தி
ரைப்படங்கள் அரசியல் பேசக் கூடாது என்ற கருத்தை உருவாக்கும் முயற்சியில் தமிழக பாஜக தலைவர்கள் இறங்கியிருக்கிறார்கள். அதன் உச்சமாக ‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான சில வசனங்களை நீக்கச்சொல்லி அழுத்தம் கொடுத்து, படக் குழுவினரையும் அதை நீக்குவதற்கு ஒப்புக்கொள்ள வைத்துவிட்டனர். தமிழ் சினிமாவில் அரசியல் இடம்பெறக் கூடாது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்? தமிழ் சினிமாவே திராவிட அரசியலின் இன்னொரு முகம் என்பதுதானே இதுவரையிலான வரலாறு!
ஆங்கிலேயரின் அடக்குமுறை காலத்திலேயே தமிழ் சினிமா அரசியல் பேசத் துவங்கிவிட்டது. காந்தியக் கொள்கைகளை, விடுதலை உணர்வை, சாதி, மதப் பாகுபாடுகளுக்கு எதிராகத் தங்களது வலுவான குரல்களை அன்றைய நாட்களிலேயே சினிமாக்கள் பேச ஆரம்பித்துவிட்டன. 1921-ல் வெளிவந்த ‘பக்த விதுரர்’ படம் தேச பக்தியை வெளிப்படுத்தியது. இப்படத்துக்கு முதலில் பிரிட்டிஷ் அரசு தடைவிதித்தது. தடை நீங்கி படம் வெளிவந்தபோது மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. 1935-ல் ‘மகாத்மா’ என்னும் படம் காந்தியைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தப் படத்தின் தலைப்பை ‘தர்மாத்மா’ என மாற்ற உத்தரவிட்டது. அந்தப் படமும் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
1939-ல் வெளியான கே.சுப்ரமணியத்தின் ‘தியாகபூமி’யும் காந்தி விடுத்த விடுதலைக்கான அழைப்பாகவே வெளிவந்தது. அந்தப் படத்துக்குத் தடை விதிக்கப்படும் என்ற நிலையில், இலவசக் காட்சிகளாகவே அந்தப் படம் திரையிடப்பட்டு மக்களைச் சென்றடைந்தது. அப்படம் தடைசெய்யப்பட்டபோதும்கூட அப்படத்தில் இடம்பெற்றிருந்த கல்கி எழுதி டி.கே.பட்டம்மாள் பாடிய ‘தேச சேவை செய்ய வாரீர்’ என்ற பாடல் மக்களிடம் ஆவேச அலையைத் தூண்டியது.
அரசியல் வளர்த்த சினிமா
1947-ல் சுதந்திரம் பெற்ற பின்னர் தேசியக் கருத்துகளுக்கு மாற்றாக, சமூக நீதிக்கான கருத்துக் களமாக தமிழ் சினிமா மாறியது. திராவிடர் கழகக் கருத்துகளைப் பட்டி தொட்டியெங்கும் நாடகக் கலை மூலம் கொண்டு சேர்த்ததில் எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோருக்குப் பெரும் பங்கு உண்டு. அவர்கள் பின்னர் திரைத் துறையிலும் அதைப் பின்பற்றினர்.
திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்களாக அரசியலுக்காகப் பயன்படுத்தியவர் அண்ணா. அவரின் முதல் திரைப்படமான ‘நல்லதம்பி’ (1948) ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டது. அவரது அடுத்த படமான ‘வேலைக்காரி’ அடக்குமுறையைக் கையாளும் நிலச்சுவான்தார்களும் அன்றைய ஆட்சி யாளர்களும் எப்படிக் கைகோத்திருந்தனர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 1949-ல் திமுக உருவான பின்னரும், தேர்தல் அரசியலில் திமுக தீவிரமாக இறங்கியபோதும், அதன் முக்கியமான பிரச்சாரக் கருவியாகப் பயன்பட்டது திரைத் துறைதான். திமுகவைப் பற்றிய என்.எஸ்.கிருஷ்ணனின் ‘தினா, முனா, கானா’ என்ற பாடல் அன்று பிரசித்தி பெற்றது.
இதே காலகட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களில் இடம்பெற்ற இடதுசாரிக் கருத்து கள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. காங்கிரஸுக்கு மாற்றாக ஒரு மாற்று அரசியலைத் தமிழகத்தில் புகுத்த இடதுசாரிகளும், திராவிடக் கட்சியான திமுகவும் களம் இறங்கின. தமிழகத்தை ‘பராசக்தி’ படத்தின் மூலம் திரும்பிப் பார்க்கவைத்த கருணாநிதியின் சாட்டையடி வசனங்களில் உள்ள அரசியல் மக்கள் நெஞ்சங்களைக் கவர்ந்தது. எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரும் தாங்கள் நடித்த திரைப்படங்களின் வழியாக திராவிட அரசியலைத் தமிழகம் முழுவதும் கொண்டுசேர்த்தனர். திமுகவின் சின்னம், கொடி, முழக்கங்கள் என திமுகவுடன் சேர்ந்து எம்ஜிஆரின் புகழும் வளர்ந்தது சினிமாவால்தான். மறுபுறம் திமுகவை விமர்சித்தும் திமுக அமைச்சர்களை எதிர்த்தும், காமராஜரை ஆதரித்தும் சிவாஜி கணேசன் சில காட்சிகளை வைத்தார்.
மாற்றுக் கருத்துக்கும் சுதந்திரம்
கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் ‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று’ என்ற பாடல் அமைத்திருப்பார். அப்பாடலில் இடம்பெற்ற வரிகள் திமுக தலைமையை விமர்சித்து எழுதப்பட்டன என்றும் பேசப்பட்டது. எம்ஜிஆர் 1977-ல் ஆட்சியைப் பிடிக்கும் வரை தனது படத்தில் திமுகவுக்கு எதிராகவும், திமுக தலைமைக்கு எதிரான வசனங்களையும் வைக்காமல் இருந்ததில்லை.
இதே காலகட்டத்தில் 1970-களில் பிரபலமானவர் நடிகர் சோ. அவர் நடித்த படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் அரசியல் நையாண்டி இருக்கும். அப்போதைய அரசியல் பிரச்சினையைக் காட்சியுடன் இணைத்துச் சொல்லிவிடுவார். மத்தியில் இந்திரா காங்கிரஸ் அடக்குமுறை அதிகரித்திருந்த நேரத்தில் அதை விமர்சிக்கும் விதமாக ‘முகமது பின் துக்ளக்’ என்ற அரசியல் நையாண்டி கலந்த படத்தை சோ எடுத்தார். ‘தங்கப் பதக்கம்’ படத்தில் கவுன்சிலராக வந்து அன்றைய உள்ளூர் அரசியல்வாதிகளை விமர்சிக்கும் வகையிலான காட்சிகளை சோ அமைத்திருந்தார்.
1977-க்குப் பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது திரைத் துறையை எம்ஜிஆர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். எனினும், அப்போது கருணாநிதி கதை வசனம் எழுதிய படங்களில் அன்றைய ஆட்சிக்கு எதிராகக் கடுமையான வசனங்களை வைத்திருப்பார். நீதிக்குத் தண்டனை, தூக்குமேடை, வண்டிக்காரன் மகன், ஆடு பாம்பே ஆகிய படங்களில் அன்றைய அதிமுக ஆட்சியின் அவலங்களைச் சுட்டிக்காட்டும் வசனங்கள் அதிகளவில் இடம்பெற்றிருக்கும்.
நேற்று வரைக்கும் அப்படித்தானே…
ஜெயலலிதா முதல்வரான பிறகு, ரஜினியின் சில வசனங்கள் அரசியல்ரீதியாகவும் பொருள்கொள்ளப்பட்டன. அத்தகைய வசனங்கள் இடம்பெற்றிருந்த ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘படையப்பா’ படங்களின் வசனங்கள் மக்களால் பெரிதாக ரசிக்கப்பட்டன. இதனால் ரஜினியுடன் மோதல் ஏற்பட்டு, ஆர்.எம்.வீரப்பனின் பதவியே பறிக்கப்பட்டது. 1996-ல் ஆட்சி மாற்றத்துக்கு ரஜினி பயன்பட்டார். இப்படி தமிழக வரலாற்றில் சினிமாக்கள் பேசாத அரசியலும் இல்லை. சினிமாக்கள் உருவாக்காத தலைவர்களும் அரசியலில் இல்லை.
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என்று தமிழகத்தினை ஆண்ட மூன்று முதல்வர்கள் சினிமாவைத் தங்களது அரசியல் கருத்துகளைப் பரப்பப் பயன்படுத்திக்கொண்டவர்கள். ஜெயலலிதா சினிமா மூலம் அரசியலுக்கு வந்தவர். இன்றும் ரஜினியும், கமலும், விஜய்யும் அரசியலுக்கு வருவதற்கு சினிமா தகுதியாகப் பார்க்கப்படுகிறது. இப்படி சினிமாவைத் தவிர்த்து தமிழகத்தில் அரசியல் இல்லை என்பதுதான் வரலாறு எனும்போது, சினிமாவில் அரசியல் பேசக் கூடாது என்பதை வரலாற்றை மறந்தவர்களின் எண்ணமாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது. மக்களைப் பாதிக்கிற விஷயங்களைத் திரைப்படங்களில் காட்சியாக, வசனமாக வைக்கும்போது அதை மக்கள் ஆரவாரம் செய்து வரவேற்பார்கள். இதை அடக்குமுறை மூலம் அடக்கலாம் என்று நினைத்தால், அது தோல்வியில்தான் முடியும்.
- மு.அப்துல் முத்தலீஃப்,
தொடர்புக்கு: abdulmuthaleef.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago