கடந்த நவம்பர் 8 இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் குறித்து விமர்சனக் குரல்கள் எழுந்திருக்கின்றன. உலக அரங்கில், பல்துறை ஆய்வு முடிவுகளை வெளியிடும் மிக முக்கியமான ஆய்விதழாக இந்தியாவிலிருந்து வெளியாகும் ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ இதழின் ஆசிரியராகச் சுமார் 12 ஆண்டுகாலம் பணியாற்றிய சி.ராம் மனோகர் ரெட்டியும் இந்நடவடிக்கையை விமர்சிக்கிறார். ‘டீமானிடைசேஷன் அண்ட் பிளாக் மணி’ (ஓரியண்ட் பிளாக் ஸ்வான்’ பதிப்பக வெளியீடு) எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தையொட்டி, ‘தி இந்து மையம்’ சமீபத்தில் விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த ராம்மோகன் ரெட்டியைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...
மக்களின் எதிர்ப்பு இல்லாத காரணத்தாலேயே பண மதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
இந்தக் கேள்வியை நான் இரண்டு விதமாகப் பார்க்கிறேன். ஒன்று, இந்த நடவடிக்கை மூலம் அரசு என்ன சாதித்தது? இரண்டு, மக்கள் இந்த நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறார்கள்?
முதல் கேள்விக்குப் பதில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் அரசு, மிகக் குறைந்த அளவே சாதித்திருக்கிறது. பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு, கடந்த மூன்று நான்கு மாதங்களில், அரசுக்குத் திரும்பக் கிடைத்திருக்கும் கறுப்புப் பண அளவு, மிகவும் குறைவுதான். ஆர்.கே. நகரைப் பாருங்கள். எவ்வளவு கறுப்புப் பணம் புழங்கியிருக்கிறது? இரண்டாவது கேள்விக்குப் பதில், இந்த நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ‘கறுப்புப் பணம் ஒழியும்’ என்று நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர மக்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்கூட, அவர்கள் எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் இப்போது உண்மையை உணர்ந்திருப்பார்கள்.
கள்ள நோட்டுக்களைக் கட்டுப்படுத்துவது இந்த நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. அது சரிதானா?
நிச்சயமாக இல்லை. காரணம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போதும் புதிய 2,000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பிடிபட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆக, இந்தப் புதிய ரூபாய் நோட்டுக்கள் முன்பு நம்மிடையே இருந்த ரூபாய் நோட்டுக்களில் இருந்த அதே அம்சங்களையே கொண்டிருக்கின்றன. புதிய ரூபாய் நோட்டுக்களில் கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் எதுவுமில்லை.
இந்த நடவடிக்கையின்போது, தங்களிடமிருக்கும் கணக்குக் காட்டப்படாத பணத்தை ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் டெபாசிட் திட்ட’த்தின் கீழ் வங்கியில் டெபாசிட் செய்ய மத்திய அரசு வழிவகை செய்தது. இதன் மூலம் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை கறுப்புப் பணம் வசூலாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெறும் ரூ.4,000 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வியடைந்துவிட்டது இன்று இதிலிருந்தே தெரிகிறதே! பணமதிப்பு நீக்கத்தால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள்தான் அதிகப் பயனடைந்துள்ளார்கள். காரணம், வங்கிகள் மூலம் அவர்கள் தங்களின் பணத்தை வெள்ளையாக மாற்றிவிட்டார்கள். நீங்கள் குறிப்பிட்ட திட்டத்தையும் அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சுலபமாகத் தப்பித்துவிட்டார்கள்.
மேலும், அந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகளில், வருமானத்தில் 25%-க்கும் குறைவாகக் கணக்குக் காட்டப்படாத பணத்தை டெபாசிட் செய்தவர்களை இப்போது, வருமான வரித்துறை தனக்குக் கிடைத்துள்ள கூடுதல் அதிகாரத்தின் காரணமாக, வன்கொடுமைக்கு உள்ளாக்கி வருகிறது. அதாவது, சட்டத்தை மதித்து நடந்துகொண்டவர்கள் மாட்டிக்கொள்ள மறுபக்கம், சட்டத்தை மதிக்காதவர்கள் தப்பித்துக்கொண்டார்கள்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது வெறும் பொருளாதார நடவடிக்கை என்பதைத் தாண்டி, அது ஒரு அரசியல் தந்திரம் என்கிறீர்கள். அதை விளக்க முடியுமா?
நிச்சயமாக! முதல் விஷயம், பணமதிப்பு நீக்க அறிவிப்பு ரகசியமாக வைக்கப்பட்டது. முன்னறிவிப்பு கொடுத்தால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் உஷாராகிவிடலாம் என்று அரசு நினைத்திருக்கலாம். ஆனால், அவ்வளவு ரகசியமாக வைத்தும், பலர் தப்பித்துக்கொண்டார்கள் என்பதுதான் கவலையளிக்கும் விஷயம்.
கறுப்புப் பொருளாதாரத்தை ஒழிப்பதுதான் எங்களின் லட்சியம் என்கிறது அரசு. கறுப்புப் பணம், அதில் ஒரு சிறு பங்குதான். அதனால்தான் மோடி, கறுப்புப் பணத்தை ஒழிப்பது எங்களின் முதல் நடவடிக்கை என்றார். ஆனால் அந்த நடவடிக்கைக்குப் பிறகு, வேறு பெரிய நடவடிக்கைகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதுவே அவர்களின் மெத்தனத்தைக் காட்டுகிறது.
உதாரணத்துக்கு, இந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட பட்ஜெட்டை எடுத்துக்கொள்ளுங்கள். தேர்தல் நன்கொடைகளில் பெரிய அளவில் கறுப்புப் பணம் கைமாறுகிறது. எனவே அதைத் தடுக்க ‘தேர்தல் பத்திரங்கள்’ என்ற விஷயம் இந்த பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள், வங்கிகள் மூலம் இந்தப் பத்திரங்களைப் பயன்படுத்தலாம். இதனால் ஒருவர், தான் எந்தக் கட்சிக்கு நிதி அளித்தேன் என்பதை வெளிப்படுத்தத் தேவையில்லை. அதேபோல, தான் யாரிடமிருந்து நிதி பெற்றேன் என்று கட்சியும் வெளிப்படுத்த அவசியமில்லை. இது மேலும் குழப்பத்தையே விளைவிக்கும். கறுப்புப் பணம் அதிகமாக இது வழிசெய்யும்.
நவம்பர் 8-ம் தேதி பிரதமரின் உரையில், ‘ஊழல், கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்றார். ஆனால் அந்த அறிவிப்பு அடுத்த நாள் அரசிதழில் வெளியானபோது, ஊழல் என்ற வார்த்தை காணப்படவில்லை. ஏன் என்ற கேள்விக்கு, பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும்.
அப்படியென்றால், பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம்தான் என்ன?
இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு கள்ள நோட்டுக்கள் வெளியாகின. அந்தத் தோல்வியை மறைக்க, ‘கறுப்புப் பணத்தை ஒழிப்போம்’ என்று சொல்லப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு, எதிர்பார்க்கப்பட்ட அளவு கறுப்புப் பணம் வரவில்லை. அந்தத் தோல்வியை மறைக்க ‘பணமில்லாப் பொருளாதாரம்’ என்று சொன்னார்கள். ஆனால் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ‘பணமில்லாப் பொருளாதார’ பிரச்சாரமும் இப்போது தோல்வியைத் தழுவியுள்ளது.
ஆட்சிக்கு வந்த பிறகு, அம்பானி, அதானிகளுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால் மோடி அவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அவர்மீது மக்கள் வெறுப்புடன் இருந்தார்கள். அதிலிருந்து தன் மீதான பிம்பத்தை நிலைநிறுத்திக்கொள்ள, இப்படி ஒரு நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். ஆம், பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது ஒரு நாடகம். அந்த நாடகத்தின் மூலம் அவருக்குத் தேவையான அளவு அரசியல் வெற்றி கிடைத்துவிட்டது. ஆனால், பொருளாதாரம்தான் சிக்கலில் மாட்டிக்கொண்டது!
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago