காங்கிரஸுக்கு ‘அரசியல்’ சாதகமாகிறதா ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு?

By பால. மோகன்தாஸ்

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துகிறதா? அரசியல் களம் காங்கிரசுக்கு சாதகமாக மாறுகிறதா? - இது குறித்து சற்றே விரிவாக அலசுவோம்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மிக இயல்பாக கேட்ட ஒரு கேள்விதான் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்துள்ளது. “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களிலும் மோடி என்று இருப்பது ஏன்?” - இதுதான் ராகுல் கேட்ட கேள்வி. இந்த கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்கும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. ஏன், ராகுல் காந்தி கூட நினைத்திருக்க மாட்டார்.

எதிர்பாராத திசையில் இருந்து வந்த திடீர் அம்பு ஒன்று ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியே தூக்கி போட்டுவிட்டது. அவரை தேற்றுவதற்காகவே அவரது தாயாரும், சகோதரியும் உடனடியாக அவரது இல்லத்திற்கு விரைந்தார்கள். காங்கிரஸ் கட்சியும் அவருக்கு உடன் நின்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களும் ராகுலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள். அதுமட்டுமல்லாது, எதிர்பாராத பக்கங்களில் இருந்தும் அவருக்கு ஆதரவுக் கரங்கள் நீண்டன - அதுவும் உறுதியாக. இதுதான், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு காங்கிரஸுக்கு சாதகமாகுமா என்ற கேள்விக்கு வித்திட்டுள்ளது.

டெல்லியிலும், பஞ்சாபிலும் காங்கிரஸை வீழ்த்தி அங்கு ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கடுமையாகக் கண்டித்திருக்கிறார். ''மக்களவையில் இருந்து ராகுல் காந்தி வெளியேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நாடு மிகவும் கடினமான காலங்களை கடந்து செல்கிறது. நாடு முழுவதையும் பாஜக அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர்களின் ஆணவத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக 130 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும். இன்று நாட்டில் நடக்கும் சம்பவங்கள் நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை.

எதிர்க்கட்சிகளை ஒழிப்பதன் மூலம், ஒரு நாடு, ஒரு கட்சி என்ற சூழலை உருவாக்க பாஜக விரும்புகிறது. இதற்குப் பெயர்தான் சர்வாதிகாரம். நாட்டு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் - நாம் ஒன்றிணைய முன்வர வேண்டும், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், நாட்டை காப்பாற்ற வேண்டும்'' என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆம் ஆத்மியிடம் இருந்தும், ஆம் ஆத்மி காங்கிரஸிடம் இருந்தும் விலகி நிற்கும் அரசியலை மேற்கொண்டு வரும் சூழலில், இந்த ஆதரவு குரல் வெளிப்பட்டிருக்கிறது.

இதேபோல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த மம்தா பானர்ஜியும், ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். ''பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்தான் முக்கிய இலக்கு. கிரிமினல் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார்கள். அதேநேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களின் பேச்சுக்காக தகுதியை இழக்கிறார்கள். நமது அரசியலமைப்பு ஜனநாயகம் இன்று ஒரு புதிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது'' என விமர்சித்திருக்கிறார் அவர்.

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவும், ராகுலுக்கு ஆதரவுக் கரம் நீட்டி இருக்கிறார். ''நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதால் எல்லாம் முடிந்துவிடாது. நாட்டின் மிகப் பெரிய மன்றம் நாடாளுமன்றம் அல்ல; மக்கள் மன்றம்தான். மக்கள் மன்றத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர் தற்போது தண்டிக்கப்பட்டிருக்கிறார். உண்மையில், தண்டிக்கப்பட வேண்டியவர்கள், நாட்டின் வளத்தை மிகப் பெரிய அளவில் கொள்ளையடித்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்கள்தான்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அறிக்கை வெளியிட்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ''ராகுல் காந்தியின் தகுதி நீக்கம், நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கும் அரசியல் சாசன மதிப்பீடுகளுக்கும் எதிரான தாக்குதல். பிரதமர் நரேந்திர மோடியின் எதேச்சதிகாரத்தையும் அகங்காரத்தையுமே இது பிரதிபலிக்கிறது. ஒரு எதிர்க்கட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் ஜனநாயகக் கோவிலான நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி இழிவுபடுத்தி உள்ளார்.

அரசியலமைப்பு விழுமியங்களுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் இது சோதனையான நேரம். பெருமுதலாளிகளில் மிகப் பெரிய முதலாளியை பாதுகாக்கும் நோக்கில், மோடி அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை துன்புறுத்துகிறது. கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டிக்க வேண்டிய நேரம் இது'' என தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மீதான நடவடிக்கை, தேசிய அரசியலின் களத்தை மாற்றுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தொடக்கத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தூக்கிப் பிடித்து வளர்ந்த பாஜக, படிப்படியாக மற்ற கட்சிகளையும் எதிர்க்கத் தொடங்கியது. சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா(உத்தவ் தாக்கரே பிரிவு), பாரத் ராஷ்ட்ர சமிதி, தெலுகு தேசம் கட்சி, திமுக என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதன் காரணமாகவே, உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களிலும் அது வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. தொடக்கத்தில் பாஜகவின் வளர்ச்சி காங்கிரசை பலவீனப்படுத்தியது. தற்போது அது மற்ற கட்சிகளையும் பலவீனப்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் மாநில அரசியல் சார்ந்த கணக்கீடுதான் அவற்றை ஒன்று சேர விடாமல் தடுத்து வருகிறது. இது பாஜகவுக்கு சாதகமாக இருந்து வருகிறது. ஆனால், இது வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடருமா என்பது மிக முக்கிய கேள்வி. தொடருமானால் அது பாஜகவுக்கு சாதகமாக அமையும். தொடராமல் போனால், அது பாஜகவுக்கு இழப்பை ஏற்படுத்தும்.

கட்சியின் இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும், மத்திய புலனாய்வு அமைப்புகள் தரும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டுமானால் தங்களுக்கான வெற்றி இரண்டாம் பட்சம்தான்; பாஜகவின் தோல்விதான் முக்கியம் என்ற முடிவுக்கு அவை வரக்கூடும். அத்தகைய உணர்வை நோக்கி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இல்லாத எதிர்க்கட்சிகளும் தற்போது நகரத் தொடங்கி இருப்பதாகவே தோன்றுகிறது. ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட சம்பவம், அதற்கான உந்துதலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையே அக்கட்சிகளின் எதிர்வினைகள் காட்டுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE