தமிழ்நாடு பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகள் | வேளாண் நிதிநிலை அறிக்கை: களத்திலிருந்து சில யோசனைகள்

By Guest Author

வேளாண்மைக்குத் தனியே ஒரு நிதிநிலை அறிக்கை என்பது தமிழ்நாடு அரசின் சிறந்த முன்னெடுப்பாகும். மூன்றாவது வேளாண் நிதிநிலை அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த 2022-23 நிதிநிலை அறிக்கையில் கவலைக்குரியதாகச் சுட்டிக்காட்டப்பட்ட காலநிலை மாற்றம் ஏற்படுத்திய பாதிப்பை இந்த ஆண்டு நன்றாகவே உணர முடிந்தது. 2021-22இன் சாகுபடிப் பரப்பு 53,50,000 ஏக்கர்.

இது அதன் முந்தைய ஆண்டைவிட 4,86,000 ஏக்கர் கூடுதல். எனினும் நடப்பு ஆண்டு சாகுபடியானது சென்ற ஆண்டைவிட 10,600 ஹெக்டேர் குறைவு. பருவம் தவறிய கனமழையும் இயற்கைப் பேரிடர்களும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

எனினும் ஒட்டுமொத்தப் பரிசீலனையில் தமிழ்நாட்டின் வேளாண்மை முன்னேறி உள்ளது. இதற்குக் காரணம் கர்நாடகம் மனம்குளிர்ந்து அளித்த தண்ணீர் தானம் அல்ல. வஞ்சனை இல்லாமல் வானம் பொழிந்த அமுத மழைத்தாரைதான். மேட்டூர் அணையின் 89 ஆண்டு கால வரலாற்றில் அதன் முழுக் கொள்ளளவானது இந்தப் பாசன ஆண்டில் (2022 ஜூன் - 2023 ஜனவரி) தொடர்ந்து 136 நாள்கள் நிரம்பியிருந்தது; 361 நாட்கள் 100 அடிக்கு மேல் இருந்தது.

1961க்குப் பிறகு உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்பட்டதும் இந்தப் பாசன ஆண்டில்தான்; உபரி நீராக 472.6 டிஎம்சி வெளியேறியது. மற்றொருபுறம், கடந்த நான்கு ஆண்டுகளில் (2018 தவிர) 259 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துவருவதாக டி.எஸ்.விஜயராகவன் குழு அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

காவிரிப் படுகைப் பகுதியின் (Cauvery Delta) மறுபகுதியில் வறட்சியின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் காய்ந்து கருகின. பல ஏரிகளின் தாகம் பாதிதான் தீர்ந்தது. இந்தப் பின்னணியில் இந்த நிதிநிலை அறிக்கை சார்ந்து சில ஆலோசனைகள்:

சுற்றுலா, அறுவடை இயந்திரங்கள்: கல்விச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, இயற்கைச் சுற்றுலா என்பதுபோல் வேளாண் சுற்றுலாத் துறையை உருவாக்கலாம். காவிரி நதி தீரத்தில் வேளாண், பழம், காய்கறி அறுவடை, மாட்டுவண்டிச் சவாரி, மீன் பிடித்தல் உள்ளிட்ட வருவாய் இனங்களை உருவாக்கலாம். இத்தாலியில் அறிமுகமான இந்த முறை, இந்தியாவில் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளது.

வேளாண் உழவடைக் கருவிகளை உற்பத்திசெய்து வாடகைக்கு இயக்குவதும் பலனளிக்கும். சென்ற நிதிநிலை அறிக்கையில் வேளாண் வளர்ச்சித் திட்டம் என்கிற தலைப்பில் வேளாண் கருவிகள் பற்றிப் பேசப்பட்டது. விவசாயிகளின் முக்கியத் தேவை அறுவடை இயந்திரங்களாகும்.

முன்பு அரசே பர்மாசெட் மற்றும் ஸ்பிரேயர்களை வாடகைக்கு விட்டது. அதேபோல அறுவடை இயந்திரங்களை அரசே உற்பத்திசெய்து வாடகைக்கு விட்டு வருவாயைப் பெருக்கலாம். அளவு போதாமையால் வேறு பகுதிகளிலிருந்து காவிரிப் படுகைப் பகுதிக்கு இப்போது இயந்திரங்கள் தருவிக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

பட்ஜெட்டில் இடம்பெற வேண்டியவை: 1. தமிழ்நாட்டின் உணவுச் சந்தையில் அதிகம் விற்பனையாகும் அரிசி, ஆந்திரம் மற்றும் கர்நாடகப் பொன்னி ரகம் ஆகும். நம் மாநிலத்தில் விளையும் அரிசிக்கு வெளி மாநிலத்தவர் ஏங்கிய காலம் முடிந்தது. இந்தச் சூழலில், ‘இல்லம் தேடிக் கல்வி’ என்பதுபோல், ‘வயல் தேடி விவசாயம்’ வர வேண்டும். தரம் உயர்ந்த அரிசியை உற்பத்தி செய்வதற்கான வேளாண் கல்வி அவசியம். மண் வளம், மண்ணுக்கேற்ற பயிர்ச் சாகுபடி ஆய்வு நடத்த வேளாண் மருத்துவ மையங்கள் (Agri-clinics) தேவை.

2. இது பேரிடர்களின் காலம். அதன் விளைவாக விவசாயம் பெரும் சரிவைச் சந்திக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு குறுவைகளிலும் பயிர்க் காப்பீடு இல்லை. மத்திய அரசை நம்பாமல் மகாராஷ்டிரம் போன்ற மாநில அரசுகளே தனிப் பயிர்க் காப்பீடு திட்டத்தை உருவாக்கியுள்ளன. தமிழ்நாடு அரசும் பயிர்க் காப்பீட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

3. விவசாயத்தின் வளர்ச்சி என்பது வெறும் உற்பத்திப் பெருக்கம் அல்ல, இதற்குக் காரணமான உழவர்களின் வருவாயை உயர்த்துவதும் ஆகும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு கொள்முதல் விலையை 2006ஆம் ஆண்டிலேயே பரிந்துரைத்தது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்புக்கு டன்னுக்கு 4,000 ரூபாயும் வழங்குவதாகக் கூறியது. உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே, அரசு தனது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்.

4. இயற்கை வேளாண்மைக்கு ஆதரவான, வலுவான களப் பிரச்சாரம் தேவை.

5. வேதி உர உற்பத்தி மற்றும் பகிர்வுகளைத் தமிழக அரசே நேரடியாக நிர்வகிக்க வேண்டும்.

6. ‘காரீஃப்’, ‘ராபி’ போன்றவை உழுகுடி மக்களின் புழங்குச் சொற்கள் அல்ல. மதராஸ் மாகாணம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதுபோல் குறுவை, சம்பா என உரிய தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட வேண்டும். அதிகாரபூர்வ அறிவிப்புகளில் அவையே இடம்பெற வேண்டும்.

7. பருவம் தவறிய மழையால் நெல் கொள்முதலில் ஈரப்பதம் நிரந்தரமாகிவிட்டது. செயற்கைக்கோள்களின் உதவியுடன் இயன்றவரை துல்லியமாகக் கணித்து, ஈரப்பதக் கொள்முதல் தளர்வை உடனே மத்திய அரசு அறிவிக்க வேண்டும். உலர் களங்கள், நெல் கிடங்குகளை அதிகப்படுத்தி நடமாடும் கொள்முதல் நிலையங்களை அரசு செயல்படுத்த வேண்டும். பணப்பட்டுவாடா ஊழலில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை தேவை.

8. மணல் கொள்ளையால் ஆற்றங்கரைகள் வலுவிழந்துவிட்டன. மணல் ஒரு கனிமம் என்ற முறையில் மணல் கொள்ளையைத் தடுக்க வாரியம் உருவாக்க வேண்டும்.

9. பயறு வகைகள், நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட சிறுதானியம் மற்றும் மாற்றுப் பயிர்களை அரசே நேரடியாகச் சந்தைப்படுத்த வேண்டும்.

10. நீர்க் கட்டமைப்புகள், தூர்வாரும் பணிகளைப் பிப்ரவரி முதல் வாரமே ஆரம்பிக்க வேண்டும்.

11. 1877 தாது வருடப் பஞ்சத்தில்தான் பல ரயில்வே தடங்கள் உருவாக்கப்பட்டன. பட்டினியை வெல்ல எடுக்கப்பட்ட முயற்சி அது. அதேபோல 100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க இத்தகு தலைப்புகளிலும் திட்டமிடலாம்.

12. அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, சிரவி என்ற பறவை நெற்பயிர்களுக்கு ஏற்படுத்திய சேதம் குறித்துக் கவலைப்பட்டார். இப்போது காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகள் ஏற்படுத்தும் சேதத்தைத் தவிர்க்கச் சட்ட நடவடிக்கை தேவை.

13. கடந்த நிதிநிலை அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட திருச்சி - நாகப்பட்டினம் வேளாண் தொழில்நுட்பப் பூங்கா, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான தொழிற்பேட்டை உள்ளிட்டவை விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும்.

- வெ.ஜீவகுமார் | வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளர்; தொடர்புக்கு: vjeeva63@gmail.com

To Read in English: Some grassroots-level suggestions on Agriculture-budget

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்