அவசியமற்ற அதீத ‘முடிவு’... ‘வேறு வழி இல்லை’ என்ற எண்ணம் தவறு! - குடும்பத்தில் கடன் நெருக்கடியும் தீர்வுகளும்

By இந்து குணசேகர்

இந்தியாவில் கல்வி, மருத்துவம், பொருளாதாரம், பெண் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சமூகப் பண்பாடு ஆகியவற்றில் மேம்பட்ட மாநிலமாக அடையாளம் காணப்படும் தமிழகத்தில் கடன் சார்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பக அமைப்பு (என்சிஆர்பி) 2021-ஆம் ஆண்டு தற்கொலை குறித்து தேசிய அளவிலான அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் நாட்டிலேயே அதிகம் தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்திருந்தது. 2021-ல் மட்டும் 18,925 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் பொருளாதாரப் பிரச்சினை காரணமாகவே பலரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும், 2021-ல் தற்கொலை செய்துகொண்ட 1,05,242 பேர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவானவர்கள் என்றும் என்சிஆர்பி கூறுகிறது. இதனை சமூக அமைப்பில் பார்த்தால் 2021 தரவின்படி திருமணம் ஆனவர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிய வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தை எடுத்துக் கொண்டால் குடும்பம் / கடன் பிரச்சினை காரணமாகவே அதிகளவில் தற்கொலைகள் நடந்துள்ளன. குடும்ப பிரச்சினையால் தற்கொலை அதிகம் செய்யும் கொள்ளும் மாநிலங்களில் தமிழகம் 5-வது இடத்திலும், குடும்பத் தலைவிகள் அதிகளவில் தற்கொலை செய்துக் கொள்ளும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2021-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 3,221 குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அடுத்து, இதில் கூற இருக்கும் தரவு முக்கியமானது. இக்கட்டுரைக்கான சாரம்சமே இத்தரவின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது. 2021-ஆம் ஆண்டு கடன் பிரச்சனையால் குடும்பமாக தற்கொலை செய்துகொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2021-ல் மட்டும் 33 குடும்பங்கள் (80 பேர்) தற்கொலை செய்துகொண்டுள்ளன. தமிழகத்துக்கு அடுத்து 25 குடும்பத் தற்கொலைகளுடன் ராஜஸ்தான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதில், கரோனா காலக்கட்டத்துக்குப் பிறகு, கடன் நெருக்கடியால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை செய்திகளில் கவனிக்க முடிகிறது. இத்தகைய நெருக்கடியில் உள்ளவர்களுக்கு சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நிச்சயம் தீர்வுகள் உள்ளன.

தொழில் வருமானம் நிலையானதல்ல... வட்டி நிலையானது! - பொருளாதார நிபுணர் சோம. வள்ளியப்பன் : "முதலில் நாம் பெறும் வருமானத்துக்கு ஏற்ற கடனை வாங்குவதில் நமக்கு தெளிவு வேண்டும். வருமானத்துக்கு மீறி கடன் வாங்கிக் கொண்டு, அதற்கான வட்டியை செலுத்த மற்றொரு கடனை வாங்கும் நிலையில்தான் பலரும் இங்கு இருக்கிறார்கள். தொழில் துவங்குவதில் நம் சமூகத்தில் அறியாமை நிலவுகிறது. ஒரு மாதத்தில் ரூ.10 லட்சம் போன்ற போலி ஆசை வார்த்தைகளை நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள்.

நீங்கள் சுயமாக தொழில் துவங்க இருக்கிறீர்கள் என்றால், அந்தத் தொழில் மூலம் உங்களுக்கு லாபம் என்ன வரும், அந்த லாபம் எந்த மாதத்தில் கிடைக்கும் என்ற முழுத் திட்டம் அவசியம். ஒரு சில தொழில் லாபம் ஆறாவது மாதத்தில் கிடைக்கும் என்றால், இரண்டாவது மாதத்திலே பெரும் வட்டியை தொகையை செலுத்தும் வகையிலான கடனை நாம வாங்கக் கூடாது. இவ்வாறான கடன்கள் நெருக்கடிகளைதான் அதிகரிக்கும்.

நாம் ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும். தொழில் வருமானம் என்பது நிலையானது அல்ல. ஆனால், வட்டி நிலையானது. வட்டி உங்களுக்கு எக்காரணத்தை கொண்டும் நிம்மதியை தராது. முடிந்தவரை கடன் வாங்கும்போது அந்த நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டதா என்று தெரிந்துகொள்வது அவசியம். அவசர பணத் தேவைக்காக அங்கீகரிக்கப்படாத நிறுவங்களில் பணம் வாங்கினால், அதற்கான பின் விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதுள்ள சூழலில் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் கடனை வசூலிப்பதற்காக தனியாக குழுவே வைத்திருக்கின்றன.

இவ்வாறான சூழலில், நாம் கடன் பெற சரியான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இதில் தவறும் ஏற்படும் பட்சத்தில் சட்ட ரீதியாக அதனை எதிர்கொள்ள வேண்டும். போலீஸாரிடம் புகார் அளித்தல், வழக்கறிஞர்களை நாடுதல் என பல சட்டபூர்வ வழிகள் உள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார் பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பன்.

சட்டம் குறித்தான விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் - வழக்கறிஞர் வெற்றி செல்வன்: "கடன் கொடுத்தவர் உங்களுக்கு எதிராக சட்டபூர்வ நட வடிக்கையில் ஈடுபடவே உரிமை உண்டு. சட்டமும் அதனைதான் கூறுகிறது. தனிப்பட்ட ரீதியாக மிரட்டுதல், தாக்குதல், ஆபாச பேச்சுகள் இவை எல்லாம் சட்டத்தை மீறிய செயல்கள்தான். இதுபோன்ற நடவடிக்கைகளில் தனியார் ஏஜென்சிகளும், வங்கிகளும் ஈடுபட்டால் பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டபூர்வமாக அதனை எதிர்கொள்ள வேண்டும். வங்கிகள் மீது ஏதேனும் புகார்கள் இருந்தால் ஆர்பிஐ மூலமாக புகார் அளிக்கலாம்.

கடன் வழங்கிய நிறுவனங்களினால் குடும்பத்தின் பாதுகாப்புக்கு அச்சம் இருந்தால் போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்பதற்கான உரிமையையும் சட்டம் வழங்கி இருக்கிறது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால் வேறு வழி இல்லை என நினைத்து, மன அழுத்ததுக்கு உள்ளாகி அச்சத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்கொலை எண்ணத்தை தவிர்த்து பிரச்சினையை எதிர்கொள்வதற்கான தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டும். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டத்தை பயன்படுத்தலாம் என்ற அறிவுடன் நெருக்கடி சூழலை எதிர்கொள்ள வேண்டும்.

அதேவேளையில் கடன் கொடுத்தவர்கள் ’Negotiable Instruments Act, 1881’ என்ற சட்டப் பிரிவின் அடிப்படையில்தான் கடன் பெற்றவர்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தனிப்பட்ட ரீதியில் அவர்களை துன்புறுத்தக் கூடாது என்ற தெளிவு வேண்டும். இது தொடர்பான வழிமுறைகளை ஆர்பிஐ வழங்கி இருக்கிறது. இருப்பினும் தற்கொலையை தூண்டும் நிகழ்வுகள் நடப்பது வேதனையான ஒன்று” என்றார் வழக்கறிஞர் வெற்றி செல்வன்.

கடனைக் குறைத்து மதிப்பிட கூடாது - உளவியல் மருத்துவர் ராமானுஜம் - “நம்பிக்கையின்மை, யாரும் இனி உதவிமாட்டார்கள், நான் இருந்து என்ன பயன் என்ற மூன்று நிலைகள் மனிதனை தற்கொலையை நோக்கி தள்ளுகின்றன. இந்த மூன்று நிலைகளில் கடன் பிரச்சனையில் தற்கொலை செய்துகொண்ட பலர் நம்பிக்கையின்மை என்ற மனநிலையில்தான் இருப்பார்கள். இனி மீளவே முடியாது என்ற நிலையில்தான் தற்கொலையை தேர்ந்தெடுகிறார்கள். இம்மாதிரியான தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் அவர்களது எண்ணங்கள்தான். நம்மால் இதிலிருந்து மீளவே முடியாது என்று அவர்கள் திடமாக நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. உணர்ச்சி மிகுதியில் நாம் அறிவுபூர்வமாக சிந்திக்க மாட்டோம் . கடனால் ஏற்படும் விளைவுகளை மிகத் தீவிரமாக கற்பனை செய்து கொள்வார்கள். அந்த உணர்ச்சி மிகு தருணத்தை கடந்து, எதிர்மறையான சூழலை பொறுமையாக எதிர்கொண்டால் நாம் மீள்வதற்கு நிறைய நமக்கு தென்படும். அதிகபட்சமாக உங்களை சிறையில் அடைப்பார்கள். அந்தச் சூழலை எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதார சூழல் காரணமாக தற்கொலை செய்துகொள்பவர்கள் தன் குடும்பத்தினர் அனைவரையுமே தற்கொலைக்கு இரையாக்குகிறார்கள். கடன் நெருக்கடி துன்பத்திலிருந்து தங்கள் குடும்பத்தினருக்கு விடுதலை கொடுப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். நடக்காத ஒன்றுக்காக பயந்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள இருக்கும் தைரியத்தை வாழ்வதில் நாம் காட்ட வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

சிலர் குற்றங்கள் பல செய்தும் சமூகம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருப்பார்கள், தலைமறைவாக வாழ்ந்தாலும் உயிருடன் இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் அவர்களுக்கு இருக்கும். அந்தப் பிடிப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள், சமூகம் என்ன நினைக்கும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். உங்களுக்கு உதவாதவர்கள் என்ன நினைப்பார்கள் என்று அஞ்சி உயிரை மாய்த்து கொள்வதும் முட்டாள்தனம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடனை என்றுமே நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. கடனில் சிக்கிக் கொண்டவர்கள் பலர் குறைவான காலத்தில் நிறைய பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ண கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தொழில்களும் சட்ட விரோதமாகவும் இருக்கின்றது. குறுக்கு வழிகளில் பணம் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டாலே அளவுக்கு மீறி கடன் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட மாட்டோம்.

வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் சமூக நெருக்கடிகளை குடும்பங்கள் மீதும் தனி மனிதர்கள் மீது நாம் திணித்து கொண்டிருக்கிறோம். சொந்தமாக வீடு இருக்க வேண்டும், தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசையில் வாழ்நாளின் பெரும் பகுதியை கடனை அடைப்பதற்காகவே செலவிடும் சமூகமாக மாறிக் கொண்டு இருக்கிறோம். நாம் பயணிக்கும் பாதை தவறு என்ற கள யதார்த்ததை இந்த தற்கொலைகள் நமக்கு உணர்ந்துகின்றன” என்றார் உளவியல் மருத்துவர் ராமானுஜம்.

- தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்