கர்நாடகத் தேர்தல் முடிவுகளை, 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக முன்வைக்கும் கருத்தாக்கங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்த காங்கிரஸுக்கு இந்தத்தேர்தல் புத்துணர்வைத் தந்திருக்கிறது.
என்றாலும்,மக்களவைத் தேர்தலில் இந்த வெற்றி சாத்தியமாக வேண்டுமானால், அடுத்து நடக்கவிருக்கும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களிலும் சாதித்துக் காட்ட வேண்டிய அவசியம் அக்கட்சிக்கு இருக்கிறது. மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கும் பாஜகவும், பல்வேறு விஷயங்களில் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி யிருக்கிறது.
மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம்: மாநிலத் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதிருந்தால் காங்கிரஸுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். இவ்விஷயத்தில் பாஜக செய்த தவறை காங்கிரஸ் செய்யவில்லை. வேட்பாளர் தேர்வு முதல் பிரச்சார உத்திகள் வரை மண்ணின் மைந்தரும் கட்சியின் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது.
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவருக்கும் இடையில் முரண்கள் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் இருவரும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இருவரும் இணைந்து தேர்தல் பணியாற்றும் காணொளிகள் அதிகம் பகிரப்பட்டன. முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா - சிவக்குமார் இடையே ஏற்பட்ட போட்டி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
» வானத்தை வசப்படுத்தும் சென்னை இளைஞர்!
» கர்நாடக முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி: டெல்லியில் மூத்த தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை
எனினும், கர்நாடக முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி அக்கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இருவரும் ஆதரவு தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
தேர்தலுக்கு ஆயத்தமாகிவரும் ராஜஸ்தானில், மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராகவே நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் காங்கிரஸுக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறார்.
இச்சூழலைச் சீரமைக்க, கர்நாடக பாணியில் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாகச் செயல்படுவார்கள் என அக்கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறியிருக்கிறார். கர்நாடக பாணி தேர்தல் உத்தியை மத்தியப் பிரதேசத்தில் பிரயோகிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் மோடி முகத்தையே முன்னிறுத்துவது இனி எடுபடாது எனும் எண்ணம் பாஜகவினருக்கும் வந்திருக்கிறது என்றே சொல்லலாம். அதனால்தான், மத்தியப் பிரதேசத்தில் செல்வாக்குமிக்க முதல்வரான சிவராஜ் சிங் சௌகானுக்கு அடுத்த தேர்தலில் கூடுதல் முக்கியத்துவம் தருவது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் பாஜகவில், ராஜபுத்திர சமூகத்தின் முக்கிய முகமான வசுந்தரா ராஜே தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார்.
மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே அவருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்த வசுந்தரா, தனது மகன் துஷ்யந்துக்கு மத்திய அமைச்சர் பதவி தர மறுத்த உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடனும் முறைத்துக்கொண்டார். இனி, வசுந்தராவைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் பாஜக தலைமை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் எதிர்கொள்ளும் சவால்கள்: சரியோ, தவறோ - கட்சி மேலிடம் உத்தரவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை பாஜகவின் மாநிலத் தலைவர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது; காங்கிரஸில் அது மிகக் குறைவு. கர்நாடகத் தேர்தல் வெற்றியானது, சோனியா குடும்பத்துக்குக் கட்சிக்குள் செல்வாக்கை அதிகரித்திருக்கிறது.
ராகுல் காந்தியின் ‘ஒற்றுமை இந்தியா’ நடைப்பயணம் இடம்பெற்ற தொகுதிகளில் 80–85% வெற்றி கிடைத்திருப்பது அவரை உறுதியான தலைவராக உயர்த்தியிருக்கிறது. எனினும், அந்தந்த மாநிலச் சூழல்களை உணர்ந்து அதற்கேற்ப உத்திகளை வகுப்பதில்தான் அவரது எதிர்கால வெற்றி அடங்கியிருக்கிறது.
எதிர்க்கட்சிகளைத் தங்கள் தலைமையில் ஒருங்கிணைப்பதிலும் காங்கிரஸ் முன்பைவிட அதிக முனைப்புக் காட்டுகிறது. சரத் பவார், நிதீஷ் குமார் உள்ளிட்ட தலைவர்களும் தம்மளவில் இதில் ஈடுபட்டிருக்கின்றனர். எனினும், மம்தா பானர்ஜி போன்றோர் காங்கிரஸ் தலைமையை ஏற்கும் மனநிலையில் இல்லை. கர்நாடகத்தில் வெற்றியடைந்த காங்கிரஸ் பற்றி அவர் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.
இந்நிலையில், 2024 தேர்தலில் எங்கெல்லாம் காங்கிரஸ் வலுவாக இருக்கிறதோ அங்கெல்லாம் அக்கட்சியை ஆதரிப்போம் என மம்தா நேற்று பேசியிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது. புதுச்சேரி நீங்கலாக, தென்னிந்திய மாநில அரசுகள் பாஜகவின் சித்தாந்தத்துக்கு எதிரானவைதான். எனினும், தமிழ்நாடு தவிர, பிற தென்னிந்திய மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுடன் காங்கிரஸுக்கு நல்லுறவில்லை.
கேரளத்தில் முதன்மை எதிர்க்கட்சியே காங்கிரஸ்தான். தெலங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், மூன்றாவது அணிக்கு முயற்சி செய்துகொண்டிருப்பவர். இந்தச் சூழலில், நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பிற கட்சிகளுடனான உறவு முரண்களைச் சரிசெய்வதுதான் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கான பாதையைத் துலக்கமாக்கும்.
வாக்காளர்களின் மனநிலை: ‘ஒரே நாடு.. ஒரே மொழி’ என்பன உள்ளிட்ட ஒற்றை அடையாளங்களைத் திணிக்கும் பாஜகவின் முயற்சிகள் இனி எடுபடாது. மாநில உரிமை சார்ந்த விஷயங்களில், தேர்தல் வெற்றிகளுக்காகவேனும் அடக்கிவாசிக்க வேண்டிய கட்டாயம் அக்கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.
மத்தியில் ஆட்சி, ‘இரட்டை இன்ஜின்’ முழக்கம் என அத்தனை சாதகங்களுக்கு மத்தியிலும் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை இழக்க, மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்தது முக்கியக் காரணம். பாஜகவின் தீவிர ஆதரவாளர்கள்கூட பசவராஜ் பொம்மையின் அரசு ஊழல் மலிந்தது என ஒப்புக்கொண்டது லோக்நீதி-சிஎஸ்டிஎஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்திருக்கிறது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு, பாஜக மீண்டும் போட்டியிட வாய்ப்பு தந்தது இன்னொரு பிழை. அதேபோல் பெட்ரோல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்றவை இந்தத் தேர்தல் முடிவில் பெரும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. இவை தேசிய அளவிலான பிரச்சினைகள் என்பதால் பாஜக இவற்றுக்கு முகங்கொடுத்தே ஆக வேண்டும்.
சமூக அரசியல் சமன்பாடுகள்: சமூக அடிப்படையிலான அரசியல் கணக்குகளை பாஜகவோ, காங்கிரஸோ கைவிடப்போவதில்லை. எனினும், அதில் சேதாரம் அதிகம் இல்லாத சூத்திரங்களை வகுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும். சாதி, மதம் ஆகியவற்றுடன் மடங்களின் செல்வாக்கும் நிறைந்த கர்நாடக அரசியல் களத்தில், ஒக்கலிக சமூகத்தினர், குருபா சமூகத்தினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடிகள், முஸ்லிம்கள் என அனைத்துத் தரப்பினரின் வாக்குகளையும் காங்கிரஸ் கவர்ந்திழுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
பாரம்பரியமாக பாஜகவை ஆதரிக்கும் லிங்காயத்துகளிலும் 29% பேர் காங்கிரஸுக்கு வாக்களித்திருக்கின்றனர். காங்கிரஸின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூலம் தெலங்கானாவில் தலித் வாக்குகளைச் சேகரிக்க அக்கட்சி திட்டமிடுகிறது.
ஹிஜாப், ஹலால் போன்ற விவகாரங்களால் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கக் காத்திருந்த முஸ்லிம்கள், காங்கிரஸுக்கு மட்டுமல்லாமல் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும், எஸ்டிபிஐ கட்சிக்கும் வாக்களிக்கும் வாய்ப்புகள் இருந்தன. எனினும், பஜ்ரங் தளத்துக்குத் தடை விதிக்கப்படும், முஸ்லிம் இடஒதுக்கீடு மீண்டும் வழங்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் மூலம் 70% முஸ்லிம் வாக்குகளைக் காங்கிரஸ் அள்ளிவிட்டது.
மத அடிப்படையிலான பிரச்சாரம் ஏற்கெனவே, மேற்கு வங்கத்தில் பாஜகவுக்குப் பின்னடைவையே தந்தது; எனினும், இந்த முறை எப்படியேனும் வெற்றியைத் தக்கவைக்க அதே அஸ்திரத்தை அக்கட்சி பிரயோகித்தது. ஆனால், கர்நாடக மக்கள் அதற்கு மரண அடி கொடுத்துவிட்டனர். வாக்களித்ததும் ‘ஜெய் பஜ்ரங் பலி’ என முழங்க வேண்டும் என்று வாக்காளர்களுக்குப் பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள், அரசமைப்புரீதியில் மட்டுமல்ல தார்மிகரீதியிலும் தவறு என அவர்கள் உணர்த்தியிருக்கின்றனர்.
பிரதமர் மோடியின் பிரச்சார உத்தியிலும் இனி மாற்றம் ஏற்படும் என நம்பலாம். பிரம்மாண்டமான ‘ரோடு ஷோ’ போன்ற பிரச்சார உத்திகளைத் தவிர்த்து, எளிய மக்களைச்சென்றடையும் ராகுல் பாணியைப் பிரதமர் மோடி இனி கைக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மொத்தத்தில், அரசியலில் மட்டுமல்ல, தேர்தல் அணுகுமுறையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது கர்நாடகத் தேர்தல்!
To Read in English: Karnataka Assembly elections: The dissolving political equations
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago