தமிழ்நாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக இலவசத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தேர்தல் கால இலவச அறிவிப்புகள் பற்றிய விவாதங்கள் இப்போது தீவிரமடைந்திருக்கும் சூழலில், இதற்கொரு தமிழ்மரபு உள்ளது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
பசியைத் ‘தீப்பிணி’ என்கிறது திருக்குறள்; பசிநோய் தீர்ப்பவர் யாராயினும் அவரைப் ‘பசிப்பிணி மருத்துவர்' என்று கொண்டாடச் சொல்கிறது புறநானூறு (173). ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்பது மணிமேகலையின் அறைகூவல். பாரதியோ, ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று கொந்தளிக்கிறார்.
நீதிக்கட்சியின் முன்னெடுப்பு: 1920-களில் மதராஸ் மாகாணத்தில் ஆட்சிக்குவந்த நீதிக்கட்சி அரசு, சென்னை மாநகராட்சிப் பள்ளியில் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தது. பின்னர் இதே வழியில் முதல்வர் காமராஜர், மதிய உணவுத் திட்டத்தை 1955இல் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியபோது, பாரதி பிறந்த எட்டயபுரத்தில் தொடங்கிவைத்தார்.
மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் பள்ளி செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சமாக உயர்ந்தது. 1920இல் மாநகராட்சிப் பள்ளியில், 1955இல் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் என்று தொடர்ந்த இலவச மதிய உணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர்., ‘இலவச சத்துணவுத் திட்ட’மாக்கினார்; மு.கருணாநிதி சத்துணவில் முட்டை சேர்த்தார், ஜெயலலிதா பயறு, பருப்பு என சத்துப் பொருட்களைச் சேர்த்தார்.
பாடநூல்கள் மட்டுமின்றி, மாணவர் சீருடை, எழுதுபொருள், புத்தகப் பை, மடிக்கணினி, மிதிவண்டி, இலவசப் பேருந்துப் பயண அட்டை என 14 விதமான பொருள்களாகத் தொடர்கிறது. இதன் விளைவு, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் இலக்கான ‘பள்ளிப் படிப்பை முடிப்போர் சதவீதத்தை இன்னும் 10 ஆண்டுகளில் 50% ஆக உயர்த்துவது’ என்பதைத் தமிழ்நாடு ஏற்கெனவே எட்டியிருப்பதுதான்.
அறிஞர் பாராட்டு: மு.கருணாநிதி ஆட்சிக் காலத்தில் (1972) பொது விநியோகக் கழகம் தொடங்கப்பட்டது. 1975இல் அனைத்துக் குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. அரசின் நலத் திட்டங்கள் இந்த அட்டையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், வருவாய்த் துறையின் அனைத்துச் சான்றுகளையும் இந்தக் குடும்ப அடையாள அட்டையைக்கொண்டே பெற முடிகிறது.
அரசு மானியத்தால் குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் வகையில் அரிசி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்குவதும் இலவசம் சார்ந்த மக்கள் நலத் திட்டங்கள்தான். ‘தமிழ்நாடு துணிச்சலான சமூகநலத் திட்டங்களை முன்னெடுத்தது. தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு, சுகாதார மையங்கள், சாலை வசதிகள், பொதுப் போக்குவரத்து, குடிநீர் வழங்கல், மின் இணைப்பு வழங்கல் என்று இன்னும் நிறையத் திட்டங்களைக் குறிப்பிடலாம்.
பெரும்பாலான இந்திய மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானமும் அதிகம், வறுமை நிலையும் ஒப்பீட்டளவில் குறைவு. இந்தப் பொருளாதார வளர்ச்சியானது சமூகநலத் திட்டங்களைச் சாத்தியப்படுத்தி உள்ளது’ என்று தமிழ்நாட்டைப் பற்றி நோபல் பரிசுபெற்ற பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் குறிப்பிடுகிறார்.
மரபின் நீட்சி: ‘மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள், பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அத்தகைய மானியங்கள், உற்பத்தியைப் பாதித்து, மறைமுகச் செலவை அதிகரிக்கின்றன’ என்று பேசியுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் குழு உறுப்பினர் ஆசிமா கோயல், இந்தியாவின் பெரும் பணக்காரர்களுக்குச் சில ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட பெரும் தொகையைவிட, இந்த மக்கள் நலத் திட்டங்களுக்கான தொகை மிகமிகக் குறைவு என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் நல்லது.
காலம்காலமாக அடுப்பங்கரையில் கிடக்கும் சரிபாதி மனித இனமான பெண்களை முன்னேற்ற, இங்கிலாந்துக்கும் முன்பாகவே வாக்குரிமை வழங்கியது (1921) அன்றைய மதராஸ் மாகாணம்.
அதன் நீட்சியே இன்றைய அரசின் பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணச் சலுகை. 8ஆம் வகுப்பு முடித்தால் திருமண உதவித் திட்டம், அரசுப் பள்ளியில் படித்து கல்லூரி வந்தால் மாதம் ரூ.1000 என்பதும், ‘பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் காணீர்’ என்ற பாரதியின் தமிழ்க் கனவு நிறைவேறும் வழிதானே?
இந்தியாவிலேயே முன்னோடியாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்பதன் கூட்டுப் பலனை, எந்த ஆண்டையும்விட இந்த ஆண்டு அதிக விளைச்சல் எனும் செய்தியில் பார்க்கிறோமே? மற்ற மாநிலங்களில் நீர், இடுபொருள், மின்வசதி அற்ற நிலையில், விவசாயிகள் வெளியேற்றம் என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றும் தமிழ் மரபின் நீட்சி என்பதும் வளமான மாநிலத்தில் மகாராஷ்டிரத்திற்கு அடுத்த நிலையில் தமிழ்நாடு இருந்தாலும், அங்குள்ள பணக்காரர் ஏழை இடைவெளியை விடவும் தமிழ்நாட்டில் குறைவு என்பதையும் சேர்த்துப் பார்க்கும்போது, இதன் சமூக வளர்ச்சி புரியும்.
‘வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை’ என்னும் திருக்குறளைப் புரிந்துகொண்டால், இடஒதுக்கீடும் புரியும், மக்கள் நலத் திட்டங்களும் புரியும்; இந்தத் தமிழ் மரபுதான் தமிழ்நாட்டை உயர்த்திவருகிறது என்பதும் புரியும்.
- நா.முத்துநிலவன், மாநிலத் துணைத் தலைவர் - தமுஎகச
தொடர்புக்கு: muthunilavanpdk@gmail.com
To Read in English: Freebies: What Tamil tradition says
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago