இ
ந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரத்தோடு பங்கெடுத்துக்கொண்ட காந்தியவாதிகள், சுதந்திரத்துக்குப் பிறகும் அதிகாரத்திற்கு எதிரான தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் ஜே.பி என்று அழைக்கப்பட்ட ‘லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயண். அரசின் அதிகாரங்கள் ஒரே மையத்தில் குவிக்கப்படும் இந்நாளில் அவரை நினைவுகூர வேண்டியது காலத்தின் அவசியம்.
நேரு, லால்பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு இந்திரா பிரதமரானார். அப்போது குஜராத், பிஹார் மாநிலங்களில் முதலமைச்சர்கள் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியதுடன் ஊழலில் திளைத்தனர். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டனர். எனவே, ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கவும் ஊழல் முதல்வர்களை அகற்றவும் ‘நவ நிர்மாண் ஆந்தோலன்’ என்ற இயக்கம் குஜராத்திலும் பிறகு பிஹாரிலும் தொடங்கப்பட்டது. இதில் மாணவர்களும் இளைஞர்களும் முக்கியப் பங்கு எடுத்ததால் இயக்கம் வேகம் பெற்றது. இந்த நேரத்தில்தான் இந்திரா காந்தியின் தேர்தல் முறைகேடு வழக்கில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வெளியானது.
இந்திராவும் காங்கிரஸ் முதலமைச்சர்களும் பதவி விலக வேண்டும், வறுமை, விலைவாசி உயர்வு, விலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தீர்வுகாணக்கூடிய முழுப் புரட்சி தோன்ற வேண்டும் என்று ஜே.பி. அறைகூவல் விடுத்தார். அவருடைய இயக்கத்தில் மாணவர்கள், இளைஞர்களுடன் பொதுமக்களும் சேரத் தொடங்கினார்கள். எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. இதைத் தடுக்க நாட்டின் அரசியல் சட்டத்தையே செயல்படாமல் நிறுத்திவைத்து, நெருக்கடி நிலையை இந்திரா காந்தி பிரகடனப்படுத்தினார். ஜே.பி., மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட நாட்டின் மூத்த தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். பத்திரிகைகள் தணிக்கைக்கு உள்ளாயின. மக்களுடைய அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டன. தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட ஜே.பி.யின் உடல்நிலை மோசமாகி சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டது.
அதிகாரப் பரவலாக்கம்
சில மாதங்களுக்குப் பிறகு நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டு மக்களவைக்குப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. சிதறியிருந்த எதிர்க்கட்சிகளை ஒரே கட்சியாக்கி, மக்களுடைய நலனுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரித்து ஜனதா என்ற ஒரே கட்சியாக, ‘ஏர் உழவன்’ சின்னத்துடன் 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட வைத்து நெறிப்படுத்தினார் ஜே.பி. சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரே கட்சி ஆட்சியைப் பிடித்தது அப்போதுதான் முதல் முறை. மத்தியில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது.
காந்திய நெறிகளின்படி வாழ்ந்த சமதர்மவாதியான ஜே.பி. மக்களை ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். மத்திய அரசும் பிரதமரும் அதிகாரங்களைக் குவித்துக்கொள்வதைக் கடுமையாக எதிர்த்தார். மக்களை மொழி, மதம், இனம் அடிப்படையில் பிளவுபடுத்துவதையும் அவர் விரும்பியதில்லை. சம்பல் கொள்ளைக்காரர்களை அத்தொழிலைக் கைவிடச் செய்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால், அரசியல் கொள்ளையர்களை என்ன செய்வது என்று அவர் கடைசி வரை குழம்பியிருக்கிறார். அதிகாரப் பரவல் தொடர்பான தனது சிந்தனையிலும் அதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு மாற்று முறையை ஜெய பிரகாஷ் நாராயண் 1959-ல் தனி ஆவணமாக வெளியிட்டார். கிராமப் பஞ்சாயத்து அல்லது ஊராட்சி அமைப்பை அடிப்படையாகக் கொண்டது அந்த மாற்று முறை. காந்தி தன்னுடைய சிந்தனைகளில் இதையே ‘சமுத்திர வட்டங்கள்’ என்று குறிப்பிட்டார்.
சுய நிர்வாகம், சுயச்சார்பு, வேளாண்-தொழில் சார்பு, நகர்ப்புற-ஊரக சார்பு, உள்ளாட்சி சமூகங்கள் ஆகியவை ஜே.பி.யின் மாற்று முறைக்கு அடிக்கற்கள். அதன்படி, கிராமங்களில் பொதுப் பேரவை என்பது கிராம சபையே. கிராமத்தில் வசிக்கும் அனைவரும் அதில் உறுப்பினர்கள். குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஒருவரே ஒரு பதவியை வகிக்கக் கூடாது. பஞ்சாயத்துகள் துணைக் குழுக்கள் மூலம்தான் செயல்பட வேண்டும். ஒவ்வொரு துணைக் குழுவுக்கும் ஒவ்வொரு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். இந்த துணைக் குழுக்களில் அதிகாரிகளோ அரசின் நியமனதாரர்களோ இடம்பெறக் கூடாது.
கிராமத்தில் ஒருவர் கூட உணவு இல்லாமலோ, உடை இல்லாமலோ, வீடு இல்லாமலோ இருக்கக்கூடாது என்பதை பஞ்சாயத்தும் கிராமசபையும் உறுதி செய்ய வேண்டும். ஒரு குழந்தைகூட ஆரம்பக் கல்வியைப் பெறாமல் இருக்கக் கூடாது. எல்லோருக்கும் அடிப்படை மருத்துவ வசதி அளிக்கப்பட வேண்டும். உணவு, உடை விஷயத்தில் கிராமம் தன்னிறைவு பெற்றதாக மாறுவதே கிராம சபையின் லட்சியமாக இருக்க வேண்டும். அடுத்த நிலையில் கிராமப் பஞ்சாயத்துகள் பஞ்சாயத்து சமிதிகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்த சமிதிகள் சுயாதிகாரம் பெற்றவையாகவும் சுயமாகச் செயல்படும் சமூக அமைப்பாகவும் இருப்பது அவசியம். பஞ்சாயத்து சமிதிக்கு அடுத்த நிலையில் மாவட்டப் பேரவை (கவுன்சில்) அமைக்கப்பட வேண்டும். பஞ்சாயத்து சமிதிகளை இணைத்து இதை உருவாக்க வேண்டும். மாவட்டப் பேரவைகள் இணைந்து மாநில சட்டப் பேரவையை உருவாக்க வேண்டும். இவ்வாறே மாநில சட்டப் பேரவைகள் இணைந்து மக்களவையை உருவாக்க வேண்டும். இவ்வாறே எல்லா ஜனநாயக அமைப்புகளும் கீழ்நிலையிலிருந்து இணைக்கப்பட்டவையாகவும் தொடர்புள்ளவையாகவும் இருக்க வேண்டும் என்று தற்போதைய நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு ஒரு மாற்றை அவர் முன்வைத்தார்.
பயணிக்க வேண்டிய பாதை
“காவல் துறை, நீதி நிர்வாகம், வரிவிதிப்பு, வரி வசூலிப்பு, சமூக சேவைகள், திட்டமிடல் என்று அனைத்துமே கூடுமானவரை அதிகாரப் பரவலாக்கல் முறையில் மாநிலங்களிடமும் மாவட்டங்களிடமும் ஊராட்சி அமைப்புகளிடமும் விடப்படல் வேண்டும். இப்படியொரு கட்டமைப்பை ஒரே நாளில் உருவாக்கிட முடியாது. முதலில் அடித்தளம் இட வேண்டும். மேல் கட்டுமானத்தை ஒவ்வொன்றாக உருவாக்கலாம். இந்த அமைப்பில் நிர்வாகிகள் ஊழல் செய்ய நேரலாம். அதைத் தடுக்க வேண்டியவர்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள்தான். பஞ்சாயத்து சமிதிகளை உருவாக்கிய பிறகு மாவட்ட பேரவைகளை ஏற்படுத்த வேண்டும். இவற்றோடு பொருளாதார நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும். திட்டமிடலும் கல்வியும் முழுதாகச் சீரமைக்கப்பட வேண்டும். இவற்றையெல்லாம் செய்ய ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் ஆண்டுக்கணக்கில் உழைக்க வேண்டும். சமூக உணர்வு இல்லாவிட்டால் அரசியல் என்பது உடலும் உயிரும் இல்லாத சவமாகிவிடும். அரசியல், வியாபாரம், சொந்தத் தொழில் செய்வோரில் முக்கியமானவர்கள் இதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்” என்று தன் ஆவணத்தில் கருத்துகளை முன்வைத்தார் ஜெயபிரகாஷ் நாராயண்.
ஜே.பி.யின் யோசனைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், 1990-ல் பஞ்சாயத்து ராஜ் சட்டமாக வேறு விதத்தில் மத்திய அரசால் நடைமுறைக்கு வந்தன. ஆனால், அவர் வலியுறுத்திய அதிகாரப் பரவலாக்கத்தைப் பற்றி மீண்டும் விவாதிப்பதற்கான தேவையை தற்போதைய நாடாளுமன்ற முறையிலான ஜனநாயக அமைப்பும் அதன் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே, ஜெயபிரகாஷ் நாராயண் என்றால் ‘நெருக்கடிநிலை கால நாயகர்’ என்ற நினைவுடன் அதிகாரப் பரவலாக்கத்தைப் பற்றி அவர் பேசியதும் நம் நினைவுக்கு வர வேண்டும்.
- வ.ரங்காசாரி,
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
அக்டோபர் 11 - ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago