500-வது நாள்... ரஷ்யா - உக்ரைன் போரின் ‘விலை’தான் என்ன? - ஒரு தெளிவுப் பார்வை

By செய்திப்பிரிவு

08.07.2023 - இந்தத் தேதியில் இருந்து 500 நாட்களுக்கு முன்னாள் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ஒரு குளிர் நாளில் உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் ஒரு தாக்குதலை நிகழ்த்தியது. 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' என்றுதான் ரஷ்ய தரப்பு அந்தத் தாக்குதலுக்குப் பெயர் சூட்டியது. ரஷ்ய தாக்குதலின் வேகத்தைப் பார்த்த உலக நாடுகள் உக்ரைன் ஒரு சில வாரங்களில் சுருண்டுவிடும் என்று கணித்தன. ஆனால், அந்தத் தாக்குதல் இன்று வரை 16 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

போரின் விலைதான் என்ன? - இந்தப் போரின் விலைதான் என்னவென்று பார்த்தால் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளனர். உக்ரைன் நாட்டின் அப்பாவிப் பொதுமக்கள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் தொழில்துறை, வேளாண் துறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்ய ஒரு தசம ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

6.3 மில்லியன் அகதிகள்: ஐ.நா அறிக்கையின்படி இந்தப் போரினால் இதுவரை 6.3 மில்லியன் பேர் அகதிகளாக புலம் பெயர்ந்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உக்ரைன் போரினால்தான் அதிகளவில் அகதிகள் உருவாகியுள்ளனர். 6.3 மில்லியன் பேரி 5.967,100 பேர் அருகில் உள்ள ஐரோப்பிய நாடுகளிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 18 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் நாட்டிலேயே இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. இவர்களைத் தவிர உள்நாட்டிலேயே 6 மில்லியன் பேர் பல்வேறு இடங்களுக்குப் பெயர்ந்துள்ளனர்.

உலகிலேயே அகதிகள் அதிகம் உள்ள நாடாக ரஷ்யா திகழ்கிறது. அங்கு 1,275,315 பேர் அகதிகளாக உள்ளனர். அதற்கடுத்து ஜெர்மனியில் 1,076,680, போலந்தில் 999,690, செக் குடியரசில் 350,455, பிரிட்டனில் 206,700 பேர் அகதிகளாக உள்ளனர்.

9083 பேர் பலி: ரஷ்யத் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இதுவரை 9.083 பேர் பலியாகியுள்ளனர். 15,779 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால், இவை குறைவான கணிப்பு என்றே கூறப்படுகிறது. டானெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் மட்டும் 9,996 பேர் கொல்லப்பட்டிருக்கலாம். மற்றப் பகுதிகளில் 10,107 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவத் தரப்பில் பலி எத்தனை? - உக்ரைன் ராணுவ அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின் படி ரஷ்யத் தரப்பில் 231,700 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்து ராணுவ அமைச்சகம், ரஷ்யத் தரப்பில் 2 லட்சம் வீரர்கள் இறந்திருக்கலாம். இவர்களில் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை வாக்னர் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களாவர்.

பொருளாதாரப் பேரழிவுகள்: மார்ச் மாதம் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் போர் பாதிப்புகளால் ஏற்பட்ட சேதங்களைச் செய்ய 411 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று தெரிவித்தது. தொழில் துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 11.3 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் துறையில் 8.7 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கீவ் பொருளாதாரப் பள்ளியின் கணிப்பின் படி உக்ரைன் பாதிப்புகள் குறிப்பாக உட்கட்டமைப்பு சேதங்களை சீரமைக்க 143.8 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மீண்டெழுகிறதா உக்ரைன்? - ஓராண்டுக்கு முன்னர் உக்ரைனின் 20 சதவீதம் பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. இதில் துறைமுகங்கள், முக்கிய நகரங்கள் அடங்கும். இந்நிலையில், தற்போது 17 சதவீதமாக ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் அளவு குறைந்துள்ளது. போர் தொடங்கிய முதல் சில மாதங்களில் கீவ், கார்கிவ் போன்ற வடகிழக்கு உக்ரைன் நகரங்கள் வரை ரஷ்யப் படைகள் முன்னேறிச் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போரை மேற்குலக நாடுகள்தான் மறைமுகமாக நடத்துகின்றன என்று ரஷ்யா தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. ரஷ்யாவை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது என புதின் அதிரடிப் பேச்சுக்களை அவ்வப்போது உதிர்த்து வருகிறார்.

ஆம், உக்ரைன் போர் என்பது உக்ரைனுக்கான போர் அல்ல. இது பனிப்போரின் நீட்சி. அதனால்தான் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் என்று பலவும் பில்லியன் கணக்கில் உக்ரைனுக்குக் கொட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதே சர்வதேச விவகாரங்கள் சார்ந்த நிபுணர்களின் கருத்தாகவும் இருக்கின்றது.

போரை இரண்டு நாடுகள், இரண்டு தலைவர்கள் இல்லை அவர்களது ஆதரவு நாடுகள், ஆதரவு தலைவர்கள் தான் நடத்துகின்றன. எந்த ஒரு சாமான்ய மக்களும் போரை விரும்புவதில்லை. ஏன் ரஷ்யா தாக்குதலைக் கைவிட வேண்டும் சர்வதேச அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடாது என்று ரஷ்ய மக்கள் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பேரணியாகச் சென்றதையும், போராடியதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது தானே. அதனால் தான் போரின் விலை என்ன என்ற கேள்வி எழுகிறது.

- உறுதுணைக் கட்டுரை: அல் ஜசீரா | தமிழில்: பாரதி ஆனந்த்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE