சுதந்திரச் சுடர்கள்: மூவண்ணக் கொடியின் வரலாறு

By ஆ.கோபண்ணா

இந்திய தேசியக்கொடியின் வடிவமும் குறியீடும் வரலாற்றுரீதியாக பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறுவதற்காகப் பல தலைமுறைகளாக நடைபெற்ற போராட்டத்தின் ஊடாகப் பரிணமித்ததாகும்.

வங்காளப் பிரிவினைக்கு எதிராகத் தேசம் முழுவதும் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்த 1906 ஆகஸ்ட் 7 அன்று, கல்கத்தா கிரீன் பார்க்கில் சுரேந்திரநாத் பானர்ஜி முதன்முதலில் ஏற்றிய தேசியக்கொடிதான் இதன் தொடக்கம்.

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை அடையாளபூர்வமாகப் பறைசாற்றுவதாக அமைந்த இந்த முதல் தேசியக்கொடியின் கீழ்ப்பகுதியில் இருந்த சிவப்புப்பட்டையில் சூரியனும் சந்திரனும் பொறிக்கப்பட்டிருந்தன.

முதல் கொடிகள்

பம்பாயின் முன்னணி சுதந்திரப் போராட்டப் பெண் போராளி மேடம் காமாவும் அவருடைய தோழர்களும் ஜொ்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் 1907 ஆகஸ்ட் 22 அன்று நடைபெற்ற சர்வதேச சோஷலிச காங்கிரஸில் ஏற்றிவைத்த மூவண்ணக் கொடி இரண்டாவது அவதாரம். இது தோற்ற அமைப்பில் முதல் கொடியைப் போலவே இருந்தது.

அன்னிபெசன்டின் ஹோம் ரூல் இயக்கம், 1917இல் உடனடித் தேவைக்காக மூன்றாவது கொடியை உருவாக்கியது. இந்தக் கொடி ஏற்கெனவே குறிப்பிட்ட இரண்டு கொடிகளிலிருந்தும் வேறுபட்டதாக இருந்தது. டொமினியன் அந்தஸ்தைக் குறிக்கும் வகையிலோ, ஹோம் ரூல் கோரிக்கையை வலியுறுத்தும் விதத்திலோ என்னவோ, கொடியின் இடப்பக்க மேற்புறத்தில் யூனியன் ஜாக் கொடி சித்திரிக்கப்பட்டிருந்தது. தங்களது நோக்கம் முழுமையான சுதந்திரமே என்பதால் தேச பக்தர்கள் இந்தக் கொடியை ஏற்கவில்லை.

காங்கிரஸின் கொடி

சுதந்திரப் போராட்டக் களத்தில் காந்தியடிகள் கால்பதித்து, மக்களின் பேரியக்கமாக அதனை மாற்றியபோது, இந்திய தேசிய காங்கிரஸை முன்னெடுத்துச் செல்லும் ஒளிவிளக்காகத் திகழக்கூடிய ஒரு புதிய கொடி தேவை என்பது அழுத்தம் திருத்தமாக உணரப்பட்டது.

1921 ஏப்ரலில் விஜயவாடாவில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் வெள்ளை, பச்சை, சிவப்பு ஆகிய மூவண்ணங்கள் கொண்ட நடுவில் ராட்டையுடன் கூடிய கொடி, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தேசியவாதியும் பேராசிரியருமான பிங்கல வெங்கய்யாவால் வடிவமைக்கப்பட்டு காந்தியடிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அந்தப் புதிய கொடியின் வடிவம் பற்றிச் சில சர்ச்சைகள் எழுந்ததால் 1931 ஏப்ரலில் கராச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் டாக்டர் பட்டாபி சீதாராமையா தலைமையில் தேசியக்கொடி வடிவமைப்புக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் பரிந்துரைப்படி காவி, வெள்ளை, பச்சை ஆகிய வண்ணங்களுடன் நடுவில் ராட்டையையும் கொண்டதாக மூவண்ணக்கொடி உருவாக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே இந்திய தேசிய காங்கிரசின் கொடியும் ஆனது.

தாயின் மணிக்கொடி...

1947 ஆகஸ்டில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன் அரசமைப்பு அவை அமைக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிற்கான கொடியைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தனிக்குழு ஒன்றை 1947 ஜூன் 23இல் இந்த அவை அமைத்தது.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் மௌலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, ராஜாஜி, கே.எம்.முன்ஷி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக இருந்தனர்.

இந்தியாவிற்கான புதிய மூவண்ணக் கொடியின் வெள்ளைப் பகுதியின் மத்தியில் ராட்டைக்குப் பதிலாக தர்மச்சக்கரத்துடன் கூடிய (சட்டம், நீதிக்கான அசோகப் பேரரசின் சக்கரச் சின்னம்) கொடியை 1947 ஜூலை 22இல் அரசமைப்பு அவை ஏற்றுக்கொண்டது.

இந்தப் புதிய கொடியை முறைப்படி ஏற்றுக்கொள்வதற்காக 1947 ஜூலை 27 அன்று அரசமைப்பு அவையில் ஜவாஹர்லால் நேரு ஒரு தீர்மானம் கொண்டுவந்து அறிமுகப்படுத்தினார். அப்போது சுதந்திர இந்தியாவின் மூவண்ணக் கொடியின் முக்கியத்துவம் பற்றி என்றும் நினைவில் இருக்கக் கூடிய வகையில் அவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி: “கடந்த காலங்களில் நம்மில் பலரும் பயன்படுத்திவந்த கொடியிலிருந்து இந்தக் கொடி சற்று மாறுபட்டு இருப்பதாக நமக்குத் தெரிகிறது.

இதில் உள்ள அடர் குங்குமப்பூ நிறம், வெள்ளை, அடர்பச்சை ஆகிய வண்ணங்களில் மாற்றமில்லை. இதற்குமுன் இருந்த கொடியில் வெள்ளை நிறப் பகுதியில் இந்தியாவின் சராசரி குடிமகனைக் குறிக்கும் விதத்திலும், மக்களின் பெருங்கூட்டத்தைக் குறிக்கும் வகையிலும், அவர்களின் தொழில்களைக் குறிக்கும் விதத்திலும் மகாத்மா காந்தியின் போதனையிலிருந்து கிடைத்த ராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ராட்டைச் சின்னம் நீக்கப்படாமல் கொடியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ராட்டையின் நூல் நூற்கும் பகுதியைத் தவிர்த்துவிட்டு, சக்கரம் மட்டும் இடம்பெற நாங்கள் ஒப்புக்கொண்டோம். நம் தேசியக்கொடியில் எந்தவிதமான சக்கரம் இருக்க வேண்டும்? அசோகச் சக்கரம் எங்கள் சிந்தனையை மையமிட்டது. அசோகச் சக்கரம் இந்தியாவின் பழம்பெரும் பண்பாட்டின் சின்னம்.

இந்திய மக்களாகிய நாம் அனைவரும் காலம்காலமாக எதற்காகப் பாடுபட்டுவந்தோமோ அதைச் சித்தரிக்கும் சின்னம். நான் உங்கள் முன்பாக இந்தத் தீர்மானத்தை மட்டுமன்றி, நம் தேசியக்கொடியையும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

இந்தியாவின் முதல் தேசியக்கொடியை 1947 ஆகஸ்ட் 16 அன்று டெல்லி செங்கோட்டையில் அன்றைய பிரதமர் நேரு ஏற்றினார். அதனைத் தொடர்ந்து 16 ஆண்டுகள் அக்கொடியை ஏற்றிச் சிறப்பித்த பெருமையும் அவருக்கு உண்டு.

- ஆ.கோபண்ணா, தேசிய முரசு ஆசிரியர்
தொடர்புக்கு: desiyamurasu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்