நூற்றாண்டைத் தொடும் மெட்பார்மின்: அவதூறைத் தடுக்கும் வழி என்ன?

By கு.கணேசன்

கடந்த பல ஆண்டுகளாகவே சர்க்கரை நோயாளிகளில் அநேகம் பேர் ‘மெட்பார்மின்’ (Metformin) மாத்திரையை உட்கொண்டு வருவதை அறிந்திருப்பீர்கள். உலக நாடுகளில், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளில் தனித்துவம் மிக்கதாக மெட்பார்மின்தான் கோலோச்சுகிறது. சமீபத்தில், சந்தை ஆய்வு-ஆலோசனை நிறுவனமான Data Bridge Market Research அறிவித்துள்ள சந்தை மதிப்பீட்டின்படி, உலகளவில் இந்த மருந்தின் விற்பனை ஆண்டுதோறும் 6% அதிகரித்துவருகிறது என்பதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும். இந்நிலையில், மெட்பார்மின் குறித்துத் தவறான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது மருத்துவ உலகில் சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மெட்பார்மின் கண்டுபிடிப்பு: வரலாற்றின் மத்திய காலத்தில், ஐரோப்பாவில் ஆடுகளுக்கு உணவாக (Goat’s rue) வழங்கப்பட்ட ‘கலேகா அஃபிசினாலிஸ்’ (Galega officinalis) எனும் தாவர இலைகள், மக்களுக்குக் காய்ச்சலைத் தணிக்கும் மூலிகை மருந்தாகவும் பயன்பட்டுவந்தன. அந்த மூலிகையில் ‘பைகுவானைடு’ (Biguanide) எனும் வேதிப்பொருள் இருப்பதை 1922இல் வெர்னர் (Werner), பெல் (Bell) என்ற இரண்டு அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்; அதிலிருந்து மெட்பார்மினைத் தயாரித்தனர். ஆனால், அது சர்க்கரை நோய்க்கான மருந்து என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

வைரஸ் எதிர்ப்பு மருந்து: 1929இல் வேறு சில அறிவியலாளர்கள் மெட்பார்மினை முயல்களுக்குக் கொடுத்துப் பார்த்தபோது, அவற்றின் ரத்தச் சர்க்கரை அளவுகள் குறைவது தெரியவந்தது. அதேவேளை, அதற்கு வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் தன்மை உள்ளது என்பதும் தெரியவந்தது. அதனால், 1947இல் பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவிய இன்ஃபுளூயென்சா குறுந்தொற்றுக்கு (Epidemic) மெட்பார்மினைப் பயன்படுத்தினர். அப்போது மனிதர்களுக்கும் ரத்தச் சர்க்கரை அளவுகள் குறைவது அறியப்பட்டது. ஆனாலும், 1955 வரை இது ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்தாகவே கருதப்பட்டுவந்தது.

முதல் நிலை சர்க்கரை மருந்து: 1956இல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ழான் ஸ்டெர்ன் (Dr.Jean Sterne) என்ற மருத்துவர்தான் மெட்பார்மினைச் சர்க்கரை நோய்க்கான மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்று திட்டவட்டமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 1957இல் ‘குளுக்கோபேஜ்’ (Glucophage) என்னும் பெயரில் இதைச் சந்தைக்குக் கொண்டுவந்தார்.

பிறகு, 1958இல்இங்கிலாந்திலும் 1959இல் இந்தியாவிலும் அறிமுகமானது. அப்போதிலிருந்து படிப்படியாக அனைத்து உலக நாடுகளிலும் இது இடம்பிடித்தது. நவீன மருத்துவத்தில், கடந்த 50 ஆண்டுகளில் பலதரப்பட்ட சர்க்கரை மாத்திரைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளபோதிலும், இன்றுவரை மெட்பார்மின்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு முதல் நிலை மருந்தாக மகுடம் சூடியுள்ளது.

என்ன காரணம்? - சர்க்கரை நோய்க்கு இன்சுலின் சுரப்புக் குறைபாடுதான் முதன்மைக் காரணம் என்பதை அறிவீர்கள். சர்க்கரை நோயில் முதலாம் வகை (Type 1 Diabetes Mellitus), இரண்டாம் வகை (Type 2 Diabetes Mellitus) என இரண்டு வகைகள் உண்டு. இன்சுலின் சுரப்பு அறவே இல்லாதவர்களுக்கு – குறிப்பாகக் குழந்தைகளுக்கு முதலாம் வகை சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் மருந்து தேவைப்படும்; எந்த மாத்திரையும் பலன் தராது.

மாறாக, இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகளுக்கு – முக்கியமாக, உடற்பருமன் உள்ளவர்களுக்கு இன்சுலின் குறைவாகச் சுரக்கிறது. அப்படிக் குறைவாகச் சுரக்கும் இன்சுலினையும் இவர்களின் உடல் செல்கள் இயங்கவிடாமல் தடுத்துவிடுகின்றன.

இதற்கு ‘இன்சுலின் எதிர்ப்பு நிலை’ (Insulin Resistance) என்று பெயர். இதன் காரணமாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையைச் சமாளிக்க ஒரு மருந்து தேவைப்பட்டது. அதுதான் மெட்பார்மின். பயனாளிக்கு இது தனியொரு மருந்தாகவும் கிடைக்கிறது; கூட்டு மருந்தாகவும் பயன்படுகிறது.

செயல்முறையில், மெட்பார்மின் என்பது இன்சுலினைச் செல்களில் இயங்கவைக்கும் ஓர் உணர்வூட்டி (Insulin sensitizer). இது கொழுப்புத் திசுக்கள், எலும்பை ஒட்டிய தசைகள் ஆகியவற்றில் உள்ள செல்களில் உறக்க நிலையில் இருக்கும் இன்சுலின் ஏற்பான்களைத் (Insulin receptors) தட்டி எழுப்பி, செல்களுக்குள் இன்சுலின் நுழைய வழிசெய்கிறது. இதன் பலனால், இன்சுலின் செயல்படுகிறது; ரத்தத்தில் தேங்கியுள்ள அதீத சர்க்கரை செல்களுக்குள் நுழைந்து சக்தியைத் தருகிறது. அப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது.

சிறப்புத் தன்மைகள்: நவீன சர்க்கரை மாத்திரைகளோடு ஒப்பிடும்போது, சர்க்கரை நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்குச் சரியான மருந்து மெட்பார்மின்தான். இது உடற்பருமனைக் குறைக்கிறது; இதயத்துக்குப் பாதுகாப்பு தருகிறது. இது கருவில் வளரும் சிசுவைப் பாதிப்பதில்லை என்பதால் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிகளும் இதைப் பயன்படுத்த முடிகிறது. அடுத்து, இளம்பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டி (PCOS) தொடர்பான பிரச்சினைகளை மெட்பார்மின்தான் தீர்த்துவைக்கிறது.

பொதுவாக, சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப் பயன்படுத்தும்போது, அவற்றின் அளவு அதிகரித்துவிட்டால் அல்லது பயனாளிகள் தேவையான அளவுக்கு உணவைச் சாப்பிடவில்லை என்றால், அவர்களுக்கு உடல் வியர்த்து மயக்கம் ஏற்படுவது வழக்கம். இதற்கு ‘ரத்தச் சர்க்கரைத் தாழ்மயக்கம்’ (Hypoglycemia) என்பது மருத்துவ மொழி.

ஆனால், மெட்பார்மின் ரத்தச் சர்க்கரையை ஒரே சீராகக் குறைக்கிறது என்பதால், இதைத் தனியொரு மருந்தாகப் பயன்படுத்தும்போது, அம்மாதிரியான மயக்கம் ஏற்படுவதில்லை. மேலும், செலவு குறைந்த மருந்து இது. சாமானியர்களும் இதைப் பயன்படுத்த முடியும். மோசமான பக்க விளைவுகள் எதுவும் இதில் இல்லை.

ஆயுள் அதிகரிக்கிறது: சமீபத்தில், சர்வதேசச் சர்க்கரை நோய்க் கூட்டமைப்பு (International Diabetes Federation – IDF) எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, உலகில் 53 கோடியே 66 லட்சம் பேருக்கு இரண்டாம் வகை சர்க்கரை நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 90% பேர் மெட்பார்மின் மருந்தைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற சிக்கல்கள் வராமலும் பார்த்துக்கொள்கிறது, மெட்பார்மின். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் சர்க்கரை நோயாளிகளின் வாழ்நாள் அதிகரித்திருக்கிறது, வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்றால், அதற்கு மெட்பார்மின் ஒரு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

விஷமத்தனமான காணொளி: இத்தனை மகத்துவம்மிக்க மெட்பார்மின் மருந்தை உலக நாடுகள் எல்லாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் இதன் பயனாளிகளை அச்சமூட்டும் விதத்தில் ஒரு விஷமத்தனமான காணொளி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்க்கரை நோய்க்கான ஓர் ஆயுர்வேத மாத்திரையை விளம்பரப்படுத்தும் அந்தக் காணொளி, ஓர் அகச்சுரப்பியியல் நிபுணரின் (Endocrinologist) பெயரில்போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள மருத்துவ ஆய்வாளரின் ஒளிப்படம் போலி என்பதும், மெட்பார்மின் குறித்து தவறான கருத்துகள் சித்தரிக்கப்பட்டுள்ளதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்.

நம் கவலை இதுதான்: வழக்கத்தில், உண்மையைவிடப் பொய்யான தகவல்கள்தான் சமூகத்தில் வேகமெடுத்துப் பரவும். மேற்சொன்ன காணொளியின் விஷமத்தனம் புரியாமல், அவசரப்பட்டு அப்படியே நம்பிவிடும் அப்பாவிப் பயனாளிகள் நம்மிடையே அதிகம். உண்மைக்குப் புறம்பான அத்தகவல்கள் மெட்பார்மினைச் சாப்பிடலாமா, வேண்டாமா என்று அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

இந்த விஷயத்தில் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று அரசு தப்பித்துக்கொள்வது நியாயமல்ல. நவீனத் தொழில்நுட்பங்களின் வரவால் போலி அறிவியல் காணொளிகள் பெருகிவிட்ட இன்றைய சூழலில், அவற்றைத் தடுக்கச் சரியான வழிமுறைகளை அரசு கண்டறிய வேண்டும். நாட்டில் நோய்களை மட்டுமல்ல, போலிகளையும் வருமுன் தடுத்தாக வேண்டும்.

நவீன சர்க்கரை மாத்திரைகளோடு ஒப்பிடும்போது, சர்க்கரை நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்குச் சரியான மருந்து மெட்பார்மின்தான்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

To Read in English: Metformin nearing centenary: How to stem tide of misinformation

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்