இந்த கரோனா காலத்தில் தினசரி வாழ்க்கையே சிக்கலாக இருக்கிறது. இரவில் படுக்கையில் சாய்ந்து, விளக்கை அணைத்தேன். கண்ணை மூடினால் உறக்கம் வந்தால்தானே? மனதில் ‘மெஷின்’ ஓடுகிறது. தாறுமாறாக எண்ணங்கள், இடியாப்பச் சிக்கலாக, பூனைக் குட்டியின் கைகளில் சிக்கிய நூல் கண்டாக இருக்கின்றன. பயம், குழப்பம், எதிர்மறை எண்ணங்கள். ஹும்.. இது உதவாது என்று எழுந்து உட்கார்ந்தேன்.
ஆஞ்சநேயரை மனதில் நினைத்துக் கொண்டு ‘அசாத்யத்தையும் எளிதாக முடித்துக் கொடுப்பவனே’ என்ற ஸ்லோகத்தை கூறிக்கொண்டே உறங்கிவிட்டேன்.
எப்போதும் எனக்கு, பின் இரவில் 3 மணிக்கு திடீரென்று விழிப்பு வந்து, பல பிரச்சினைகள் தெளிவாகும். மறந்த பெயர்கள், பொருள்களை வைத்து மறந்த இடம் நினைவுக்கு வரும். இதற்கு '3 A.M. Spark' என்று பெயரிட்டு இருந்தேன். அதே மாதிரி இந்தப் பின்னிரவிலும் சில எண்ணங்கள் தோன்றின. எதிர்மறை எண்ணங்களை விலக்கி, அல்ல... அல்ல... முறியடித்து நேர்மறை எண்ணங்களை எப்படி அதிகமாக்குவது என்பது பற்றிய யோசனை.
விழிப்புற்ற மனம் பட்டியல் இடத் தொடங்கியது. நிகழ்வுகள், கற்ற பாடங்கள், செய்த தவறுகள், செய்யத் தவறியவை. இவற்றின் மூலம் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி, பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்? இதுதான் ஏழு நாட்களில் ஏழு செயல்கள்!
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 37: எம்ஜிஆரின் உபசரிப்பும், ஜன்னலுக்கு அப்பால் நீலக்கடலும்!
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 36: அமெரிக்காவில் பூரி செய்த காலம்
1. நல்ல நிகழ்வுகள்
நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தாம் நம் மனதில் உழன்றுகொண்டே இருக்கும். நடு முதுகில் ஏற்பட்ட அரிப்புபோல சொறியவும் முடியாது, புறக்கணிக்கவும் முடியாது. அதுபோலத்தான் நம்மை வருத்தும் எதிர்மறையான எண்ணங்கள். சற்று முயன்று அவற்றை ஒதுக்கி வையுங்கள். ‘நன்றல்லது அன்றே மறப்பது நன்று’. கண்டிப்பாக நமக்குச் சில நல்ல நிகழ்வுகளும் நடந்திருக்கும். அவற்றை நினைவுகூருங்கள். ஒளி இருளை நீக்குவதுபோல இவை நம்மை எதிர்மறை எண்ணங்களில் இருந்து மீட்கும். நமது கண்ணோட்டமே மாறிவிடும். நம்மை வருத்தியவை துச்சமாகத் தோன்றும்.
2. நன்றி மறப்பது நன்றன்று
காலத்தால் செய்த உதவி. தக்க சமயத்தில் நமக்குத் தேவையான உதவியைச் செய்தவரை மறக்காதீர்கள். உளமார்ந்த நன்றியைக் கூறுங்கள். இது மிக முக்கியம். முடிந்தால் நேரில் சென்று தெரிவியுங்கள். முடியாவிடில் கடிதம் எழுதுங்கள். தொலைபேசியில் கூறுங்கள். கணினி தபால் அனுப்புங்கள். எப்படிச் சொல்வதானாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் செய்த உதவியை விவரித்து, அது உங்கள் வாழ்வில் எவ்வாறு மாற்றத்தையோ, முன்னேற்றத்தையோ ஏற்படுத்தியது என்பதை விளக்குங்கள். சிறிய உதவியானாலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாமே!
3. எதிர்கால இலக்குகள், கனவுகள்
எல்லாருக்கும் வாழ்வில் அடைய வேண்டிய அல்லது ஆசைப்படும் இலக்குகள் இருக்கும். சிறியதோ, பெரியதோ! ஹும் இதெல்லாம் பகல் கனவு, அடைய முடியாதவை, ஆசைப்படுவது வியர்த்தம் என்பது போன்ற எண்ணங்கள் நம் உள்ளத்தை பலவீனப்படுத்தும். கண்டிப்பாகக் கற்பனை செய்து பாருங்கள். அவற்றை அடைவதுபோல் கனவு காணுங்கள். இலக்கை அடைந்தால் வாழ்க்கை எப்படி மாறும் என்று கற்பனை செய்யுங்கள். கனவு காணுங்கள். இந்தக் கற்பனையும் கனவும் கண்டிப்பாக உங்களுக்குள் ஒரு தூண்டுதலையும் உந்துதலையும் ஏற்படுத்துவதை உணர்வீர்கள். கனவை நனவாக்க உற்சாகத்தோடும், உறுதியோடும் செயல்படுவீர்கள்.
4. சுற்றியிருக்கும் சின்ன சின்ன சந்தோஷங்கள்
தினசரி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சுற்றுப்புறத்தை கவனியுங்கள். ஜன்னல் வழியே தெரியும் காற்றில் அசையும் மரங்கள், அவற்றில் பலதரப்பட்ட பச்சை வண்ணத்தில் பலவிதமான இலைகள், பறவைகள், வேலியில் ஒன்றை ஒன்று துரத்தி ஓடும் அணில்கள், காற்று ஏதாவது ஒரு மணத்தைத் தாங்கி உங்களைக் கடக்கக் கூடும், பூவின் மணம், புதிதாக வெட்டப்பட்ட புல்லின் மணம், அடுத்த வீட்டில் ஏதோ வறுக்கும் மணம், ஏன் பசுஞ்சாணத்தின் இயற்கை மணம்... சில கணங்கள் அவற்றை அனுபவியுங்கள். தூரத்தில் ஒலிக்கும் கோவில் மணி, காய்கறி விற்கும் குரல், குழந்தைகள் விளையாடும் கூச்சல், ஆட்டோ, வண்டிகள் போகும் ஒலி, மாலையில் பறவைகள் கூட்டிலடையும்போது ஏற்படும் இரைச்சல், அணிலின் ‘கீச் கீச்’... எத்தனை ஒலிகள்! கொஞ்சம் வேலையிலிருந்து கவனத்தை விலக்கிவைத்து இவற்றை அனுபவியுங்கள். எத்தனை சின்ன சின்ன சந்தோஷங்கள்!
5. விலையற்ற தானம்
விலையற்ற ஆனால், விலை மதிப்பில்லாத தானம் எது தெரியுமா? உங்கள் பொன்னான நேரம். உங்கள் வேலை நேரத்தை ஒழுங்குபடுத்தி கொஞ்ச நேரத்தை மிச்சப்படுத்துங்கள். அதை யாருக்காகவாவது செலவழியுங்கள். கேட்காமலேயே கொடுங்கள். என் தந்தை எனக்குச் சொன்னார்: ‘‘இரண்டு விஷயங்களை நீ சொல்லக் கூடாது. ஒன்று நேரமில்லை என்று சொல்வது. மற்றொன்று அலுப்பும், சலிப்புமாக இருக்கிறேன் என்பது.
நேரம் என்பது தானாக வராது. நாம்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அரை மணி முன்னதாக எழுங்கள். அல்லது அரை மணி தாமதமாக உறங்கச் செல்லுங்கள். இப்படிச் சேமித்த நேரத்தை யாருக்கு தானம் கொடுக்க வேண்டும் தெரியுமா? தனியாக வசிக்கும் ஒருவருக்கு. அவருடன் ஒரு நேரம் சாப்பிடுங்கள். வெளியே அழைத்துச் செல்லுங்கள். அல்லது நல்ல உணவை எடுத்துப்போய் அவருடன் சேர்ந்து உண்ணுங்கள். அவருக்குத் தேவையான ஒரு உதவியைச் செய்யுங்கள். வேண்டியவற்றை வாங்கிக் கொடுத்தல், மின் கட்டணம், வீட்டு வரி முதலியன செலுத்துதல், வங்கி வேலைகள் எதுவானாலும் கேட்டுச் செய்யுங்கள். இவைகூட வேண்டாம். தனிமையில் இருக்கும் அவருடன் சற்று நேரம் செலவழியுங்கள். இதுதான் விலைமதிப்பற்ற தானம்.
6. புன்னகையை விதைத்திடுங்கள்
வழியிலோ, கடையிலோ முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒருவருக்குச் சின்ன உதவி செய்யுங்கள். கதவைத் திறந்து பிடித்துக் கொள்ளுங்கள். கையிலிருந்து விழுந்ததை எடுத்துக்கொடுங்கள். இதைச் செய்யும்போது அவர் முகம் நோக்கிப் புன்னகை செய்யுங்கள். எதிர்பாராத உதவி, எதிர்பாராத புன்னகை. அவரது முகத்தில் ஒரு பதில் புன்னகை. அல்லது ஒரு புன்னகையின் தொடக்கமாவது விளைவிப்பதைப் பார்ப்பீர்கள். பல தடவை பணியிடத்தில் மேலதிகாரியை வராண்டாவில் கடக்கும்போது ‘குட் மார்னிங்’ கூறினால் அதை அவர் ஒரு தலையசைப்போடு ஏற்றுக்கொள்வதைப் பார்க்கிறோம்.
அடுத்த முறை கடக்கும்போது கை கூப்பி வணக்கம் சொல்லுங்கள். அது குட்மார்னிங் ஆகக்கூட இருக்கலாம். அவர் கைகள் அவர் அறியாமல் கூப்பிவிடும். அதேபோல் ஒரு கடையில் நுழைந்ததும் நம் தேவையை கவனிக்க வரும் பணியாளருக்கு ஒரு கும்பிடும், ஒரு புன்னகையையும் அளியுங்கள். அவர் முகம் தளர்ந்து ஒரு அரைப் புன்னகையாவது மலரும். அடுத்த முறை நீங்கள் நுழையும்போதே அடையாளம் கண்டுகொள்வார்.
நீங்கள் காரிலோ, பேருந்திலோ போய்க்கொண்டிருக்கும்போது, நாற்சந்தியில் பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும்போது, அருகில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஒரு பெண்மணி ‘பளிச்’சென்று உடை உடுத்தியிருக்கலாம். அவர் உங்கள் பக்கம் தற்செயலாகத் திரும்பினால் ஒரு புன்னகையை வீசிக் கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் சேர்த்து உடையைக் காட்டி ‘சூப்பர்’ என்று சைகை செய்யுங்கள். எதிர்பாராத சின்ன சந்தோஷத்தை விதைத்து விடுவீர்கள். நீங்கள் பெண்ணாக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். ஆணாக இருந்தால் பார்வையை அவசரமாக விலக்கிக் கொள்ளுங்கள்!
காரில் போகும் ஒரு குழந்தை வெளியில் வேடிக்கை பார்க்கலாம். ஒரு புன்னகை, கை அசைப்பு போதும். அதுவும் சற்று வெட்கத்துடன் புன்னகைத்துக் கையை அசைக்கும். அதை கவனிக்கும் அதன் தாய் உங்கள் பக்கம் பார்த்தால் அவருக்கும் ஒரு புன்னகை. சின்ன சின்ன பரஸ்பர சந்தோஷம். இந்தப் புன்னகையை விதைப்பதால் பிறர் வாழ்விலும் உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சியான தருணங்கள் விளையும்.
7. நம் வாழ்வின் வரங்கள்
உங்கள் வாழ்வில் ஏதோ ஒரு நிகழ்ச்சியை, அது மிக அற்பமானதாகக்கூட இருக்கலாம். அதைக் கடவுள் தந்த வரமாக நினைப்பீர்கள். யாரோ ஒருவர், உங்கள் துணைவரோ, நண்பரோ, உறவினரோ, ஒரு பணியாளரோ உங்களுக்கு வாய்த்த ஆசியாகவோ, வரமாகவோ அமைந்திருப்பார்கள். அதற்கு ஆண்டவனுக்கு நன்றி தெரிவிப்பீர்கள். இந்த மாதிரி மூன்றை நினைவுகூர்ந்து எழுதுங்கள். சிந்தித்துப் பாருங்கள். இவையின்றி வாழ்வு எப்படிக் குறையுள்ளதாக இருக்கும், இவற்றால் வாழ்க்கை எப்படி நிறைவுற்றிருக்கிறது என்று நினைத்து சந்தோஷப்படுங்கள்.
அறையை நிறைக்கச் சொன்னால் அதில் வைக்கோலை அடைத்த மகனைப் போல் இருக்காமல், ஒரு விளக்கை ஏற்றி வைத்து அறையில் ஒளியை நிறைத்த மகனைப் போல் இருங்கள். மனமென்னும் அறையில் இருக்கும் குழப்பங்கள் எதிர்மறை எண்ணங்கள் என்கிற இருளை நீக்க, இந்த ஏழு செயல்களால், நேர்மறை எண்ணங்களான ஒளியை நிரப்புங்கள்.
மறவாதீர். விளக்கானது தானும் பிரகாசமாய், சுற்றுப்புறத்தையும் ஒளியால் நிறைக்கிறது. இந்த ஏழும் உங்களையும் சுற்றுப்புறத்தையும் நல்லவிதமாக நிச்சயம் மாற்றும்!
சந்திப்போம்... சிந்திப்போம்...
கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com.
ஓவியம்: வெங்கி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago