வரலாற்று ஆசிரியர்களும், வரலாற்று ஆசிரியர்களாகத் தங்களைத் தாங்களே புனைந்துகொள்பவர்களும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவ்வப்பொழுது வரலாற்றை எழுதிச் சென்றுவிடுவார்கள். அந்த வரலாறு உண்மையாகவும் இருக்கலாம். பெரும் அபத்தமாகவும் இருக்கலாம். காலம் கடந்த கட்டுக்கதைகளின் வடிவமாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு மாற்றான தெளிவான ஆதாரங்கள் கிடைத்த பிறகு அவ்வரலாற்றைத் திருப்பி எழுதுவதே சரியான நடைமுறை.
வேலு நாச்சியாரைப் பெரிய மருது திருமணம் செய்துகொண்டார் என்ற வரலாற்றுப் புனைவு நம்மிடையே உலா வருகிறது. மருது பாண்டியர்கள் பற்றிய வரலாற்று நூல்களிலும், வேலு நாச்சியாரைப் பற்றிய வரலாற்று நூல்களிலும் இப்புனைவு தவறாமல் இடம் பெறுகிறது. வேலு நாச்சியாரைப் பெரிய மருது திருமணம் செய்தார் என்பதற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.
நல்லுறவில் விரிசல்
சிவகங்கை அரசர் முத்துவடுக நாதத் தேவர் போரில் கொல்லப்பட்ட பின்பு அமைச்சர் தாண்டவராயப் பிள்ளை மற்றும் மருது சகோதரர்களுடன் வேலு நாச்சியார் விருப்பாச்சிக் காடுகளுக்குச் சென்றார். வயிற்றுப் பிள்ளையுடன் சென்ற வேலு நாச்சியார், எட்டு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்பு சிவகங்கையைக் கைப்பற்றி அரசியாக முடிசூடிக்கொண்டார். மருது பாண்டியர்கள் வேலு நாச்சியாருக்கு மந்திரி பிரதானிகளாகவும் தளபதிகளாகவும் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள். வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சியை, வெங்கம் உடையனத் தேவருக்கு மணம் முடித்துக் கொடுத்து அவரை சிவகங்கை அரசனாக்கி இருந்தார் வேலு நாச்சியார்.
வெள்ளச்சி இளம் வயதிலேயே இறந்தவுடன், வெங்கம் உடையனத் தேவர், பெரிய மருதுவின் மகள் மருதாத்தாளை இரண்டாவதாக மணம் முடித்துக் கொண்டார். இந்த உறவில் ஏற்பட்ட கசப்பினால், வேலு நாச்சியார் தன்னுடைய இறுதிக் காலத்தில் சிவகங்கையில் இல்லாமல், விருப்பாச்சி கோபால் நாயக்கரின் விருந்தினராக இருந்து அங்கேயே இறந்தும் போனார். அந்தக் காலத்தில் அவர் மருது பாண்டியர்களைப் பற்றி, ஆங்கிலேய கவர்னரிடம் புகார் மனுவும் அனுப்பி வைத்திருக்கிறார்.
தொடக்க காலத்தில், அன்பும் ஆதரவுமாக இருந்த உறவு, பின்னாட்களில் கசப்புடன் முடிவடைந்திருக்கிறது. சிவகங்கை அரசாட்சியில் நெருக்கடியான காலத்தில் மருது சகோதரர்கள் துணையாக இருந்திருக்கிறார்கள். பின்னர் ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக, பாளையக்காரர்களின் எழுச்சியை ஒன்றிணைக்கும் பணியையும் செய்திருக்கிறார்கள் என்பதை ஆங்கிலேய அதிகாரிகளின் குறிப்புகளிலிருந்தும், கடிதங்களிலிருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இக்குறிப்புகளில் எங்கும், பெரிய மருது வேலு நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி இல்லை.
வேலு நாச்சியார் இறந்த 1796-ம் ஆண்டு வரை அவரது வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து எந்தக் குழப்பமும் அக்கால ஆவணங்களில் இருந்ததில்லை. சென்னை மாகாண ஆளுநர் எட்வர்ட் கிளைவ் 06.07.1801-ல் வெளியிட்ட பிரகடனத்தில்கூட, “ஒரு பெண் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதில் உள்ள பலவீனத்தைக் கொண்டு அரசியின் வழியினரான நாலுக் கோட்டை குடும்பத்தின்மீதும் அக்குடும்பத்தின் பங்காளிகள் மீதும், சிவகங்கை பகுதி மக்கள் மீதும் அவர்கள் கொடுங்கோன்மையும் யதேச்சதிகாரத்தையும் பிரயோகித்தார்கள்” என குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் என்பது மருது பாண்டியர்களைக் குறிக்கிறது.
இந்தப் பிரகடனத்திற்கு 24 நாட்களுக்கு முன்பு, கர்னல் அக்கினியூவால் விடுவிக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பில், ”அரசனின் மரணத்திற்குப் பின்பு அரசியின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டதால் நாட்டில் முறைகேடான அதிகாரத்தைச் செலுத்திவருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். முறைகேடான அதிகாரத்தைச் செலுத்தி வருபவர்களாக இதிலும் மருது பாண்டியர்களே சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த இரு பிரகடனங்கள் தவிர்த்து மேஜர் வெல்ஷ், பாதர் பாச்சு, கோர்லே போன்ற மருது பாண்டியர்களின் சமகாலத்தவர்கள் எழுதிய புத்தகங்களில் இல்லாத ஒரு செய்தி, சிவகங்கை சரித்திரக் குறிப்பில் இல்லாத ஒரு செய்தி, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் றெக்கைக் கட்டிப் பறந்தது. அது வேலு நாச்சியார் பெரிய மருதுவைத் திருமணம் செய்துகொண்டார் என்பது.
இதற்கு ஆதாரமாகச் சொல்லப்படுவது, பெரிய மருதுவின் மரண சாசனம். அவருடைய மரண சாசனத்தில், தன்னுடைய மூத்த மனைவியாக பெரிய மருது வேலு நாச்சியாரைக் குறிப்பிடுகிறார் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால், மருது பாண்டியர்களைத் தூக்கிலிடும்போது உடனிருந்தவரும், மருது பாண்டியர்களின் நண்பரும் ஆங்கிலேய அதிகாரியுமான மேஜர் வெல்ஷ் மருது பாண்டியர்கள் மரண சாசனம் ஏதும் தரவில்லை என்று தெரிவிக்கிறார்.
கோர்லே, பெரிய மருது மட்டும் தனது பேரக் குழந்தைகளான பத்து, பன்னிரண்டு வயது பாலகர்களையும் தன்னோடு சேர்த்துத் தூக்கில் போடுவதற்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்ததாகப் பதிவுசெய்துள்ளார். “இந்தச் சிறுவர்கள் செய்த குற்றம் என்ன? ஆட்சிக்கு எதிராக அவர்கள் ஏதும் ஆயுதம் ஏந்தினார்களா? நள்ளிரவு வரை எங்கள் மடிகளில் படுத்துக் கதைகேட்டு உறங்கிய குழந்தைகளைத் தூக்கிலிட வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டு கண்ணீர் வடித்திருக்கிறார்.
மருது பாண்டியர்கள் வெளியிடாத மரண சாசனத்தை ஜெகவீர பாண்டியன் தனது பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரத்தில் வெளியிட்டார். இதற்காக அவர் எடுத்துக்கொண்டது மருது பாண்டியர்களின் வாரிசு ஒருவர் 03.01.1917-ல் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் (ஓ.எஸ்.4/1918), அந்த மனுவோடு சேர்ந்த, பெரிய மருதுவினுடையது என்று சொல்லப்படும் மரண சாசனமும்தான். இந்த மரண சாசனம், “என்னுடைய ஜமீன் வேலு நாச்சியாருக்குப் பாத்தியமாயிருந்தது.
மேற்படியாளை நான் திருமணம் செய்துகொண்டு அவள் மூலமாக மேற்படி சிவகங்கை ஜமீனுக்கு உரிய உயில் சாசனம் பெற்றிருக்கிறேன். என் வாரிசுகளின் விவரம்: என் மனைவியின் பெயர் ராக்காத்தாள். அவள்தான் பட்ட ஸ்திரி. எனக்கு சிவகங்கை ஜமீன் உயில் சாசனம் செய்து கொடுத்த முதல் மனைவி இறந்து ஒரு வருசம் ஆகிறது” எனப் போகிறது. மருது பாண்டியர்கள் தூக்கில் போடப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து மருது பாண்டியர்களின் வாரிசுகளிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்று கர்னல் அக்கினியூ தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் (28.12.1804) குறிப்பிட்டதே இந்தப் போலியான மரண சாசனம் தாக்கல் செய்ததின் நோக்கமாகும்.
“தற்போதைய ஜமீன்தார் முத்து விஜய ரகுநாத பெரிய உடைய தேவருக்கு எனது கருத்தாக, நூறு ஆண்டுகள் கழித்து சிவகங்கை ஆட்சியை வெள்ளை மருதுவின் வாரிசுகளுக்குத் தரலாம்” என போகிறபோக்கில், அக்கினியூ சொன்னதைக்கொண்டு ஆட்சி அதிகாரத்தையும் பெற எடுத்த நடவடிக்கையாக இந்த மரண சாசனம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பின்பு 109/1925 என்ற இந்த மரண சாசனத்தை முன்னிறுத்தி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
வரலாற்றுச் சோகம்
இந்த வழக்குகளின் மீது தீர்ப்பு எழுதிய நீதியரசர் குமாரசாமி சாஸ்திரியார், “இந்த மரண சாசனம் போலியானது. இந்த வழக்குத் தொடர்ந்தவருக்கு வேலு நாச்சியார் இறந்து ஐந்து வருடங்கள் கழித்துதான் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள் என்பதுகூட தெரிந்திருக்கவில்லை. வேலு நாச்சியார் இறந்து ஓராண்டு என்கிறது மரண சாசனம். மருது பாண்டியர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தங்களை எந்த இடத்திலும் மன்னர்கள் என்று கூறிக்கொள்ளவில்லை. ஆதீன கர்த்தர்க்கள், ராஜமான்யர், மாற நாட்டு திசைக் காவலர், அமைச்சர் என்றே தங்களை அழைத்துக் கொண்டார்கள்” என்று கூறி வாரிசு தாக்கல் செய்த மரண சாசனம் போலியானது என்று வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
தாயைப் போன்ற நிலையிலிருந்த அரசியை, மனைவி என்று சித்தரிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. ஒரு போலி மரண சாசன வாக்குமூலம் முன்வைத்த இந்த ஆதாரமற்ற தகவல் பல வரலாற்று ஆசிரியர்களால் வழிமொழியப்பட்டது பெரும் வரலாற்றுச் சோகம். ரஷ்ய அரசி காத்தரீன், இங்கிலாந்து பேரரசி எலிசபெத், டெல்லியின் முதல் அரசி ரஸியா சுல்தானா, மதுரை நாயக்க அரசி மீனாட்சி போன்ற புகழ்பெற்ற பெண் ஆட்சியாளர்களின் அந்தரங்க சாளரத்தையும்கூட சரித்திரம் சில புனைவுகளை வைத்துக் கட்டமைத்திருக்கிறது. இதில் வேலு நாச்சியாரும் தப்பவில்லை.
சரித்திரத்தின் மர்ம முடிச்சுகளை, அதற்கான ஆதாரங்கள் கிடைக்கும்போதெல்லாம் அவிழ்த்துக் கொண்டே செல்ல வேண்டியதுதான், உண்மையான வரலாற்றாசிரியர்களின் பணி. நீதிமன்றம் அவரை விடுவித்து, நூறாண்டுகளை நெருங்கப்போகும் நேரத்தில், வரலாறு அவரை விடுவிக்காமல் இருப்பது பெருத்த சோகம்!
-முனைவர் மு. ராஜேந்திரன் இஆப, ‘சோழர் காலச் செப்பேடுகள்’ என்ற நூலின் ஆசிரியர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago