எகிப்தின் சமாதானம் எடுபடாதது ஏன்?

இஸ்ரேல்–பாலஸ்தீனப் பிரச்சினையில் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானப் பேச்சு நடத்த, வரலாற்றுரீதியாகவும் புவியியல்ரீதியாகவும் சரியான இடத்தில் அமைந்திருக்கும் நாடு எகிப்து.

எனினும், இப்பிரச்சினையில் எகிப்தின் நடவடிக்கைகள் பலனளிக்காமல் போனது ஏன்? இந்தக் கேள்விக்கு பல விடைகள் உண்டு. இஸ்ரேலின் தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியான நிலையில், கடந்த வாரம் எகிப்து முன் வைத்த சண்டை நிறுத்த யோசனையை ஹமாஸ் நிராகரித்தது. இதையடுத்து, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் காலித் மெஷாலும் கத்தாரில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டனர்.

நவம்பர் 2012-ல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் நடந்த மோதலின்போது, முகம்மது மோர்ஸி தலைமையிலான எகிப்து அரசு இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. ஆனால், தற்போதைய எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா அல்-சிசி, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு முற்றிலும் எதிரானவர். அந்த அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறிவருபவர். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கூட்டாளியான ஹமாஸ் அமைப்பு, அல்-சிசி தலைமையிலான எகிப்து அரசை ஆதரிக்கவில்லை. இது தான், எகிப்தின் சமாதான முயற்சியை ஹமாஸ் நிராகரிப்பதற்கான முக்கியக் காரணம்.

“காஸா எல்லையை மூடியதுடன், ஹமாஸ் ஏற்படுத்திய சுரங்கப் பாதைகளை அழிப்பதில் இஸ்ரேலுக்கு உதவியது எகிப்து. சமாதானத் தூதுவர் என்றால், இருதரப்பின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது இரு தரப்புக்கும் சமமான நெருக்கடி தரக்கூடியவராக இருக்க வேண்டும். எகிப்திடம் இந்த இரண்டு தகுதிகளும் இல்லை” என்கிறார், நவீன மத்தியக் கிழக்கு வரலாற்று ஆய்வாளர் டாக்டர் மேக்ஸ் ரெய்ப்மேன்.

எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாக உள்ள நிலையில், மத்தியக் கிழக்குப் பகுதியில் இஸ்லாமிய ஆதிக்க சக்தியாக உருவெடுக்கும் நாடுகள் பட்டியலில் துருக்கி மற்றும் ஈரானுடன் கத்தாரும் தற்போது இடம்பெறுகிறது. “ஹமாஸை ஆதரிக்கும் கத்தார், சமாதானப் பேச்சுவார்த்தையில் இறங்கினால் அதை ஹமாஸ் வரவேற்கும்” என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியரசியல் ஆய்வாளரான ஜஸ்டின் டார்கின்.

அதேபோல, இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட துருக்கி பிரதமர் ரஜப் தய்யுப், இந்தப் பிரச்சினையில் தலையிட விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும், “இராக் மற்றும் ஈரான் பிரச்சினைகளில் வேண்டுமானால் துருக்கியால் ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க முடியும். இஸ்ரேல் – அரேபியப் பிரச்சினையைக் கையாளும் திறன் அந்நாட்டுக்கு இல்லை” என்று மத்தியக் கிழக்கு வரலாற்று ஆய் வாளரான, அமெரிக்கப் பேராசிரியர் ஜோயல் பெய்னின் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் – பாலஸ்தீன சண்டையை முழுவதுமாக நிறுத்தும் விதமாக, பிரான்ஸில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, பிரிட்டன், கத்தார் ஆகிய நாடுகளுடன் துருக்கியும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அல் அரேபியா நியூஸ் தலையங்கம், சவுதி அரேபிய ஊடகம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE