தேசிய அரசியலில் காங்கிரஸ் களத்தை இழப்பது ஏன்? - ஒரு ‘டேட்டா’ அலசல்

By பால. மோகன்தாஸ்

நடந்து முடிந்த 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சிக்கு மற்றுமொரு பின்னடைவையே ஏற்படுத்தி உள்ளன. இந்தப் பின்னணியில், தேசிய அரசியலில் காங்கிரஸ் எவ்வாறு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது என்பதையும், அதற்கான காரணம் என்ன என்பதையும் பார்ப்போம்.

தேசிய அரசியல் என்பது மாநிலங்களின் அரசியலை தனித்தனியாகவும், ஒன்றிணைத்தும் பார்க்கும் பார்வையை உள்ளடக்கியது. இந்தப் பார்வை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் பலவீனப்பட்டதால் உருவானது அல்ல. 1951-ம் ஆண்டு நாடு சந்தித்த முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தப் பார்வை இருந்தது. அப்போதே, 10-க்கும் மேற்பட்ட தேசிய கட்சிகளும், 30-க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளும் இருந்தன. ஆனாலும், தேசிய அரசியலில் வலிமை நிறைந்த ஒற்றை சக்தியாக காங்கிரஸ் திகழ்ந்தது.

வரலாற்றுச் சிறப்பு வெற்றி: முதல் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44.99 சதவீத வாக்குகளைப் பெற்று 364 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் முதல் ஆட்சியை அமைத்தது. அதேநேரத்தில், ஜவஹர்லால் நேருவின் தலைமைகூட ஈட்டாத பெறு வெற்றியை 1984 தேர்தலில் ஈட்டியவர் அவரது பேரனான ராஜீவ் காந்தி. அந்தத் தேர்தலில், அவரது தலைமையிலான காங்கிரஸ் கட்சி 48.10 சதவீத வாக்குகளையும், 415 உறுப்பினர்களையும் பெற்றது. இது அக்கட்சிக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி. அதேநேரத்தில், அந்தத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஒருமுறைகூட தனிப்பெரும்பான்மையைப் பெறவே இல்லை என்பது அதற்கான வரலாற்றுச் சோகம்.

படிப்படியாக தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கிய காங்கிரஸ் 1989 தேர்தலில் 39.50 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், 197 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், மீண்டும் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார் ராஜீவ். அவரது மரணத்திற்கு மத்தியில் நடைபெற்ற 1991 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் 36.40 சதவீத வாக்குகளையும், 244 தொகுதிகளில் வெற்றியையும் பெற்றது.

சரிவின் சரித்திரம்: பின்னர், 1998-ல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 25.80 ஆக சரிந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்த 2004 தேர்தலில் அக்கட்சி 26.50 சதவீத வாக்குகளையும், 145 தொகுதிகளில் வெற்றியையும் பெற்றது. அதன்பிறகு 2009 தேர்தலில் 28.60 சதவீத வாக்குகளையும் 206 தொகுதிகளில் வெற்றியையும் பெற்றது காங்கிரஸ். நேரு காலத்தில் 40 சதவீதத்திற்கு குறையாமலும், இந்திரா, ராஜிவ் காலத்தில் 30 சதவீதத்திற்குக் குறையாமலும் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 20 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றது. இந்தத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு விகிதம் 19.50. அதோடு, அக்கட்சி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 44. அதன்பின் 2019 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு விகிதம் 13.10. வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 52.

இந்தப் புள்ளி விவரங்கள் ஒன்றை தெளிவாக்குகின்றன. காங்கிரஸ் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது என்பதுதான் அது. இடையிடையே சில வெற்றிகள் அதற்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளன. ஆனாலும், அவை அதன் சரிவை தடுத்து நிறுத்தவில்லை. தேசிய அரசியலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட இந்தச் சரிவுக்குக் காரணம், அது பல்வேறு மாநிலங்களில் சரிந்ததுதான்.

மாநிலங்களின் வீழ்ச்சி: காங்கிரஸ் தமிழ்நாட்டில் 1967-ல் ஆட்சியை இழந்தது; மேற்கு வங்கத்தில் 1977-ல், சிக்கிமில் 1984-ல், உத்தரப் பிரதேசத்தில் 1989-ல், பிஹார் மற்றும் நாகாலாந்தில் 1990-ல், திரிபுராவில் 1993-ல், குஜராத்தில் 1995-ல் ஆட்சியை இழந்தது. ஒடிசாவில் 2000-ல், ஜம்மு காஷ்மீரில் 2008-ல், கோவாவில் 2012-ல், டெல்லியில் 2013-ல், ஹரியாணா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்ட்டிரா மாநிலங்களில் 2014-ம் ஆண்டிலும் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். கேரளா, அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் 2016-ம் ஆண்டிலும், உத்தராகண்ட் மற்றும் மணிப்பூரில் 2017-ம் ஆண்டிலும், கர்நாடகா, மேகாலயா மற்றும் மிசோரத்தில் 2018-ம் ஆண்டிலும் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். மத்தியப் பிரதேசத்தில் 2020-ல் பஞ்சாப் மற்றும் புதுச்சேரியில் 2021-ல் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்.

நாடு முழுவதும் எங்கும் நீக்கமற நிறைந்து அதிகாரம் செலுத்திய காங்கிரஸ் இன்று ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே சுயபலத்தில் ஆட்சியில் இருக்கிறது. பிஹாரில் ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணியிலும், ஜார்க்கண்ட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் இடம்பெற்று அம்மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறது காங்கிரஸ்.

2019 நிலவரம் என்ன? - கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு சதவீத வாக்குகளை வாங்கி உள்ளன என்ற புள்ளி விவரத்தை தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது. அதன்படி, அஸ்ஸாமில் 35.79%, பிஹாரில் 7.85%, கோவாவில் 43.55%, கர்நாடகாவில் 32.11%, கேரளாவில் 37.46%, மத்தியப் பிரதேசத்தில் 34.82%, மகாராஷ்ட்டிராவில் 16.41%, மேகாலயாவில் 48.67%, ஒடிசாவில் 13.99%, பஞ்சாபில் 40.58%, தமிழ்நாட்டில் 12.62%, உத்தரப் பிரதேசத்தில் 6.36%, மேற்கு வங்கத்தில் 5.67%, சத்தீஸ்கரில் 41.5%, ஜார்க்கண்ட்டில் 15.83%, தெலங்கானாவில் 29.79%, புதுச்சேரியில் 57.15% வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. 18 மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் இது.

ஆந்திரப் பிரதேம், அருணாச்சலப் பிரதேசம், குஜராத், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற வாக்குகள் குறித்த விவரம் இல்லை. அதேநேரத்தில், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சராசரியாக 13.10 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

தற்போது நடந்துமுடிந்துள்ள 3 மாநிலங்களில் மேகாலயாவில் 13.14 சதவீத வாக்குகளையும், நாகாலாந்தில் 3.55 சதவீத வாக்குகளையும், திரிபுராவில் 8.56 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது காங்கிரஸ். மேகாலயாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 2018 தேர்தலில் ஆட்சியை இழந்தது. கடந்த முறை விட்ட ஆட்சியை இந்த முறை பெற்றிருக்க வேண்டிய காங்கிரஸ், ஆட்சியை பிடிக்க முடியாததோடு, வாக்கு வங்கியையும் பெருமளவில் இழந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் மட்டுமல்ல, பரவலான மாநிலத் தேர்தல் முடிவுகளிலும் காங்கிரஸ் மெதுவாகக் கரைந்து வருவதை அறிய முடிகிறது.

காங்கிரஸ் ஏன் கரைகிறது? - காங்கிரஸ் கரைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மக்களை ஈர்க்கக் கூடிய கொள்கை இல்லாதது, உறுதியான - வசீகரமான தலைமை இல்லாதது, குடும்ப அரசியல், கடந்த கால ஊழல்கள், அலட்சியமான அணுகுமுறை, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது என பல்வேறு காரணங்களைக் கூற முடியும். அதோடு, உறுதியான கொள்கை, மக்களை ஈர்க்கக் கூடிய வசீகரத் தலைமை, துடிப்பான; திட்டமிட்ட ரீதியிலான செயல்பாடு உள்ளிட்ட பண்புகளுடன் வலிமையான மாற்று அரசியலை முன்னெடுத்த மாநில கட்சிகள், காங்கிரஸ் கட்சியை அந்தந்த மாநிலங்களில் பலவீனப்படுத்தி நிலைகுலைய வைத்துவிட்டன.

அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸுக்கு எதிரான மாற்று அரசியலை தேசிய அளவில் அதிதீவிரத்துடன் முன்னெடுத்த பாஜக, தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை சமரசமின்றி மேற்கொண்டு வருகிறது. ‘காங்கிரஸ் இல்லா இந்தியா’ எனும் அதன் முழக்கம், காங்கிரஸுக்கு எதிரான மிகப் பெரிய முன்னெடுப்பாக இருந்து வருகிறது. இன்னமும் தனது முந்தைய தவறுகளின் சுமையால் காங்கிரஸ் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

வலிமையாக இருக்கும்போதே தன்னுள் இருக்கும் பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதற்கான முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டிருக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வும், செயல் துடிப்பும் இல்லாததால் தனது முந்தைய எதிரிகளிடமே அடைக்கலம் தேடும் நிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது. காங்கிரஸின் தற்போதைய நண்பர்கள் எல்லோருமே அதன் முந்தைய எதிரிகள்தான்; அதன் அரசியலை கடுமையாக எதிர்த்தவர்கள்தான். தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணாமல், பிறரின் துணைக்கொண்டே அதனை அடைந்துவிட வேண்டும் என்றே காங்கிரஸ் இன்னமும் விரும்புகிறது.

காங்கிரஸின் கடந்த கால பலவீனங்கள் நாட்டில் புதிய புதிய அரசியல் சக்திகளை உருவாக்கின. அத்தகைய சக்திகளில் மிகப் பெரியதாக பாஜக உருவெடுத்திருக்கிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் காங்கிரஸ் இருந்ததைப் போல், பாஜக இருக்குமானால் அது காங்கிரஸுக்கு வாழ்வளிப்பதாக அமையும். ஆனால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதற்கான வாய்ப்பே இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்