க
டந்த சில நாட்களுக்கு முன்பு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு உள்பட ஒன்பது மாநிலங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது மத்திய அரசு. இனிமேல் அதிகளவில் நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக விவசாயத் துறை அதிகாரிகள் மகிழ்ச்சியாக பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் இத்திட்டத்தையும்கூட வழக்கம்போல விவசாயிகள் அவநம்பிக்கையோடுதான் பார்க்கிறார்கள். ஏன்?
விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்க தமிழக அரசிடம் என்ன திட்டமிருக்கிறது என்று கேட்கிறார் வேளாண் துறையில் தகவல் தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொண்டுவரும் திருச்செல்வம். “விவசாய நிலங்கள், பயிர்வகைகள், விளைபொருட்கள் என எந்தத் தகவலும் ஒருங்கிணைக்கப்படாத நிலையில் எவ்வளவு அதிகம் விளைந்தாலும் குறைந்த விலைதான் கிடைக்கும் என்பது விவசாயிகளுக்கு நன்றாகத் தெரியும், எனவேதான் அவர்கள் இந்த வெற்று அறிவிப்புகளில் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள்” என்கிறார் அவர். “அடிக்கடி இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறோம், இவ்வளவு விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்களைச் சொல்லி தமிழக அரசு ஏமாற்றுகிறது. உண்மையில், ஏற்கெனவே செயல்பாட்டில் இருந்த திட்டங்களே இந்த ஆட்சியில் முடங்கிப்போய் கிடக்கின்றன” என்கிறார் விவசாயிகள் உரிமைகள் செயல்பாட்டாளரான வெ.ஜீவகுமார்.
“நபார்டு வங்கி மூலமாக வழக்கமாக நடந்துவந்த தூர்வாரும் பணிகள் முடங்கிப்போய் கிடக்கின்றன. குடிமராமத்துப் பணிகள் எதுவும் சரியாக நடைபெறவில்லை. முதல்வர் பழனிசாமி அறிவித்தது வெறும் கண்துடைப்பு. நீர்நிலைகளை முறையாகத் தூர்வாரவில்லை. ஏரிகளில் நீர் வெளியேற வழியின்றிச் செய்துவிட்டார்கள். சுழல் எதுவென தெரியாமல் ஆற்றில் இறங்குபவர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கி இறக்கிறார்கள்” என்கிறார் அவர்.
“விவசாயிகளுக்குத் தேவையான விதைநெல் விநியோகமும் தட்டுப்பாடாக உள்ளது. டெல்டா விவசாயிகள் தற்போது குறைந்த நாட்களில் அதிக விளைச்சல் தரும் ஆந்திரா பொன்னி போன்ற பயிர்களைத்தான் அதிகமாகப் பயிரிட விரும்புகிறார்கள். ஆனால் அரசு விதை அங்காடிகளில் அதிக நாட்கள் தேவைப்படும் பயிர்களுக்கான விதை நெல் மட்டும்தான் கிடைக்கிறது. அடியுரம், மேலுரத்திற்கான ரசாயன உரமும் உரிய நேரத்தில் சரியாக கிடைப்பதில்லை. இயற்கை உரங்களுக்கான வாய்ப்பே இல்லை.
கடந்த இரண்டாண்டுகளின் கடும் வறட்சியின் காரணமாக காவிரி டெல்டாவில் ஆறு போகம் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சம்பாவும் பயிரிடப்படவில்லை. மாநிலம் முழுவதும் வறட்சி என்று அறிவித்தார்களே தவிர, வறட்சி நிவாரண நிதி சரியாக வழங்கப்படவில்லை. பயிர்க் காப்பீடைக்கொண்டு அதைச் சரிசெய்து விடலாம் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதுவும் முறையாக வந்துசேரவில்லை” என்கிறார் வெ.ஜீவகுமார்.
‘நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனம்தான் பயிர்க்காப்பீட்டுத் தொகையை அளித்துவருகிறது. அவர்கள் என்ன அடிப்படையில் காப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்தார்கள் என்பதே குழப்பமாக உள்ளது. ஒரு ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டின் அளவுகூட மிகப்பெரிய அளவில் வித்தியாசப்படுகிறது. இழப்பினை மதிப்பிட எப்போது வந்துபோனார்கள், எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்தார்கள் என்ற விவரங்கள்கூட பெரும்பாலான விவசாயிகளுக்குத் தெரியவில்லை.
வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், வேளாண்மை விரிவாக்க மையங்கள் என்று மூன்றுவிதமாக விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளார்கள். இவற்றில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக மட்டுமே பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் பயிர்க்காப்பீடு வழங்கப்படவில்லை. இந்தப் பயிர்க்காப்பீட்டை எதிர்பார்த்திருப்பவர்கள் எல்லோருமே பிரீமியம் செலுத்திய விவசாயிகள். பயிர்க்காப்பீடு முழுமையாக கிடைக்குமோ என்ற அவநம்பிக்கையும்கூட எழுந்துள்ளது.
பயிர்க் காப்பீட்டுக்காகக் காத்திருக்கும் விவசாயிகள் சொல்லும் கண்ணீர்க் கதைகள் இந்த அரசு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கவும் தயாராகிவிட்டது என்பதை எடுத்துச்சொல்கின்றன. ‘மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து கட்டப்பட்ட பிரீமியங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பணத்தைக் கொடுக்கிறார்கள். ஆனால் காப்பீட்டு நிறுவனம் அளித்துள்ள பயனாளிகளின் பட்டியலைக் கூட்டுறவுச் சங்கங்கள் பின்பற்றவில்லை.
வழங்கப்பட்ட முழுத்தொகையையும் அந்தச் சங்கங்கள் கொடுக்கவில்லை. சில இடங்களில் பட்டியலில் இல்லாத பெயர்களுக்கும்கூட காப்பீட்டுத் தொகையைக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் எத்தனை சதவீதம் இழப்பீடு நிர்ணயித்துள்ளோம் என்பதைக் காப்பீட்டு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளதுபோல ஒவ்வொரு விவசாயிக்கும் எவ்வளவு இழப்பீடுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், இது மிகப்பெரும் ஊழலுக்கு வழிவகுக்கும். ஆனால் இதைப் பற்றி தமிழக அரசு அக்கறைப்படுவதாகவே தெரியவில்லை” என்கிறார் தஞ்சாவூர் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த விவசாயி ஆ.சிவராஜ்.
இரண்டாண்டு காலத் தொடர் வறட்சியின் காரணமாக விவசாயிகள் தங்கள் கையிலிருந்த சேமிப்பையும் இழந்து அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கிறார்கள். ஆனால், விவசாயக் கடன்களைப் பொறுத்தவரை விவசாயக் கூட்டுறவு வங்கிகள் நகைக்கடனை மட்டுமே வழங்குகின்றன. வங்கிக்கடன் வாங்குவதில் விவசாயிகள் மட்டும்தான் தொடர்ந்து சிக்கலை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். வானமும் பொய்த்தது, நதியும் பொய்த்தது, ஆட்சியாளர்களும் அப்படியே. கடைசியில் கைவிரித்துவிட்டார்கள்.
இதையெல்லாம் தாண்டி காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் இருந்த வழக்கத்தை பழனிசாமி மாற்றியமைக்கிறார் என்றும் டெல்டா விவசாயிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதியன்று டெல்டா மாவட்டங்களுக்குத்தான் முதலில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம்.
ஆனால் பழனிசாமி வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு முதலில் கிழக்கு-மேற்குக் கால்வாயைத் திறந்துவிட்டுள்ளார். இதன்மூலம் அவருடைய மாவட்டம் மட்டுமே பயனடைய வேண்டும் என்கிற எண்ணம்தான் அவருக்கு இருக்கிறது. முதல்வர் என்பவர் தமிழகம் முழுமைக்கும்தானே? இல்லை, சில மாவட்டங்களுக்கு மட்டும்தானா?
-செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago