திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்திருக்கும் தீக்குளிப்பு சம்பவத்தைப் போலவே 2014-ல் கேரளத்திலும் ஒரு துயரம் நடந்தது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார்கள். உடனே அம்மாநிலத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா களத்தில் இறங்கினார். ‘ஆபரேஷன் குபேரா’ என்ற பெயரில் கேரளம் முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எர்ணாகுளத்தில் ‘ஆபரேஷன் ஸ்கைலாக்’, கோழிக்கோட்டில் ‘ஆபரேஷன் ஆக்டோபஸ்’ என்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்றபடி சிறப்புக் கவனத்தோடு இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள். உதவி எண்கள், மாவட்டம்தோறும் தனிக் கண்காணிப்பு மையங்கள், குறைதீர்ப்பு கூட்டங்கள் என்று புகார் தெரிவிப்பதற்குப் பலவகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. காவல் துறையினரின் நடவடிக்கையில் திருப்தி இல்லாதபோது ‘ஆபரேஷன் குபேரா’வின் தலைமை அதிகாரிக்கு எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கவும் வாய்ப்பிருந்தது. எனவே கந்துவட்டிக்கு எதிரான கேரள அரசின் இந்த வெளிப்படையான நடவடிக்கை குறிப்பிட்டத்தக்க அளவில் வெற்றியைப் பெற்றுள்ளது.
எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் நீண்ட காலமாக வட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் இந்த நடவடிக்கையில் சிக்கினார்கள். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும், வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளடக்கம். வட்டிக்கு விடும் தொழிலில் மாநில எல்லைகள் தடையாய் இல்லை. கேரளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வட்டிக்கு விடுபவர்களும் இருக்கிறார்கள். ஓசூர் போன்ற வளர்ந்துவரும் நகரங்களில் கேரளத்தைச் சேர்ந்தவர்களும் வட்டித் தொழிலில் மிகவும் சுதந்திரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.
ஆபரேஷன் குபேரா நடவடிக்கையில் 2016 செப்டம்பர் வரையில் 2,594 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.4 கோடியே 95 லட்சம் கைப்பற்றப்பட்டது. கூடவே சொத்துப் பத்திரங்கள், பிராமிசரி நோட்டுகள், காசோலைகள் என கடன் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. 2,459 பேரின்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1,373 பேர் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசியல் தொடர்பு
‘ஆபரேஷன் குபேரா’வின் முக்கியமான விளைவு, வட்டிக்குப் பணம் விடுபவர்கள் அதுவரையில் அனுபவித்துவந்த அரசியல்ரீதியான செல்வாக்குக்கும் தொடர்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்ததுதான். அதன்பிறகு வட்டிக்கு விடுபவர்கள் தனிநபராக மட்டுமே அதைச் செய்ய முடிந்தது. எந்த அரசியல் கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக நிற்காது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதைவிடவும் முக்கியமாக, சட்டவிரோதமாக வட்டிக்கு விடுபவர்களிடம் தொடர்பு கொண்டிருந்த 12 காவல் துறை அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கந்துவட்டிக்காரர்களின் மிகப் பெரிய பலம் அரசியல் கட்சிகளுடனான வலுவான தொடர்புகளும் சில காவல் துறை அதிகாரிகளிடம் அவர்கள் நெருக்கம் காட்டுவதற்கான வாய்ப்புகளும்தான். இவை இரண்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்காமல் கந்துவட்டிக் கொடுமைக்கு தீர்வு காணமுடியாது என்பதுதான் உண்மை. எனவே சொந்தக் கட்சிக் காரர்களைக் காப்பாற்ற விரும்பும் ஆட்சியாளர்கள் ஒருபோதும் அந்த நடவடிக்கையை முழுமையாகவோ முறையாகவோ செய்துமுடிக்க முடியாது.
கந்துவட்டிக்கு எதிரான நடவடிக்கை என்பது சட்டம் இயற்றிவிட்டு, அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை என்பதோடு முடிந்துவிடுவதில்லை, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விஷயம் அது. தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டிலேயே கந்துவட்டி தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டிருந்தும் அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குக் காரணம் அதுதான்.
மிக முக்கியமாக, நியாயமான வட்டி விகிதத்தில் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். கேரளத்தில் கந்துவட்டிக்கு எதிரான ‘ஆபரேஷன் குபேரா’ மட்டும் நடக்கவில்லை. கூடவே குறைந்த கடன் விகிதத்தில் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகளையும் கேரள அரசு தொடங்கியது.
புரிந்துகொள்ளாத அரசு
சட்டபூர்வமாக இயங்கும் நிதி நிறுவனங்கள் அவசரத் தேவைகளுக்கோ அல்லது சிறுதொழில்களுக்கோ கடன் வழங்கத் தயாராக இல்லை. தனியார் நிதி நிறுவனங்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்க நகைகளை அடகு பெறுவதற்கு மட்டுமே தயாராக இருக்கின்றன. எனவே அடித்தட்டு மக்களுக்கு இருக்கும் ஒரே உடனடி கடன்வாய்ப்பு கந்துவட்டிக்காரர்கள்தான். அவர்களும் அதை ஒரு பயன்படுத்திக்கொண்டு உள்ளூர் அளவில் ஒரு ராஜ்ஜியத்தையே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கொடுத்த கடனுக்கு வாங்கும் வட்டியானது மாத வட்டி, வார வட்டி என்பதையெல்லாம் தாண்டி இன்றைக்கு ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு வட்டி என்ற நிலையை எட்டியிருக்கிறது. சந்தைகளில் உள்ள சிறுவணிகர்கள் இந்த ஒரு மணி நேர வட்டிக் கணக்கில்தான் கடன்களை வாங்கி, வியாபாரம் நடத்திக்கொண்டிருக் கிறார்கள். சிறு வியாபாரிகளின் நிலை இப்படியென்றால் விவசாயிகளின் நிலை இன்னும் மோசம். விதைகள் வாங்கவும் விவசாய இடுபொருட்களை வாங்கவும்கூட அவர்கள் கந்துவட்டிக் காரர்களிடமிருந்துதான் கடன் வாங்க வேண்டியிருக்கிறது.
விவசாயிகளின் தற்கொலைகளுக்கு வறட்சியும் விவசாயம் பொய்ப்பதும் மட்டுமே காரணமாக இல்லை. அவர்கள் அதிக வட்டி விகிதத்தில் வாங்குகிற கடன்கள்தான் காரணம். கர்நாடகத்தில் 2015-ல் கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, அம்மாநில முதல்வர் சித்தராமய்யா, விவசாயிகளுக்கு அதிக வட்டியில் கடன் கொடுப்பவர்களின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதையடுத்த சில நாட்களிலேயே 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1000-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பக்கத்து மாநிலங்களில் கந்தவட்டிக்கு எதிராக அரசுகள் மிகத் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், தமிழக முதல்வரோ கந்துவட்டிக் கொடுமையைப் பற்றி காவல் துறையிடம் புகார் கொடுங்கள் என்று அறிக்கை விட்டிருக்கிறார். காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை, சில இடங்களில் அவர்களே கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்பதுதானே பிரச்சினை. அடிப்படைப் பிரச்சினையையே புரிந்துகொள்ளாத முதல்வரை வைத்துக்கொண்டு ‘ஆபரேஷன் குபேரா’வுக்கெல்லாம் எப்படி நாம் ஆசைப்பட முடியும்?
-செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago