முகங்கள் 2021 | சீமான் முதல் அண்ணாமலை வரை - நெட்டிசன்களின் 'கன்டென்ட்' கொடையாளர்கள்!

By பாரதி ஆனந்த்

தமிழக அரசியல் களம் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் வெகுவாக மாறியிருக்கிறது. 'அதிமுக இரும்புக் கோட்டை'. அப்படித்தான் ஜெயலலிதா இருக்கும்போது அழைப்பார். அவர் இருக்கும்போது இத்தனை முகங்கள் பேட்டியளித்து நாம் பார்த்திருந்ததில்லை. ஆனால், அவரின் மறைவுக்குப் பின் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது தொடங்கி மீண்டும் இரண்டு கைகள் இணைந்தது, பின்னர் பாஜக உட்புகுந்தது, ஜெயக்குமார் தொடங்கி ராஜேந்திர பாலாஜி வரை ஆளுக்கொரு மூலையில் பேட்டி கொடுப்பது என நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லை. அதிமுக கோட்டையில் ஆயிரம் ஓட்டைகள் என விமர்சனங்கள் எழும் அளவுக்கு அதன் தன்மையே மாறிப்போனது.

ஒரு பேரியக்கத்தின் ஓய்வறியா தலைவர் நிரந்தர ஓய்வு கொண்ட பிறகு திமுகவிலும் சலசலப்புகளுக்குப் பஞ்சமில்லாமல்தான் ஆரம்ப நாட்கள் தொடங்கின. அழகிரி மீண்டும் வருவாரா, தங்கத் தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி என வரிசைகட்டி அதிமுக முகங்களாக இருந்தவர்களை கட்சிக்கு இழுத்தல், கட்சியில் எடுத்த எடுப்பிலேயே இளைஞரணிச் செயலாளராக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், திமுகவில் ஓரங்கட்டப்படுகிறாரா துரைமுருகன் என்ற பேச்சு எனப் பல வகையில் திமுகவின் போக்கும் மாறிப்போய்தான் இருந்தது.

'இப்படிப் பேச முடியுமா?' என்றளவுக்கு அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ தொடங்கி பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் தொடங்கி இப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை வரை பேசத் தொடங்கிவிட்டனர். சிவப்பு விளக்கு பிடித்தும் நிற்காத ரயில் போல கட்டுப்பாடுகளற்ற பேச்சுக்களுடன் களமாடும் சீமான். போதாதற்கு தொலைக்காட்சி சேனல் தலைமைகளின் நகர்வு முதல் கட்சிப் பேச்சாளர்களின் அந்தரங்கம் வரை எட்டிப்பார்க்கும் யூடியூபர்கள் என தமிழக அரசியல் களம் மாறிக்கிடக்கிறது.

இந்த மாற்றங்கள் சமூக வலைதளங்களே கதி எனக் கிடக்கும் நெட்டிசன்களுக்கும் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதனாலேயே சீமான் முதல் அண்ணாமலை வரை நெட்டிசன்களின் 'கன்டென்ட்' கொடையாளர்கள் என்று அன்போடு அழைக்கப்படுகிறார்கள். கடந்த மே 2021 சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கியதிலிருந்து இன்று வரை இந்த 'கன்டென்ட்' கொடையாளர்கள் அளித்த கொடையை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

ஸ்டாலினின் 'கிரவுட் பாத்' உத்தி! - பெரிய தலையில் இருந்தே ஆரம்பிக்கலாம். கடந்த பிப்ரவரியில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் வியூகத்தை அரங்கேற்றத் தொடங்கிவிட்டார். திமுகவும் ஐபேக் குழுவின் பரிந்துரைகளும் தான் அன்றாட ஹாட் டாபிக்காக இருந்தன. (ஐபேக் என்பது திமுகவுக்கு தேர்தல் உத்தி வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோரின் நிறுவனம்). ஸ்டாலினின் பிரச்சாரக் களங்கள் கருணாநிதியின் களத்தைப் போல் முற்றிலும் பேச்சால் வசீகரிக்கும் களமாகவும், முற்றிலும் ஜெயலலிதாவின் ஹைடெக் வேன் பிரச்சாரமும் போல் இல்லாமலும் மாறுபட்டிருந்தது. அங்கிருந்தே நெட்டிசன்களுக்கு 'கன்டென்ட்' கிடைக்கத் தொடங்கிவிட்டது.

கவனம் பெற்ற கிரவுட் பாத்... பிரச்சாரக் களங்களுக்குச் சென்ற ஸ்டாலின் மக்களோடு மக்களாக சாலையில் இறங்கி நடப்பது. அவர்களுடன் செல்ஃபி எடுப்பது, கை குலுக்குவது, கூட்டங்களில் கலந்துரையாடுவது, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலம் புகார் பெட்டி வைத்து மனுக்களைப் பெற்றது என அத்தனையிலும் அப்ளாஸ் அள்ளினார்.

பிரச்சாரக் களத்தில் அவருடைய புதிய உத்திதான் கிரவுட் பாத். பொதுவாக வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் பொது இடங்களில் மக்களுடன் இதுபோன்று நெருங்கிப் பழகும் நிகழ்வுகளில் ஈடுபடுவதுண்டு. இதனை அங்கே கிரவுட் பாத் (Crowd Bath) என்றழைக்கின்றனர். இவ்வாறாக மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவது அரசியலுக்கு அவசியம் என்றும் கருதுகின்றனர். உதாரணத்துக்கு அமெரிக்க அதிபரை மிஸ்டர் பைடன் என்றுகூட மக்கள் அழைக்க முடியும். இங்கு போல், ராஜகுலோத்துங்க-வை விட்டுவிட்டான் மன்னா பாணியில் பயப்படத் தேவையில்லை. இத்தகைய கிரவுட் பாத் முறையை வடக்கே ராகுல் காந்தி ஓரளவுக்கு இயல்புக்குக் கொண்டுவந்திருந்தாலும் கூட தெற்கே அண்மைக்கால அரசியலில் ஸ்டாலின்தான் நடைமுறைப்படுத்தியிருக்கிறார். இதற்கு தேர்தலில் கணிசமான ஓட்டு விழுந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

முதல்வரானப் பிறகும் கூட சைக்கிளிங் போகும்போது மக்களுடன் உரையாடுவது, புகைப்படம் எடுத்த்க் கொள்வது என ஐரோப்பிய அரசியல் ஸ்டைலை ஸ்டாலின் பின்பற்றி வருகிறார்.

மதுரை எய்ம்ஸ் செங்கல்.. கத்துக்குட்டியா உதயநிதி?! - இதுதான் முதல் அரசியல் களம். அதுவும் எடுத்த எடுப்பிலேயே சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு. 2012-ல் சினிமாவில் நாயகன், 2021-ல் சட்டப்பேரவை உறுப்பினர். எல்லாவற்றிற்கும் குடும்ப அரசியல்தான் காரணம் எனத் தேர்தல் நேரத்தில் திமுக வறுத்தெடுக்கப்படக் காரணமாக இருந்தவர்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுகவின் கோட்டை. ஜெ.அன்பழகன் கரோனாவால் இறக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர்தான் அந்தத் தொகுதியில் போட்டியிட்டிருப்பார். ஆனால், அவர் மறைவுக்குப் பின் ஐபேக் குழு அந்த இடத்தில் உதயநிதியை ஃபிட் செய்தது. அவரும் பிரச்சாரத்துக்குச் சென்றார். சினிமா வசனம் போல் அல்ல தேர்தல் பிரச்சாரம் என்பதை அவரது ஆரம்ப காலப் பேச்சுகள் அப்பட்டமாகக் காட்டின. அவரது பேச்சின் நடையும் சிரிப்பை மூட்டுவதாகவே இருந்தது. இதனால் உதயநிதி தேர்தலில் கத்துக்குட்டி என்ற வகையறா மீம்ஸ்கள் பரவின. ஆனால், வல்லவனுக்குக் கல்லும் ஆயுதம் என்று மதுரையில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஒரு செங்கல்லை உயர்த்திப் பிடித்துப் பேசினார்.

"இதுதாங்கம்மா மதுரை எய்ம்ஸ். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். 'இதுதான் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை. அங்கு போனபோது இருந்தது. கையோடு எடுத்து வந்துவிட்டேன்" எனக் கூறி ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார். அப்புறம் அவரது பிரச்சாரம் டாப் கியரில் சென்றதோடு எய்ம்ஸ் செங்கல் நெட்டிசன்களின் கைகளில் 'கன்டென்ட்டாக' சிக்கிவிட்டது.

அந்தப் பிரச்சாரத்தின் தாக்கத்தால், மதுரையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் மதுரை எய்ம்ஸ் பிரிக்ஸ் என்று லாரிக்குப் பெயர் வைத்தார். அந்தப் புகைப்படமும் இணையத்தில் வைரலானது. தேர்தல் களத்தில் கத்துக்குட்டி என்ற விமர்சனத்தோடு ஆரம்பித்தவர், இன்று கோவை மண்டல திமுக பொறுப்பாளரா? என்ற கேள்விக்குறியுடன் நெட்டிசன்களுக்கு கன்டென்ட் கொடுத்து வலுவாக நிற்கிறார்.

எடுபடாத எடப்பாடி! - ஆட்சியில் அமர்ந்தபோது இருந்த கெத்தை தேர்தல் நெருங்க நெருங்க எடப்பாடியார் இழந்து வந்ததை ஸ்டாலினின் பிரச்சாரங்களைக் குறிப்பிட்டு நெட்டிசன்கள் எடப்பாடியாருக்கு கேள்வி வைத்ததில் இருந்தே காண முடிந்தது. ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தைத் தொடங்க தொலைக்காட்சிகள் எல்லாம்
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே
உறங்கிட மறந்த இருவிழி இருவிழி
சேவையே வாழ்வேன்னு ஒருவழி ஒருவழி
மக்கள் முதல்வரின் அன்பு தலைமையில்
வெற்றி நடைபோடும் தமிழகமே
வெற்றி நடைபோடும் தமிழகமே
என்று அலறிக் கொண்டிருந்தன.

அப்படியே அதை எடுத்து அழகாக எடிட் செய்து வீடியோ மீம்ஸ்களாக வெளியிட்டனர் நெட்டிசன்கள். வேட்டி விளம்பரம் என்று கலாய்த்தவர்களும் உண்டு. ஆட்சியைப் பிடிக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறிய வாக்கு மட்டுமே பலிக்காமல் போனது.10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதவர்களை எப்படி பிரச்சாரக் களத்தில் எதிர்கொள்வது என்பது பற்றி இன்னும் சிறப்பாக எடப்பாடி ஹோம் ஒர்க் செய்திருக்க வேண்டும் என்பதும் அரசியல் விமர்சகர்களின், நெட்டிசன்களின் கருத்து.

வெற்றி நடைபோடும் தமிழகமே.. போலவே ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு பாடலும் கூட நெட்டிசன்களின் ஆதரவையும், விமர்சனத்தையும் பெற்று சோஷியல் மீடியா டாக்காக இருந்தது.

கவனம் ஈர்த்த தேசிய முகம்: சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இப்படியாக பிரதான தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் பரபரத்துக் கொண்டிருக்க தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே பெற்று வரவேற்பை அள்ளியவர்தான் ராகுல் காந்தி.

சென்னையில் கல்லூரி மாணவியிடம் என்னை ராகுல் என்றே அழைக்கலாம் எனக் கூறிப் புன்னகைக்க வைத்தது, கன்னியாகுமரியில் மாணவிகள் மத்தியில் தண்டால் எடுத்தது, தூத்துக்குடியில் மீனவர் சமுதாயப் பெண்கள் மத்தியில் டாஸ்மாக் பிரச்சினைகளைப் பேசியது, யூடியூப் பிரபல சமையல் கலைஞர்களுடன் சேர்ந்து சமைத்து உணவு உண்டது என்ற காங்கிரஸுக்குத் தேர்தலில் வெற்றிக் கனிக்கு ஆழமான அஸ்திவாரம் போட்டுச் சென்றார் ராகுல் காந்தி. மோடி என்னவோ பப்பு என்று அழைத்துக் கொண்டே இருந்தாலும் கூட 2021-ல் தமிழக அரசியலில் நேர்மறையான ஃபீட் கொடுத்து சமூக வலைதளங்களின் நாயகராக இருந்தவர் ராகுல் காந்தி மட்டுமே என்றால் அது மிகையாகாது.

50% பெண் வேட்பாளர்கள்.. ஜொலித்த சீமான்! - சீமான் என்றாலே சர்ச்சைப் பேச்சுதான் முதலில் நினைவுக்கு வந்தாலும் கூட, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே மேடையில் தனது கட்சி வேட்பாளர்களை அனைவரையும் அமர வைத்து அதில் பாதி பெண் வேட்பாளர்கள் என்ற அறிவிப்பால் கைதட்டல்களை அள்ளினார். பெரிய கட்சிகள் எல்லாம் தேர்தலில் பெண்களுக்கு சம உரிமை பற்றிப் பேசினாலும் கூட அதைச் செயல்படுத்திக் காட்டியவர் சீமான்தான். அதுமட்டுமல்லாமல் வேட்பாளர்களை அறிவிக்கும்போது அவர்களின் கல்வித் தகுதியையும் அறிவித்து புதுமை புகுத்தி நெட்டிசன்களுக்கு 'கன்டென்ட்'டை தாராளமாக அள்ளிக் கொடுத்தார். வழக்கம்போல் அவரது தேர்தல் பிரச்சாரங்களில் 'தம்பிகள்' குவிந்து கைதட்டி மகிழ்ந்தாலும் அது வாக்குகளாக மாறவில்லை. அதனாலென்ன என்ற ஸ்டைலில் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பம் எல்லா நல்லாத்தான் இருக்கு ஃபினிஷிங் சரியில்லை என்ற வடிவேலு ஸ்டைலில் தேர்தல் களத்தில் பாராட்டு வாங்கிய சீமான் இப்போது குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். அண்மையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் திமுகவை சங்கி என்று விமர்சித்த வேகத்தில் தன் காலில் அணிந்திருந்த கருப்பு, சிவப்பு நிறத்திலான செருப்பை திடீரென கழற்றி மேடையில் காண்பித்தார்.

அத்துடன் விட்டாரா அவர், தருமபுரியில் நாம் தமிழர் தொண்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு அங்கே இருந்தவர்கள் சின்னப் பையன்கள், மேடையில் நான் மட்டும் இருந்திருந்தால் செருப்பாலேயே அடித்திருப்பேன் என்று கூறி டிரேட் மார்க் சிரிப்பையும் உதிர்த்துள்ளார். சீமான் இந்த ஆண்டு மட்டுமல்ல எந்த ஆண்டு பேசியதாக இருந்தாலும் கூட என்ன சூழலுக்கு வேண்டுமானால் அதைப் பொருத்தி மீம்ஸ் ஆக்குவதும், வீடியோ ஆக்குவதும் நெட்டிசன்களுக்குக் கைவந்த கலை. 2021-ல் மட்டுமல்ல எந்த ஆண்டிலுமே நெட்டிசன்களின் 'கன்டென்ட்' கொடையாளர் சீமான்தான்.

நம்மவரை மறக்கமுடியுமா? - மருதநாயகத்தை மறந்தாலும்கூட தமிழக அரசியல் களத்தில் அதுவும் 2021-ல் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நாம் மறந்துவிட முடியாது. திரை பிரபலம் என்பதைத் தாண்டியும் இவர் ஏதோ நாட்டுக்குச் சொல்ல வருகிறார் என்று மக்களைக் குறுகுறுவெனப் பார்க்க வைத்த ’பிக் பாஸ்’ கமல்ஹாசன். பிரதான கட்சிகளுக்கு நிகராக செலவு செய்து தேர்தலைச் சந்தித்தார். தேர்தலில் அவர் களமிறக்கிய புதுமுகங்களும் கவனம் பெற்றன.

ஆனால் என்ன, அவர் அவ்வப்போது விடுக்கும் அறிக்கைகள்தான் நெட்டிசன்களின் கன்டென்ட். அவர் அறிக்கை விடுத்த மாத்திரத்திலேயே தமிழ் மொழிபெயர்ப்பு என நெட்டிசன்கள் ஆரம்பித்துவிடுவர். ஆக, அவர் ட்வீட்டுக்கு தமிழ் உரை போட்டே சோர்வடைந்துவிட்டது நெட்டிசன்கள் சமூகம். இருந்தாலும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்குக் கடும் சவால்விட்டு கடைசி நிமிடம் அதிர வைத்தபோது யாரென்று தெரிகிறதா என நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டவர்தான் நம்மவர்.

அண்ணாமலை.. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்! - இந்த கேட்டகிரியைச் சேர்ந்தவர்தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. கம்பீரமாக போலீஸ் உடையில் ஐபிஎஸ் அதிகாரியாக வலம் வந்தவர், கர்நாடகாவில் துணை கமிஷனராக இருந்தார். திடீரென்று, "கடந்த வருடம் நான் கைலாஷ் மானசரோவர் சென்றிருந்தேன். அங்கு வாழ்க்கையின் முக்கியவத்துவம் குறித்துக் கண் திறந்துகொண்டது" என்று கூறி ஐபிஎஸ் பதவியைத் துறந்தார். 2019-ல் இது நடந்தபோதும் அவர் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டார். பாராட்டப்பட்டார். எளிமையானவர் என்ற பட்டங்களைப் பெற்றார். ராஜினாமாவுக்குப் பின்னர் ஆடு வளர்ப்பு பற்றிப் பேசி தன்னை விவசாயி என அடையாளப்படுத்தினார். ஆனால், ஐபிஎஸ் பதவியைத் துறந்த ஓராண்டுக்குள் அவர் பாஜகவில் ஐக்கியமானார். அப்போது நெட்டிசன்கள் அவர் மீதான பார்வையை மாற்றினர். தேர்தல் களத்தில் அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விதம் ஒவ்வொன்றும் மீம்ஸ்களாக மாறின.

அண்ணாமலையும் ஆட்டுக்குட்டியும்

அண்ணாமலையைப் பற்றி விமர்சிக்கும்போதெல்லாம் துணைக்கு ஆட்டுக்குட்டியை நெட்டிசன்கள் கூப்பிட அதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் அண்ணாமலை. அண்மையில் பாஜக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு ஒரு ஆட்டுக் குட்டியைப் பரிசாக அளித்தனர். அதை அண்ணாமலை, தனது ட்விட்டரில் பகிர்ந்து "சென்னிமலை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைப் பரிசாகத் தந்திருக்கிறார்கள். ஆஸ்கர் விருது போல மகிழ்ச்சி, அதிலும் கொங்கு மண்டலத்தின் வேளாண் சின்னமாக, நம் பண்பாட்டின் விழுமியமாக நான் ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறேன்!" என்று கூறி ஆட்டுக்குட்டி அட்ராஸிட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். புதுவருடத்தில் அண்ணாமலையிடமிருந்து புதிய கன்டென்ட்டை நெட்டிசன்கள் தேடுவார்களாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்