சில விவாதங்கள் அத்தனை எளிதாக முற்றுப்பெற்றுவிடாது. கால ஓட்டத்தில் வெவ்வேறு விஷயங்கள் பேசுபொருளாகிவிடும் என்பதால் முந்தைய விவாதங்கள் கவனம் பெறாமல் இருக்கும். எனினும், ஏதேனும் ஒரு தருணத்தில் பழைய விவாதங்கள் உயிர் பெறும். சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான விவாதம் அப்படிப்பட்டதுதான்.
சமீபத்தில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, “செயற்கைக்கோள் வாயிலாக ஆய்வுசெய்ததில், ராமர் பாலம் இருந்ததாகத் துல்லியமாகக் கூற முடியவில்லை” என விண்வெளி மற்றும் அணு ஆற்றல் துறை இணை அமைச்சர்ஜிதேந்தர் சிங் பதிலளித்தார். அதே சமயம் மத நம்பிக்கையாளர்கள் மத்தியில் இது குறித்த நம்பிக்கையும் உறுதியாகவே இருக்கிறது. இதையடுத்து, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் உச்சமடைந்திருக்கிறது.
திட்டத்தின் பின்னணி: இந்தியாவில் ஏறத்தாழ 7,500 கி.மீ. நீளத்துக்குக் கடற்கரை உள்ளது. நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றால், கடல் மார்க்கமாக நேர் வழி கிடையாது. மேற்குக் கடற்கரைப் பகுதிகளான மும்பை, கொச்சி போன்ற பகுதிகளிலிருந்து கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா வரை கப்பல்கள் செல்வதற்கு, இலங்கையைச் சுற்றித்தான் சென்றாக வேண்டும்.
கிட்டத்தட்ட 400 கடல் மைல்களைக் கடக்க வேண்டும். அதற்கு 30 மணி நேரம் பிடிக்கும். ஏராளமான எரிபொருள் செலவாகும். இதைத் தவிர்ப்பது சரக்குப் போக்குவரத்துக்கு லாபம் தரும் என்ற கருத்தின் அடிப்படையில் போடப்பட்ட திட்டம்தான் - சேது சமுத்திரத் திட்டம்.
» அயல் பல்கலைக்கழகங்கள்: வருகையும் கேள்விகளும்
» பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை: அரசுகள் என்ன செய்ய வேண்டும்?
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஆழமற்ற பாக் நீரிணைப் பகுதியை ஆழப்படுத்தி, கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றினால், இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேது கால்வாய் வழியாக வங்கக் கடலை எளிதில் அடைந்துவிட முடியும்.
இதற்குச் சில முன்னுதாரணங்கள் உண்டு. சூயஸ் கால்வாய் மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. பனாமா கால்வாய் பசிபிக் பெருங்கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கிறது. இரண்டுமே நிலப்பரப்பை வெட்டி கடலோடு இணைக்கப்பட்டவைதான். ஆனால், சேது சமுத்திரத் திட்டம் முற்றிலும் மாறுபட்டது. கடலை ஆழப்படுத்தி கடலோடு இணைக்கும் திட்டம் இது.
ஆரம்ப முயற்சிகள்: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1760களில் தொடங்கி, 1838 வரை இதற்கான ஆய்வு நடந்திருக்கிறது. அப்போதே ஒரு கால்வாய் தோண்டப்பட்டு, அதில் சிறிய கப்பல்கள் சென்றுவந்துள்ளன. ஆனால், அப்போதைக்கு சேது சமுத்திரத்தில் ஏற்படுத்தப்பட்ட திட்டம் வெற்றிகரமாக அமையவில்லை. 1860இல் ஏ.டி.டெய்லர் என்பவர் மீண்டும் இந்தத் திட்டத்தை முன்வைத்தார். 1922 வரை பிரிட்டிஷ் அரசு பல்வேறு முயற்சிகளைக் மேற்கொண்டதாக பிரித்தானிய கலைக் களஞ்சியத்தில் குறிப்பு உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1955இல் டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பின், 1963இல் ரூ.21 கோடி மதிப்பீட்டில் ஒரு திட்டம் தமிழக அரசால் தயாரிக்கப்பட்டது. அது நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. பின், 1983இல் அமைக்கப்பட்ட லட்சுமி நாராயணன் குழுவும் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்தது. ஆனால், அதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான காரணங்களும் அதன் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுவதுண்டு.
மாறிய நிலைப்பாடு: பின்னர், 1998இல் ஜெயலலிதா சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுமாறு பாஜக தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்தினார். வாஜ்பாய் அரசுக்கு அதிமுக ஆதரவு வழங்கிய நிலையில் அந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஒரு நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரம் வந்திருந்தபோது, “விரைவில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்'” என உறுதியளித்தார்.
2005 ஜூலை 2ஆம் தேதி, ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இத்திட்டத்தைத் தொடங்கியது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், கூட்டணி ஆட்சியின் வழிகாட்டுக் குழு தலைவராக இருந்த சோனியா காந்தி, அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்டோர் மதுரையில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தனர்.
அதுவரை சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஆதரவாக இருந்த அதிமுக, 'இத்திட்டத்தால் பெரிய பலன் இல்லை' என விமர்சிக்கத் தொடங்கியது. 'திட்டத்துக்காக கடலில் ஆழப்படுத்த எண்ணியுள்ள இடத்தில் ராமர் பாலம் உள்ளது. அதைச் சேதப்படுத்த விட மாட்டோம்' என பாஜகவும் எதிர்த்தது. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், டாக்டர் சுப்ரமணியன் சுவாமி போன்றோர் இத்திட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திட்டத்தை நிறைவேற்ற இடைக்காலத் தடையும் பெற்றனர். இதையடுத்து, சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலை ஆழப்படுத்தும் பணி முடங்கியது. 2009 ஜூலை 27இல் திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டது.
மணல் திட்டுக்கள்: தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை உள்ள மணல் திட்டுக்களை இந்து, முஸ்லிம் என இரு மதத்தைச் சார்ந்தோரும் முறையே - ராமர் பாலம், ஆதாமின் பாலம் என அழைக்கின்றனர். அவரவர் மத நம்ப்பிக்கையின் அடிப்படையில் இந்தப் பாலம் உருவானதாக ஒரு பின்னணியும் சொல்கின்றனர்.
இரு நிலப்பரப்பு பிரியும் இடம் அல்லது இரண்டு கடல்கள் சேரும் இடம் போன்ற அரிய இடங்களில், அலைகள் மோதல் காரணமாக மணல் திட்டுக்கள் உருவாவதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்ய – அமெரிக்க கடல் பகுதிகள் சேரும் இடம், வட அமெரிக்க - தென் அமெரிக்கக் கடல்கள் இணையும் இடம், ஆப்பிரிக்கா - ஐரோப்பா கடல் பகுதி சேரும் இடம் போன்றவற்றில் மணல் திட்டுக்கள் காணப்படுகின்றன. இதுவும் அப்படி உருவான மணல் திட்டுதான் என்று ஒரு தரப்பு சொல்கிறது.
ஆதரவும் எதிர்ப்பும்: ஆழ்கடல் பகுதிக்குள் சென்று, மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என்றால், சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவது அவசியம் என்று மீனவர்கள் தரப்பு சொல்கிறது. தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற துறைமுகங்கள் அசுர வளர்ச்சி அடையும் என்கிறார்கள் சிலர். 'இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் மீன்பிடித் தொழில் முற்றிலும் நசிவடையும்' என்று சொல்லும் மீனவர்களும் உள்ளனர்.
கடலைத் தோண்டி ஆழப்படுத்திக் கொண்டே இருந்தாலும், மீண்டும் மீண்டும் அதே பகுதியில் மணல் சேர்ந்து கொண்டேதான் இருக்கும். அந்தப் பகுதியைப் பராமரிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு தி.மு.க. டெல்லி கூட்டணி அரசில் வலுவான பங்குதாரராக இருந்தபோது சேது சமுத்திர திட்டத்துக்காக செலவிடப்பட்ட கோடிகள் குறித்தும், அப்போது தூர் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மணலின் அளவு குறித்தும்கூட அரசியல்ரீதியாக கேள்விகள் எழுவதைக் காண்கிறோம்.
இத்திட்டத்துக்காகக் கடல் எவ்வளவுதான் ஆழப்படுத்தப்பட்டாலும், சிறிய வகைக் கப்பல்கள்தான் சென்று வர முடியும். தவிர, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், அரிய வகை கடல் உயிரினங்களுக்கு இழப்பு ஏற்படும், சுற்றுச்சூழல் மாசடையும் என்றெல்லாம்கூட வாதிடப்படுகிறது.
ஏற்கெனவே, 2005லிருந்து 2009வரை இத்திட்டத்துக்காகக் கடல் பகுதி ஆழப்படுத்தப்பட்டது. அதனால் சுற்றுச்சூழலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தத் தகவல்களை அரசு வெளியிட வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கோடிகளைக் கொட்டி இந்த திட்டத்துக்குள் இறங்கிவிட்டு, 'இது செயல்முறைக்கு சரிப்படாது' என்று கைவிட மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் வேண்டும்.
அதையெல்லாம் தாண்டி, 'நினைவுச் சின்னங்கள்' மீது பொதுவாகவே புனிதமான நம்பிகைகள் கொண்ட தமிழக மக்களில் யார் மனமும் புண்படாத வண்ணம் இதை எப்படி செயல்படுத்துவது என்பதையும் சரியாகத் திட்டமிட வேண்டும்.
- புதுமடம் ஜாபர் அலி; தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com
To Read in English: Sethu Samudram project getting resurrected?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago