ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் ‘சிந்தன் ஷிவிர்’ எனும் தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்துவது, புல்லட் ரயில் திட்டப் பணிகள் எனப் பல்வேறு விஷயங்கள் இந்நிகழ்வில் விவாதிக்கப்பட்டன.
அதேவேளையில், ரயில்வேபாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளைவிடவும், ‘வந்தே பாரத்’ ரயில்களை இயக்குவது குறித்தும், வருவாயை அதிகரிப்பது குறித்தும்தான் அதிகம் பேசப்பட்டது என இந்நிகழ்வில் கலந்துகொண்ட சில அதிகாரிகள் கூறியதாகப் பின்னாள்களில் செய்திகள் வெளியாகின. இக்கூட்டத்தின் இறுதி நாளான ஜூன் 2ஆம் தேதி மாலையில்தான் ஒடிஷாவின் பாலாசோரில் உள்ள பஹாநாகா பஸார் ரயில் நிலையத்தில் அந்தக் கோர விபத்து நிகழ்ந்தது.
விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (Commissioner of Railway Safety) ஏ.எம்.செளத்ரி மேற்கொண்ட விசாரணையின் 40 பக்க அறிக்கை, ரயில்வே அமைச்சருக்கும் ரயில்வே வாரியத்துக்கும் ரயில்வே பாதுகாப்புத் தலைமை இயக்குநருக்கும் கடந்த வாரம் அனுப்பப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பார்வைக்காக அறிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், ஊடகங்களுக்குக் கசிந்த இதன் பல அம்சங்கள் பொதுவெளிக்கு வந்தவண்ணம் இருக்கின்றன.
இந்த விபத்துக்குச் சதிவேலை காரணமாக இருக்கலாம் என ஊகங்களும் வதந்திகளும் பரப்பப்பட்ட நிலையில், ‘மனிதத் தவறு’தான் காரணம் என்கிறது இந்த அறிக்கை. தண்டவாளத்தில் பழுது, தடம் புரண்டது, இன்ஜின் கோளாறு எனும் ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
தொழில்நுட்பப் பிரச்சினைகள்: இந்த விபத்தின் முக்கியக் காரணியாக ரயில்வே அதிகாரிகள் ஆரம்பத்திலிருந்தே சொல்லிவந்த விஷயம் - சிக்னல் குளறுபடி. ஏறத்தாழ அதுதான் காரணம் என்பது இந்த அறிக்கையின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. கூடவே, பல்வேறு மட்டங்களில் நிகழ்ந்த தவறுகளின் விளைவு இந்த விபத்து என்கிறது அறிக்கை.
பஹாநாகா ரயில் நிலைய சிக்னலிங் பிரிவின் அலட்சியம்தான் இந்த விபத்துக்கு முதன்மைக் காரணம் என்று கூறியிருக்கும் அறிக்கை, சிக்னல் கட்டுப்பாட்டுச் சாதனத்தில் ஏற்பட்டிருந்ததாகச் சொல்லப்படும் அசாதாரணமான மாற்றங்களைக் கவனிக்க ஸ்டேஷன் மாஸ்டர் தவறிவிட்டதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
அறிக்கையின்படி, சிக்னலிங் சம்பந்தப்பட்ட வயர்கள் பிணைக்கப்பட்ட லொகேஷன் பாக்ஸ் மீது தவறான குறிப்பு இடம்பெற்றிருந்ததும் தெரியவந்திருக்கிறது. பராமரிப்புக்குப் பிறகு வயர்கள் எப்படி மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டும் வயரிங் வரைபடம், 2015ஆம் ஆண்டிலேயே மாற்றம் செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்த விவரம் அந்தப் பெட்டியின் மீது எழுதப்படவில்லை. ரயிலை ஒரு தண்டவாளத்திலிருந்து இன்னொரு தண்டவாளத்துக்குக் கொண்டுசெல்ல வழிகாட்டும் அமைப்பான ‘பாயின்ட்’ தொடர்பான நிலவரத்தைக் கண்டறியும் சர்க்யூட், 2018இல் அந்தப் பெட்டியில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெட்டியிலும் வரைபடத்திலும் அதுகுறித்துக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இந்த மாற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருடைய கவனத்தையும் கவரவில்லை என்பதுதான் இன்னும் கொடுமை. இதன் நீட்சியாக, விபத்து நடப்பதற்குச் சில மணிநேரத்துக்கு முன்பாக பஹாநாகா பஸார் ரயில் நிலையத்தின் சிக்னல் அமைப்பில் நடைபெற்ற பராமரிப்புப் பணியிலும் குளறுபடி நேர்ந்திருக்கிறது.
இந்தத் தவறுகளின் ஒட்டுமொத்த விளைவாக, மெயின் லைனில் 128 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், லூப் லைனுக்கு மாற்றப்பட்டதால் அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது; அதன் பல பெட்டிகள் தடம்புரண்டன. அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் மீது கோரமண்டலின் பெட்டிகள்மோதின. விபத்தின் விளைவை நாடே பார்த்தது. இன்னும் பல சடலங்கள் அடையாளம் காணப்படாமல் சவக்கிடங்கில் காத்திருக்கின்றன. பலர் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி இன்றும் அலைகின்றனர்.
ஆபத்து குறித்த அலட்சியம்: 2022 மே 16 அன்று மேற்கு வங்கத்தின் கரக்பூர் டிவிஷனின் பாங்க்ராநயாபாஸ் ரயில் நிலையத்தில், இதே போல் சிக்னல் பிரச்சினை காரணமாக ஒரு ரயில் தவறான தண்டவாளத்தில் செல்ல நேர்ந்தது. 2023 பிப்ரவரி 8 அன்று, மைசூரு பிரிவில் பைரூர்-சிக்ஜாஜுர் இடையே உள்ள ஹோசாதுர்கா சாலை ரயில் நிலையத்தில், சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு சரக்கு ரயிலுடன் மோதும் அபாயத்தை எதிர்கொண்டது.
ஓட்டுநரின் சாதுரியத்தால் தவறான தண்டவாளத்துக்கு ரயில் செல்வது தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக தென் மேற்கு ரயில்வே தலைமை நிர்வாக மேலாளர் ரயில்வே துறைக்கு எழுதிய கடிதத்தில், சிக்னல்களில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்கள் சுட்டிக்காட்டப்பட்டன. ஆனால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதன் விளைவு ஒடிஷாவில் மிக மோசமாக எதிரொலித்துவிட்டது.
முறியும் சதிக் கோட்பாடு: பாலாசோர் விபத்து குறித்து முதலில், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த ரயில்வே துறை, பின்னர் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டதன் பின்னணியில், அரசியல்ரீதியான கணக்குகள் இருந்தன. ஆரம்பத்திலிருந்தே இவ்விபத்துக்கு மதச் சாயம் பூச முயற்சிகள் நடைபெற்றன. ரயில்வே துறையின் அலட்சியத்தால் அல்ல – யாரோ பயங்கரவாதிகளால் விபத்து அரங்கேற்றப்பட்டது எனும் தோற்றம் உருவாக்கப்பட்டது.
தென் கிழக்கு ரயில்வே இளநிலைப் பொறியாளராகப் பணிபுரியும் ஆமிர் கான் என்பவரிடம் துருவித் துருவி விசாரணை நடைபெற்றது. ஒருகட்டத்தில் அவர் குடும்பத்துடன் தலைமறைவானதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. எனினும், சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் (FIR), ரயில்வே ஊழியர்கள் சிலர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன; சதிவேலை தொடர்பான வழக்குகள் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய அறிக்கையை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் சிபிஐ-யின் விருப்பம். எனினும், இது தொழில்நுட்ப அடிப்படையிலான அறிக்கை என்பதால், நிச்சயம் இதைப் புறந்தள்ள முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருப்பதால், இந்த அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட முடியாது என்பது அரசுத் தரப்பின் வாதம். இறுதி அறிக்கையில் முழு உண்மைகளும் வெளிவரும் என நம்பலாம்.
அரசு என்ன செய்ய வேண்டும்? - சிக்னலிங், பராமரிப்பு அமைப்பை மேம்படுத்த வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட சர்க்யூட், வயரிங் வரைபடங்களை வழங்க வேண்டும்; இதுபோன்ற பணிகளில் திறமையான ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை ரயில்வே வாரியத்துக்கு இந்த அறிக்கை வழங்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி, இந்திய ரயில்வேக்கு மறக்க முடியாத படிப்பினைகளை இந்த விபத்து தந்திருக்கிறது.
உலகிலேயே நான்காவது பெரிய ரயில்வே இந்தியாவுடையது. ஆனால், ஏராளமான போதாமைகள் இன்னமும் நிலவுகின்றன. 3.12 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இவற்றில் 77,000 பணியிடங்கள் ரயில்வே சிக்னல், போக்குவரத்துக் கட்டுப்பாடு பிரிவைச் சேர்ந்தவை. போதிய ஓய்வு அளிக்கப்படாததால் தொடர்ந்து வேலை செய்யும் ரயில் ஓட்டுநர்கள் கடுமையாகச் சோர்வடைகிறார்கள்.
பிற ஊழியர்களும் பணிச்சுமையை எதிர்கொள்கிறார்கள். பஹாநாகா பஸார் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் மீதான புகார்கள் தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ரயில்வே அதிகாரிகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் அதிகமான பணிச்சுமையை எதிர்கொள்வதாகக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அதிகரித்துவரும் மனிதவளம், வளர்ந்துவரும் தொழில்நுட்பம் எனச் சாதகமான சூழல்களைக் கொண்டு இவற்றையெல்லாம் அரசு சரிசெய்யும் என நம்புவோம்.
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in
To Read in English: Odisha train accident: A travel towards truth
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago