குத்தகை உழவர்களைக் காப்பது யார்?

By செய்திப்பிரிவு

பலதரப்பட்ட உழவர்களுடன் கலந்துரையாடும்போது ‘குத்தகைவிவசாயிகளை யார் காப்பது?’ எனும் கேள்வியை அதிகம் எதிர்கொண்டுள்ளேன். வேளாண் தொழிலில் விளிம்புநிலையில் இருப்பவர்கள் குத்தகை உழவர்களே. சொந்தமாக நிலம் இல்லாத காரணத்தாலும் வேளாண் தொழில் மட்டுமே தெரியும் என்பதாலும் நிலம் வைத்திருக்கும் உழவர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்குக் குத்தகைக்கு நிலத்தைப் பெற்று பயிர் சாகுபடியை அவர்கள் மேற்கொள்வார்கள். ஒப்பந்தக் காலம் முடிந்ததும் நில உரிமையாளர்களுக்கே நிலத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவர்.

உழவர்களுக்கு அரசு வழங்கும் மானியம், பயிர்க்கடன் அல்லது உதவித்தொகை போன்ற எதையும் குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் காலத்தில் பெற முடியாத சூழலிலேயே குத்தகை உழவர்கள் உள்ளனர். மாறாக, அவர்களின் உடனடி நிதித் தேவைக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களை நம்பியிருக்க வேண்டிய சூழலே நிலவிவருகிறது. சில மாநில அரசாங்கங்கள் குத்தகை வேளாண்மையைச் சட்டப்படி இன்னும் அங்கீகரிக்காமல் இருப்பதே இதற்கான முதன்மைக் காரணம். இதனைக் களையும் வகையில் நிதி ஆயோக் 2016இல் ‘மாதிரி நிலக் குத்தகைச் சட்ட’த்தை உருவாக்கி, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது; மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்றவாறு அதை வடிவமைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தது. அதாவது, குத்தகைக்கு எடுப்பவர், கொடுப்பவர் ஆகிய இருவரின் முடிவையும் உள்ளடக்கிய ஒன்றாகக் குத்தகை நிலத்தின் மதிப்பு இருக்க வேண்டும் என்று சட்டம் முதன்மையாகக் குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையில் நாம் இங்கு குத்தகை உழவர்கள் தொடர்பான தரவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விலக்கப்பட்டவர்கள்: நபார்டின் அனைத்திந்திய நிதி ஆதாரக் கணக்கெடுப்பின்படி (2016-17)நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து உழவர்கள் வேளாண்மையில் ஈடுபடுவது அதிகரித்துவருவதாகவும், இந்திய அளவில் அது 12%, அதிகபட்சமாக பிஹாரில் 28% இருப்பதாகவும் தெரிவிக்கிறது. 2013இல் வெளியான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் (என்எஸ்எஸ்ஒ) ஆய்வறிக்கை, நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து வேளாண்மை செய்வதில் சிறு, குறு உழவர்களின் பங்கு 52%, பெரிய உழவர்களின் பங்கு 7% என்றும் கூறுகிறது.

2016 இல் வெளியான புள்ளியியல் துறையின் கணக்கெடுப்பு, தமிழ்நாட்டில் 71 லட்சம் சிறு, குறு விவசாயக் குடும்பங்களில் 30% உழவர்கள் குத்தகை நிலங்களில் பயிர் சாகுபடி செய்வதாகக் கூறுகிறது. அப்படி தமிழ்நாட்டில் சாகுபடி செய்யும் 30% குத்தகை உழவர்கள் உட்பட இந்திய அளவில் இருக்கும் மொத்த 40% குத்தகை விவசாயிகளுக்கு அரசின் எந்தவொரு மானியத் திட்டமும் பயிர்க் காப்பீடும் கிடைப்பதில்லை. அவ்வளவு ஏன் 12 தவணைகளாகக் கொடுக்கப்பட்டுவரும் ‘பிரதமர் நிதிஉதவித் திட்ட’த்தில் குத்தகை உழவர்கள் இதுவரை இணைக்கப்படவில்லை. எவ்வித நில ஆவணங்களும் அவர்களுக்கு இல்லை. சட்டரீதியாகச் சில மாநிலங்களில் அவர்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் அதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

ஒடிசா முன்னோடித் திட்டம்: ஒடிசா மாநிலம் தனித்து நிற்பது இங்குதான். உழவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை போலவே ஒடிசா மாநில அரசும் ‘கலியா திட்ட’த்தை அறிமுகப்படுத்தி, ஆண்டுக்கு ரூ.10,000-ஐ சிறு, குறு - குத்தகை உழவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்துகிறது. இங்கு ‘கலியா திட்ட’த்துக்கு உரிய பயனாளிகளைக் கண்டறிய ஒடிசா மாநில அரசு கையாண்ட உத்தி பாராட்டுக்குரியது. 2018இல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளில் 40 லட்சம் உழவர் குடும்பங்களுக்கு ரூ.10,180 கோடி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக சிறு, குறு, குத்தகை உழவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். மூன்று பெரும் உத்திகளுடன், அறிவிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வந்தது இத்திட்டத்தின் வெற்றி.

முதலாவதாக, அறிவித்த உடனே சுமார் 95 லட்சம் விண்ணப்பங்கள் குவிய, அவற்றிலிருந்து சரியான பயனாளிகள் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாவதாக, ‘சாமர்த்திய உழவர்களின் பதிவு’ எனப் பெயரிட்டு 20 வகையிலான தரவு மாதிரிகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டுள்ளது: உழவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தை உழவர் கணக்கெடுப்பு, சமூக-பொருளாதார-சாதி கணக்கெடுப்பு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, மாநில ஊழியர்களின் மனிதவள மேலாண்மை அமைப்பின் தரவுகள், வங்கிக் கணக்குத் தரவுகள், ஆதார் எண் எனப் பல்வேறு வகையிலான தரவுகளைக் கிராமப் பஞ்சாயத்து முதல் தாலுகா வரை சேகரித்துச் சரிபார்க்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, அரசு ஊழியர்கள், வரி செலுத்துவோர், பெரிய உழவர்கள் - தாமாக முன்வந்து இத்திட்டத்தில் இணைய விருப்பம் இல்லாதவர்களைக் கழித்து, இறுதியாகத் தகுந்த பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தும் மத்திய - மாநில அரசுகள் தயக்கமின்றி இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். எனவே, மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வேளாண்மைத் துறை இருப்பதால், குத்தகை உழவர்களைக் காக்க முதலில் மாநிலங்கள் வழிவகை செய்ய மனமுவந்து முன்வர வேண்டும். - செ.சரத் வேளாண் ஆராய்ச்சியாளர், தொடர்புக்கு: saraths1995@gmail.com

To Read in English: Who will protect tenant farmers?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

36 mins ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்