சுகாதாரத் துறை ஒப்பந்தப் பணி: மெத்தனத்தைக் கைவிடுமா அரசு?

By வீ.சக்திவேல்

இந்திய அளவில் சுகாதாரக் குறியீட்டில், 2019 இல் இரண்டாம் இடத்திலிருந்த தமிழ்நாடு, 2021இல் 8ஆம் இடத்துக்கு இறங்கியது. 2020 வரை கிராம (நகர) சுகாதாரப் பணியாளர்கள் பணியிடத்துக்கான கல்வித் தகுதியான ஏ.என்.எம். படித்தவர்கள் அனைவருக்கும் நிரந்தரப் பணியிடம் வழங்கப்பட்டுவிட்டது. 2020-க்குப் பிறகு, படித்து முடித்த சுமார் 2,000 பேருக்குப் பணியிடம் வழங்கப்படவில்லை; 2000க்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன. இது தொடர்பாக ‘படித்தால் மட்டும் போதுமா? வேலை வேண்டாமா?’ (27.12.2021) என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்கத்தில் வெளியானது.

அதைத் தொடர்ந்து, அக்கட்டுரையின் நகலினை வைத்து, ‘விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என பொது சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்ததாகத் தகவல் வந்தது. ஆனால், அக்கட்டுரை வெளியாகி 19 மாதங்கள் கழிந்துவிட்ட பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிராம சுகாதார செவிலியர் (வி.எச்.என்) பணியிடங்களில் ஒன்றுகூட நிரப்பப்படவில்லை.

ஊதியப் பாகுபாடு: காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்யும் அளவுக்கு அரசிடம் நிதிஇல்லாத நிலையில், அரசின் திட்டங்கள் தொடர்வதற்குப் பணியாள்கள் தேவை என்பதால், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது. ஒப்பந்தப் பணியாளர்களோ தங்களுடைய பணி நிரந்தரப் பணியாளர்களின் பணிக்கு இணையானது; ஆனால், ஊதியம் அவர்களைவிடப் பன்மடங்கு குறைவு எனக் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசு மருத்துவப் பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் நியமிக்கப்படும் மருத்துவர்களுக்கு ஊதியம் ரூ.50,000 என நிர்ணயிக்கப்பட்டாலும், அது அனுபவம்மிக்க நிரந்த மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்தைவிட நான்கு அல்லது மூன்றில் ஒரு பங்குதான்.

இந்நிலையில், அவர்களால் நிரந்தரப் பணியிட மருத்துவருக்கு இணையாக எப்படிப் பணியாற்ற முடியும்? இந்த ஊதியம் அவர்களுக்கு நிரந்தரப் பணியிடம் வரும்வரை என ஏற்றுக்கொண்டாலும், நகர (கிராம) சுகாதாரச் செவிலியர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

சென்னைப் பெருநகர மாநகராட்சியின் 200 வார்டுகளில், சுமார் 140க்கும் மேற்பட்ட நகர்ப்புறச் சுகாதார மையங்களில் நகர்ப்புறச் சுகாதாரச் செவிலியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு 2023 மார்ச் 3 அன்று, 145 நகர்ப்புறச் சுகாதாரச் செவிலியர் பணியிடங்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது; அவர்கள் பணியேற்றுப் பணிபுரிந்துவந்தனர்.

ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் பணியிலிருந்து தற்போது விலகிவிட்டனர். காலியாக உள்ள அந்தப் பணியிடங்களுக்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரச் செவிலியர்களைப் புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிகிறது.

அசாதாரணப் பணி: ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியம் ரூ.14,000 (பிடித்தம் போக கைக்கு வருவது ரூ.12,000தான்). இதனால், ஒப்பந்த அடிப்படையில் இப்பணியில் ஈடுபடுவதைப் பெரும்பாலானோர் விரும்புவதில்லை; அப்படியே வந்தாலும் பணியில் தொடர்ந்து நீடிப்பதில்லை.

வெளியூரிலிருந்து குடும்பத்துடன் வந்து பணியாற்றும் பெண் ஒருவரால், ரூ.12,000ஐக் கொண்டுசென்னையில் குடும்பம் நடத்துவது இயலாத காரியம் என்பது அனைவரும் அறிந்ததுதான். பணியின்தன்மையைப் பார்க்கும்போது இந்தப் பணியிடத்துக்கு நிரந்தரப் பணியாளர்களை நிரப்ப அரசு ஏன் மறுக்கிறது என்கிற ஆதங்கம் நமக்கு மேலிடும்.

கிராம (நகர) சுகாதாரச் செவிலியர்களின் பணிகள் சாதாரணமானவை அல்ல. கிராமம் / நகரத்தில் ஒரு பெண் கருவுற்றலில் தொடங்கும் செவிலியர்களின் பணி, குழந்தை பிறந்து குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளின் முழு விவரங்களையும் கண்காணிப்பது வரை தொடரும்.

மேலும், கர்ப்ப காலப் பராமரிப்பு, பிரசவ காலப் பராமரிப்பு, பிரசவப் பின்காலப் பராமரிப்பு, பச்சிளங் குழந்தைப் பராமரிப்பு, தடுப்பூசி போடுதல், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, வளரிளம் பருவத்தினர் பராமரிப்பு, குடும்ப நலம், தாய்-சேய், சிறுநோய் சிகிச்சை முகாம்கள், பிறப்பு-இறப்பு பதிவுசெய்தல், அவர்களின் பகுதியின் முக்கியப் புள்ளிவிவரங்களைச் சேகரித்தல், திருத்தியமைக்கப்பட்ட தேசியக் காசநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம், தேசியத் தொழுநோய் ஒழிப்புத் திட்டம், தடுப்பூசிகளால் தடுக்கப்படக்கூடிய நோய்கள் பற்றிய கண்காணிப்பு, இனப்பெருக்கப் பாதை / பாலினச் சேர்க்கைத் தொற்று / எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு-கட்டுப்பாடு, மருந்து இருப்பு வைத்திருப்போர் மற்றும் இதர சமுதாயப் பங்காளர்கள், குறிப்பேடுகள்/ பதிவேடுகள் மற்றும் பதிவு அறிக்கைகள், தகவல் கல்வித் தொடர்புப் பணிகள், தொற்றாத நோய்கள் கட்டுப்பாடு மற்றும் இதர வேலைகள் - இந்தத் தலைப்புகள் ஒவ்வொன்றின் கீழும் 5 முதல் 15 வரை பணிகள் அவர்களுக்குத் தரப்பட்டுள்ளன.

செவிலியர் ஒருவர் புதிதாக ஓரிடத்தில் ஒப்பந்தப் பணியில் சேரும்போது, அங்கு வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள குறைந்தபட்சம் அவருக்கு இரண்டு மாதங்கள் தேவைப்படும். ஒருவரின் உடல்நிலையை அறிந்துகொண்ட பிறகு, திடீரென அவர்கள் ஒப்பந்தப் பணியிலிருந்து விலகும்போது, அடுத்து அந்தப் பொறுப்புக்கு வருபவர்களுக்குச் சூழலை அணுகுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தரவுகளைப் பார்த்துத் தெரிந்துகொண்டு கவனிக்க முனைந்தாலும், ஒருவரே கவனிப்பதுபோல இருக்காது.

கண்காணிப்பின் சவால்கள்: கர்ப்ப காலப் பராமரிப்பு என்பதே தொடர் கண்காணிப்புதான். அந்தப் பணியை ஒருவரே தொடர்ந்து பார்த்தால்தான் கருவுற்ற தாய்மார்களைச் சிறப்பாகக் கவனிக்க இயலும். செவிலியர்கள் மாறிக் கொண்டே இருப்பது கர்ப்பிணிகள், செவிலியர்கள் இருவருக்கும் தேவையற்ற குழப்பத்தையே விளைவிக்கும். நிரந்தரப் பணியாளர் என்றால் இந்தச் சிக்கல் எழாது.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு கிராமம்/ நகரத்தில் ஒவ்வொரு சுகாதார மையங்களின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொன்றிலும் சுகாதாரச் செவிலியர்களின் கண்காணிப்பு அவசியமாகிறது. இந்தப் பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில், தற்காலிகப் பணியாளர்களை நியமிப்பது குழப்பத்துக்கே வழிவகுக்கும்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது; அதனால் நிரந்தரப் பணியிடம் வழங்க இயலாது எனக் கூறப்படுகிறது. நிரந்தரப் பணியிடம் கோரித்தான் அந்த வழக்கு நடைபெறுகிறது. காலிப் பணியிடங்களை நிரப்ப நீதிமன்றத் தடை ஏதும் இல்லையெனத் தெரிகிறது. எனவே, வழக்கைக் காரணம்காட்டி பணியிடங்களை நிரப்ப மறுப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

இந்நிலை தொடர்ந்தால், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கர்ப்பிணிகள் குறித்த கவனிப்பு குறையும், குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் பிறக்கும், பிரசவ கால இறப்பு தற்போதைய அளவைவிட அதிகரிக்கும். அந்தச் சூழலில் போர்க்கால நடவடிக்கைகள் மூலம் பணி செய்வதைவிடத் தற்போதே உரிய வழிமுறைகளில் நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்; அது மக்களுக்கு மட்டுமல்ல, அரசாங்கத்துக்கும் நல்லது.

ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் நியமனத்தை விடுத்து, உரிய நியமனங்களை உரிய காலத்தில் மேற்கொள்ளும்பட்சத்தில், சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு மீண்டும் முதன்மை இடத்துக்கு வர முடியும். அரசு உடனடியாக கவனம்கொள்ள வேண்டிய பிரச்சினை இது.

- தொடர்புக்கு: sundarisakthi@gmail.com

To Read in English: Contract jobs in health sector: Will govt shed its indifference?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்