இன்றைய தமிழ்நாடு ஒரு நவீன மாநிலமாக உருவானது 1956 நவம்பர் 1-ம் தேதிதான். சென்னை மாநிலத்தின் தெலுங்கு, கன்னட, மலையாளப் பகுதிகள் பிரிக்கப்பட்ட பின், தமிழ்ப் பகுதிகள் மட்டும் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்ட இந்த நாளை தமிழர் தாயகத் திருநாளாக கொண்டாடும் விருப்பம் இப்போது தமிழர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசம். கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் அவை நீண்டகாலமாக அரசு விழாக்களாகவே கொண்டாடப்பட்டுவருகின்றன.
மாநிலப் பிரிவினையின்போது எல்லைப் பகுதிகளை இழந்த காரணத்தால் தமிழ்நாட்டில் இது எப்போதும் ஒரு கொண்டாட்டமாக உணரப்படவில்லை. ஆனால், என்னதான் இருந்தாலும், நவீன அரசியல் வரையறையோடு தமிழர்கள் தமக்கென ஒரு தாயகம் பெற்ற நாள் இது என்பதை மறுக்கத் தேவையில்லை. இந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை புது டெல்லியே சுற்றிவளைத்து அங்கீகரித்த வரலாற்று நிகழ்வுதான் மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கம் என்பதையும் உணர வேண்டும்.
தமிழ்நாட்டை மாநிலம் என்று சொல்கிறோமே, அதன் பொருள் என்ன என்பதை நாம் சற்று ஆராய வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘ஸ்டேட்’ (State) என்பதைத் தமிழில் மாநிலம் என்கிறோம். மாநிலம் என்பது அழகான தமிழ்ச் சொல். ‘மாநிலத் தாயை வணங்குதும்’ என்றார் பாரதி. ஆனால், இந்த ‘ஸ்டேட்’ என்ற சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக மாநிலம் என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது, அதனூடாக ஓர் அரசியல் இழப்பு ஏற்பட்டிருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
‘ஸ்டேட்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பல அர்த்தங்களும் பயன்பாடுகளும் உண்டு. இரண்டு பொருட்கள் இங்கே குறிப்பிட வேண்டியவை. ஒரு நாடு தனக்கென ஓர் அரசாங்கத்தைப் பெற்றிருந்தால் அது ஒரு ‘ஸ்டேட்’ எனப்படுகிறது. ஓர் ஒன்றியத்தின் (யூனியன் - union) அல்லது கூட்டரசின் (ஃபெடெரேஷன்-federation) ஒரு பகுதி தனக்கென ஓர் அரசாங்கத்தைக் கொண்டிருந்தாலும் அதுவும் ‘ஸ்டேட்’ என்றே அழைக்கப்படுகிறது. இவ்வகையில், இந்தியா என்கிற ‘யூனிய’னின் பகுதிகளாக ‘ஸ்டேட்’கள் இருக்கின்றன. இங்கே ‘ஸ்டேட்’ என்ற சொல்லின் சரியான மொழிபெயர்ப்பு அரசு என்பதுதான்.
ஆனால், ‘ஸ்டேட்’ என்பது வெறுமனே ஒரு நிலப்பரப்பை ஆளும் அரசாங்கத்தைக் குறிக்கும் சொல் அல்ல. ‘ஸ்டேட்’ என்பது இறையாண்மை (முழுமையாகவோ, பகிர்ந்த நிலையிலோ) உள்ள ஒரு நிலப்பரப்பின் அரசாங்கத்தைக் குறிக்கிறது. ‘ஸ்டேட்’ என்பது அரசியல் அலகு. அது நிர்வாக அலகு மட்டுமல்ல. அத்துடன் நாம் அரசு, அரசாங்கம் ஆகிய சொற்களை போட்டுக் குழப்பிக்கொள்கிறோம். அரசு என்பது ‘ஸ்டேட்’, அரசாங்கம் என்பது ‘கவர்ன்மெண்ட்’. ‘ஸ்டேட்’ முன்பு ராஜ்யம் என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டது.
‘யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா’ (United States of America) என்பதை ‘அமெரிக்க ஐக்கிய நாடுகள்’ அல்லது ‘அமெரிக்க ஐக்கிய அரசுகள்’ என்றே மொழிபெயர்க்கிறோம். பிரிட்டிஷ் இந்தியா வின் பகுதிகள் ‘பிராவின்ஸ்’ (province) என்றும் ‘பிரின்ஸ்லி ஸ்டேட்ஸ்’ (princely states) என்றும் அழைக்கப்பட்டன. பிராவின்ஸ் (மாகாணம்) என்பது வெறுமனே நிர்வாக அலகு. பிரின்ஸ்லி ஸ்டேட்ஸ் (சமஸ்தானங்கள்) பிரிட்டிஷாரோடு இறையாண்மையைப் பகிர்ந்துகொண்டிருந்த பகுதிகள். அதனால்தான் அவை ‘ஸ்டேட்’கள். அரசியல் சாசனம் ‘ஸ்டேட்’ என்கிற அலகைத்தான் புதிய இந்தியாவின் அலகாக எடுத்துக்கொண்டது. ‘பிராவின்ஸ்’ என்கிற அலகை அல்ல.
சுதந்திரம் உறுதிபட்டதும், இந்தியா ஒரு கூட்டரசாக அமைக்கப்பட வேண்டும் என்கிற கருத்துக்கே ஏற்பு அதிகமிருந்தது. ஆனால் சுதந்திரம் நெருங்க நெருங்க காங்கிரஸ் தலைவர்கள் மாநில சுயாட்சி குறித்து அதுவரை கொடுத்துவந்த வாக்குறுதிகளை மீறினார்கள். அதற்கு பாகிஸ்தான் பிரிவினை காரணமாக கூறப்பட்டது (ஆனால், உருவாகவிருந்த முஸ்லிம் பெரும்பான்மை மாநிலங்களுக்கு சுயாட்சி மறுக்கப்பட்டதால் தான் பிரிவினையை நோக்கியே முஸ்லிம் லீக் நகர்ந்தது என்பதுதான் உண்மையான வரலாறு).
மகாராஷ்டிரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் எச்.வி. படாஸ்கர், சபையிலேயே குறிப்பிட்டார்: “மத்திய அரசின் அதிகாரங்களை வரையறுக்கும் கமிட்டி 1947 ஜூலை 4-ம் நாள் தனது அறிக்கையை வெளியிட்டது... அந்த அறிக்கையில் முதல் பிரிவே இந்தக் கூட்டாட்சி இந்தியா என்கிற பெயருடன் சுதந்திரக் குடியரசாக இருக்கும் என்று கூறுகிறது... அந்த நேரம் நாமெல்லாம் ஒருமித்து, கலப்படமற்ற, முழுமையான, பல மாநிலங்கள் கொண்ட ஒரு கூட்டாட்சியை உருவாக்க எண்ணியிருந்தோம். ஆனால், இடையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுவிட்டன. 1947 ஆகஸ்ட் 15 அன்று அதிகாரம் இந்திய மக்களுக்கு மாற்றப்பட்டது. அதே நேரம் இந்தியாவும் பிரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்காவிட்டால் ஒருவேளை நாம் பழைய திட்டப்படியே விஞ்ஞான முறைப்படி, முறையான, முழுமையான கூட்டாட்சியை உருவாக்கியிருப்போம்.
“கூட்டாட்சி வேண்டும் என்கிற நோக்கத்தால்தான் மாகாணங்கள் என்கிற பெயரை மாநிலங்கள் என்று மாற்றியமைத்தோம்.. தற்போதைய எண்ணம் நமக்கு முன்பே ஏற்பட்டிருக்குமேயானால் இந்தப் பெயர் மாற்றத்தைக்கூட நாம் செய்திருக்க வேண்டியதில்லை.
மாநிலம் என்கிற பெயர் இருக்கிறது. ஆனால், மாநிலத்துக்கான அதிகாரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுவிட்ட காரணத்தால் அவற்றை மாநிலங்கள் என்று அழைப்பதே பொருந்தாத பெயராகிவிட்டது.”
எச்.வி. படாஸ்கரைத் தன்னுடைய ‘மாநில சுயாட்சி’ நூலுக்காக மொழிபெயர்க்கும் முரசொலி மாறனும் இங்கே மாநிலங்கள், மத்திய அரசு ஆகிய சொற்களைத்தான் பயன்படுத்துகிறார் என்பது ஒரு புறமிருக்க, ‘பிராவின்ஸ்’, ‘ஸ்டேட்’ ஆகிய சொற்களுக்கு இடையிலான வித்தியாசத்தை நாம் அறிந்துகொள்ள முடிகிறது.
இத்தனை ஆண்டுகள் கழித்து இதை நினைவுகூர வேண்டிய அவசியம் ஏன் வந்தது? ஏற்கெனவே நிர்வாக அலகுகளாக மாறிப்போன ‘ஸ்டேட்’களை இன்றைய மோடி அரசு வெறும் வட்டாரப் பஞ்சாயத்துகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், ‘ஸ்டேட்’ என்பது தன்னுடைய உண்மையான பொருளையே இழந்துவிடும்!
-ஆழி செந்தில்நாதன், ‘
தன்னாட்சித் தமிழகம்’ கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்,
தொடர்புக்கு: zsenthil@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago