நாட்டார் வழக்காற்று வகைமைகளில் ஓவியம், மருத்துவம், மரபு சார்ந்த தொழில்நுட்பம், கைவினைக்கலை, சுடுமண் சிற்பம் செய்தல் என்பன பற்றிய செய்திகள் பெருமளவில் சேகரிக்கப்படவில்லை, கதைப்பாடல், வாய்மொழி மரபு வழிபாடு போன்ற வகைமைகளைப் பற்றி வந்த ஆய்வுகளை ஒப்பிடும்போது, ஓவியம் முதலானவை பற்றிய ஆய்வு நூல்கள் மிகக் குறைவு என்றே சொல்லலாம்.
நாட்டார் விளையாட்டுகள் பற்றி ஓரளவு சேகரிக்கப்பட்ட செய்திகள் நூல்களாக வந்தாலும் தமிழகத்தில் வட்டார அளவில் நடந்திருக்கும் கள ஆய்வு முயற்சிகள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் கணிசமான அளவுக்கு ஆய்வு நடந்திருக்கிறது. ஆனால், இவை எல்லாமே தென்மாவட்ட விளையாட்டுகள் பற்றியவை.
நாட்டார் வழக்காறு என்னும் துறை தனியாக உருவாகும் முன்பே தேவநேயப் பாவாணர் நாட்டார் விளையாட்டுகள் பற்றி செய்திகள் சேகரித்து ஆராய்ந்து நூல் வெளியிட்டுள்ளார் (1952). இவரைத் தவிர, நவராஜ் செல்லையா (1962), பாலசுப்பிரமணியம் (1980), பிச்சை (1983), குமரி அமுதன் (2015) உள்ளிட்டோர் நிறையவே தகவல்கள் சேகரித்து நூல்களாக வெளியிட்டிருக்கிறார்கள். 300-க்கும் மேல் தமிழகத்தில் நாட்டார் விளையாட்டுகள் பற்றி இதுவரை வெளியான நூல்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுசெய்த ஒருவர் நாட்டார் விளையாட்டுகளின் எண்ணிக்கை 300-க்கும் மேல் இருக்கலாம் என்கிறார். தேவநேயப் பாவாணர் விளையாட்டை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் விருப்பப்படி ஆடுவது விளையாட்டு என்று அவர் விளக்கம் தருகிறார் (விளை=விருப்பம், ஆட்டு=ஆட்டம்). சிறுவர்களிடம் உருவான விளையாட்டுகள் இளைஞர்களிடம் சென்றிருக்க வேண்டும் என்று பாவாணர் ஊகிக்கிறார்.
பயன்பாட்டுத் தன்மை : நாட்டார் விளையாட்டுகளில் மிகச் சிலவற்றின் அவசியத்தை அறியும் முன்பு இவற்றின் பொதுப் பண்பாட்டையும் பயன்பாட்டையும் அறிதல் அவசியம். நாட்டார் விளையாட்டுகள் எல்லாமே பொழுதுபோக்குக்காக மட்டும் நிகழ்வதில்லை. எல்லா விளையாட்டுகளுக்கும் ஒரு நோக்கம் உண்டு. விளையாட்டுகளின் மூலம் குழந்தைகள் சமூகவயமாகும் வாய்ப்பு உருவாகிறது. அதனால், குழந்தைகளுக்கு ஆளுமைப் பண்பு ஏற்படுகிறது. விளையாடும்போது மொழிவழி உரையாடல், சமூக ஊடாட்டம் இரண்டுமே நிகழ்கின்றன. விளையாட்டின்போது எல்லோரும் சமம் என்னும் நிலை தானாக ஏற்படுகிறது. சிறுவர் விளையாட்டுகளின்போது வாய் திருத்தப் பாடல்கள் பாடப்பட்டன. "ஐ பை அரைக்கப் பக்கா நெய் வெள்ளக்காரன் கப்பலிலே தீயக் கொளுத்தி வை" என்ற பாட்டு மிக அண்மைக் காலத்தில்கூட சிறுவர்களால் பாடப்பட்டது.
வயது, பால் வேறுபாடு: தமிழகத்தின் விளையாட்டுகள் எல்லாமே ஊருக்கு ஊர் வேறுபடுகின்றன. ஒரே விளையாட்டு பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவது மட்டுமல்ல விளையாடுபவர்களின் வயது, பால் ஆகியவற்றின் அடிப்படையிலும் வேறுபடுகிறது. சிறுவர்கள் விளையாடும் சில விளையாட்டுகளைச் சிறுமிகள் விளையாட அனுமதிக்க மாட்டார்கள். பழைய பிள்ளைத்தமிழ் இலக்கியம்கூட விளையாட்டை ஆண்-பெண் என்று வேறுபடுத்திக் கூறுவது அன்றைய நடைமுறையின் பிரதிபலிப்புதான். கபடி விளையாட்டைச் சில கல்லூரிகளில் பெண்கள் விளையாடக் கூடாது என்று முன்பு சொன்னார்கள். இப்போது நிலை வேறு. பெண்கள், ஆண்கள் என எல்லோரும் கபடி விளையாடுகிறார்கள். இது பெண்ணுரிமையால் ஏற்பட்ட மாற்றம்.
மரக்குரங்கு: ஐம்பதுகளில்கூட நாட்டார் விளையாட்டுகள் வயதின் அடிப்படையில்தான் விளையாடப்பட்டன. தாழ்வான கிளைகள் கொண்ட மரங்களில் சிறுவர்கள் ஏறி விளையாடும் விளையாட்டு மரக்குரங்கு. மரங்களில் இலை தழைகளை வெட்டும் காலத்தில் ‘தள்ளும் புள்ளும்’ அல்லது ‘கிட்டிப்புள்’ என்ற விளையாட்டு விளையாடப்பட்டது. இதற்குக் காரணம் இந்த விளையாட்டுக்குத் தேவைப்படும் மரக்குச்சிகள் அப்போதுதான் கிடைக்கும். கடற்கரைப் பகுதிகள், மலை சார்ந்த பகுதிகள், விவசாய நிலம் சார்ந்த பகுதிகள் போன்றவற்றில் விளையாடும் விளையாட்டுகள் உண்டு. இவற்றில் பலவற்றையும் இன்று மீட்டெடுக்க முடியாது.
நாடகத்தன்மை: நாட்டார் விளையாட்டுகளில் நாடகத் தன்மை கொண்ட விளையாட்டுகள் சிலவற்றை அருட்பணி பிரிட்டோ விரிவாக ஆராய்ந்துள்ளார். சில விளையாட்டுகளை மீட்டெடுக்கலாம் என்று அவர் கூறுகிறார். உதாரணத்துக்கு, ‘ஒரு குடம் தண்ணீ ஊத்தி ஒரு பூ பூத்ததாம்’ விளையாட்டு, கோழிக் குஞ்சு விளையாட்டு, வாழைக்கும் வாழைக்கும் தண்ணீர் ஊற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கூறலாம்.
‘ஒரு குடம் தண்ணீ ஊத்தி ஒரு பூ பூத்ததாம்’ என்ற விளையாட்டில் 10 சிறுமிகள் கலந்துகொள்வார்கள். இந்த விளையாட்டின் தொடக்கத்தில் இரண்டு சிறுமிகள், இரு கைகளைக் கோத்துத் தோட்டத்தை உருவாக்குவார்கள். பூப்பறிக்கச் செல்வதான ஒரு காட்சி, காவலருடன் மோதுதல், நீண்ட உரையாடல் இப்படியே இந்த விளையாட்டு போகும். இந்த விளையாட்டில் உரையாடல் பகுதியில் சில மாற்றங்களைச் செய்து, பள்ளிச் சிறுமிகளை விளையாட வைக்கலாம். சூழல் விழிப்புணர்வு, பெண்கள் உரிமை தொடர்பான பல செய்திகளை இந்த விளையாட்டின் மூலம் கொண்டுவரலாம். உலகின் பிற நாடுகளில் நாட்டார் விளையாட்டுகளையும் கலைகளையும் சமூக விழிப்புணர்வுக்கும் தேர்தலுக்கும் பயன்படுத்தும் முறை உள்ளது. தமிழகத்தில் மிக அண்மைக் காலத்தில் இந்த புரிதல் வந்திருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக சேவல் சண்டை விளையாட்டை மாதிரிக்காக எடுத்துக்கொண்டார்களாம். தேர்தலில் போட்டியிட்ட இருவரின் சார்பாக பரப்புரையாளர் இரண்டு பேர் சேவல் முகம் அணிந்துகொண்டு சண்டையிடுவார்கள். நடுவர் அமெரிக்க அதிபரின் முகமூடியை அணிந்திருப்பார். அவர் சேவல் சண்டையில் தோற்றவரையே வெற்றி பெற்றவராக அறிவிப்பார். ஆனால், பார்வையாளர்கள் விட மாட்டார்கள்.
கிளித்தட்டு: இப்போது மீட்டெடுத்துப் பரவலாக்கப்பட வேண்டிய ஒரு விளையாட்டு கிளியாந்தட்டு அல்லது கிளித்தட்டு. இது குறித்த விரிவான செய்திகளைப் பேராசிரியர் ஜெகதீசன் சேகரித்திருக்கிறார். கிளித்தட்டு தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் கேரளத்தின் தென்பகுதியிலும் 80-களில்கூட வழக்கில் இருந்தது. இந்த விளையாட்டு 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் சித்தூர் என்ற ஊரில் தென்கரை மகாராஜன் கோயில் இருக்கிறது. இது மனிதக் குடியிருப்பு இல்லாத ஊர். இவ்வூர்க் கோயிலின் எதிரே ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு பெரிய பாறையில் கிளியாந்தட்டு வரைபடம் பெரிய அளவில் உள்ளது. இந்த வரைபடம் தொடர்பான வாய்மொழிக் கதை 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. வள்ளியூர் அருகே வடலிவிளை என்ற ஊரில் இருந்த ஒரு சமூகம்சார் கொள்ளையன் செம்புலிங்கம் என்பவன், 1896-ல் கிளித்தட்டு விளையாடியதாக ஒரு சிந்து பாடல் கூறுகிறது. இந்த சிந்து மேலும் ஒரு செய்தியைக் கூறும். நாட்டார் தெய்வ விழாக்களில் இரவில் கிளித்தட்டு விளையாடுவதற்குச் சன்மானம் கொடுத்து இளைஞர்களை அழைப்பார்களாம்.
கிளியாந்தட்டு விளையாடுவதற்குப் பரந்த இடம் வேண்டும். இதன் ஆடுகளம் 105 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் உடையதாக இருக்க வேண்டும். ஆடுகளத்தைச் சுற்றியும் இடம் வேண்டும். கபடியில் இரண்டு அணிகள் மோதுவது போன்றதுதான் இங்கும். கிளித்தட்டு விளையாட்டில் 14 பேர் பங்குகொள்வார்கள். ஒரு அணியில் ஏழு பேர். ஒவ்வோர் அணிக்கும் அணித் தலைவர் உண்டு. உறுப்பினர்களுக்குக் கிளி என்று பெயர். விளையாட்டை ஆரம்பிப்பதற்கு நாணயத்தைத் தூக்கிப்போட்டு பூவா தலையா பார்க்கும் முறை இதிலும் உண்டு. இந்த விளையாட்டை விளையாடியவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டிக்கொள்ளலாம். கல்லூரிகளில் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தலாம்.
நாட்டார் கலையை நவீன நாடக அரங்குக்கு ஏற்ப மாற்றியமைத்து மேடையிலே ஏற்றுவது போன்றதுதான் விளையாட்டை மாற்றுவதும். அழிந்துகொண்டிருக்கும் நாட்டார் கலைகளை மீட்பதுபோல் நாட்டார் விளையாட்டுகளையும் மீட்க வேண்டும்.
- அ.கா.பெருமாள், நாட்டாரியல் ஆய்வாளர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago