முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இந்த ஓராண்டில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்ந்த அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தது? நிறை, குறைகள் என்னென்ன? செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து சற்றே விரிவாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி.
“திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் உலகளவில் கரோனா தொற்று தீவிரமாக இருந்தது. செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளை பெரும் தொகைக்கு வாங்கிக் கொண்டு ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி தராத காலக்கட்டம். தொழில்களில் பலத்த சேதம், பொருளாதாரப் பற்றாகுறை. அதேவேளையில், மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்துக் கொண்டிருந்தது. இந்தச் சூழலில்தான் திமுக பதவியேற்றது. பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய இரண்டாவது அலையை திமுக அரசு சிறப்பாகவே கையாண்டது.
கடந்த அதிமுக ஆட்சியை மத்திய பாஜக அரசு தனக்கு சாதகமாகவேப் பயன்படுத்தி வந்தது. ஆனால், திமுக அரசோ பாஜகவுக்கு கருத்தியல் சார்ந்து எதிரான நிலைபாடு கொண்ட அரசு என்பதால், திமுக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை மத்திய அரசு கொடுத்தது. ஒவ்வொரு துறையிலும் பாஜகவின் தலையீடு இருந்தது. தற்போதுவரை அதனைத் தொடர்கிறார்கள். இந்தச் சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மூலமாகவும் நெருக்கடிகளை திமுகவுக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
இதன் பின்னணிக்குள்தான் திமுகவின் ஆட்சி வந்திருக்கிறது. இதில் முதல்கட்டமாக கரோனா நிவாரணமாக 4,000 ஆயிரம் ரூபாயை, இரு தவணைகளாக மக்களுக்கு வழங்கினார்கள். திமுகவின் ஆட்சியில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கான இலவசத் திட்டம். கடும் நிதி நெருக்கடியில்தான் இந்த திட்டத்தை திமுக நிறைவேற்றியது. பெண்கள், குழந்தைகள், சுகதாரத் துறை சார்ந்து பல ஆக்கபூர்வமான திட்டங்களை திமுக அறிமுகப்படுத்தி இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் வரி குறைக்கப்பட்டது. கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவை எல்லாம் நிச்சயம் பாராட்டக் கூடியவை.
» திமுக அரசு @ 1 ஆண்டு | சூழலியல் - ‘3 இயக்கங்கள் அட்டகாசம்... ஆனால், அந்த ஹைட்ரோ கார்பன்?’
மதச்சார்பற்ற அரசியல் நிலைபாடு: மதச்சார்பற்ற அரசியல் நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருந்திருக்கிறார்கள். இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, மாநில அரசின் உரிமைகள் பறிப்பு , நீட் தேர்வு... இவற்றுக்கு எதிரான ஓர் அழுத்தமான எதிர்ப்பை திமுக அரசு தொடர்ந்து வருகிறது. மத்திய அரசு கொள்கை ரீதியாக எவ்வளவு பழிவாங்கினாலும், திமுக அரசு கொள்கை மீது உறுதியாக இருக்கிறது. தமிழகத்திலுள்ள பிரதான எதிர்கட்சியான அதிமுகவை ஆஃப் செய்துவிட்டு பாஜகவும், அதன் தலைவரான அண்ணாமலையும்தான் தற்போது முன்னிறுத்தப்பட்டுகிறார்கள். இதனை நாம் அனைவரும் கவனிக்க வேண்டும். பாஜகவுக்கு தமிழகத்தில் என்ன இடம் என்று அனைவருக்கும் தெரியும். அவ்வாறு இருக்கையில் அந்தக் கட்சி தொடர்ந்து அதிகாரத்தின் மூலம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
மாநில மக்களுக்கு கொடுக்க வேண்டிய எந்த நிதியையும் வழங்காமல், மாநில அரசின் உரிமையையும் பறிந்துக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசை கடுமையான பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்ற வேலையை பாஜக செய்து வருகிறது.
தமிழை வளர்த்த ஆதினங்கள்... அரசுக்கு எதிராக - தமிழகத்தைப் பொறுத்தவரை ஆதினங்கள் என்பவை தமிழை வளர்பதற்காக இருந்தன. ஆனால் தற்போது பட்டினப் பிரவேசத்தை சுட்டிக் காட்டி அரசாங்கம் இந்து சமயத்தை தாக்குகிறது என்று மதுரை ஆதினம் குற்றம் சுமத்துகிறார். இவை எல்லாம் பொய்யான - கடினமான குற்றச்சாட்டுதான். தமிழகத்தில் வதந்திகள் மூலம் மதவெறி அரசியலை உண்டாக்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், திமுக ஆட்சி மதச்சார்பற்ற அரசியலையும் கைவிடாமல் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கண்மூடித்தனமாக எந்தக் கட்சியையும் ஆதரிக்க மாட்டோம். இந்தக் காலக்கட்டத்தில் திமுக அரசால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தது அதிமுக ஆட்சியில்தான். அதே எடப்பாடி பழனிசாமி தற்போது திமுக ஆட்சியில் நடந்த லாக் அப் மரணம் குறித்து விமர்சிக்கிறார். இதைப் பற்றி எல்லாம் பேச அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. அதிமுக ஆட்சியில் காவல்துறை மக்களுக்கு எவ்வளவு விரோதமாக இருந்ததோ, அவ்வாறுதான் திமுக ஆட்சியிலும் உள்ளது. காவலர்கள் மாறவில்லை. விக்னேஷ் வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு காவல் துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது நிச்சயம் வரவேற்க கூடியது. காவல்துறை அதிகாரிகளை பாதுகாத்தால் திமுக அரசுக்கு கெட்ட பெயர்தான் உண்டாகும்.
இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது: போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு பழைய ஓய்வுதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அவை, நிறைவேற்றப்பட வேண்டும். `தாலிக்கு தங்கம் திட்டம்’ போன்ற எந்தத் திட்டமும் நிறுத்தப்படக் கூடாது. இதனைத் தொடர அரசு பரிசீலிக்கலாம்.
வேலைவாய்ப்பு தேவை: இறுதியாக, தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்கப்படவில்லை என்றால், அவர்கள் சாதி - மதத்துக்குப் பின்னால் சென்றுவிடுவார்கள். ஆகவே, இதனைத் தடுக்க நிபுணர்களுடன் கலந்தாய்வு செய்து திமுக அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மாநில அரசு துறைகளில் வேலை வாய்ப்புகளை உண்டாக்க வேண்டும்.
உழைப்பைக் குறைந்த விலைக்கு வாங்கும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது. ஆகவே, மக்களின் வாழ்வாதாரமான வேலை வாய்ப்புகளை உண்டாக்கும் புதிய திட்டங்களை கொண்டுவர வேண்டும். பெண்களுக்கு கூடுதலாக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அரசு வாகன ஓட்டுநர் தேர்வுக்கு பெண்களைத் தேர்வு செய்யலாம். தமிழகத்தில் நிறைய பெண்கள் வாகன ஓட்டுநர்களாக உள்ளனர். இதனையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் உழைப்பு சார்ந்த அரசு பணிகளை உருவாக்கவும், அதற்காக திட்டமிடவும் வேண்டும். நீர் நிலைகளை பெரிய நிறுவனங்களும் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செயல்பட்டால், மக்கள் இன்னும் கூடுதலாக அரசுடன் நெருக்கமாக இருப்பார்கள். அரசுடனும் மக்கள் துணை நிற்பார்கள்.”
தொகுப்பு: இந்து குணசேகர்
தொடர்புக்கு: indumathu.g@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago