தொல்லியல் ஆய்வு: தேவை கூடுதல் அக்கறை

By செய்திப்பிரிவு

தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, மதிப்புயர்பண்பாட்டு, விழுமியங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க உதவுவது அகழாய்வுகளில் கண்டெடுக்கப்படும் தொல்லெச்சங்களே. முதன்முதலில் பொ.ஆ. (கி.பி.) 1863இல், ராபர்ட் புரூஸ்பூட் என்னும் ஆய்வாளர், பல்லாவரத்தில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடரியைக் கண்டறிந்து, உலகத் தொல்லியல் வரைபடத்தில் இந்தியாவின், குறிப்பாகத் தமிழ்நிலத்தின் தொன்மையைப் பதிவுசெய்தார்.

அதைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களைச் சார்ந்த ஆய்வாளர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகழாய்வுகள் நடத்தி, பண்டைத் தமிழரின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டறிந்து உரியவகையில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவை தமிழர் வரலாற்றில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சின. இம்மாதிரியான அகழாய்வுகள் நடத்தப்படுவது மெல்லமெல்லக் குறைந்துவந்த நிலையில், இப்பணிகள் தொய்வில்லாமல் தொடரப்பட வேண்டிய அவசியத்தைக் கீழடி ஆகழாய்வு ஏற்படுத்தியுள்ளது.

தொல்லியல் ஆய்வுகள் குறித்து திமுக ஆட்சி சிறப்புக் கவனம் செலுத்திவருகிறது. தமிழ்நாடு முதல்வரும் தொல்லியல் துறை அமைச்சரும் அகழாய்வுப் பணிகளை முடுக்கிவிட்டு, தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். இதன் பயனாகப் புதைந்துகிடந்த பல்வேறு எச்சங்கள் வெளிக்கொணரப்பட்டுத் தமிழரது தொன்மை உலகுக்கு உணர்த்தப்பட்டுவருகிறது. கீழடி அகழாய்வுகள் தமிழரின் வரலாற்றுக் காலத்தை நூறு ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியுள்ளன; பொருநை அகழாய்வுகள் இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து எழுதப்பட வேண்டும் என்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் அருங்காட்சியகம் அமைத்து மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டும் உள்ளன. நிகழாண்டில் பத்து இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடத்தப்படவும், சில மாவட்டங்களில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தொல்லியல் எச்சங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் அகழாய்வுகள் வேகமெடுத்துள்ள இன்றைய சூழ்நிலையில், சில தேக்கங்களையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் முதல்நிலைக் கள ஆய்வுகள் மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய வாழ்விடங்கள், ஈமச்சின்னங்கள் உள்ளிட்ட தொல்லெச்சங்கள் பொதிந்துள்ள 157 இடங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களாக அறிவித்துள்ளது. 1921 முதல் 1948 வரையிலான காலகட்டத்தில், அந்தத் தொல்லெச்சங்கள் பொதிந்துள்ள நிலத்தைத் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளது. முதல்நிலை ஆய்வுகள் மட்டுமே முடிந்த நிலையில், அடுத்தநிலை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதற்காகவே இவ்வாறு தமது பொறுப்பில் வைத்துக்கொண்டிருக்கிறது.

இந்த இடங்கள் ஒவ்வொன்றும் இரண்டு ஏக்கர் முதல் இருநூற்றி ஐம்பது ஏக்கருக்கும் மேலான பரப்பளவைக் கொண்டவை. இவற்றில் அரசு, தனியார் நிலங்கள் இரண்டும் உண்டு. ஒரு சில இடங்களில் நிலத்தைச் சுற்றி வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன; பலவற்றில் வேலிகள் இல்லை. வேலிகள் உள்ளவையும் பராமரிப்பின்றிச் சேதமடைந்துள்ளன. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக உள்ள இவ்விடங்களில் பெரும்பாலானவை புதைவிடங்கள்தாம். மனிதக் குடியிருப்புகளுக்கு அருகாமையில்தான் இவ்வாறான புதைவிடங்கள் அமைந்திருக்கும் என்பதும், இப்புதைவிடங்களே பல ஏக்கர் அளவில் பரந்துவிரிந்துள்ளன என்றால், அவற்றைச் சார்ந்த குடியிருப்புகள் எவ்வளவு பெரியனவாகவும் தொன்மையானதாகவும் இருந்திருக்கும் என்பதும் எளிதில் ஊகிக்கக்கூடியதுதான்.

இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் தமிழ்நாட்டில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகளை நடத்தியுள்ளது. ஆனாலும், மேற்குறித்த 157 இடங்களில் மாமல்லபுரம், ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, அமிர்தமங்கலம், பூண்டி, கணியாம்பூண்டி, மோதூர் ஆகிய ஒருசில இடங்களில் மட்டுமே அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற இடங்கள் இந்தப் பட்டியலில் இல்லாதவை. தமிழகத் தொல்லியல் துறை இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் நடத்தியுள்ளது. இவற்றில் ஆதிச்சநல்லூர் மட்டுமே மேற்கண்ட 157 பட்டியலில் உள்ள ஊர். மற்றவை வேறு இடங்கள். சென்னைப் பல்கலைக்கழம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவை இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டுள்ளன. இவற்றில் ஒன்றுகூடத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் பராமரிக்கும் இடம் இல்லை.

இந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை 70 முதல் 100 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் இதுவரை மேற்குறித்தவாறு ஓரிரு இடங்களைத் தவிர மற்ற இடங்கள் எவற்றிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இவ்விடங்களில் முறையான பராமரிப்பும் போதுமான அளவில் பாதுகாப்பும் இல்லாத சூழலில், அங்குள்ள தொல்லெச்சங்கள் மெல்லமெல்லச் சிதைந்து வருவதற்கும், தனியார் நிலங்கள் பயன்பாட்டில் இருந்துவருவதற்கும், அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புக்கள் இருப்பதற்கும் பெருமளவு வாய்ப்புகள் உள்ளன. அது சார்ந்த தகவல்பதிவுகளும் உள்ளன. ஆதலால் இந்த ஈமச்சின்னங்களை விரைவாக அகழாய்வு செய்வது அவசியமாகிறது.

முதல்கட்டமாகத் தற்போது பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள ஈமச்சின்னப் பகுதிகளில் அகழாய்வு நடத்தி, அங்கே புதைந்துள்ள எச்சங்களைச் சேகரித்துக் கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்துவதும் ஆய்வின் முடிவுகளுக்கேற்பத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வதும் சிறப்பாக அமையும். தொல்லியல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெருகிவரும் இவ்வேளையில், மேற்குறித்த தொல்லெச்சங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது ஊர் குறித்த தொன்மையையும் பண்பாட்டுச் சிறப்புகளையும் அறிந்துகொள்ள ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த இடங்களைத் தன்வயப்படுத்தி மிக நீண்ட காலமாகியும் இவற்றில் ஆய்வுகள் எதுவும் மேற்கோள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. ஆய்வுக்கு உட்படுத்தப்படாத இவ்விடங்களை வெறும் தொல்லியல் அடையாளங்களாக மட்டுமே வைத்திருப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. இந்நிலையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, தமிழகத் தொல்லியல் துறை வாயிலாக இவ்விடங்களில் ஆய்வுகள் நடத்துவது சிறப்பாக அமையும். அவ்வாறான ஆய்வுகள் நடத்தப்பட்டால், அவற்றில் கிடைக்கும் தரவுகள் தமிழரின் தொன்மைக்கும் பண்பட்டுச் சிறப்புகளுக்கும் மேலும்வலுசேர்க்க உதவுவதாக இருக்கும்.

பண்டைய தமிழர் தம் அடிச்சுவடுகளையும் பண்பாட்டு எச்சங்களையும் கண்டறிந்து, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தித் தமிழ் மக்களது வரலாறு உரியவகையில் மறுகட்டமைக்கப்பட வேண்டும் எனத் தமிழக முதல்வரும் அரசும் விரும்பும் இவ்வேளையில், தமிழ்நாடு அரசு இதில் கவனம்செலுத்த வேண்டும். மேற்குறித்த தொல்லியல் சின்னங்கள் அமைந்த இடங்களில் உள்ள ஈமச்சின்னப் பகுதிகளில் அகழாய்வு நடத்தி, அங்கு கிடைக்கும் எச்சங்களைச் சேகரித்துக் கரிம ஆய்வுக்கு உட்படுத்தவும் அவற்றைச் சார்ந்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கவும் வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மட்டுமல்லாது அந்தந்தத் தொல்லியல் நினைவிடங்கள் அமைந்துள்ள ஊர் மக்களின் பெருவிருப்பமும், கோரிக்கையும்கூட. ஆவன செய்யுமா தமிழக அரசு? - ஜெயபால் இரத்தினம், ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் தொடர்புக்கு: jayabalrathinam@gmail.com

To Read in English: Need to speed up archaeological excavations that will shed more light on Tamils’ antiquity

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்