களத்துக்கு வரும் கல்வியில் நிலவும் அரசியல்!

By நா.மணி

“கற்பித்தல் ஓர் அரசியல் செயல்பாடு. ஆசிரியர் நடுநிலையாக இருக்க முடியாது” என்றார் பிரேசில் நாட்டுக் கல்வியாளர் ஃபாவ்லோ பிரைரே. ‘மாற்றுக் கல்விக்கான தந்தை’ என்று அழைக்கப்படும் அவர், ஒரு படி மேலே சென்று, “அறிதல் என்பதே அரசியல் செயல்பாடு” என்றார். அவருடைய வார்த்தைகள் இன்று ஆச்சரியமளிக்கலாம். ஆனால், பிரைரேவின் குரல், 1960களிலேயே ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

1969இல் பிரைரே இந்தியா வந்தபோது, “கற்றல் என்பதே ஓர் அரசியல் செயல்பாடா... எப்படி?” என அவரிடம் கேட்கப்பட்டது. “எந்தப் பாடத்தில் அரசியல் இல்லை... நீங்கள் சொல்லுங்கள்” என்று அவர் திருப்பிக் கேட்டார். பிரைரே மதிப்பீடான ‘கல்வி ஓர் அரசியல் செயல்பாடு’ என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில், பாடத்திட்டத்தில் உள்ளார்ந்து கிடக்கும் அரசியலைத் தற்போது வெளிப்படுத்துகிறது.

மாறிவரும் கல்விக் கொள்கை: தேசியக் கல்விக் கொள்கை 2020, பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பாடங்களை நீக்குதல்-சேர்த்தல், மாநில அளவிலான புதிய கல்விக் கொள்கை உருவாக்கம் என இவையெல்லாம், கல்வி ஓர் அரசியல் செயல்பாடு என்பதையே காட்டுகின்றன. தமிழ்நாட்டில் விவாதப் பொருளாகியுள்ள ‘தமிழ்நாடு கல்லூரிகளில் பொதுப் பாடத் திட்டம்’ என்பதும் இதன் வெளிப்பாடுதான். மத்திய அரசு, பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம், தேசியத் தர மதிப்பீட்டுக் குழு போன்ற கல்வி முகமைகள் வழியாக மத்திய அரசு தனது அரசியல் நிலைப்பாடுகளை அமல்படுத்திவருகிறது.

தமிழ்நாடு அரசு, ‘தமிழ் உயர் கல்வி மன்றம்’ வழியாக ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி, அதில் 75%ஐ அமல்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசு உருவாக்கியிருக்கும் பொதுப் பாடத்திட்டத்தை மத்தியப் பல்கலைக்கழகங்கள் வேகமாக நிறைவேற்றிவருகின்றன; மாநிலப் பல்கலைக்கழகங்கள் வழியாகவும் பல விஷயங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மத்திய அரசு உருவாக்கியுள்ள பாடத்திட்டம், ‘இலக்கு சார் கற்றல்’ (Outcome based education - OBE) என அழைக்கப்படுகிறது. இதில் அக மதிப்பீடு, புற மதிப்பீடு இரண்டுக்கும் சம அளவு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இந்த விகிதாச்சாரம் முன்பு 40:60 என இருந்தது; பின்னர் 25:75 ஆக மாற்றியமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100% புற மதிப்பீடு என்ற நிலையையும் எட்டியது. பின்னர் மீண்டும் 25:75 விகிதாச்சார நடைமுறை கொண்டுவரப்பட்டது. தற்போதைய ஓபிஈ முறையில், அக-புற மதிப்பீட்டு மதிப்பெண் 50:50 விகிதாச்சாரமாக இருக்கிறது. இது தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்களில் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மதிப்பீட்டுச் சிக்கல்கள்: அக மதிப்பீட்டில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை முன்பு இல்லை. 25 மதிப்பெண்ணுக்குப் பூஜ்யம்கூட எடுக்கலாம். தேர்ச்சிபெறத் தேவையான மதிப்பெண்ணைப் புற மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், புதிய முறையில் 50க்குக் குறைந்தபட்சம் 15 மதிப்பெண் எடுக்க வேண்டும். இப்புதிய நடைமுறையில், ஒரு மாணவர் எந்தப் பருவத்தில் அக மதிப்பீட்டில் தேர்ச்சி பெறவில்லையோ அந்தப் பருவத்தோடு மாணவர் கல்லூரி/ பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். பிறகு, எப்போதும் தேர்வு எழுத இயலாது; பட்டம் பெறவும் முடியாது.

இந்நிலையில், இத்தகைய நடைமுறை ஏன் கொண்டுவரப்பட்டது, இதிலிருந்து எதிர்பார்க்கப்படும் ‘இலக்கு சார் கற்றல்’ அடைவுகள் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. “ ‘இலக்கு சார் கற்றல்’ நோக்கி மாணவர்களைத் திருப்புகிறோம்” என்பது கொள்கை வகுப்பாளர்கள் பதில்; “இல்லை! கல்வி வளாகத்தில் மாணவர்களை ஜனநாயகச் செயல்பாடுகளிலிருந்து முடக்குவதற்கே இந்த ஏற்பாடு” என்பது இதை எதிர்ப்பவர்களின் பதில். அக-புற மதிப்பெண் விகிதாச்சாரம் 50:50 என்று நிர்ணயிக்கப்பட்ட இந்தக்
குறுகிய காலத்தில், அக மதிப்பீட்டில் 50% மதிப்பெண்பெறாத மாணவர்களுக்குக் கல்வி நிறுவனங்களே மதிப்பெண் அளித்து அவர்களைத் தூக்கிவிடுதல் அல்லது வேண்டப்படாத மாணவர்களை வெளியேற்றுதல் எல்லாம் நடைபெறத் தொடங்கிவிட்டன. தமிழ்நாடுஉயர் கல்வி மன்றம் வகுத்துள்ள மாதிரி பொதுப் பாடத்திட்டம், இந்த ஆண்டே இதைச் சரிசெய்ய வலியுறுத்தியது. அதன்படி, அக மதிப்பீட்டை 25% எனக் குறைத்ததோடு, அதில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறத்தேவையில்லை என்ற நடைமுறையை மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

இன்றைய கல்விக் கொள்கை: ‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. பொருளாதாரரீதியாகக் கலப்புப் பொருளாதாரம்’ என்னும் தனித்துவமான பாதையைப் பின்பற்றிய காலத்தில் அதன் பாடத்திட்டம் வேறாகஇருந்தது. மதச்சார்பற்ற நாடு; ஆனால், உலகமயமாக்கலுக்குத் தன்னை உட்படுத்திக்கொண்ட நாடு என்ற நிலையில், அதன் கல்விக் கொள்கை அதற்குத்தகுந்தாற்போல் மாற்றம் கண்டது. உலகமயமாக்கத்துக்கு ஆட்பட்டிருக்கும் நிலையில், அதன் அரசியல் நிலை வந்தடைந்திருக்கும் இடத்துக்கு ஏற்றாற்போல், அது தன் பாடத்திட்டத்தை வடிவமைத்துக்கொள்ள விரும்புகிறது. மத்திய அரசின் சித்தாந்த நிலைப்பாடுகளுக்கு மாற்றான சிந்தாந்தத்தைக் கொண்டிருக்கும் மாநிலங்கள், மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்க/ எதிர்கொள்ள புதிய வழிமுறைகளைக் கையாள்கின்றன. அதன் ‌ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசின் உயர் கல்வி மன்றம் உருவாக்கியுள்ள பொதுப் பாடத்திட்டம் பார்க்கப்படுகிறது. இல்லை, இது தேசியக் கல்விக் கொள்கை 2020இன் ஒரு பகுதிதான் என்கிற விமர்சனமும் அதை நோக்கி முன்வைக்கப்படுகிறது.

தேசியக் கல்விக் கொள்கை அடிப்படையிலான பொதுப் பாடத்திட்டம் அல்லது மாநில அரசின்
பொதுப் பாடத்திட்டம் இரண்டுமே பல்கலைக்கழகங்கள்/ தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்
திட்டத்தைத் திட்டமிடும் சுதந்திரத்தைப் பறிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதைச் சரிசெய்ய செய்ய முடியுமா என்ற கேள்விக்கு முன்பாக, இதன் தோற்றுவாயைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கல்லூரிகளின் நிலை: இது ஒருபுறம் இருக்க, பல்கலைக்கழகங்கள்/ தன்னாட்சிக் கல்லூரிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட தன்னாட்சி அங்கீகாரத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டன என்பதை விவாதத்துக்கு உட்படுத்துவது அவசியம். தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், தரமான பாடத்திட்டத்தைச் சுதந்திரமாக வகுத்துக்கொண்ட அதேநேரத்தில், பல தன்னாட்சிக் கல்லூரிகள் பாடத்திட்டத்தை மலினமாக்கி மதிப்பீட்டை எளிமைப்படுத்தி மதிப்பெண்களை வாரி வழங்கின. தன்னாட்சிக் கல்லூரிகளில் தரமான பாடத்திட்டம் உண்டு என்பதற்கு மாறாக, மதிப்பீடு எளிது, மதிப்பெண் அதிகம் பெறலாம் என்ற நோக்கிலேயே மாணவர்கள் தன்னாட்சிக் கல்லூரிகளை நாடுவதும் உண்டு. தன்னாட்சி அங்கீகாரம் பெற்றால் கூடுதல் நிதி கிடைக்கும் என்று தன்னாட்சிக்குத் தாவிய கல்லூரிகளும் உண்டு.

‘உங்களை நான் எங்கள் பாடத்திட்டக் குழுவுக்கு அழைக்கிறேன். நீங்கள் என்னை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்கிற ஒத்துழைப்புடன் பாடத்திட்டக் குழுக்கள் பெயருக்குக் கூடுவதும் உண்டு. தற்போதைய தேசியக் கல்விக் கொள்கை 2020, முழுமையாக நடைமுறைக்கு வரும்போது அனைத்துக் கல்லூரிகளும் பட்டம் வழங்கும் தன்னாட்சிக் கல்லூரிகளாக மாறும். அது எத்தகைய பாதிப்பை உருவாக்கும் என்பது தனியே விவாதிக்கப்பட வேண்டியது.

இன்றைய கல்வியாளர்கள், கல்விச் செயல்பாட்டாளர்கள், கல்விசார் அமைப்புகள் ஆகியவற்றுக்கு இரண்டு விதமான கடமைகள் உள்ளன. ஒன்று, பல்கலைக்கழகங்கள்/ தன்னாட்சிக் கல்லூரிகள் ஆகியவற்றின் தன்னாட்சியைத் தக்கவைத்துக்கொள்வது. மற்றொன்று, தன்னாட்சியின் தரத்தை மேம்படுத்துவது. தமிழ்நாடு அரசின் மாநில உயர் கல்வி மன்றம், பொதுப் பாடத்திட்டத்தின் மீதான விமர்சனங்களை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த ஓராண்டு கால அவகாசம் எடுத்துக்கொண்டுள்ளது. இந்த ஓராண்டு இடைவெளி இதன் மீதான செறிவான விவாதத்தை முன்னெடுக்க ஏற்ற அவகாசமாக இருக்கட்டும். 

- நா.மணி
ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின்
பொருளாதாரத் துறைத் தலைவர்
தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

To Read in English: Politics in education coming to the forefront

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்