அம்பேத்கரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும்

By Guest Author

இந்தியச் சமூகத்தின் சீர்திருத்தத்தில் அம்பேத்கரின் நேரடிப் பங்களிப்பு பற்றி எழுதப்பட்ட, பேசப்பட்ட அளவுக்கு அவரது மறைமுகத் தாக்கம் பற்றி எழுத-பேசப்படவில்லை; அவை பதிவுசெய்யப்பட வேண்டும். அது அம்பேத்கரை மேலதிகமாகப் புரிந்துகொள்ள உதவுவதோடு, அவர் மீதான எதிர்மறைச் சித்தரிப்புகளிடமிருந்து உண்மைகளை விலக்கிப் பாதுகாப்பதற்கான கருவியாகவும் அமையும்.

அம்பேத்கரும் கெட்கரும்: 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரப்படுத்திய ஆங்கிலேய அரசு, 20ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு கணக்கெடுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தியது. பொருளாதாரம், வாழ்விடம் குறித்த செய்திகளைப் பெற்று வகைப்படுத்துவதைவிட சாதி குறித்த தகவல்களைச் சேகரிப்பதில் ஏராளமான சிக்கல்கள் இருந்ததே இந்தக் கவனக் குவிப்புக்குக் காரணம்.

வெவ்வேறு காலகட்டங்களில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு நியமிக்கப்பட்ட தேசிய ஆணையாளர்களான டபிள்யூ.சி.பிளாடன், ஜே.ஏ.பெயின்ஸ், ஹெச்.ஹெச்.ரிஸ்லி, இ.ஏ.கெயிட், ஜே.டி.மார்ட்டின் ஆகிய அனைவரும் சமூகவியலிலும் மானுடவியலிலும் அறிவுஜீவிகளாக இருந்தவர்கள்.

அப்படிப்பட்டவர்களால்கூட இந்தியச் சாதி அமைப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இதே காலத்தில் சாதி அமைப்பு குறித்துச் சரியான புரிதலோடு இருந்த இந்தியர்கள் இருவர்: ஒருவர் எஸ்.வி.கெட்கர்; மற்றொருவர் அம்பேத்கர். கெட்கர் இந்தியாவின் பலமாகக் கருதிய சாதி அமைப்பை அம்பேத்கர் பலவீனம் என்றே கருதினார்.

அம்பேத்கரின் மறைமுகத் தாக்கம்: 1911 மக்கள்தொகைக் கணக்கெடுப்புவரை சாதிகள் தொகுதிகளாகக் குறிக்கப்பட்டனவே அன்றி, வகைமைப்படுத்தப்படவில்லை. ஐரோப்பிய மானுடவியல் கோட்பாடுகளை அளவுகோலாகக் கொண்டு இந்தியச் சாதி அமைப்பைப் பார்த்ததால் உருவான சிக்கல் அது. ஆனால், இந்தச் சிக்கல் அடுத்தடுத்த கணக்கெடுப்பில் முடிந்தவரை சரிசெய்யப்பட்டது.

குறிப்பாக, 1881 கணக்கெடுப்பில் இருந்த சாதி பற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஜே.ஏ.பெயின்ஸ் 1891 கணக்கெடுப்பில் சாதியை வகைமைப்படுத்தத் தொடங்கியிருந்தார். ஆனாலும் அதில் தெளிவில்லை. 1901 கணக்கெடுப்பில் கொஞ்சம் தெளிவு கூடியிருந்தது. கூடுதலாக நால்வருணம் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தது. இந்தப் போக்கு முதன்முதலாக பிரிட்டிஷ் இந்தியாவில் சாதி குறித்த ஓர்மையை அனைத்துத் தரப்பினரிடமும் உருவாக்கியிருந்தது.

1920 வரை சாதி குறித்த விவாதங்கள் ஏராளமாக நடந்தன. இந்தக் காலத்தில்தான் இந்தியா முழுவதும் இருந்து சாதி அடுக்கில் ஒவ்வொரு சாதியினரும் தம் சாதியை வைக்க வேண்டிய இடம் குறித்து அரசுக்குக் கோரிக்கை மனுக்களை எழுதினார்கள். அதற்கு வலு சேர்க்கும் வகையில், பழைய புராணங்களைத் தமக்கேற்றவாறு மாற்றியும் புதிய புராணங்களை இயற்றியும் கோரிக்கை மனுவோடு இணைத்து அனுப்பினர்.

இந்தப் பின்னணியில், அம்பேத்கரின் சாதி குறித்த ஆய்வைப் பார்க்கும்போது அவரின் தொலைநோக்குப் பார்வையின் தெளிவு புலப்படும். 1916இல் அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கருத்தரங்கில் வழங்கிய ‘இந்தியாவில் சாதிகள்’ என்னும் ஆய்வுக் கட்டுரை, சாதியைப் புரிந்துகொள்ளும் விதத்தை விளக்கியது.

1901 கணக்கெடுப்பின் ஆணையாளர்களாகப் பணியாற்றிய எச்.ரிஸ்லி, கெயிட் ஆகியோர் தமது அறிக்கையில், ‘சாதி என்பது ஒரு பொதுப் பெயர் கொண்ட குடும்பங்களை அல்லது பல குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தின் தொகுப்பு’ என்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். அந்தக் கருத்தை மறுத்த அம்பேத்கர், அது சாதியின் மையத்தை விளக்கவில்லை என்றார்.

சாதியைக் குறிப்பிடுவதில் குழப்பம்: 1901 கணக்கெடுப்பு அறிக்கையில் ‘நால்வருணம்’ என்ற சிந்தனை வந்துவிட்ட சூழலில், அன்றைக்கு ரிஸ்லியும் கெயிட்டும் சாதி குறித்த அறிதலுக்கு வந்திருந்தாலும் இந்தியப் பின்புலத்தில் சாதியைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அதனாலேயே, ‘சாதியின் தோற்றம், பரவல் பற்றி எங்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை’ என்றனர்.

மக்களின் எண்ணங்களைக் கணக்கில் கொள்ளாத இருவரும் வாழிட அடிப்படையில் நிறம், உடல் தோற்றம் - குறிப்பாக மூக்கின் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை வகைப்படுத்தியிருந்தனர். உதாரணமாக, 1901க்கு முன்புவரை மேற்கு மலைத்தொடரின் பழங்குடிகள், மத்திய இந்தியப் பழங்குடிகள், கங்கைப் படுகைப் பகுதிப் பழங்குடிகள் தனித்தனி வாழ்க்கை முறைகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் தனித்தனிச் சாதிகளாகக் கருதப்படவில்லை; ‘பழங்குடி’ என்றே பொதுவாகச் சுட்டப்பட்டிருந்தார்கள். இப்படி ஏராளமான மாற்றங்களோடும் குழப்பங்களோடும்தான் 1901 கணக்கெடுப்பு அறிக்கை வெளிவந்தது.

மாற்றம் ஏற்படுத்திய கட்டுரை: 1911 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில் கெயிட் நால்வருணப் பின்னணியில் சாதியின் விளைவுகளைக் குறித்து மட்டுமே பேசியிருந்தார். 1901 கணக்கெடுப்பில், சாதி வகைப்பாடு குறித்து ரிஸ்லியோடு தானும் இணைந்து கூறியவற்றை அப்படியே வைத்துக்கொண்ட கெயிட், அதோடு சாதியின் உள்பிரிவுகளையும் துணைப் பிரிவுகளையும் அறிக்கைக்குள் கொண்டுவந்தார். அம்பேத்கர் இக்கருத்திலிருந்து முற்றிலுமாக மாறுபட்டார். விளைவுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வது முழுமையான முடிவுகளை நோக்கி நகர உதவாது என்பது அம்பேத்கரின் அணுகுமுறை.

முந்தைய அறிஞர்களால் சாதியின் தோற்றம் குறித்துத் தெளிவாகச் சொல்ல இயலாத நிலையில், சாதியின் தோற்றத்தோடு ‘அகமணம்’ நெருங்கிய தொடர்புடையது என ‘இந்தியாவில் சாதிகள்’ கட்டுரையில் அம்பேத்கர் தெரிவித்தார்.

இந்த ஆய்வு முடிவானது, 1911 கணக்கெடுப்புவரை வினாநிரலில் ‘திருமணம்’ குறித்துப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த கேள்வியை 1921 கணக்கெடுப்பில் முக்கியமான கேள்வியாக மாற்றிமுன்னுக்குக் கொண்டுவந்தது. இதில் பிறந்த இடம், வாழும் இடம், மதம், கல்வியறிவு, மொழி, சாதி, இனம், தேசியம் முதலிய தரவுகள் சேகரிக்கப்பட்டன.

மக்களை உடல் அமைப்பு, நிறம், புராணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துவதை ஏற்க மறுத்த அம்பேத்கர், ‘இந்துக்களுக்குள்ளே வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரிய பண்பாட்டுப் பகுதிகளின் சிறிய தொகுதிகளே சாதிகள்.

தொடக்கத்தில் ஒரு சாதியே இருந்தது. போலச் செய்தல், சாதி விலக்கம் ஆகியவற்றின் மூலம் வர்க்கங்கள் அல்லது வகுப்புகள் சாதிகளாயின’ என்பதான முடிவுகளை முன்வைத்தார். இந்த முடிவுதான் 1921 கணக்கெடுப்புக்காகத் தயாரிக்கப்பட்ட வினாநிரலில் மாற்றங்களைச் செய்வதற்குக் காரணமாக அமைந்தது.

1911ஆம் ஆண்டு அறிக்கை மக்களின் வகைமையைப் பொறுத்தமட்டில் நெஸ்பீல்ட், செனார்ட், சர் டென்ஜில் இப்பெட்ஸன் ஆகியோரின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இறுதிவடிவம் பெற்றது.

இவற்றிலும் இதற்கு முந்தைய கணக்கெடுப்பிலும் தொழில், பழங்குடியினருடைய அமைப்புகளின் எச்சங்கள், புதிய நம்பிக்கைகளின் தோற்றம், கலப்பினம், குடிபெயர்ந்த இனம், இடம்பெயர்ந்த இனம் என்கிற வகைமைகளில் மக்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தார்கள். ‘இந்தியாவில் சாதிகள்’ கட்டுரையில் மேற்கூறியவர்களின் கோட்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அம்பேத்கர், அதை ‘இந்தியாவின் சாதி அமைப்பைத் தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவு’ என்றார்.

அம்பேத்கரின் தாக்கம்: 1911ஐப் போலவே மக்களின் வகைமையைப் பற்றிய பல மானுடவியலாளர்களுடைய கோட்பாடுகளின் வரையறைகளை அடிப்படையாகக் கொண்டு வெளியான 1921 கணக்கெடுப்பு அறிக்கையில், அம்பேத்கரின் சாதி குறித்த கருத்துகளைக்கணக்கெடுப்பு ஆணையாளர் நேரடியாக மேற்கோள் காட்டவில்லை.

அதேபோல, 1911க்கு முன்பு வெளியான எந்தக் கணக்கெடுப்பு அறிக்கையையும் அம்பேத்கர் தனது ‘இந்தியாவில் சாதிகள்’ கட்டுரைக்குப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால், இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் 1921 கணக்கெடுப்பு அறிக்கையில் அம்பேத்கரின் ஆய்வுகள் தாக்கம் செலுத்தியிருப்பது துலக்கமாகத் தெரிகிறது.

சாதியை இந்தியப் புரிதலில் அணுக வேண்டும் என்கிற அம்பேத்கரின் கருத்து, ஆங்கிலேயர்களின்பார்வையை மாற்றியதோடு அல்லாமல் 1921க்குப்பிறகு அவர்களால் அமல்படுத்தப்பட்ட சட்டங்களிலும் பிரதிபலித்திருக்கிறது.

அம்பேத்கரும் 1916இல் சாதியைப் புரிந்துகொள்ளும் முறைமை குறித்து முன்வைத்த கருத்தை, அரசமைப்பு வரைவுவரை கொண்டுவந்து நிறுத்தினார். விடுதலைக்குப் பிறகான இடஒதுக்கீட்டுக்கு அதுவே முதன்மைக் காரணமாக அமைந்தது.

- ஞா.குருசாமி | தமிழ்ப் பேராசிரியர்; தொடர்புக்கு: jeyaseelanphd@yahoo.in

To Read in English: How Ambedkar’s thinking influenced census

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்