தமிழில் பேசும் மக்களும் சரி, நிறங்களை வைத்து வித்தை காட்டுவார்கள். ஒருவர் கருப்பாக இருப்பதைக் குறிப்பிட ‘அவன் குழம்புசட்டி நிறம்' என்று ஒரு சொல்வழக்கு இருப்பதாக எழுத்தாளர் இமையம் தெரிவிக்கிறார். சிவப்பாக இருப்பவரின் முகத்தை ‘செம்மூஞ்சி' என்றும், அப்படி இருக்கும் ஆண்களை ‘செம்மூஞ்சன்' என்றும் சொல்வார்களாம்.
பேச்சு வழக்கில் அலாதியான விஷயங்கள் ஏராளம் உண்டு. அடர்சிவப்பு என்பதைவிட ரத்தச்சிவப்பு என்றால்தான் நமக்குத் திருப்தி. செம்பழுப்பு நிறத்தை ‘செங்காமட்டை' நிறம் என்றும் சொல்வதுண்டு. ஒரு நிறத்துக்குரிய சொல்லைப் பயன்படுத்துவதைவிட, அந்த நிறத்தில் இருக்கும் ஒரு பொருளோடு அல்லது உயிரினத்தோடு தொடர்புடைய சொல்லைப் பயன்படுத்துவதே அதிகம். (எ-டு) கோதுமை நிறம், மாநிறம், பொன்னிறம், கத்திரிப்பூ நிறம், வெயில் நிறம், தும்பைப்பூ நிறம், மயில் நீலம்…
கவிஞர்களையும் புலவர்களையும் விட முடியாது. ‘ஆழிவண்ண நின் அடியினை அடைந்தேன்' என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரத்தில் பயன்படுத்தியிருக்கும் ‘ஆழிவண்ணம்', கடல் நீலத்துக்கு அருமையான தமிழ்ச் சொல். திருநீர்மலைக்கு அருகே இருக்கும் நீர்வண்ணப் பெருமாளை ஆழிவண்ணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதுபோலவே, கார் வண்ணன், மேக வண்ணன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். வண்ணங்களைப் போற்றிப் பாடியவர்களின் வரிசையில் பாரதியும் வருகிறார். ‘பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்' என்ற வரிகளின் மூலம் ‘பட்டுக் கருநீலம்' என்ற நீலத்தையே தமிழுக்கு உருவாக்கித் தந்திருக்கிறார் பாரதி.
இதையெல்லாம் தவிர, ஒரே நிறத்தின் வெவ்வேறு அடர்வுகளைக் குறிக்க அந்த நிறத்தின் பெயருக்கு முன் இடுவதற்குச் சில சொற்கள் இருக்கின்றன: அடர்-, கரு-(ம்), இள(ம்)-, வெளிர்-. (எ-டு) அடர்பச்சை, அடர்சிவப்பு, கருநீலம், கருஞ்சிவப்பு, வெளிர் பச்சை, வெளிர் நீலம், இளஞ்சிவப்பு. அதேபோல் இருவேறு நிறங்கள் ஒன்றாகச் சேர்ந்து கிடைக்கும் நிறங்களைக் குறிப்பிடவும் சில சொற்கள் உண்டு. செம்-, பசும்-. (எ-டு) செம்பழுப்பு, பசும்மஞ்சள்.
வண்ணமயமானது தமிழ்! அதை மங்கச் செய்திடாமல் இருப்போம் நாம்.
அவரவர் வட்டாரத்தில் பயன்படுத்தப்படும், வண்ணங்கள் தொடர்பான வழக்குகளை வாசகர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
மறந்துபோன சொல்:
செம்பழுப்பு நிறத்தைக் குறிக்கும் ஒரு தமிழ்ச் சொல் கிட்டத்தட்ட புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டது. உங்கள் நினைவுக்கு வருகிறதா? அதுதான் கபிலம்.
சொல் தேடல்:
சிம் கார்டுக்கு இணையான தமிழ்ச் சொற்களுக்கு வாசகர் பரிந்துரைகள் வந்துகுவிந்துவிட்டன. வாசகர்களின் பெயர்களும் அவர்களுடைய சொற்களும்: ஜி. ராஜா - சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு, (சுருக்கமாக) சந்தடை தகடு/வில்லை. கோ. மன்றவாணன் - தொகுப்பி, தகவல் தொகுப்பட்டை, அடையாள விவரப்பட்டி, பயனர் அடையாள அட்டை, அலையுணர் அட்டை, அலைமுகவரி அட்டை. தே. சேஷாத்திரி - தனிக்குறியீட்டு மின்னட்டை, (சுருக்கமாக) தகுமி அட்டை. ம. கோபி - சந்தாதாரர் தகவல் பட்டை.
வாசகர்கள் அனுப்பிய சொற்களின் அடிப்படையில் உருவாக்கி, இறுதிசெய்யப்பட்ட சொற்கள்: கைபேசி வில்லை, சந்தாதாரர் தகவல் வில்லை. சுருக்கமாக இருக்க வேண்டுமென்றால் ‘கைபேசி வில்லை' என்ற சொல்லைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த வாரக் கேள்வி:
இளஞ்சிவப்பு என்ற சொல்லுக்குப் பழந்தமிழில் அழகான சொல் ஒன்று இருக்கிறது. அது என்னவென்று சொல்ல முடியுமா?
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago