இந்தியா வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். மாநகரங்கள்தான் வசதியான வாழ்க்கையைத் தரும் என்று அரசாங்கங்களும் நம்புகின்றன; மக்களும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளைத் தாண்டி பெருநிறுவனங்களும் முதலாளிகளும் அதையே விரும்புகிறார்கள்; தீர்மானிக்கிறார்கள். எப்படியும் மாநகரங்கள் தலைவிதியாகிவிட்ட சூழலில், ஒரு மாநகரத்தின் ஆன்மா எப்படி இருக்க வேண்டும் என்பதை கொல்கத்தாவில் கண்டேன்.
கொல்கத்தாவைப் பற்றி பணக்கார வங்காளிகளிடம் கேட்கக் கூடாது. முக்கியமாக வங்க முதலாளித்துவ எழுத்தாளர்களிடம் கேட்கவே கூடாது. இப்படித்தான் தோன்றியது கொல்கத்தாவில் இருந்த நாட்களில். ஏனென்றால், வங்காளிகள் இப்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக வணிகத்திலும் கல்வியிலும் கலைகளிலும் கலாச்சாரத்திலும் திளைத்துக்கொண்டிருந்த அன்றைய கல்கத்தா, இன்னமும் அவர்கள் நினைவிலிருந்து அகலவில்லை.
கல்கத்தாவுக்கும் கொல்கத்தாவுக்குமான இடைவெளி அவர்களைக் குழப்புகிறது. மும்பையுடனும் சென்னையுடனும் பெங்களூருவுடனும் ஒப்பிடுகையில் அவர்களுடைய கொல்கத்தா வளர்ச்சியில் பின்தங்கிவிட்டதாக நினைக்கிறார் கள். இந்த மாநகரம் தொழில்முனைவோருக்கான களம் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வங்க எழுத்தாளர்களோ இது அழிந்துகொண்டிருக்கும் மாநகரம் என்று புலம்புகிறார்கள். ஒரு நகரத்துக்குப் புதிதாகச் சென்று சில நாட்கள் தங்குவோருக்கும் அந்த நகரத்திலேயே வாழ்வோருக்கும் கிடைக்கும் பார்வைகள் வெவ்வேறானவை.
நிச்சயம் உள்ளூர்க்காரர்களின் புரிதல்கள் வெளியிலிருந்து செல்லும் ஒருவருக்குக் கிடைக்காது. ஆனால், இந்தியா முழுவதும் சுற்றிவிட்டுச் செல்லும்போது ஒப்பீட்டளவில் கொல்கத்தா மட்டுமே இதயத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் மாநகரமாகப் படுகிறது. இந்தியாவில் வாழ்வதற்கு ஒரு மாநகரம் என்றால், அது கொல்கத்தாவாக மட்டுமே இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
மும்பைக்கு இணையாகுமா?
இன்றைக்கும் இந்தியாவின் பேரழகு மாநகரம் மும்பைதான். மும்பை ஜுஹு கடற்கரையில் நின்று பார்க்கும்போதும் ஆங்கிலேயர்கள் காலத்தைச் சேர்ந்த அதன் புராதன வீதிகளில் நடக்கும்போதும் இந்தியாவின் வேறு எந்த மாநகரமும் மும்பையின் ஒய்யார கவர்ச்சியிடம் நெருங்க முடியாது. ஆனால், ஜுஹு கடற்கரை மட்டுமே மும்பை அல்லவே? தாராவியும் சேர்த்துதானே மும்பை? பங்குச்சந்தையில் கோடிக் கோடியாகக் குவிப்பவனும் சரி, ஒரு நாளைக்கு நூறு ரூபாய் பார்க்க பான் பீடா விற்பவனும் சரி… ஒரே ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை என்ன வாழ்க்கை? கொல்கத்தா இந்தப் பின்னணியில்தான் என்னை வாரிச் சுருட்டியது.
நிதான வாழ்வின் தரிசனம்
கொல்கத்தாவில் என்னைக் கவர்ந்த முதல் அம்சம் நகர்மயமாதலிடம் சிக்கிச் சின்னாபின்னமாகாத அதன் நிதான வாழ்க்கை முறை. கொல்கத்தாவில் தூங்கி எழுந்த முதல் நாள் காலையில் நான் பார்த்த காட்சி இது. அந்த வங்காளி தாத்தாவுக்குத் தொண்ணூறு வயது இருக்கும். மெல்ல தன் மூன்றாவது மாடி வீட்டிலிருந்து இறங்குகிறார். தெருவில் இருக்கும் இனிப்புக் கடையில் ஒரு பால்பேடா வாங்குகிறார்.
நக்கி நக்கி அதைச் சுவைத்துக்கொண்டே அருகில் இருக்கும் சாயா கடைக்குச் செல்கிறார். பாதி பால்பேடாவைச் சாப்பிட்டு முடித்ததும் சாயாவை ஆறஅமரக் குடிக்கிறார். பின் மீதி பால்பேடாவை வாயால் மெல்ல உதுப்புகிறார். அது கரைய ஆரம்பிக்கும் சூழலில், அப்படியே வாயில் போட்டுக்கொண்டு கண்ணை மூடிக்கொள்கிறார். பின் மெல்ல நடக்கிறார். வாழ்க்கை எத்தனை அழகு பாருங்கள். இந்த நிதான அழகு அந்த மூன்றாவது மாடி வங்காளி தாத்தாவிடம் மட்டும் இல்லை. நகரெங்கும் வியாபித்திருக்கிறது, அடிமட்டத் தொழிலாளிகள் வரை!
கொஞ்சம் தூங்குங்கள்!
கொல்கத்தா கொஞ்சம் நிதானமாகத்தான் கண் விழிக்கிறது. காலை ஆறு மணி வாக்கில். எல்லா நகரங்களையும் போல 10 மணிக்கு நகரின் வர்த்தகம் இயங்கத் தொடங்குகிறது. ஆனால், மதியம் ஒன்றரை மணியானால், நகரம் இளைப்பாறுதலைத் தேடுகிறது. சாலையோரக் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளிகள்கூட கட்டையை நீட்டிவிட்டுவிடுகிறார்கள் அல்லது சீட்டாட்டம் போடுகிறார்கள்.
நான்கு மணிக்கு நகரம் மீண்டும் களைகட்டுகிறது. இரவு ஒன்பது மணியைக் கடிகார முள்கள் நெருங்கும்போது சட்டென்று நகரம் இரவை அணைத்துக்கொள்கிறது. எல்லோரும் கடையடைத்துவிடுகிறார்கள். 10 மணிக்கெல்லாம் நள்ளிரவு 12 மணி சூழலில் இருக்கின்றன கொல்கத்தா வீதிகளும் சாலைகளும். ஞாயிற்றுக் கிழமை எல்லோருக்கும் விடுமுறை. எல்லோருக்கும் என்றால் எல்லோருக்கும். அரசு அலுவலகங்கள் தொடங்கி நடைபாதைக் கடைகள் வரை.
அரசு விடுமுறை நாட்களிலும் அப்படியே. சம்பாதிக்கிறார்கள். அதே சமயம் வாழவும் செய்கிறார்கள். இங்கே காலையில் அவசரமாக ஓட உதவும் மெட்ரோ ரயிலுக்கும் இடம் இருக்கிறது; மாலையில் மெல்லமாக வேடிக்கை பார்த்துக்கொண்டே வீடு திரும்ப உதவும் டிராம் வண்டிகளுக்கும் இடம் இருக்கிறது.
எங்கும் வண்ணமயம்
வங்காளிகளின் வாழ்க்கை வண்ணமயமாக இருக்கிறது. பெண்களின் நெற்றி வகிடு குங்குமத்திலிருந்து சாலையில் செல்லும் பேருந்துகள் வரை எங்கும் விதவிதமான வண்ணங்கள். வண்ணங்களுக்கு இணையாக இனிப்புக்கும் வாழ்க்கையில் இடம் கொடுத்திருக்கிறார்கள். நகரின் காவல் தெய்வமான காளியின் நைவேத்ய பண்டமே பால்பேடாதான். காலை, மதியம், இரவு மூன்று வேளைச் சாப்பாட்டிலும் ஏதோ ஒருவடிவில் உள்ளே தள்ளிவிடுகிறார்கள் இனிப்பை. இந்த இனிப்புதான் வாழ்க்கையையும் அவர்களையும் கொண்டாட்டமாக வைத்திருக்கிறது என்று தோன்றுகிறது.
ஏழைகளுக்கும் இடம் உண்டு
இந்தியாவின் எல்லா நகரங்களுமே ஏழைகளைக் கொண்டுதான் இயங்குகின்றன. ஆனால், நகரங்களில் ஏழைகளுக்கான இடம் எப்படி இருக்கிறது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். கொல்கத்தாவின் இன்னோர் அழகு, அது இன்னமும் ஏழைகளையும் அரவணைக்கும் நகரமாக இருப்பது. கொல்கத்தாவின் அகலமான நடைபாதைகளின் பெரும் பகுதி சாலையோரக் கடைகளால் நிரம்பியவை.
நாம் நடைபாதையில் நடப்பது என்பதே கிட்டத்தட்ட இந்தக் கடைகளுக்கு உள்ளே புகுந்து செல்வதுதான். ஆனால், அவர்களை யாரும் தொல்லைப்படுத்துவது இல்லை. பகல் கடைகள் இரவில் வீடுகள் ஆகிவிடுகின்றன. “ஐம்பது ரூபாய் சம்பாதித்தால் போதும்; இந்த நகரத்தில் வாழலாம்” என்கிறார் கை ரிக்ஷா தொழிலாளியான மணி முகர்ஜி. கொல்கத்தாவில் விலைவாசி அவ்வளவு குறைவா? இல்லை.
வாழ்க்கையை அவ்வளவு பகிர்ந்துகொள்கிறார்கள். “இந்தியாவில் எந்த நகரத்திலாவது ஐந்து ரூபாய்க்குக் காய்கறிகள் வாங்க முடியுமா? கொல்கத்தாவில் முடியும். ஒரு முருங்கைக்காய், இரண்டு வெண்டைக்காய், ஒரு உருளைக்கிழங்கு, ஒரு வெங்காயம். எங்கும் உள்ள விலைவாசிதான் இங்கும். ஆனால், கொடுக்கும் காசுக்கு எதையெல்லாம் கொடுக்கலாமோ அதையெல்லாம் கொடுப்பார்கள்” என்கிறார் ஒடிசாவிலிருந்து வந்து இங்கு குடியேறிவிட்ட ஜெகந்நாத். உண்மைதான்.
மீனைக்கூட நூறு கிராம் வரை வெட்டித் தருகிறார்கள். இரண்டு ரூபாய்க்கு டீ கிடைக்கிறது. ஐந்து ரூபாய்க்குக்கூட கருணையோடு கைரிக்ஷாக்கள் வருகின்றன. 10 ரூபாய்க்குச் சாப்பாடு கிடைக்கிறது.
காதலிக்க ஓர் இடம்!
கொல்கத்தாவில் எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. மது அருந்த மது விடுதிகளால் நிரம்பிய ஒரு வீதி என்றால், நடனம் ஆட நடனக் கூடங்கள் நிரம்பிய ஒரு வீதி. காதலிக்கவும் அழகான இடங்கள் இருக்கின்றன. விக்டோரியா மகாராணி நினைவைச் சொல்லும் வகையில், கர்சன் பிரபுவும் வில்லியம் எமர்சென்னும் தங்கள் கனவில் உருவாக்கிய விக்டோரியா நினைவு இல்லத்தைச் சுற்றியுள்ள மைதானங்கள் எங்கும் கைகள் கோத்து காதலின் வாசத்தை அனுப்பும் காதலர்களால் நிரம்பி வழிகின்றன.
வெளியே வந்தால் சாலையில் மனைவி - குழந்தைகளோடு வருபவர்களை 50 ரூபாயில் நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டிகளில் வீதியுலா அழைத்துச் செல்லக் காத்திருக்கின்றனர் வண்டிக்காரர்கள்.
ஒருகாலத்தில் சென்னையிலும் டெல்லியிலும் மும்பையிலும்கூட இப்படிப்பட்ட அழகான விஷயங்களைப் பட்டியல் போடலாம். இன்றைக்கு அவை காணாமல் போய்விட்டன. இந்தியாவின் ஏனைய நகரங்கள் தொலைத்துவிட்ட இந்த உயிர்ப்பான அடையாளங்களை கொல்கத்தா மட்டும் எப்படித் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது? வங்கத்தின் அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, இதற்கான பெரும் பங்கு இடதுசாரிகளையே சாரும் என்பது தெரிகிறது.
ஏனென்றால், நாட்டிலேயே ஓரளவுக்கேனும் நிதான வாழ்க்கையை நான் பார்க்க முடிந்தது வங்கத்திலும் அதற்கு அடுத்து கேரளத்திலும்தான். இந்த இரு மாநிலங்களிலுமே கவனிக்க வேண்டிய இன்னோர் ஒற்றுமை கம்யூனிஸ்ட்டுகளைப் போலவே அவர்களை எதிர்க்கும் பிரதானக் கட்சிகளையும் அதே இடதுசாரி இயல்போடு அவர்கள் மாற்றிவிட்டிருப்பது. இந்தக் கலாச்சாரத்தின் உச்சபட்ச அடையாளமாகவே கொல்கத்தா தெரிந்தது.
கொல்கத்தாவில் குப்பை இல்லையா? கொசுக்கள் இல்லையா? சாக்கடைகள் இல்லையா? போக்குவரத்து நெரிசல் இல்லையா? வறுமை இல்லையா? ஏழ்மை இல்லையா? எல்லாம் இருக்கிறது. ஆனால், கூடவே வாழ்க்கையும் இருக்கிறது. அதாவது பிழைப்பது மட்டும் இங்கு வாழ்க்கையாக இல்லை!
தொடர்புக்கு: samas@kslmedia.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago