மருத்துவத் துறைத் தற்கொலைகள்: காரணங்களும் தீர்வுகளும்

By Guest Author

இந்தியாவில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 119 மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறது. 1,166 மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் பாதியிலேயே விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒருபுறம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சூழலில், மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் விபரீத முடிவை எடுப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவ மாணவர்கள் மட்டுமில்லாமல் மருத்துவர்களிடையேயும்கூடத் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவத் துறையில் ஏற்பட்டுவரும் சமீபத்திய மாற்றங்களினால் உண்டான அதீதப் பணிச்சுமை, ஓய்வற்ற பணி, துறை சார்ந்த அழுத்தங்கள் போன்றவைதான் இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

மருத்துவ மாணவர்களின் தற்கொலைகளைப் பொறுத்தவரை அதற்கான காரணங்களை மூன்றாகப் பிரிக்கலாம்: 1. மாணவர்களின் தனிப்பட்ட இயல்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்; 2. மருத்துவக் கல்வியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்; 3. மருத்துவத் துறையில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள்.

இயல்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்: நீட் தேர்வு கட்டாயமான பிறகு 2 வகுப்புப் பாடங்களுடன், நீட் தேர்வுக்கான பிரத்யேகப் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. இதன் விளைவாக, ஒன்பதாம் வகுப்பிலிருந்தே இந்தப் பயிற்சியை மாணவர்கள் எடுக்கத் தொடங்குகிறார்கள். அதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் பெருமளவு தேர்வு சார்ந்ததாகவே மாறிவிடுகிறது.

தேர்வைத் தாண்டி வேறு எந்தப் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்ளப் பெற்றோர்கள் விடுவதில்லை. இதனால், மாணவர்கள் சுயமாக இயங்கும் தன்மையையே இழந்துவிடுகிறார்கள். இப்படித் தயாராகும் மாணவர்கள் மருத்துவக் கல்வி கிடைத்துச் சேரும்போது, முதல் முறையாக வீட்டிலிருந்து தனித்து விடப்படுகிறார்கள். அங்கு சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளத் தொடங்குகிறார்கள்.

அதற்கான முன் அனுபவமோ, தயாரிப்புகளோ இல்லாத நிலையில், அவர்கள் தடுமாறுகிறார்கள், சட்டென்று உணர்ச்சிவசப்படுகிறார்கள், சகிப்புத்தன்மையை இழக்கிறார்கள், ஒரு கட்டத்தில் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள்.

மேலும், இன்றைய மாணவர்களிடம் உருவாகிவரும் சுயநலப் போக்காலும், விட்டுக்கொடுக்காத தன்மையாலும் அவர்களால் நட்பை உருவாக்கவோ தக்கவைத்துக்கொள்ளவோ முடிவதில்லை. இது அவர்களை மேலும் தனிமைப்படுத்துவதால் சிறிய பிரச்சினைகளுக்குக்கூட மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விபரீத முடிவை எடுக்கும் நிலைக்குச் செல்கிறார்கள்.

கல்வியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்: கடந்த பத்தாண்டுகளில் மருத்துவக் கல்வியில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

அது மட்டுமில்லாமல், பெருநிறுவனத் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் சமீப காலத்தில் அதிகரித்திருக்கிறது.இதனால் இளநிலை மருத்துவப் படிப்பு மட்டுமே முடித்த மாணவருக்கு வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்பு படித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

முதுநிலை மருத்துவப் படிப்பு கட்டாயமான பிறகு,இளநிலை மருத்துவப் படிப்பின் மீதான ஆர்வமும் ஈடுபாடும் குறையத் தொடங்கியிருக்கிறது. முதல் ஆண்டிலிருந்தே முதுநிலைப் படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு அவர்கள் தயாராகத் தொடங்குகிறார்கள். இதனால் கல்லூரி வாழ்க்கையும் அவர்களுக்கு நெருக்கடி மிகுந்ததாக மாறிவிடுகிறது. விடுதிகளில்கூட நட்பை வளர்க்காமல், தனித்தே இருக்கிறார்கள்.

இன்றைய மருத்துவக் கல்வி மாணவர்களிடம் அடிப்படை மருத்துவ அறிவு, மருத்துவ அறம், நெறிமுறைகள், கோட்பாடுகள் போன்றவை மதிப்பிழந்திருக்கின்றன. மருத்துவ மாண்புகளும் அறநெறிகளும் குறைவதால், அவர்கள் நோயாளிகளையும் நோயையும் பொருளீட்டும் பண்டமாக மட்டுமே பார்க்கும் மனநிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். இதனால், ஒரு கட்டத்தில் இந்தப் பணி அவர்களுக்கு அலுப்பூட்டுவதாகவும் சுமையானதாகவும் மாறிவிடுகிறது.

மன உளைச்சலும் அதிகரிக்கிறது. அது அவர்களது நடவடிக்கைகளிலும் எதிரொலிக்கிறது. மருத்துவக் கல்வி நிறுவன நிர்வாகமும் பெற்றோரும் அதை அலட்சியப்படுத்தும்போது, ஒரு கட்டத்தில் படிப்பிலிருந்து பாதியில் வெளியேறும் முடிவையோ தற்கொலை போன்ற முடிவையோ அவர்கள் எடுக்கிறார்கள்.

மருத்துவத் துறை மாற்றங்கள்: இன்றைய காலகட்டத்தில் மருத்துவத் துறை ‘சேவைத் துறை’ என்கிற நிலையிலிருந்து வணிகம் சார்ந்ததாக மாறியிருக்கிறது. நோயாளிகள், மருத்துவமனைகள் என்கிற இரண்டு தரப்பும் இதை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் இரண்டுக்கும் இடையே தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். நுகர்வோர் சட்டங்கள் மருத்துவத் துறைக்கும் பொருந்தும் என்கிற நிலைக்குப் பிறகு, மருத்துவமனைகள் நோயாளிகளை அணுகும் முறையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

சட்டரீதியான பாதிப்புகளிலிருந்து, இழப்பீடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதே மருத்துவமனைகளின் முதன்மை நோக்கமாக மாறியிருக்கிறது. இதன் விளைவாக, தேவையற்ற பரிசோதனைகளும் சிக்கலான நடைமுறைகளும் நோயாளிகளுக்குக் கட்டாயமாக்கப்படுகின்றன. இதன் காரணமாக மருத்துவர்களுக்கு, மருத்துவமனைத் தரப்பிலிருந்து அழுத்தங்கள் தரப்படுகின்றன.

மேலும், கடந்த பத்தாண்டுகளில் மருத்துவமனைகள் பெருமளவு காப்பீடு சார்ந்து மாறியிருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில்கூடக் காப்பீடு கட்டாயம் என்ற நிலை உருவாகியிருப்பதால், காப்பீடு சார்ந்த இலக்குகள் மருத்துவர்களுக்கு நிர்ணயிக்கப்படுகின்றன.

மருத்துவர்கள் ஒரு மேலாளரைப் போன்று செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். சிகிச்சையைத் தாண்டி காப்பீட்டு நிர்வாக நடைமுறைகளும் அவர்களுக்குப் பெரும் சுமையாகிவிட்டன. எந்த நேரமும் இந்த இலக்குகளின் பின்னால் ஓடும் நிலைக்கு மருத்துவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்த நடைமுறைகள் மருத்துவத் துறையை மேலும் வணிகமயமாக்கியிருக்கின்றன.

இவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத சூழலும், சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையும் மருத்துவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. மருத்துவர்களின் இந்த எதிர்மறைத்தன்மை குடும்ப உறவுகளிடம் வெளிப்படும்போது அங்கு சமநிலை பாதிக்கப்படுகிறது.

தீர்வுகள் என்னென்ன? -

# மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி, மாணவர்களை வளரிளம் பருவத்திலிருந்தே தொடர் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. பெற்றோர்களும் பெரிய நிர்ப்பந்தங்களையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்துகிறார்கள். இது மாணவர்களை மனரீதியாகப் பலவீனப்படுத்துகிறது. வளரிளம் பருவத்தில் மாணவர்களின் கல்வி இலகுவானதாகவும், அந்தப் பருவத்து மனநிலைக்கு ஏற்றவாறும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

# வெறும் மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் இயந்திரமாக மட்டுமே மாணவர்களைப் பார்க்காமல், தன்னிச்சையாக முடிவெடுக்கக்கூடிய பண்பையும், புறவுலகின் நெருக்கடிகள் சார்ந்த புரிதல்களையும், பிரச்சினைகளை அவர்களே தீர்க்கும் அளவுக்கான மனவலிமையையும் பெற்றோர்கள் உருவாக்க வேண்டும்.

# மதிப்பெண்கள் மட்டுமல்லாது வாழ்க்கை நெறிகளையும், மானுடப் பண்புகளையும் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

# மருத்துவக் கல்வியை இலகுவானதாக, நுழைவுத்தேர்வு சார்ந்து அழுத்தம் கொடுக்காத ஒன்றாக உருவாக்க வேண்டும். இளநிலை மருத்துவம் மருத்துவ நெறிகளையும், நோயாளிகளுடனான அணுகுமுறைகளையும், பிற மனிதர்கள் மீதான கரிசனத்தையும் போதிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

# கட்டுப்பாடற்று அதிகரித்துவரும் மருத்துவக் கல்விக்கான இடங்களை அரசாங்கம் முறைப்படுத்த வேண்டும். பெருநிறுவன மருத்துவமனைகளை நெறிப்படுத்தும் வழிகாட்டுதல்களையும் உருவாக்க வேண்டும்.

# அரசு மருத்துவமனைகள் காப்பீட்டை முதன்மையாகச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து மாற வேண்டும். மருத்துவத் துறை சேவையை முதன்மையாகக் கொண்ட துறையாக மீண்டும் மாறும்போதுதான், அது மருத்துவ மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இணக்கமான ஒன்றாக மாறும்; பல பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

- சிவபாலன் இளங்கோவன் | பேராசிரியர், மனநல மருத்துவர்; தொடர்புக்கு: sivabalanela@gmail.com

To Read in English: Medicos’ suicides: Reasons and solutions

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

54 mins ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்