சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 39: எல்லைகளுக்கு அப்பால் எவரெஸ்ட் தரிசனம்!

By செய்திப்பிரிவு

மயிலாப்பூர் சித்ரகுளத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதியில் நாங்கள் கூடியிருந்தோம். தரிசனம், அர்ச்சனை எல்லாம் முடிந்து மண்டபத்தில் அமர்ந்திருந்தோம். அரைக் கிழங்களும், முழுக் கிழங்களுமாக அதாவது 50 - 70 வயது வரை.

எதிரில் ஓர் இளம் தம்பதி. அனைவருக்கும் காகிதங்களைக் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் சுதர்சனும் சுஜாதாவும். க்ஷேத்ராடனம் எனப்படும் ஆலய தரிசனப் பயணங்களை ஏற்பாடு செய்யும் ஒரு நிறுவனத்தை நடத்திவந்தார்கள். ‘எல்லைகளுக்கு அப்பால்’ என்கிற அழகான பெயர் அந்த நிறுவனத்துக்கு.

எங்கள் குழு, அவர்கள் மூலம் ‘முக்திநாத்’ என்கிற திவ்ய தேசத்துக்குப் போகப் பதிவு செய்தது. அதைப் பற்றின விவரங்களையும், அவசியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளையும் பற்றிக் கூறினார்கள். நான் மருத்துவராக இருப்பதால் நானும் அவர்கள் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகள், அதன் அளவு விவரங்களை விளக்கமாக எழுதிக் கொண்டு வரும்படியும், ஒவ்வாமை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கும்படியும் கூறினேன். முக்கியமாக இந்தத் திவ்யதேசம் இமாலயத்தில், உயரத்தில் இருப்பதால் ‘உயர் ஒவ்வாமை சுகவீனம்’ (altitude sickness) சிலருக்கு வரக்கூடும். அதன் அறிகுறிகள், அதற்குரிய மருந்துகள் பற்றி விளக்கினேன். எதிர்பார்ப்புகளுடன் பிரிந்தோம்.

புறப்படும் நாளன்று விமான நிலையத்தில் எங்களுக்கு அறிவித்த மாதிரி, குறைந்தபட்ச உடைமைகள், கம்பளி ஆடைகள் சகிதம் சந்தித்தோம். டெல்லியை அடைந்து, வேறு விமானத்தில் காத்மண்டுவுக்குப் புறப்பட்டோம். முக்திநாத் நேபாள நாட்டில் உள்ளது என்பதால் பாஸ்போர்ட் அவசியம். ஆனால், இந்தியக் குடிமக்களுக்கு ‘விசா’ என்கிற நுழைவு அனுமதி தேவை இல்லை. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் காத்மண்டுவை அடைந்த அன்று அங்கு ஏதோ உள்ளூர்க் கலவரம். அதனால், ஹோட்டலை விட்டு வெளியே போக வேண்டாமென்று பயமுறுத்தி இருந்தார்கள். பயண நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில வியாபாரிகளை ஹோட்டலிலேயே கடை பரப்பும்படி செய்துவிட்டார்கள். மணிமாலைகளையும், போர்வைகள், கைவினைப் பொருட்களையும் வாங்கி மகிழ்ந்தோம்.

மறுநாள் ‘போக்ரா’ என்கிற ஊருக்குப் போக வேண்டும். விமானத்தில்தான். அது வேனில் காலமாக இருந்தபோதும் காலை 10 மணிக்குப் பிறகு பனி மூட்டத்தின் அபாயம் இருப்பதால் விமானங்கள் 12 மணிக்குப் பிறகு புறப்படாது. அதனால் சீக்கிரமே புறப்பட்டு விமான நிலையத்தை அடைந்தோம். சின்ன விமானம். சுறுசுறுப்பாகச் சாமான்கள் ஏற்றப்பட்டன. நாங்களும் ஏறி அமர்ந்தோம். விமானம் புறப்பட்டது. எங்கு பார்த்தாலும் சிறிதும் பெரிதுமான மலைச் சிகரங்கள். சிலவற்றின் மேலே விமானம் பறந்தது. ஆனால், பெரும்பாலும் தங்கச் சாலையின் குறுகிய தெருக்களில் வளைந்து வளைந்து செல்லும் ஆட்டோ ரிக்ஷா மாதிரி சிகரங்களைச் சுற்றிச் சுற்றிப் பறந்தது. விமானத்தில் நிசப்தம். யாருக்கும் பேச்சே எழவில்லை. சிலரின் வாய்கள் முணுமுணுப்பது தெரிந்தது. ‘மார்க்கபந்து’ ஸ்தோத்திரமாக இருக்கும். நல்ல காலம் அரை மணிக்குள் ‘போக்ரா’ போய்ச் சேர்ந்தோம்.

அங்கே தங்குமிடத்தைச் சுற்றிலும் மலைச் சிகரங்கள், தேவதாரு மரங்கள். ரம்மியமாக இருந்தது. பேச்சிலும் சின்ன சின்ன விளையாட்டிலும் பொழுதைப் போக்கினோம். மறுநாள் காலை அதே மாதிரி சின்ன விமானத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு பயணம். ‘ஜிம்ஸிம்’ என்கிற ஊரை அடைந்தோம். அங்கு நாங்கள் தங்கிய விடுதியை நடத்துபவர்கள் நடுத்தர வயதுத் தம்பதிகள். மிக நன்றாக வரவேற்று உபசரித்தார்கள். அவர்களுடைய மகள் சண்டிகரில் பல் மருத்துவம் படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அங்கு சாப்பிட்டோம். அறையில் பெரிய கண்ணாடி ஜன்னல். வெளியே உயரமாக ‘வெள்ளி மலை’. அன்னபூர்ணா சிகரம் என்று சொன்னார்கள்.

உலகனைத்துக்கும் படியளக்கும் தாயை நினைத்தேன். மறுநாள் விடியலில் என் குழுவில் இருவர் வந்து கம்பளியின் கதகதப்பில் பதுங்கி இருந்த என்னை எழுப்பி ‘வா.. வா.. சீக்கிரம்’ என்று ஜன்னலுக்கு அருகில் இழுத்துப் போனார்கள். வெளியில் அரையிருட்டு. 14,000 அடி உயரமான அன்னபூர்ணா சிகரத்தில், ஆஹா... மணப் பெண்ணின் கன்னம் போல ஒரு இளம் சிவப்பு. பார்த்துக் கொண்டே இருக்கும்போது அது ஆழமாகி ஆரஞ்சு, ‘தகதக’வெனப் பொன் நிறமாகி, பளீரென்று கண்ணைப் பறிக்கும் வெள்ளியாகியது ஆதவனின் முதல் கிரகணத்தில். மறக்க முடியாத அனுபவம். இந்தக் காலமாக இருந்தால் ‘ஆண்ட்ராய்டில்’ வீடியோவாகி இருக்கும். நாங்கள் போனது 2010-ல்.

விடுதியில் வெங்காயம், பூண்டு, மசாலாக்கள் இல்லாத உணவு அளித்தார்கள். சுற்றிலும் ஆப்பிள் தோட்டம். காய்த்துக் குலுங்கி வளைந்திருக்கும் கிளைகள். பழங்களாக வியாபாரத்துக்கு அனுப்புவது மட்டுமின்றி, அவற்றைத் துண்டுகளாகச் சீவி, விதையை எடுத்துவிட்டு வெயிலில் உலர்த்தி விற்பதாகச் சொன்னார்கள். எங்களுக்குத் தின்னக் கொடுத்தார்கள். ஈரம் வற்றியதால் இனிப்பு மிகுந்து மிகவும் சுவையாக இருந்தது. எங்கள் கைகளில் அவை பொட்டலமாகத் திணிக்கப்பட்டன.

மறுநாள் ‘ராணி புவ்வா’ என்கிற ஊருக்குப் பேருந்தில் பயணம். கரடுமுரடான மலைப் பாதையில் உடல் குலுங்கப் பயணித்தோம். கண்டகி நதியைக் கடந்தோம். இதில்தான் சாளக்ராமங்கள் உருவாகின்றன. அவற்றை நாங்கள் போக்ராவிலேயே வாங்கிவிட்டோம்.‘ராணி புவ்வா’வில் ஒரு சத்திரம் போன்று மேலும் கீழுமான விடுதியில் தங்கினோம். வரிசையாகச் சிறு சிறு அறைகள். வராந்தாவின் கோடியில் குளியலறை முதலியவை. இங்கிருந்துதான் முக்திநாத் கோவிலுக்குப் போக வேண்டும். ஏற்றமான மலைப்பாதை. நடந்து போவதானால் முக்கால் மணியிலிருந்து ஒரு மணி நேரம் பிடிக்கும். ஏற முடியுமா என்பது வேறு விஷயம்! இதை ஏற ஒரு சாகசமான ஏற்பாடு (துணிகரமானது என்றுகூடச் சொல்லலாம்!) செய்திருந்தார்கள்.

எப்படித் தெரியுமா?

மோட்டார் சைக்கிளில் ஒரு நேபாளி ஓட்டுநர். பின் இருக்கையில் நாம் அமர்த்தப்படுவோம். ஆம். கால்களை இருபுறமும் தொங்க விட்டுக்கொண்டு, முதுகில் மாணவர்களைப் போல் தொங்கும் பை. அதில் எங்களுக்கு, கோவிலுக்குக் கொண்டு போக வேண்டிய பொருட்கள். ஓட்டுநரை இரு கைகளாலும் பிடித்துக்கொள்ள வேண்டும். ஏழு நிமிடப் பயணம். பாதையின் முடிவில் 5 - 6 படிகள் மாதிரி வெட்டப்பட்டிருந்தது. ஓட்டுநர் நம்மை ஜாக்கிரதையாக இறக்கி, கையைப் பிடித்துப் படிகளில் ஏற்றிவிட்டார். மேலே மீண்டும் சரிவாக ஏறும் பாதை. அங்கு இன்னொரு மோட்டார் சைக்கிளும் ஓட்டுநரும். மீண்டும் பின்னிருக்கையில் அமர்ந்து 7 நிமிடப் பயணம். 500 அடி தொலைவு சரிவாக ஏறும் பாதையின் முடிவில் முக்தி நாதரின் கோவில். மரங்கள், சில கல் பெஞ்சுகள். ஓட்டுநர் என்னை அதில் ஒன்றில் அமர்த்திவிட்டுத் திரும்பிப் போய்விட்டார், அடுத்த சவாரிக்கு. காவி உடுத்திய சிலர் கையை நீட்டித் தருமம் கேட்டார்கள்.

தனியாக மெல்ல ஏறிப் போவதா அல்லது பின்னால் வருபவர்களுக்காகக் காத்து இருப்பதா என்று தயங்கிக் கொண்டிருந்தபோது, இருவர் என்னைப் பார்த்துக்கொண்டே கடந்தார்கள். ‘சாகசப் பயணம்’ செய்யாமல் ஏறி வந்தவர்கள். இள ரத்தம். அவர்கள் நின்று என்னமோ பேசிவிட்டு என்னருகில் வந்தார்கள். ‘‘மாமி... நாங்கள் ரெண்டு பேரும் சென்னையில் ஆடிட்டர்கள். எங்க அம்மா இந்த திவ்ய தேசத்துக்கு வர ரொம்ப ஆசைப்பட்டார்கள். போன வருஷம் நாங்கள் ஏற்பாடு செய்துகொண்டிருக்கும்போது திடீரென்று மாரடைப்பால் போய்விட்டார்கள். அம்மாவைக் கூட்டிண்டு வர முடியலையே என்று ரொம்ப வருத்தம். உங்களைப் பார்த்தால் அம்மா நினைவு வருது. உங்களைக் கையைப் பிடிச்சு கூட்டிண்டு போகலாமா, ஆட்சேபனை இல்லையே?’’ என்றார்கள். பரந்தாமன் அனுப்பி வைத்த வழித்துணையா? உடனே அவர்கள் இருவர் கைகளையும் பிடித்துக்கொண்டு சந்தோஷமாக நடந்து கோவிலை அடைந்தேன்.

அங்கே என் குழுவினர் சிலரைக் கண்டேன். இந்த இளைஞர்களுக்கு நன்றி கூறி ஆசீர்வதித்துவிட்டு உள்ளே போனேன். மெழுகிக் கோலம் போட்டு விளக்கேற்றிவிட்டு சந்நிதியை அடைந்தோம். அங்கு பூசாரி ஒரு பெண்மணி. கோவிலுக்குள் வந்தால் ஒரு மாதத்துக்கு வெளியில் போக மாட்டாராம். இங்கு பகவான் விக்ரகத்தின் பாதத்தில் நாம் தலையை வைத்து வணங்க அனுமதி உண்டு. என் முறை வந்து என் தலை பாதத்தில் படிந்தவுடன் என்னையறியாமல் விம்மி விம்மி அழத் தொடங்கினேன். அடக்க முடியவில்லை. அந்த பூசாரி என் தலையைத் தடவி, ‘‘அழட்டும்.. அழட்டும்.. விடுங்கள்’’ என்று மற்றவரிடம் இந்தியில் கூறினார். சமாதானமாகி பிரசாதம் பெற்று வெளியில் வந்தபோது என் மனம் கழுவித் துடைத்த மாதிரி இருப்பதை உணர்ந்தேன்.

கோவிலுக்கு வெளியில் ஒரு அழகான அமைப்பு. 108 நீர்த்தாரைகள் வழியே நீர் சொரிந்து கொண்டிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக வரிசையைக் கடந்து போக ஒரு வழி. பிடித்துக்கொள்ள இரும்புக் குழாய்களினால் ஆன வேலி. மிகவும் குளிர்ச்சியான நீர் உச்சியில் விழுவதைத் தாங்கிக்கொள்ள பக்தர்கள் ஒரு தடிமனான துணியை மடித்து, சும்மாடுபோல் வைத்துக்கொண்டு கடந்து போனார்கள். அருகிலேயே துடைத்துத் துணி மாற்றிக்கொள்ள ஒரு அறை. நான் வேலிக்கு வெளியிலேயே நடந்து 108 தாரைகளின் நீரை புரோக்ஷனம் செய்துகொண்டேன். மீண்டும் ‘சாகசப் பயணம்’ செய்து விடுதிக்குத் திரும்பினோம். கவனமாக இறங்கிவிட்டேன். ஒரு முதிய பெண்மணி தானாக இறங்க முற்பட்டுக் கீழே விழுந்துவிட்டார். அவருக்கு மருந்து தடவி, மாத்திரை கொடுத்தேன்.

சுதர்சன், சுஜாதா தம்பதியர் சென்னையிலேயே எங்களிடம் கூறும்போது, 'தானம் கொடுப்பதானால், பணத்தைவிடத் தேயிலை, சர்க்கரை, ஊசிகள், நூல் கண்டுகள் இவற்றைக் கொண்டுபோய்க் கொடுங்கள். இவை அந்த மலைப்பிரதேசத்தில் வாங்கக்கூடக் கிடைக்காதவை' என்று கூறியிருந்தார்கள். அதனால், நாங்கள் அவற்றைப் பொட்டலங்களாகக் கட்டி எடுத்துப் போயிருந்ததை தருமம் செய்தோம். ஆசி கூறினார்கள்.

அன்று இரவு சிலருக்கு வாந்தியும் தலைவலியும் ஏற்பட்டது. 'altitude sickness' மருந்துகள் கொடுத்தோம். என்னுடன் அறையில் ஒரு முதிய பெண்மணி தங்கியிருந்தார். அவருக்கு முன்னிரவில் 2 - 3 முறை வயிற்றுப்போக்கும் பிறகு வயிற்றுப் புரட்டலும் ஏற்பட்டது. அவரை ஒதுங்கும் அறைக்கு அழைத்துச் சென்று உதவி செய்து, வயிற்றைக் கட்டுப்படுத்த மருந்தும் கொடுத்தேன். சற்று உறங்கினார். பிறகு என்னை விளித்து முதுகு வலிப்பதையும் கூறினார். நான் அவர் படுக்கையில் அமர்ந்து என் தோளில் சாய்த்து, முதுகைத் தடவிக் கொடுத்தேன். 10 நிமிடங்களுக்குப் பிறகு அவர் தலை தொங்குவதைக் கண்டு திடுக்கிட்டேன். வாயில் சிறிது ரத்தம். உயிர் பிரிந்திருந்தது. இதயத்திலிருந்து செல்லும் முக்கிய ரத்தக் குழாய் வெடித்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம்.

இந்த நிகழ்வை நான் விவரிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. இந்தப் பெண்மணியின் மகனும் மருமகளும் வேறு ஒரு அறையில் தங்கி இருந்தார்கள். அவர்களை உடனே அழைத்தேன். விடுதியின் உரிமையாளரும், சுதர்சன் தம்பதிகளும் உடனே அங்கு வந்து விடுதியில் தங்கியிருக்கும் மற்றவர்களைக் கலவரப்படுத்தாமல் உடனடியாக போலீஸை வரவழைத்தார்கள். வந்த கண்காணிப்பாளர் நான் மருத்துவர் என்று அறிந்து ஒரு கலவரமும் செய்யாமல் பொழுது விடிந்தவுடன் ஊர்திக்கு ஏற்பாடு செய்தார். ‘ஜிம்ஸிம்’-ல் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடலை எடுத்துப்போய் பிரேதப் பரிசோதனைக்கும் உடனே ஏற்பாடு செய்திருந்தார் அந்தக் காவல் அதிகாரி. நானும் கூடப் போனேன். என் அனுமானம் சரியாக இருந்ததால் சுருக்கமாய், சீக்கிரமாய்ப் பரிசோதனை முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதே அதிகாரியின் உதவியுடன் உடலைத் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது, புரோகிதர் உள்பட. அத்தனை தொலைவில் இப்படிப்பட்ட இக்கட்டில் எத்தனை மனிதாபிமானத்துடனும், திறமையுடனும் நிலைமை சமாளிக்கப்பட்டது. அந்த அதிகாரி, அரசு மருத்துவர்கள், முக்கியமாக எதிர்பாராத நிகழ்வைத் திறமையாகக் கையாண்ட சுதர்சன் சுஜாதாவுக்கும் என் ‘சல்யூட்’. இதோடு நிற்காமல் அந்த மகனையும், மருமகளையும் உடனே சென்னைக்கு அனுப்ப ஏற்பாடும் செய்தார்கள். இங்கு ஒன்று சொல்ல வேண்டும். உடலை ஊர்தியில் ஏற்றும்போது, காவி உடுத்திய பண்டாரங்கள் வந்து அம்மணியின் காலைத் தொட்டு ‘முக்தி நாத்தில் முக்தியடைந்த பாக்யசாலி’ என்று கோஷமிட்டார்கள். உண்மைதானே!

மறுபடியும் பேருந்தில் பயணம் செய்து ‘ஜிம்ஸிம்’-மை அடைந்தோம். இந்தப் பயணத்தின்போது என் அருகில் அமர்ந்தவர் ஷீரடி சாயி பாபாவின் மகிமைகளைக் கூறும் கதைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார். அவர் ஒரு வங்கி அதிகாரி. நாங்கள் காத்மண்டுவை அடைந்தபோது அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஹோட்டலிலிருந்து விமான நிலையத்துக்குப் போக மட்டும் ‘பாஸ்’ வாங்கினார்கள். திட்டமிட்டபடி பசுபதி நாதர் கோயிலுக்கும், ஜலத்தில் சயனித்துக் கொண்டிருக்கும் நீல நாராயணனையும் தரிசிக்க முடியாதது ஏமாற்றமாக இருந்தது.

எவரெஸ்ட் சிகரத்தின் மேலும் சுற்றிப் பறக்க ஒரு சுற்றுலா உண்டா என்று கேட்டோம். உடனே அந்தப் பயண நிறுவன ஆபீஸை முற்றுகை இட்டோம். அது ஹோட்டலுக்கு உள்ளேயே இருந்தது. காலை 8 மணியிலிருந்து 15 நிமிட இடைவெளியில் இரு விமானங்கள் புறப்படும். பயணம் சுமார் 30 நிமிடங்கள் நீடிக்குமாம். ஆனால், பனி மூட்டம் ஏற்பட்டால் பயணம் ரத்து செய்யப்பட்டுப் பணம் வாபஸ் செய்யப்படுமாம். 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு. பதிவு செய்துகொண்டோம். விமான நிலையத்துக்குப் போக ‘பாஸ்’ இருந்ததால் நாங்கள் சீக்கிரமாகவே போனோம். நான் இருந்த குழுவினர் 8.45 மணிக்குப் புறப்பட்டோம்.

சின்ன விமானம். வித்தியாசம் என்னவென்றால் அந்த விமானத்தில் வலது பக்கம் மட்டும் இருக்கைகள் இருந்தன. எவரெஸ்ட் சிகரத்தை விமானம் சுற்றிப் போகும்போது, பலகணிகள் வழியாக நன்றாகப் பார்க்க முடிந்தது. அது மட்டுமின்றி, விமானப் பணிப்பெண்கள் ஒவ்வொருவராக விமானத்தின் முன்புறக் கண்ணாடி வழியாக எவரெஸ்ட்டைக் காண்பித்தனர். மற்ற இமாலயச் சிகரங்களும் தென்பட்டன. நன்கு வெளிர் வாங்கியிருக்கும் தினமாக இருந்தால் 15 சிகரங்கள் தென்படுமாம். நாங்கள் 7 சிகரங்களைத்தான் பார்க்க முடிந்தது. மற்றவை மேகங்களால் சூழப்பட்டு இருந்தன.

நாங்கள் விமானத்தில் இருந்து இறங்கும்போது ‘இவர் எவரெஸ்ட்டைக் கண்ட பயணி’ என்று எங்கள் பெயர் பொறித்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அடுத்த அரை மணியில் பனிமூட்டம் மிகுந்துவிட்டதால் 9.30 மணிக்குப் பிறகு உள்ள பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். காத்மண்டு கோயில்களையும் கடைத் தெருக்களையும் பார்க்காத ஏமாற்றத்தை மறந்தேவிட்டோம்.

எங்களை அழைத்துச் சென்ற நிறுவனத்தின் திட்டமிடுதலும், முன்யோசனையையும், நிர்வாகத் திறமையையும் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சமையற்காரர்கள், சாமான்கள், பாத்திரங்கள், சாப்பாடு கட்டிக்கொடுக்க டப்பாக்கள், ஸ்பூன்கள், காகித கைக்குட்டைகள் எல்லாம் கொண்டு வந்தாலும் அந்தந்த ஊர்களில் சமைக்க ஏற்பாடு, இடம், காய்கறி, இலை, எத்தனை... எத்தனை! தொலைதூரத்திலிருந்தே இவை அனைத்தையும் முன்னேற்பாடாகச் செய்து ஒரு தடங்கலும் இன்றி எப்படிக் கவனித்துக் கொண்டார்கள்! வேளை தவறாமல் சூடாக, சுவையாக உணவு, கோதுமை ரவை உப்புமா, தக்காளித் தொக்கு, வெண் பொங்கல், தொட்டுக்கொள்ள கொத்சு (வைணவக் குடும்பங்களில் செய்யும் ‘பச்சபுளி’), மிருதுவான சப்பாத்தி, உருளைக் கிழங்கு மசாலா (வெங்காயம் இல்லாமல் இப்படிச் சுவையாக செய்ய முடியுமா?) தாளிச்சுக் கொட்டின தயிர் சாதம், ஊறுகாய். நாக்கும், மனதும் மறக்க முடியாது.

ஒரு க்ஷேத்ராடனம் முடிந்ததும் ஒரு விருந்து வைப்பது வழக்கம். ‘ததியாராதனை’ என்று சொல்வார்கள். ஊரடங்கு சமயத்திலும் காத்மண்டுவில் அதைக்கூட அவர்கள் விடவில்லை. பாயாசம், தயிர் வடை உட்பட விருந்து. கவனித்துப் பரிமாறினார்கள். இந்த கரோனா காலத்தில் எல்லாமே முடங்கிவிட்டபோதும் அந்த நாட்களின் பசுமையான நினைவுகள் நீங்காமல் இருக்கின்றன.

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com.

ஓவியம்: வெங்கி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்