ஜப்பானிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அக்டோபர் 22-ல் நடைபெறுகிறது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தம் 475 இடங்கள் உள்ளன. இப்போதைய பிரதமர் ஷின்சோ அபேயின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியும் அதன் தோழமைக் கட்சியான பவுத்த கொமிட்டோ கட்சியும் சேர்ந்து 329 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அப்படியிருக்கத் திடீரெனத் தேர்தலை நடத்த முடிவுசெய்திருக்கிறார் ஷின்சோ அபே.
பதவிக் காலம் முடிந்த பிறகுதான் தேர்தல் நடைபெற வேண்டும் என்றாலும், பிரிட்டனிலும் ஜப்பானிலும் பிரதமர்கள் நினைத்தால் தேர்தலை முன்கூட்டியே நடத்திவிட முடியும். தேர்தல் தேதியை ஆணையம் அல்ல - பிரதமர்களே அறிவித்துவிடலாம். வட கொரியா வாரத்துக்கு ஒரு அணுகுண்டையோ, ஏவுகணையையோ ஏவி சோதனை என்ற பெயரில் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. உலக அளவில் பொருளாதாரம் மீட்சி அடைந்துவிடவில்லை. ஜப்பானிலேயே பொருளாதார மந்தநிலை தொடர்கிறது. இந்த நிலையில், எதற்காகப் பிரதமர் அபே திடீர் தேர்தல் நடத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது. ஷின்சோ அபேயின் ஆட்சி மீது மக்களுக்குப் பெரிய அதிருப்தி ஏதும் இல்லை என்றாலும், அபரிமிதமான அன்பும் ஏற்பட்டுவிடவில்லை.
மூன்று காரணங்கள்
மூன்று வெவ்வேறுவிதமான காரணங்களால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாள் குறித்துவிட்டார் அபே. முதலாவது, ஊழல் குற்றச்சாட்டு. அவருடைய அமைச்சரவை சகாக்கள் மீது சில ஊழல் குற்றச்சாட்டு கள் கிளம்பின. அதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு. அந்த ஊழலில் அபேயின் மனைவியின் பெயரும் சேர்ந்து அடிபட்டது. இது ரசாபாசமாகிவிடக் கூடாது என்பதற்காகச் சில அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்தார். கடைசியாக, பாதுகாப்பு அமைச்ச ராக இருந்த டொமோமி இனாடாவைக் கடந்த ஆகஸ்டில் விலக்கினார். மக்களிடையே அவருடைய செல்வாக்கு எப்படி இருக்கிறது என்று சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தியபோது 32% பேர் ஆதரித் தனர். 60% பேர் அதிருப்தி தெரிவித்தனர். இதை அபே கவனிக்கத் தவறவில்லை.
இரண்டாவது, எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையும் இல்லை, எதிர்க்கட்சிகளுக்கு மக்களிடையே செல்வாக் கும் அதிகரித்துவிடவில்லை. பிரதான எதிர்க்கட்சியான டெமாக்ரடிக் கட்சி சோம்பிக் கிடக்கிறது. இதனால்தான் துணிச்சலோடு தேர்தலை நடத்த முன்வந்திருக்கிறார். தேர்தலுக்கான நாளையும் அவர் அறிவித்தபோது பிரச்சாரம், வாக்குப்பதிவு எல்லாவற்றுக்குமே ஒரு மாத அவகாசம்தான் இருந்தது. ஒரு மாதத்துக்குள் எதிர்க்கட்சிகளால் மக்களிடையே ஆதரவைத் திரட்டிவிட முடியாது என்பது அவருடைய கணிப்பு.
மூன்றாவதாக, வட கொரியா இப்போது போர் வெறி கொண்டு அலைகிறது. சீனா தனக்குச் சாதகமாக இருக்கிறது என்ற மிதப்பில் ஏவுகணைகளையும் அணுகுண்டுகளையும் வெடித்து வாரந்தோறும் வாணவேடிக்கை நடத்துகிறது. இரண்டாவது உலகப் போருக் குப் பிறகு ஜப்பானிய அரசியல் சட்டமானது போரே கூடாது என்ற முடிவில் புதிதாக எழுதப்பட்டது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பால் அணு ஆயுதம் தயாரிப்பதையோ, வைத்துக்கொள் வதையோ ஜப்பானிய அரசியல் சட்டம் அனுமதிப்பதில்லை. ஜப்பானுக்கு ராணுவமே தேவையில்லை என்றுகூட முடிவுசெய்துவிட்டார்கள். ஒரேயடியாக ராணுவம் இல்லாவிட்டால் பிற நாடுகள் படையெடுத் துக் கைப்பற்றிவிடும் என்பதால், முப்படைகளையும் ஏற்படுத்தி, அவற்றைத் ‘தற்காப்புப் படைகள்’ என்றே அழைக்கிறார்கள். பிற நாடுகளுடன் பிரச்சினை ஏற்பட் டால் பேசித்தான் தீர்க்க வேண்டும், போரிடக் கூடாது என்று அரசியல் சட்டம் கூறுகிறது. அணுகுண்டு வீச்சால் பேரிழப்புக்கு உள்ளான ஜப்பான், தன்னுடைய நாசத்துக்குத் தன்னுடைய போர் வெறிதான் காரணம் என்று மருகி அப்படி உள் ஒடுங்கியது. ஆனால், சீனமும் வட கொரியாவும் பிற ஆசிய நாடுகளைப் போல ஜப்பானையும் பீதிக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கின்றன. எனவே, ஷின்சோ அபே அரசியல் சட்டத் தைத் திருத்தி, ராணுவத்தை மேலும் வலிமைப்படுத்த நினைக்கிறார்.
தோல்வி அச்சம்?
இந்தக் காரணங்களுக்காக அவர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தாலும், தேர்தல் இல்லாமலேயே எதிர்க்கட்சிகளிடம் பேசி அரசியல் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் பெற முடியும் என்று கருதுவோரும் உண்டு. நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்தால் தன்னுடைய செல்வாக்கு மேலும் சரியக்கூடும். அதனால், கட்சிக்குத் தோல்வியும் ஏற்படலாம் என்ற அச்சத்தில், நாட்டு நலனைவிட தன்னுடைய சுயநலம் காரணமாக முன்கூட்டியே தேர்தல் நடத்துகிறார் என்றும் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த முடிவிலும் ஆபத்து இல்லாமல் இல்லை. இப்படித்தான் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். தேர்தலுக்குப் பிறகு அவருடைய கட்சிக்கு இடங்கள் குறைந்தன. ‘பிரெக்ஸிட்’ பேச்சில்கூட அவரால் செல்வாக்குடன் பங்கேற்க முடியவில்லை.
புதிய வரி விகிதங்களை அமல்படுத்தவும், சமூகநலக் கொள்கைகளைப் புதிதாக அமல்படுத்தவும் தேர்தலைச் சந்திப்பதாக ஷின்சோ அபே அறிவித்திருக்கிறார். நுகர்வு வரியை இப்போதிருக்கும் 8% என்ற அளவிலிருந்து 10% ஆக உயர்த்த விரும்புகிறார். அதில் கிடைக்கும் கூடுதல் தொகையைக் கொண்டு நாட்டின் கடனை அடைக்கவும், ஏழை மாணவர்கள் கல்லூரியில் படிப்பதற்கான உதவித்தொகையை அதிகப்படுத்தவும், மூன்று வயது முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளின் சுகாதார நலனுக்குச் செலவிடவும் உத்தேசித்திருப்பதாகக் கூறுகிறார். இந்த நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்வதற்கும் பெரிய தடை கள் இல்லை.
ஜப்பானிய ராணுவத்தில் மேலும் ஆயுதங்களையும் படைப் பிரிவுகளையும் சேர்த்தால் முதலில் அது சீனத்தின் எதிர்ப்பைச் சந்திக்க நேரும். ஜப்பான் ராணுவரீதியாக வலுவாவதை சீனா விரும்பவில்லை. தற்காப்புப் படைகள் என்று அழைக்கப்படும் ஜப்பானிய ராணுவத்தின் முப்படைகளிலும் மொத்தம் 2,27,000 வீரர்கள் உள்ளனர். உண்மையில், இந்த எண்ணிக்கை, பிரெஞ்சு ராணுவத்திலிருப்பதைவிட அதிகம். ராணுவத்தை வலுப்படுத்தவோ, பெரிய ஆயுதங்களைச் சேர்க்கவோ ஜப்பானிய அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவைத் திருத்த வேண்டும். ஜப்பானிய அரசியல் சட்டத்தின் தனித்தன்மை என்னவென்றால், இதுவரை அது திருத்தப்பட்டதேயில்லை.
தொடரும் சவால்கள்
இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. இந்தத் தேர்த லில் அபேயின் கட்சி தோல்வியடையாது, ஆட்சியை இழக்காது என்று வைத்துக்கொண்டாலும் அதன் செல்வாக்கு குறைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தால் அபே இன்னொரு சோதனையைச் சந்தித்தாக வேண்டும். அபே தலைவராக இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்தாக வேண்டும். 2018-ல் கட்சித் தலைவர் தேர்தலில் அபே போட்டியிட்டால், அவரை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார் கள் என்று சொல்லிவிட முடியாது. அப்படி யாராவது போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றால், அபேயின் பிரதமர் பதவி பறிபோய்விடும். டோக்கியோ பேரவைத் தேர்தலில், டோக்கியோவின் முதல் பெண் கவர்னராக இருந்த யூரிகோ கோய்கி, பிரதமர் அபேயின் கட்சியைத் தோல்வியடைய வைத்தார். கோய்கி தொடங்கியுள்ள புதிய கட்சியின் பெயர் ‘கிபோ நோ தோ’. நம்பிக்கை அளிக்கும் கட்சி என்று பொருள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிக அவகாசம் கொடுத்தால் அடுத்த ஆண்டுக்குள் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு தனக்குப் பெரிய போட்டியாளராக கோய்கி வந்துவிடுவார் என்று அஞ்சித்தான், அவருக்கு அவகாசமே இல்லாதபடிக்கு அவசர கதியில் தேர்தலை நடத்துகிறார் அபே என்கிறார்கள்.
வட கொரியாவின் கொக்கரிப்பு அதிகரித்துவரும் வேளையில், எதற்கு இந்தத் தேர்தல் என்று ஜப்பானியர்கள் சலிப்படைந்தால், ஷின்சோ அபேவுக்குப் பேராபத்தாக முடிந்துவிடும். என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.
- வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago