தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2023-2024 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைச் சட்ட மன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இவ்வறிக்கை பற்றிய விவாதம் பொதுவெளியில் நிகழ்ந்து வருகிறது. அறிக்கையின் சில அம்சங்கள் குறித்துப் பரிசீலிக்கலாம்.
இந்திய ஒன்றிய அமைப்பில் பல வரம்புகளை எதிர்கொண்டுதான் ஒரு மாநில அரசு நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளும் நடைமுறைகளும் மாநில அரசின் முடிவெடுக்கும் பரப்பைக் கணிசமான அளவுக்குச் சுருக்குகின்றன.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, குறைகள் நிறைந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகள், அதிதீவிர தாராளமயக் கொள்கைகள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள், பெருந்தொற்றுப் பரவலால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம், அதிலிருந்து ஏற்பட்டுவரும் மந்தமான மீட்சி ஆகியவை அடங்கிய பின்புலத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும், ஏமாற்றம் அளிக்கும் அம்சங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன.
வாக்குறுதிகள் தொடர்பான நடவடிக்கைகள்: அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 30,000க்கும் மேற்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை அளிப்பது என்ற வாக்குறுதியைச் செயல்படுத்த ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதும் வரவேற்புக்குரியது.
இதன் மூலம் சுமார் 58 லட்சம் பெண்கள் பயனடைவார்கள். பயனாளிகளைத் தெரிவுசெய்திட சில நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பட்டியல் சாதியினர், பழங்குடி மக்கள் ஆகியோருக்கான துணைத் திட்ட ஒதுக்கீடு மக்கள்தொகையில் அவர்கள் வகிக்கும் பங்குக்கு இணையாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என்கிற அறிவிப்பும் பாராட்டத்தக்கது.
நம்பிக்கை தரும் ஒதுக்கீடுகள்: நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்குதல் துறைக்கு ஒதுக்கீடு, நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை மதிப்பீட்டின்படி ரூ.20,400 கோடி. வரும் நிதியாண்டில் துறை ஒதுக்கீடு ரூ.24,476 கோடி என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், வீட்டுவசதி - நகர்ப்புற வளர்ச்சித் துறையின் ஒதுக்கீடு ரூ.8,738 கோடியிலிருந்து ரூ.13,969 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வேகமாக நகரமயமாகிவரும் தமிழ்நாட்டுக்கு இவை இரண்டும் பொருத்தமான ஒதுக்கீடுகள்தான்.
பொதுவாக, நகரமயமாதலையொட்டி சென்னை மாநகரம், அதன் அருகமைப் பகுதிகளுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் அதிகமாக வாழும் வட சென்னை பகுதிக்குத் தனியாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் நடைமுறைப்படுத்தப்படும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்பும் பெறப்படுவது அவசியம்.
நிதிப் பற்றாக்குறை படுத்தும் பாடு: நிதிப் பற்றாக்குறையை மாநில உற்பத்தி மதிப்பில் 3.25% என்ற அளவுக்கு மிகாமல் நிறுத்த வேண்டும் என்ற முனையில் இருந்தே இந்த அறிக்கையை நிதியமைச்சர் வடிவமைத்திருப்பது, எடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகளைத் தடுத்துவிடுகிறது. இதனால் பல துறைகளுக்கான ஒதுக்கீடுகள் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளன. சுகாதாரம் - குடும்ப நலம் மிக முக்கியமான துறை. கரோனா பெருந்தொற்று, புதிதாகப் பரவும் வேறு பல தொற்றுநோய்கள் எதிர்வரும் காலத்தில் பொது சுகாதாரத்துக்குப் பெரும் சவாலாக இருக்கும். சிகிச்சை, சேவை சார்ந்த தேவைகளும் அதிகரிக்கும்.
இத்தகைய சூழலில் இத்துறைக்கான ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் ரூ.17,902 கோடி என்பதிலிருந்து வரும் ஆண்டில் ரூ.18,661 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது; இது 4% உயர்வுதான். இது பணவீக்கத்தைக்கூட ஈடு செய்யாது. அதேபோல், பள்ளிக் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு நடப்பு ஆண்டு நிதிநிலை மதிப்பீட்டின்படி ரூ.36,896 கோடி; வரும் ஆண்டில் ரூ.40,299 கோடி. இந்த உயர்வு பணவீக்கத்தை ஈடுசெய்யும். ஆனால், மாநில உற்பத்தி மதிப்பு 7% உயர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும் போதுகூட நடப்பு ஆண்டைவிட இந்த ஒதுக்கீடு அதிகரிப்பு குறைவுதான்.
உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் ரூ.5,669 கோடி; இது வரும் ஆண்டில் ரூ.6,967 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் உயர் கல்வியின் சமகாலத் தேவைகளைக் கணக்கில்கொண்டால், இத்தொகை மிகவும் குறைவுதான். நடுத்தர-சிறு-குறு தொழில் துறைக்கான ஒதுக்கீடும் நடப்பு நிதி ஆண்டில் ரூ.911 கோடி என்பதிலிருந்து வரும் நிதி ஆண்டில் ரூ.1,509 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
எனினும், இன்று அத்துறை சந்தித்துவரும் கடும் நெருக்கடியைக் கணக்கில் கொண்டு மேலும் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் சிறு-குறு தொழில் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பின்மை: வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினையை இந்த நிதிநிலை அறிக்கை கிட்டத்தட்ட புறக்கணித்திருக்கிறது என்றே கூறலாம். தனது உரையின் தொடக்கத்தில் நிதிநிலை அறிக்கையின் நோக்கங்கள் பற்றி விவரிக்கும்போது, வேலைவாய்ப்பைப் பற்றியும் நிதியமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், அது சார்ந்த முனைவுகள் எதுவும் குறிப்பிடப்படும் அளவுக்கு இல்லை.
பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு பற்றிக் குறிப்பிடுகையில், மே 2021இலிருந்து தற்சமயம்வரை ரூ.2,70,020 கோடி மதிப்புக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 3,89,651 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
கணக்குப் பார்த்தால் ரூ.10 கோடி முதலீடு என்பது 15 நபர்களுக்கு வேலை தரலாம் என்று தெரிகிறது. இது தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மைச் சவாலை எதிர்கொள்ள முக்கிய நடவடிக்கையாக இருக்க முடியாது. நேரடியாக, குறிப்பாக சிறு-குறு தொழில்கள், விவசாயம், ஊரக வளர்ச்சி, விரிவடைந்த மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவைதான் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். உள்நாட்டு, பன்னாட்டுப் பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அளித்து, முதலீட்டை ஈர்ப்பது என்பது வேலைவாய்ப்புப் பிரச்சினைக்குத் தீர்வை அளிக்காது.
தொலைநோக்குப் பார்வையில்: ஒரு மாநில அரசு நிதிநிலை அறிக்கை மூலமாக மட்டும் பெரிய முன்னேற்றம் கொண்டுவருவது சாத்தியமல்ல. நிலவுகின்ற மத்திய அரசின் தாராளமயக் கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவது அவசியம். ஒரு மாற்றுப் பொருளாதாரக் கொள்கைச் சட்டகத்தை உருவாக்குவதும் நீண்ட காலச் சவாலாக நம் முன் உள்ளது.
கேரளம் போன்ற மாநிலங்களின் அனுபவங்களையும் கணக்கில் கொண்டு, உழைக்கும் மக்கள் நலனை முதன்மையாக முன்வைக்கின்ற கொள்கைகள் அவசியம். இத்தகைய கொள்கை மாற்றங்கள் உருவாக மக்கள் இயக்கங்கள் முக்கியப் பங்களிப்பு செய்ய முடியும்.
- வெங்கடேஷ் ஆத்ரேயா | பொருளாதார நிபுணர்; தொடர்புக்கு: venkatesh.athreya@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago