கோலாகலமாகக் கொண்டாடப்பட வேண்டிய ஓர் ஆண்டு, காவிரிப் படுகையில் குழப்பத்தோடும் சோகத்துடனும் எதிர்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்காக, 1924இல் சென்னை, மைசூர் மாகாணங்களுக்கிடையே ஒப்பந்தம் போடப்பட்டது. நதிகளின் பணி சுற்றுச்சூழலைக் குளிர வைப்பதுதான். காவிரியோ அவ்வப்போது கொந்தளிப்புகளுடனேயே பயணிக்கிறது. காரணம் என்ன?
காவிரி வரலாறு: காவிரியின் பிறப்பிடம் குடகு; குடகு மாகாணம் (Coorg Province) 1956இல்தான் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. இணைப்புக்கு முன்புவரை, குடகுவின் காவிரிப் பயன்பாட்டுக்கு எதிராக மைசூர் முழங்கிவந்தது. மாநிலச் சேர்க்கைக்குப் பிறகு தமிழகத்துடன் அதன் தாவா முற்றியது.
காவிரிப் பயன்பாட்டின் வயது தமிழகத்துக்குச் சுமார் ஈராயிரம் ஆண்டுகள் என்றால், ஏடறிந்த வரலாற்றில் காவிரியைப் பாசனத்துக்குக் கர்நாடகம் பயன்படுத்தத் தொடங்கியது 1800களுக்குப் பிறகுதான். மன்னராட்சியில் சிறு பாசனத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1831-81களில் மைசூரில் வெள்ளையர் ஆட்சி ஏற்பட்டது. திவான்களுடன் வெள்ளையர் சமரசமாகி 1881இல் மீண்டும் மன்னராட்சி ஏற்பட்டது.
பாசனப் பரப்பை மைசூர் விரிவுபடுத்தியபோது அவர்களுக்குக் கீழ்மடையில் பாசனம் செய்த சென்னை மாகாணம் பாதிக்கப்பட்டது. இரு தரப்புக்குமான பேச்சுவார்த்தை 1890இல் உதகமண்டலத்தில் நடந்தது. மைசூர் புதிதாகப் பாசனப் பரப்பை விரிவுபடுத்தக் கூடாது என்பது அதன் உடன்பாடாகும். 1900இல் கோலார் தங்கச் சுரங்கத்தில் நீர் மின்நிலையம் அமைக்க, சென்னை மாகாணம் மைசூரிடம் இசைந்தது. அப்போதும் புதிய பாசனத் திட்டங்களை மைசூர் அரசு முன்வைக்கவில்லை.
1910 இல் கண்ணம்பாடி திட்டத்தை மைசூர் அரசு உருவாக்கியது. இரண்டு மாநிலங்களுக்கிடையில் பூசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவிரிக்கான முதல் நடுவர் தீர்ப்பாயம் 1913இல் உருவாக்கப்பட்டது. மைசூர் அரசுக்கு ஆதரவாக 1914இல் தீர்ப்பாயம் தீர்ப்பைத் தந்தது. இதனை எதிர்த்து, சென்னை மாகாணம் லண்டனில் உள்ள இந்திய அரசுச் செயலாளரிடம் மேல்முறையீடு செய்தது; பகுதி அளவில் வெற்றியும் பெற்றது. 1924இல் மீண்டும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதுதான் மேட்டூர் அணையின் தொடக்கப் புள்ளி ஆகும்.
இதில் ஒரு சுவையான தகவல் உண்டு. மேட்டூர் அணையின் பாசனப் பகுதியாக அப்போது யோசிக்கப்பட்டது ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி மாவட்டங்கள் மட்டும் அல்ல. 1800களில் மேட்டூர் அணையின் பாசனப் பகுதியாக பவானி ஆற்றைச் சேர்ந்த வேறு சில பகுதிகளும் ஆகும். எனினும் கல்லணை மூலம் கரிகாலன் உருவாக்கிய சமவெளிப் பாசனமானது, தாமஸ் ஹிகாம், டபிள்யூ.எம்.எல்லீஸ் போன்ற ஆங்கிலேயப் பொறியியல் நிபுணர்களின் கவனத்தை ஈர்த்து, காவிரியைப் பூம்புகாரின் கடலைத் தேடி ஓடிய நதியாக்கியது.
இரு தரப்பு முறையீடுகள்: தொடர்ந்து மூன்றாம் முறையாகத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12 அன்று மேட்டூர் அணையைத் திறந்துவைத்தார். 1991-96 காலகட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு இந்தப் பெருமை (1991-92, 1992-93, 1993-94) முன்பே கிடைத்திருந்தது. எனினும், கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டு இல்லை. 2022-23இல் மேட்டூர் அணை தொடர்ந்து 340 நாட்கள் நிரம்பியிருந்தது.
18.06.2023 க்குப் பிறகு மேட்டூர் நீர்மட்டம் சரிவைச் சந்தித்தது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் உள்ளிட்ட பாசனப் பகுதிகளுக்குக் கால்வயிறு நிரம்பத்தான் தண்ணீர் கிடைக்கிறது. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவை இரண்டு மாநிலங்களுக்கு இடையில் நடந்த நெடிய வழக்கின் முடிவில், நிர்ணயித்த மாதாந்திரத் தண்ணீர் அளவுகளைத் தர முடியாது எனக் கர்நாடக அரசு பேசத் தொடங்கிவிட்டது.
டெல்லியில் இரண்டு மாநில அரசுகளின் கடிதங்கள் குவிகின்றன. நேர்முக முறையீடுகளுடன் இரண்டு மாநிலத் தலைவர்கள் முகாமிடுகின்றனர். மத்திய அரசின் நீர்வளத் துறையும் காவிரி மேலாண்மை வாரியமும் ஆகட்டும் பார்க்கலாம் என்ற பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறுவைச் சாகுபடி தமிழ்நாட்டில் சில மைல்கல்களைத் தொட்டிருந்தது. உதாரணம், தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2019-20இல்94,793 ஏக்கர், 2020-21இல் 1,44,370 ஏக்கர், 2022-23இல் 1,66,135 ஏக்கர் பரப்பு என விரிவடைந்தது.
இப்போது குறுவைச் சாகுபடியின் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலேயே தண்ணீர் இல்லை என்ற பச்சாதாபக் குரல்கள் கேட்கின்றன. தண்ணீர் அதிக அளவு, போதிய அளவு, பற்றாக்குறை அளவு ஆகிய மூன்று நிலைகளில் இருக்கும்போது எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்ற பட்டியல் நடுவர், நீதிமன்ற விசாரணையில் இறுதிசெய்யப்பட்டதாகும். கர்நாடகமோ தனக்கு உபரிநீர் இருந்தால் மட்டுமே தர முடியும் எனச் சாதிக்கிறது.
கனமழை பெய்து அனைத்து அணைக்கட்டுகளும் நிரம்பினால்தான் உபரி வெள்ள நீரைத் தமிழகத்துக்குத் தருவது என்பது கர்நாடகத்தின் நிலைப்பாடு. எனவேதான் குறுவை, சம்பா, தாளடி என நீதிமன்றம் பகிர்ந்து நிர்ணயித்த அளவை வழங்க கர்நாடகம் மறுக்கிறது. ஆண்டொன்றில் தர வேண்டிய சுமார் 180 டிஎம்சி அளவைத் தம் வசதிக்கேற்ப ஆறு மாதத்துக்குள் தந்துவிட்டு தமிழக விவசாயிகளைக் கர்நாடகம் ஏமாற்றுகிறது.
திருவோடாக மாறும் அமுதசுரபி: புவியியல்ரீதியில் மேகேதாட்டு இரண்டு மாநில எல்லையில் அமைந்த பகுதியாகும். இதன் மூலம் கர்நாடகம் புதுப் பாசனம் பெற முடியாது. எனினும் சில புனைவுத் தேவைகளை அது உருவாக்கிவிட்டது. தமிழகம் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் ஈடுபடுவதாகக் கர்நாடகம் புகார் செய்கிறது. இந்த இடம் பிலிகுண்டுலுவுக்குக் கீழ் வருகிறது.
பிலிகுண்டுலு இரண்டு மாநிலங்களின் எல்லையில் தண்ணீரை அளவிடும் இடமாகும். ஒருவர் தனது வீட்டில் வைத்துள்ள தண்ணீரைக் குடத்திலோ, தவலையிலோ, பானையிலோ சேமிப்பது என்பது அவரின் சொந்த விருப்பம். தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கல் குறித்து கர்நாடகம் கண்ணீர்விட வேண்டியதில்லை. மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியமும் மேகேதாட்டு குறித்துப் பாராமுகம் காட்டுகின்றன.
உக்ரைனில் டினிட்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோல்வா அணையில் ஏற்பட்ட பிரச்சினைகளால், உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐநா அவை இப்போது கவலை தெரிவிக்கிறது. இந்த சமிக்ஞை பிற்காலத்தில் மேகேதாட்டுவுக்கும் பொருந்தும்.
குறுவைச் சிறப்புத் தொகுப்புத் திட்ட உதவி அறிவிப்புகளில் சுறுசுறுப்பு காட்டும் தமிழ்நாடு அரசு, தன் பங்கு நீரைக் கர்நாடகத்திடம் கேட்டுப் பெறுவதில் சுணக்கம் காட்டுகிறது. மத்தியில் உள்ள அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் பலவும் தோள் தட்டிக் களமிறங்கி உள்ளன.
அந்தக் கூட்டணிக்குள் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸுடன் தமிழகத்தை ஆளும் திமுகவும் தோள் சேர்ந்து நிற்கப் போவது உண்மை என்றால், அதற்குமுன் மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மதித்து, தன் பிடிவாதத்தைத் தளர்த்தி, சகோதர உணர்வை நிரூபித்துக் காட்டும்படி காங்கிரஸை திமுக நிர்ப்பந்திக்க வேண்டும்.
நாற்றங்கால்கள், நடவு வயல்கள் காய்ந்துகொண்டிருக்கின்றன. ஜூன் மாதப் பங்கைக் கேட்க தமிழ்நாட்டு நீர்வளத் துறையினர் ஜூலை மாதம்தான் டெல்லி போகின்றனர். அதிலும் துல்லியமான வாக்குறுதியைப் பெறவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறுவைப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கானலில் மீன் பிடிக்கும் கதையாகிவிட்டது.
மேகேதாட்டு அணைக்குத் தடை கேட்டு 30.11.2018இல் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குக் கோப்பின் நாடாக் கயிறுகள் கட்டப்பட்டே கிடக்கின்றன. நீதி பெற வாய்ப்பிருந்தும் பசுமைத் தீர்ப்பாயத்தின் கதவுகளைத் தமிழ்நாடு அரசு தட்டவே இல்லை. மொத்தத்தில், ஓர் அமுதசுரபி திருவோடாக மாறும் அபாயம் காவிரிப் படுகையில் நிலவுகிறது.
- தொடர்புக்கு: vjeeva63@gmail.com
To Read in English: Mekedatu project: Need for riparian justice
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago