வரலாற்றுக்கு இடையில் ஒரு கற்பனைப் பம்பா

By சரவணன் மாணிக்கவாசகம்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் ‘விக்டரி சிட்டி’ (Victory City). ருஷ்டி ஏற்கெனவே கூறியபடி இது இந்திய நாவல்; வரலாற்று நாவல். பதினான்காம் நூற்றாண்டில் ஹம்பியை ஆண்ட பொம்மை ராஜா தோற்கிறார். அவர் தலை கொய்யப்பட்டு, சுல்தானின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அந்நகரப் பெண்கள் சிதை வளர்த்து மொத்தமாக விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அம்மா இறப்பதைப் பார்த்த ஒன்பது வயதுப் பெண் பம்பா, ஒருபோதும் இதுபோல் நான் இறக்க மாட்டேன் என்று உறுதிகொள்கிறாள். அவள் நாவில் பார்வதிதேவி குடியேறுகிறாள். சங்கம சகோதரர்கள் இருவர் சுல்தானால் சிறைபிடிக்கப்பட்டு, சுன்னத் செய்யும் முன் தப்பிவிடுகிறார்கள். பம்பா சகோதரர்களிடம் ஹம்பியில் பெண்கள் கூட்டாக உயிரிழந்த இடத்தில் நகரை உருவாக்கச் சொல்கிறாள். சுல்தான்களின் இந்தியாவில் ஒரே இந்துப் பேரரசாக விஜயநகர சாம்ராஜ்ஜியம் உருவாவதை நாவல் விவரிக்கிறது.

ஒரு பெண்ணின் ஆணைக்குக் கட்டுப்பட்டு விஜயநகரம் உருவாகிறது. அங்கே அரண்மனையில் பாதுகாப்புப் பணியில் பெண்கள், படையில் பெண்கள், கல்வியில் சிறந்த பெண்கள், மண்டியில் மூட்டை தூக்குவதிலும் பெண்கள் எனப் பெண்கள் மயம். நாட்டுக்கு எதிராகக் கணவன்மார் திரும்பினால் கழுத்தை அறுத்துவிட வேண்டும் என்பது மூன்று சகோதரர்களை மணமுடித்த மூன்று சகோதரிகளுக்கான அரசாணை. காலமெல்லாம் கணவன்மார் மனைவிக்குப் பயப்படுகிறார்கள். பம்பாவுக்கு ஏககாலத்தில் ஒரு கணவனும் ஒரு காதலனும் இருக்கிறார்கள். விஜயநகரத்தின் கதை என்பதைவிட, இதை பம்பா என்னும் பிரம்மிக்கத்தக்க பெண்ணின் கதை என்றே சொல்ல வேண்டும். இருநூற்று நாற்பத்தேழு வருடங்கள் வாழ்ந்தவள் அவள். மகள் வயோதிகம் அடைந்து பாட்டியாகியபோது, மகளது பேத்திபோல் தோற்றம்கொண்ட அதிசய ரூபிணி பம்பா. ஏனெனில், நமக்குப் பத்து வருடங்கள் பம்பாவின் உடலுக்கு ஒரு வருடம்தான். சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து மூன்று முறை அதன் அரசியாக இருந்தவள். அவளது பேத்தி, கொள்ளுப் பேத்தி, எள்ளுப் பேத்தியின் பேத்தி, அவளின் பேத்தியின் மரணத்தையும் பார்த்தவள். கிட்டத்தட்ட இரண்டரை நூற்றாண்டுகள் வாழ்ந்தவர். அதிக ஆயுள் ஒரு சாபம்தானே.

இந்த நாவல் வரலாறும் கற்பனையும் இணைந்த கலைப் படைப்பு. கதைசொல்லியே கற்பனைப் பாத்திரம் என்பதால் எது வரலாறு, எது மாயம் என்பதைக் கண்டுபிடிப்பது சிரமம். இளஞ்சிவப்புக் குரங்குகளின் வருகையை நாவல் தொடுகிறது. இந்துக் குரங்குகளையும், முஸ்லிம் குரங்குகளையும் நிரந்தரமாகப் பிரித்ததே இந்த இளஞ்சிவப்புக் குரங்குகளின் முதல் வேலை என்பதை நாவல் சொல்கிறது. மாய யதார்த்தவாதத்தை நாவலுக்குள் சித்தரிப்பதில் விற்பன்னர் ருஷ்டி. அவரது வாசிப்பு மொழியும் தனியின்பம் தரக்கூடியது.

இந்த நாவல் எழுதுவதற்குப் பல ஆய்வுக் கட்டுரைகள் உதவியதை ருஷ்டி பட்டியலிட்டுள்ளார். 14 நூல்கள் மிகவும் உதவின என்று அவற்றின் பெயர் களையும் அளித்துள்ளார். இந்த ஆய்வின் வழி தென்னிந்தியாவின் பண்பாட்டைப் பற்றிய தெளிவான அபிப்ராயம் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். நமது அதிரசம் என்கிற பலகாரம் இந்த நாவலில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதை அப்படியே அதிரசம் என்றே குறிப்பிடுகிறார் ருஷ்டி. அதுபோல் ஆண்டாள் பற்றிய ‘சூடிக்கொடுத்த சுடர்நாச்சியார்’ என்கிற பதம் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவு பத்மா லட்சுமி வழி ருஷ்டிக்குக் கிட்டியிருக்கலாம். சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட பத்மா லட்சுமி, ருஷ்டியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

ருஷ்டி இங்கு பிறந்திருந்தாலும், அவர் மனதால் ஒரு பிரிட்டிஷ் அமெரிக்கர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவும் தென்னிந்தியா அவர் அறியாதது. ருஷ்டிக்கு எழுபத்தைந்து வயதாகிறது. இவரை வாசிக்க நினைப்பவர்கள், குறிப்பாக ஆசிய கண்டத்தினர் வாசிக்க ஆரம்பிக்கலாம் என்று பரிந்துரைக்கக்கூடிய நூலை இவர் இப்போதுதான் எழுதியிருக்கிறார். அது இந்நூல்தான்.

- சரவணன் மாணிக்கவாசகம், விமர்சகர் | தொடர்புக்கு: sarakavivar@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE