கடந்த சில ஆண்டுகளாகக் கர்நாடகத்தின் கடைக்கண் அருளுக்காகத் தமிழகம் காத்திருக்க நேரவில்லை. வானம் பூவாளியாகித் தண்ணீர்ப் பூக்களைக் காவிரிப் படுகையின் தரைகளில் கொட்டியது. ஆயினும் அளவுக்கு மீறினால், அமுதமே ஆனாலும் நஞ்சாகும்தானே! ‘தையில் வரும் மழை நெய்யாகப் பெய்யும்’ என்பர். இந்தத் தை மழையோ காவிரிப் படுகையின் தலையில் பேய் மழையாக இறங்கி, விவசாயிகளைக் கலங்கவைத்திருக்கிறது.
முடங்கும் கொள்முதல்: ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் திறக்கப்பட வேண்டிய நீர், 2022இல் முன்கூட்டியே மே 24இல் திறக்கப்பட்டது. சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் 10.5 லட்சம் ஏக்கரில் சாகுபடிப் பணிகள் நடைபெற்றிருந்தன. அமோக அறுவடைக்காகக் காத்திருந்த தருணத்தில் கொட்டிய பெருமழை உழவர்களைத் திண்டாட வைத்துவிட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 2,17,500 ஏக்கரில் பயிர்கள் சாய்ந்தன. வயலில் மழைநீர் தேங்கியதால் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கின. இவற்றுடன் ஊடு பயிர்களாக இந்த ஆண்டு 10 லட்சம் ஏக்கரை இலக்காகக் கொண்டு உளுந்துப் பயிர் சாகுபடி நடந்திருந்தது. இவை 6 லட்சம் ஏக்கர் அளவில் பாதிப்படைந்தன. நிலக்கடலைச் சாகுபடியும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அறுவடைக் காலத்தில் அடைமழை பிடித்தால் நெற்கதிர்கள் சாய்கின்றன. அறுவடை தாமதமாகிறது. தண்ணீர் வடிவதற்குக் காலம் பிடிக்கிறது. தொடர்மழையில் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகுகின்றன. மழை விட்டாலும் அறுவடை இயந்திரங்கள் ஈர வயலில் பணியைத் தொடர முடியாது. இதனால் நெல் கொள்முதலும் முடங்குகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழைச் சாரலில் ஈரத்தில் நனைந்து கிடந்த காட்சிகள் விவசாயிகளைப் பதறவைத்தன.
காலநிலை மாற்றத்தின் விளைவுகள்: வங்கக் கடலில் உருவாகும் திடீர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உழவர்களைத் திடுக்கிட வைக்கின்றன. இதனால், மீனவர்கள் வாழ்வும் உப்பளத் தொழிலும் பாதிப்புகளைச் சந்திக்கின்றன. அபாயகரமான காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்திய உணவு உற்பத்தி 2030இல் 16% குறையும்; பசித்திருப்போர் எண்ணிக்கை 23% உயரும் என சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் (IFPRI) ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
‘காலநிலை மாற்றம் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாகி உள்ளது’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு நிகழ்வில் குறிப்பிட்டிருந்தார். காவிரிப் படுகைப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் தீவிர வானிலை நிகழ்வுகள், அண்மைக் காலத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றன. 2010-2020 ஆகிய 10 ஆண்டுகளுக்குள் எட்டு இயற்கைச் சீற்றங்களை இப்பகுதி எதிர்கொண்டது. 2020இல் மட்டும் நிவர், புவேரா, டிசம்பரில் காலம் தவறிய வடகிழக்குப் பெருமழை என மூன்று இயற்கைப் பேரிடர்களைக் காவிரி விவசாயிகள் எதிர்கொண்டனர்.
காவிரிப் படுகையின் மூதாதையர்களும் இவற்றைச் சந்தித்தவர்கள்தாம். புயல், சூறாவளி, வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை ஆங்கிலேயர்களின் ஆவணங்கள் பதிந்துள்ளன. மாமன்னன் ராஜராஜன் உள்ளிட்டோரின் ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த இத்தகு நிகழ்வுகளைக் கல்வெட்டுகள் பேசுகின்றன. சமகாலத்தில் நாம் பார்ப்பது இயற்கைப் பேரிடர்களின் உருமாற்றத்தைத்தான். மூடுபனி, கடுங்குளிர், காலம் தவறிய பெருமழை, கொடும் வெயில் ஆகிய மாற்றங்கள் காவிரிச் சமவெளியின் தட்பவெப்பத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
காவிரியின் வடகரையில் உள்ள சில பகுதிகள், செங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 500 ஏரிகள் ஆகியவற்றைச் சேர்ந்த விவசாயிகளின் பாசனக் கோரிக்கை - வழக்கமான தேதியான ஜனவரி 28இல் மேட்டூர் அணையை மூடக் கூடாது என்பதாகும். இப்பகுதிகளில் பயிர்கள் தொண்டைக்கதிர்களாக உலர்ந்திருந்தன. மானாவாரிச் சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது.
சம்பா சாகுபடியின் தொடக்கத்தில் ஏற்பட்டிருந்த மழைப் பாதிப்புக்குப் பிறகு 20% பரப்பில் சம்பா மறுசாகுபடி நடந்தது. தாளடியும் தாமதமாகியிருந்தது. சுமார் 2 லட்சம் ஏக்கர் சாகுபடிக்குத் தண்ணீர் தேவைப்பட்டது. இதனால் பிப்ரவரி 15 வரை மேட்டூர் அணை தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே பிப்ரவரி முதல் சில தேதிகளில் பிடித்த கனமழையானது விவசாயிகளைக் கவலைக்குள்ளாக்கியது.
வெள்ளச் சேதங்களைத் தமிழக அமைச்சர்கள் பார்வையிட்டுள்ளனர். நெல் கொள்முதலில் ஈரப்பதத் தளர்வு கேட்டுப் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார். சில நிவாரணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரம், மத்திய அரசின் அனுமதியைப் பெறுவதில் தொடர்ந்து ஏற்படும் கால தாமதத்தையும், நிபந்தனைத் தளர்வுகளில் நிகழும் இறுக்கத்தையும் நெடுங்காலமாகப் பார்த்துவருகிறோம். இந்தச் சூழலில் காவிரிப் படுகைப் பகுதிகளின் வேளாண் முறைகளில் அதிதீவிர மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
அரசு செய்ய வேண்டியவை: மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப பருவகாலப் பயிர் சாகுபடிக்குத் திட்டமிடல் அவசியம் (இது தொலைநோக்கில் செய்ய வேண்டியது. தமிழர் வாழ்வில் இவற்றைக் கணிக்க நீர்வழிச் சூத்திரம் என்கிற முறையைக் கடைப்பிடித்துள்ளனர்). பாதிக்கப்பட்டோருக்கு உரிய நியாயமான நிவாரணம் வழங்க வேண்டும்.
ஈர நெல்லை உலர்த்த இயந்திரங்களையும் உலர்களங்களையும், கிடங்குகளையும் ஒன்றியம் வாரியாக அதிகரிக்க வேண்டும். அறுவடை இயந்திரக் கருவிகளின் வாடகை நிலையங்களை அரசே உருவாக்குவது பலன் தரும். தார்பாய், சணல் உள்ளிட்ட வேளாண் சார்ந்த கச்சாப் பொருள் உற்பத்திக் கூடங்களைத் தொடங்கலாம். நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை உருவாக்கலாம்.
அரசு சொந்தக் கட்டிடங்களில் கொள்முதல் நிலையங்களை நடத்துதல், ஊழலை அறவே களைதல் போன்றவை அவசியம். மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டில் போதாமை நிலவும் சூழலில் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் கடைப்பிடிக்கும் மாதிரியில் பயிர்க் காப்பீட்டு ஏற்பாடுகளை மாநில அரசே முன்மாதிரியாகச் செயல்படுத்தலாம். மிக முக்கியமாக, இயற்கைப் பேரிடர்களை ஆராய்ந்து, உரிய காலத்தில் தேசியப் பேரிடர்களாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
வேளாண் சாகுபடி வரலாற்றில் தமிழ் நிலத்தின் சாகுபடி முறையானது அதி தொன்மை வாய்ந்தது. தாய்லாந்தின் உணவு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை கூற, நெல் சாகுபடி, நீர்ப் பாசன நிபுணர்கள் நால்வரை 1948இல் தாய்லாந்துக்கு ஐநா அனுப்பியது; அதில் மூன்று பேர் தமிழர்கள்.
இவர்கள் அறிமுகம் செய்த சாகுபடியால் ஏக்கருக்கு 2 டன் விளைந்த நிலங்கள் 4 டன் மகசூல் என முன்னேறின. தாய்லாந்து விவசாயிகள் இதை ‘மதராஸ் முறை சாகுபடி’ என அழைத்தனர். இந்தச் சாகுபடி முறை, ‘முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செருவில்’ எனப் ‘பெரும் பாணாற்றுப்படை’ எனும் பழந்தமிழ் நூலில் பேசப்பட்டது ஆகும். அந்தப் பெருமை நீடிக்க வேண்டும்.
விவசாயத்தை இயற்கை அவ்வப்போது அணைத்து அரவணைத்தாலும், தம் சீற்றங்களினால் அடிக்கடி தாக்குதலும் நடத்துகிறது. எனவேதான் ‘ஏர் கொண்ட உழவன் இன்றி தேர் கொண்ட மன்னன் ஏது?’ என உழவர்கள் அரசின் கரங்களை இறுகப் பற்றுகின்றனர். அரசு அவர்களைக் கைவிடக் கூடாது!
- வெ.ஜீவகுமார் வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயல்பாட்டாளர்; தொடர்புக்கு: vjeeva63@gmail.com
To Read in English: What govt must do to alleviate farmers’ woes
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago