சர் சையது அகமது கான்: அலிகர் என்னும் அறிவியக்கம்!

By எஸ்.சாந்தினிபீ

கா

தலுக்காகப் பெற்றோரையும், ஊரையும் விட்டு ஓடியவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். கல்வி பெறுவதற்காக ஓடியவர்களைப் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம். 1920-களில் பழனியைச் சேர்ந்த உசைன் நைனார் என்பவர், படிப்பதற்காகவே தன் ஊரை விட்டு ஓடிப்போயிருக்கிறார். படிப்பவர்கள் விவசாய வேலை செய்ய மாட்டார்கள் என்று அவரது குடும்பத்தினர் அஞ்சியதுதான் காரணம். கடைசியில், அவர் சென்று சேர்ந்தது உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.

அலிகரில் அரபி மொழி மற்றும் சட்டத் துறைகளில் முதுகலைப் பட்டங்கள் பெற்ற பிறகு, நைனார் பல நாடுகளின் உயரிய பதவிகளில் பணியாற்றினார். நைனாரின் அலிகர் கல்வி, அவரது நான்காவது தலைமுறையையும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் பயிலவும், பணியாற்றவும் அடித்தளம் வகுத்திருக்கிறது. நைனார் குடும்பம் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களில் நிகழ்ந்த நல்ல மாற்றங்களின் பின்னணியில் அவர்கள் பெற்ற அலிகர் கல்வி இருந்துள்ளது.

இன்றும், உபி அல்லது பிஹார் கிராமங்களில் வாழும் குடும்பத்தில் ஒரு மாணவருக்கு இப்பல்கலையில் அனுமதி கிடைத்துவிட்டால், அவரது குடும்பமே அந்த ஊரை விட்டு அலிகருக்கு வந்துவிடுகிறது. தன் பிள்ளையின் கல்விக்காகப் பெற்றோர் தம் விளைநிலங்களை குத்தகைக்குக் கொடுத்துவிட்டு, அலிகரில் வாட்ச்மேன் வேலை செய்வதை இன்றும் பார்க்கலாம். கல்வி வாய்ப்புகளின் வழியாகச் சமூக மாற்றத்துக்குக் காரணமான அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், 1875-ல் சர் சையது அகமது கானால் ‘ஆங்கிலோ ஓரியண்டல் முகம்மதன் கல்லூரி’ எனும் பெயரில் நிறுவப்பட்டது. இந்தச் சம்பவம், இந்திய வரலாற்றில் ‘அலிகர் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் ஆட்சி மொழியாகப் பாரசீகம் இருந்தது. அதன் பிறகு, ஆங்கிலேயர்கள் காலத்தில் 1842-ல் ஆங்கிலம் ஆட்சிமொழியானது. அதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்த நிலையை மாற்றி, ஆங்கிலம் கற்பதால்தான் முன்னேற முடியும் என்பதை சர் சையது முஸ்லிம்களுக்கு உணர்த்தினார். அரபி மற்றும் மறைக் கல்வியைத் தவிர ஆங்கிலம், அறிவியல் என மற்ற பாடங்களைப் படிப்பது இஸ்லாத்துக்கு விரோதமானது என இருந்த காலம் அது. இதனால், சர் சையது அகமது கான் ஒரு ‘காஃபிர் (முஸ்லிம் அல்லாதவர்)’ என அக்காலத்தில் முஸ்லிம் மெளலானாக்களால் ‘ஃபத்வா (மதக் கட்டளை)’ அளிக்கப்பட்டார். ஆனால், இன்று மெளலானாக்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தம் மத அடையாளமாக்கி பெருமை கொள்கின்றனர்.

மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில், ஆண்டொன்றுக்கு வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 40,000 மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். இங்கு கலை, அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட 100-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காகத் தொடங்கப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் இந்துக்களும் படிக்கின்றனர். இப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் மாணவர் ஒரு இந்து. இங்கு படிக்கும் இந்து மாணவர்களின் எண்ணிக்கை தொடக்கம் முதலே கிட்டத்தட்ட சரிபாதியாக இருந்துவருகிறது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இதற்கு அளிக்கப்பட்ட சிறுபான்மை கல்வி நிறுவன அந்தஸ்து உச்ச நீதிமன்ற வழக்காகி இன்னமும் சிக்கலில் உள்ளது.

- எஸ்.சாந்தினிபீ,

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின்

வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர்

தொடர்புக்கு: chandnibi@gmail.com

அக். 17: சர் சையது அகமது கானின்

200-வது பிறந்தநாள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்