எம்.எச்-17: உக்ரைன் வானில் பறந்தது தவறா?

விமானங்களுக்கு வானில் காத்திருக்கும் ஆபத்துகள் ஒன்றா, இரண்டா?

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ‘எம்.எச்-17', உக்ரைன் வான் எல்லை மீது சுட்டுவீழ்த்தப்பட்டுப் பயணிகள், விமானப் பணிக்குழுவினர் உள்பட 298 பேர் இறந்த தற்குப் பிறகு, மக்கள் மனதில் ஒரு கேள்வி எழுந்தது: இரு நாடுகளுக்கு இடையிலான போர் நடந்துவரும் பிரதேசத்தின் மீது பயணிகள் விமானம் ஏன் பறந்தது? இந்த விபத்து அந்த விமான நிறுவனத்தின் தவறால் ஏற்பட்டதா? இதற்கான விடை, ‘இல்லை' என்பதே. இது ஏன் என்பதைப் புரிந்துகொள்ள பயணிகள் விமானப் போக்குவரத்து தொடர்பான சிக்கலான சில உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும்.

விதிமுறைகளைப் பின்பற்றியது

சீனா சென்றுகொண்டிருந்த எம்.எச்-370 விமானத்தைப் பயணிகள், விமானக் குழுவினருடன் இழந்ததால் ஏற் கெனவே உலக அளவில் பேசப்பட்டுவரும் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் முறையாகப் பின்பற்றியுள்ளது.

பயண நேரத்தை முடிந்தவரை குறைக்க வேண்டும், எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனமாக இருக்க வேண்டும், விமானப் புகை வெளியேற்றம் முடிந்தவரை குறைக்கப்பட வேண்டும், செல்ல வேண்டிய இடத்துக்குச் சுற்றிவளைத்துச் செல்லாமல் நேராகச் செல்ல வேண்டும், எரிபொருள், பயண நேரம் மட்டுமல்லாமல் விமானத்துக்குள் உணவு, குளிர்பானம், இடைவழியில் ஹோட்டலில் தங்க நேரும் செலவு போன்றவற்றையும் முடிந்தவரையில் குறைக்க வேண்டும் என்பவை எல்லா விமான நிறுவனங்களுக்கும் கொள்கைகளாக இருக்கின்றன.

ஒரு பயணம் தொடங்குவதற்கு முன்னால், விமானத்தை இயக்கும் குழுவினர் தங்களுடைய நிறுவனத்திடமிருந்து புதிதாக வரும் கட்டளைகளைத் தெரிந்துகொண்டு செல்ல வேண்டிய பாதையில் மாற்றங்கள் தேவைப்பட்டால் முடிவு செய்வார்கள். இதுபோக, புறப்பட்ட பிறகு வழியில் இடிமின்னலுடன் மழை போன்றவை எதிர்ப்பட்டால், அதற்கேற்ற வாறு சிறு மாறுதல்களைச் செய்துகொள்வது வழக்கம். செல்லும் வழியில் வடக்கு அல்லது தெற்கில் திரும்பவும், விமானம் பறக்கும் உயரத்தை மாற்றிக்கொள்ளவும், பறப் பதற்கு ஏற்ற காற்றுவீசும் திசையில் செல்லவும்கூட அனுமதி கேட்டு மாறுதல்களைச் செய்துகொள்வது உண்டு.

விமானம் செல்லும் பாதையில் உள்ள, விமானம் பறக்கத் தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகள், விமானம் பறப்பதில் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகள், ராணுவ மோதல்கள் நடைபெறும் பகுதிகள், வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் போன்றவை குறித்த தகவல்களை விமானக் குழுவினர் தெரிந்துவைத்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு, வாஷிங்டனில் ரீகன் விமான நிலையத்தின் முதலாவது ஓடுதளத்திலிருந்து புறப்படும் விமானங்கள், விண்ணில் ஏறியவுடன் வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ விரைவாகத் திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், அங்கிருந்து இரண்டு மைல் தொலைவுக்குள் உள்ள, வெள்ளை மாளிகை மீது ‘அத்துமீறி'ப் பறக்க நேரிட்டுவிடும். அந்த இடத்தின் மீது எந்த விமானமும் பறக்கக் கூடாது என்று பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம், அமெரிக்க விமானங்களையும் விமானக் குழுவினரையும் நேரடியாகக் கட்டுப்படுத்துகிறது. சர்வதேச அளவில் உள்ள அதன் இணை நிறுவனங்கள், பறக்கக் கூடாத பகுதிகள் எவை என்று அவ்வப்போது அதனிடமிருந்து தகவல்களைப் பெற்று, தங்கள் நாட்டு விமானிகளுக்குத் தெரிவிக்கின்றன. யேமன், வட கொரியா, சிரியா ஆகிய நாடுகள் மீது பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்கும்படி விமானிகளை அது எச்சரித்துள்ளது. அத்துடன் சோமாலியா, இராக் ஆகிய நாடுகள் மீது பறக்கும்போது 20,000 அடி உயரத்துக்குக் கீழே பறக்கக் கூடாது என்று தடைவிதித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் கிரீமியா மீது பறக்கவே கூடாது என்று எல்லா அமெரிக்க விமானங்களுக்கும் ஒட்டுமொத்தத் தடை விதித்திருக்கிறது.

அதே சமயம், அந்த இடத்துக்கு வடக்கில் 200 மைல்களுக்கு அப்பால் உள்ள பகுதிகள் மீது பறக்கக் கூடாது என்று தடுக்கவில்லை. அந்தப் பகுதி மீதுதான் மலேசிய விமானம் பறந்திருக்கிறது. பிரான்ஸ் போன்ற நாடுகள், எதற்கு வம்பு என்று உக்ரைனின் எந்தப் பகுதி மீதும் பறக்கவே வேண்டாம் என்று தங்கள் நாட்டு விமானங்களுக்கு உத்தரவிட்டுவிட்டன. குறிப்பிட்ட வான் எல்லை மீது பறக்கவே கூடாது என்று தடை விதிக்கப்படாதவரை அதன் மீது சட்டப்படி பறக்கலாம், ஆபத்தில்லை என்றே விமானிகள் நினைப்பார்கள்.

அதிகாரிகளின் எச்சரிக்கை

மலேசிய விமானம் வியாழக்கிழமை புறப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக, கிழக்குப் பகுதி மீது 32,000 அடி அல்லது அதற்கும் கீழே பறக்க வேண்டாம் என்று உக்ரைன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த எச்சரிக்கை அந்த விமானத்துக்கும் மலேசிய விமான நிறுவனத்துக்கும் நிச்சயம் கிடைத்திருக்கும். இந்த வாரத்தின் தொடக்கத்தில் உக்ரைன் நாட்டு ராணுவ விமானத்தை, புரட்சியாளர்கள் சுட்டு வீழ்த்திய தகவல் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே, இந்த இடத்தைக் கடந்துசெல்ல மலேசிய விமானம் முயன்றதில் தவறில்லை. மிக உயரத்தில் பறக்கும்போது விமானத்தை ராணுவ பீரங்கி அல்லது ஏவுகணைகளால் மட்டும்தான் சுட முடியும் என்பதால், தங்களை யார் சுடப்போகிறார்கள் என்று நினைத்து விமானம் சென்றிருக்கிறது.

விண்ணில் பறந்து மிக உயரத்துக்குச் சென்றுவிட்டால், ராணுவரீதியிலான தாக்குதல்களைத் தவிர, மற்ற எதிரிகளுக் காக அஞ்சத் தேவையில்லை. இதனால்தான் போர் நடந்த போதுகூட இராக், ஆப்கானிஸ்தான் வான் எல்லையில் பயணிகள் விமானங்கள் பறந்தன. உக்ரைனின் குறிப்பிட்ட பகுதி மீது பறக்கக் கூடாது என்று எச்சரித்ததுகூட ராணுவம் தனது இலக்கைச் சுடும்போது பயணிகள் விமானம் சேர்ந்து பலியாகக் கூடாது என்பதற்காகத்தான். அப்படியிருக்க, எச்சரிக்கப்படாத பகுதி மீது பறந்தது மலேசிய விமானத்தின் குற்றமல்ல.

பழிபோடுவது வழக்கம்

ஒரு பெரிய விபத்துக்குப் பிறகு, இது ஏன் நடந்தது, யார் காரணம் என்றெல்லாம் ஆராய்ந்து பழிபோடுவது வழக்கம். இப்படியொரு ஆபத்து இருக்கிறது என்று ஏன் ஊகிக்க முடியாமல் போனது என்று ஆக்ரோஷமாகக் கேட்பார்கள். ஒரு பயணி அணிந்திருந்த ஷூவுக்குள் வெடிகுண்டை வைத் திருந்து விமானத்தைத் தகர்க்க முயன்றார் என்றதிலிருந்து ஷூ மூலமும் ஆபத்து வரும் என்பது தெரிந்தது. இதனால், 10 ஆண்டுகளுக்கு ஷூக்களுக்குத் தடை விதித்தார்கள். இப்படி விமானத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை நினைத்து நினைத்து ஒவ்வொன்றாகத் தடுத்துக்கொண்டே போனால், விமானங்களையே ஓட்ட முடியாது.

ஒரு கிரிமினல் நடவடிக்கைக்கு மலேசிய விமானமும் அதன் விமானக் குழுவும் பயணிகளும் பலியாகிவிட்டனர் என்பதே உண்மை; சுட்டுவிரலை அவர்களை நோக்கிக் காட் டாமல் குற்றம்செய்தவர்களை நோக்கித் திருப்ப வேண்டும்.

- ஜேம்ஸ் ஃபேலோஸ், பத்திரிகையாளர்-விமானி.

தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE