2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடி, அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த மேற்குலகப் பொருளாதாரங்களை உலுக்கிப்போட்டது. அப்போது, பொருளாதாரத்தைப் பற்றிய நம் புரிதலில், அடிப்படையில் ஏதேனும் பிழை உள்ளதா என்கிற எண்ணம் மேலிட, மார்க்ஸ், கேயின்ஸ் போன்ற சிந்தனையாளர்களின் கருத்துகள் மீண்டும் கவனம்பெற்றன.
1930களில் இதே மேற்குலக நாடுகள் வரலாறு காணாத பொருளாதாரப் பெருமந்தத்தில் சிக்கித் தவித்தபோது, மரபுசார்ந்த புதுச்செவ்வியல் பொருளாதாரம் அதனைச் சரிவரப் புரிந்துகொள்ளவும் அச்சூழலை எதிர்கொள்ளும் கொள்கை வழியைக் காட்டவும் முடியாமல் திணறியது.
அப்போது கேயின்ஸ் முன்வைத்த விமர்சனங்களும் மாற்றுக் கோட்பாடும் பெருமந்தத்திலிருந்து மீள உதவியதுடன், பொருளியல் புலத்தில் ஒரு புரட்சியையே உண்டாக்கின; பேரியல் பொருளாதாரத்தின் [Macroeconomics] முக்கியத்துவத்தையும் நிறுவின. 20ஆம் நூற்றாண்டில் பெரும் செல்வாக்குபெற்ற பொருளியல் அறிஞராக கேயின்ஸ் பரிணமித்தார்.
கேயின்ஸின் பங்களிப்பு: இங்கிலாந்தில், பல்கலைக்கழக நகரமான கேம்பிரிட்ஜில், 1883ஆம் ஆண்டு பிறந்த ஜான் மேனார்டு கேயின்ஸ் [John Maynard Keynes], முறைப்படி பல்கலைக்கழகத்தில் பயின்றது கணிதவியலாகும். தன் இளங்கலைப் படிப்புக்குப் பிறகு, புதுச்செவ்வியல் பொருளாதாரத்தின் மிக முக்கியப் புள்ளிகளில் ஒருவரும் கேயின்ஸ் குடும்பத்துக்கு நெருக்கமானவருமான ஆல்பிரட் மார்ஷலிடம் [Alfred Marshall] பொருளியல் பயின்றார். பிற்காலத்தில் தன் ஆசிரியர் சார்ந்திருந்த புதுச்செவ்வியல் பொருளாதாரத்தின் மையக்கூற்றுகளைக் கடுமையாக விமர்சித்து, பொருளியலின் வரலாற்றில் கேயின்ஸ் தடம்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தளத்தைப் பொறுத்தவரை, கேயின்ஸ் ஒரு தாராளவாதியாக விளங்கினார் என்பது அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள ஆசிரியர்கள் பலரின் கருத்து. கட்டற்ற சந்தைகளைக் கண்மூடித்தனமாக ஆதரித்த பழமைவாதிகள், முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய முற்பட்ட புரட்சியாளர்கள் - என இரு முனைகளிலிருந்தும் கேயின்ஸ் விலகியிருந்தார். அதிலும் முக்கியமாக, அரசின் தலையீடு இல்லாமல் சந்தைகளே அனைவருக்குமான வேலைவாய்ப்பினை உறுதிசெய்யும் ஆற்றலுடையவை என்று முன்மொழிந்த புதுச்செவ்வியல் கோட்பாட்டிலிருந்த குறைபாடுகளை அம்பலப்படுத்தியது கேயின்ஸின் திறனாய்வுப் பங்களிப்பு.
அவருக்குச் சீர்திருத்தங்களின்மீது வலுவான நம்பிக்கை இருந்ததையும் அறிஞர்கள் வாதப் பிரதிவாதங்களின் வாயிலாக அரசின் கொள்கைகளை வகுக்க இயலும் என்று அவர் எண்ணியதையும் ராய் ஹாரட் [Roy Harrod] பதிவுசெய்துள்ளார். அரசின் பல கொள்கைக் குழுக்களிலும் பதவிகளிலும் இருந்து கேயின்ஸ் பங்களித்திருப்பது அவரது இந்நம்பிக்கையினைப் பிரதிபலிக்கிறது.
பொருளியலின் கோட்பாட்டுத் தளத்தில் கேயின்ஸ் தந்துள்ள பங்களிப்பினை, ‘The General Theory of Employment, Interest and Money’ (1936) என்கிற அவரது நூலில் காணலாம். “மரபுசார் பொருளியலில் உள்ள பிழை அதன் மேற்கட்டுமானத்தில் இல்லை, அடிப்படையிலேயே உள்ளது” என்று தன் விமர்சனத்தைத் தொடங்கும் கேயின்ஸ், அப்பொருளியல் கோட்பாட்டின் அனுமானங்களையும் முக்கியக் கருத்துகளையும் அந்நூல் நெடுகிலும் விவாதத்துக்கு உள்படுத்தி அவற்றைத் தாக்கினார்.
மரபுசார் பொருளியலின் போதாமை: அன்றும் இன்றும் பொருளியல் புலத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் புதுச்செவ்வியல் கோட்பாடு, பல உண்மைத்தன்மையற்ற அனுமானங்களை எடுத்துக்கொள்கிறது; வரம்பில்லாத் தேவைகளைக் கொண்ட மனிதர்களுக்கு, அவற்றை அடைந்திட வரம்புக்கு உள்பட்ட வளங்களே உள்ளன. எனவே, இந்தப் பற்றாக்குறையை ஆராயும் ஒரு புலமாகப் பொருளியலைப் பார்ப்பது இக்கோட்பாட்டின் போக்கு. ஒரு பொருளை வாங்கும்-விற்கும் சந்தை சீர்நிலையில் இயங்கினால், அளவாக இருக்கும் வளங்களைக் கச்சிதமாகப் பிரித்துக்கொடுத்துவிடலாம்; ஒரு பொருளுக்கான வேண்டலும் [Demand], வழங்கலும் [Supply] சமமாக இருக்கும் இடத்தில், அப்பொருளின் விலையும் அப்பொருளின் அளவும் தீர்மானிக்கப்படுகிறது.
ஒருவேளை, அப்பொருளுக்கான வேண்டலைவிட வழங்கல் அதிகமாக இருக்கிறதென்றால், அப்பொருளை வாங்குவதற்கு இருக்கும் முனைப்பைவிட அதனை விற்றிட அதிக முனைப்பு காணப்படும் நிலை உண்டாகும். இதனால், அப்பொருளின் விலை சரியும்; அதுவே வழங்கலைவிட வேண்டல் அதிகமாக இருந்தால், அதன் விலை கூடும். ஆக, விலை இவ்வாறு வளைந்துகொடுத்தால் மட்டுமே வேண்டலையும் வழங்கலையும் சமன்படுத்த முடியும். விலை இவ்வாறு வளைந்துகொடுக்கத்தக்கது என்பது புதுச்செவ்வியல் கோட்பாட்டில் ஓர் அனுமானம்.
கேயின்ஸின் விமர்சனம்: 1930களில் பெருமந்தச் சூழலில் இக்கோட்பாட்டின் போதாமைகளும் பிழைகளும் நடைமுறையிலேயே உணரப்பட்டன. பொருளாதாரத்தில் வேலையின்மை என்ற சிக்கலே இருக்காதுஎன்று சாதிக்கும் கோட்பாட்டைக் கொண்டு வேலையின்மையை எப்படிச் சமாளிப்பது என்று கேள்வி எழுப்பினார் கேயின்ஸ். வேண்டலே வழங்கலை வழிநடத்துகிறது என்று வாதிட்ட கேயின்ஸ், பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வேண்டலில் ஏற்பட்ட பற்றாக்குறையினையே வேலையின்மைச் சிக்கலின் ஆணிவேராகப் பார்த்தார்.
பொருளாதாரத்தைத் தனிநபர்கள், நிறுவனங்கள் முதலிய அலகுகளாகப் பிரித்து, அவை நடந்துகொள்ளும் விதத்தைத் தனித்தனியாக ஆராய்வது நுண்ணியல் பொருளாதாரத்தின் [Microeconomics] நெறிமுறை. ஆனால், தனிநபர்களுக்குச் சரியாகப்படும் ஒன்று, ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதே கேயின்ஸின் பேரியல் பொருளாதார அணுகுமுறை.
செய்ய வேண்டியது என்ன? புதுச்செவ்வியல் கோட்பாட்டைப் பின்பற்றித் தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைத்து, வேலைவாய்ப்பை உயர்த்தமுயற்சி செய்தல், வேலையின்மைக் கால உதவித்தொகையைக் கைவிடுதல், சேமிப்பை ஊக்குவித்தல் என்பன போன்ற கொள்கைகளை விடுத்து, ஒட்டுமொத்த முதலீட்டினையும், வேலைவாய்ப்பினையும், வருமானத்தையும் பெருக்கினால்தான் நிலைமை மாறும் என்பதை வலியுறுத்தினார்.
தொழில்களில் ஈடுபடுபவர்கள் தம் ஆதாயப் பலன்கள் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை வைத்தே முடிவுகளை எடுப்பார்கள். பொருளாதாரம் மந்தத்தில் இருக்கும்போது அவர்கள் முதலீடு செய்யத் தயங்குவார்கள் என்பதால், அரசு முன்கை எடுத்துப் பொதுப் பணிகளுக்காகச் செலவழித்து, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படி உண்டாகும் வேலைவாய்ப்பின் காரணமாகத் தொழிலாளர்களின் வாங்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
இது உற்பத்தியை மேற்கொண்டு ஊக்குவிக்கும். உற்பத்தி அதிகரித்தால் வேலைவாய்ப்பும் உயரும். இப்படியாக அரசு மேற்கொள்ளும் செலவுகளின் பயன், பொருளாதாரத்தின் ஒட்டுமொத்தமான வேண்டலையும், வருமானத்தையும் அதிகரிக்கும். இதனை அவர் ‘பெருக்க விளைவு’ என்று குறிப்பிட்டார்.
கேயின்ஸின் முக்கியத்துவம்: பொருளியல் ஆய்விலும் விவாதங்களிலும் கற்பித்தலிலும் தொடர்ந்து ஈடுபட்டுவந்த கேயின்ஸ், 1946இல் மறைந்தார். அவர் இயங்கிவந்த காலத்திலிருந்து உலகம் எவ்வளவோ மாற்றங்களைக் கண்டுவிட்டது. புதுச்செவ்வியல் கோட்பாட்டுக்குத் தக்கவாறு கேயின்ஸ் முன்வைத்த கோட்பாட்டைத் திரித்து உள்வாங்கிக்கொள்ளும் போக்கும் பின்னாளில் ஏற்பட்டது.
கேயின்ஸ் கூறிய பல கருத்துகள் அவருக்கு முன்னதாகவே பல்வேறு சூழல்களில் வேறு பலரால் சொல்லப்பட்டவையே. காலமும் சூழலும் மாறினாலும் சில கேள்விகளும் விவாதங்களும் புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் திரும்பி வருபவை என்பதைப் பொருளியல் சிந்தனைகளின் வரலாறு உணர்த்துகிறது. கேயின்ஸின் ‘The General Theory’ நூல் வெளியாகி, ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008இல் மற்றொரு நெருக்கடியை முதலாளித்துவம் சந்தித்தபோது, அவர் முன்வைத்த கோட்பாட்டின்மீது சற்றே கவனம் திரும்பியது இதற்கு எடுத்துக்காட்டு.
பொருளியலில் விவாதங்களும் விவாதப் பொருள்களும் எவ்வளவு மாறினாலும், கேயின்ஸ் எழுப்பிச் சென்ற கேள்விகளும் ஆதிக்கம் செலுத்திவந்த கருத்துகளை எதிர்க்கத் தயங்கிடாத அவரது திறனாய்வுப் பண்பும் பொருளியலைக் கற்போருக்கும் பொருளியலில் மாற்றுக்கருத்துகளை முன்வைப்போருக்கும் என்றுமே ஊக்கமளிக்கும் என்பது தெளிவு.
ஜூன் 5: ஜான் மேனார்டு கேயின்ஸ் 140ஆவது பிறந்தநாள்
To Read in English: Keynes: An economist who sparked the ‘multiplier effect’
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago