சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 36: அமெரிக்காவில் பூரி செய்த காலம்

By செய்திப்பிரிவு

அது 1964, மார்ச் மாதம். என் மேற்படிப்புத் தேர்வை முடித்து, முடிவுகள் வெளியாகக் காத்திருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அந்தப் ‘பன்னாட்டு வாழ்க்கையும் பரிமாற்றமும்’ என்கிற விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்திருந்தேன். தேர்வு மும்முரத்தில் அதைப் பற்றி மறந்தேவிட்டேன். இப்போது பாஸா, ஃபெயிலா என்று மனத்தின் நகங்களைக் கடித்துக்கொண்டிருக்கும்போதுதான் அந்தக் கடிதம் வந்தது. இப்போது ஒட்டிக்கு ரெட்டியாக எதிர்பார்ப்புகள். முதலாவது சாதகமாக வந்துவிட்டது. அதாவது நான் பாஸ். இரண்டாவது பற்றி ஒரு சந்தேகம். அந்தக் கடிதத்தில் என்னை முதற் சுற்றில் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், நேர்முகத் தேர்வுக்கு வரும்படி தேதி குறித்திருந்தார்கள். என் வயது 25-க்கு மேலாயிற்றே. முதல் சுற்றில் வயதைக் கவனிக்காமலா இருந்திருப்பார்கள். போய்த்தான் பார்ப்போமே என்று நேர்காணலுக்குப் போனேன்.

இந்தியாவிலிருந்து மூன்று குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், பலர் 19 - 21 வயதுக்காரர்கள் ஆக இருப்பதால், குழுக்களுக்குத் தலைவர்களாகச் சற்று முதிர்ச்சியும் அனுபவமும் உள்ள மூவரைத் தேர்ந்து எடுத்திருப்பதாகவும், அதில் நான் ஒருவர் என்றும் கூறினர். பிறகென்ன, என் இரண்டாவது எதிர்பார்ப்பும் நிறைவேறிவிட்டது.

நான் தேர்வுக்குப் படிக்கும்போது என்னை வீட்டுப் பொறுப்புகளிலிருந்து (இரண்டு குழந்தைகள்) விடுவிக்க மூன்று மாதங்களுக்கு முன்பேயே என் தாயாரும், மாமியாரும் வந்திருந்தார்கள். இப்போது இந்த அமெரிக்கப் பயணத்துக்காக மேலும் சில மாதங்கள் தங்கும்படி வேண்டிக்கொண்டேன். என் கணவரோ, ‘‘மூன்று மாதங்களாக நான் உன்னை இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணி வரைதான் பார்க்கிறேன். அதனால் பெரிய வித்தியாசம் இருக்காது. போய் வா’’ என்றார்.

மூன்று குழுக்களும் டெல்லியில் கூடினோம். மூன்று நாட்கள் எங்களுக்கு அமெரிக்க வாழ்க்கை முறை பற்றியும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் ‘பாடம்’ எடுத்தார்கள். சர்ச்சைக்குரிய விஷயங்கள், மதம், அரசியல் போன்றவை பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்கள். இந்திய கலாச்சாரம், வாழ்க்கை முறை பற்றி விவரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அமெரிக்க வீடுகளில் குளியலறையின் தரை மரத்தால் ஆனதாக இருக்கும். நம்மூர் போல் கல் தரை அல்ல. அதனால், தண்ணீரைக் கொட்டக் கூடாது என்பதைக்கூடச் சொன்னார்கள்!

தனி விமானத்தில் புறப்பட்டோம். வழியில் இஸ்ரேலில் இருந்தும் இத்தாலியில் இருந்தும் குழுவினர் சேர்ந்து கொண்டார்கள். சிறிது நேரத்திலேயே அறிமுகம் செய்துகொண்டு, பேசத் தொடங்கினார்கள். பாட்டு, நடனம் என்று கும்மாளம்தான். விமானப் பணிப்பெண்கள் ‘தயவுசெய்து உங்கள் இருக்கைக்குத் திரும்புங்கள். உணவு பரிமாற வேண்டும்’ என்று கெஞ்ச வேண்டியிருந்தது. அட்லாண்டிக் சமுத்திரத்தின் மீது பறக்கும்பொழுது வானம் நிர்மலமாயிருந்ததால் கப்பல்கள் ‘வெள்ளை’ வால்களுடன் போவதையும், வேறு சில விமானங்கள் பறப்பதையும் காண முடிந்தது.

நியூயார்க் விமான நிலையத்தை அடைந்தோம். விமானத்தில் உணவுடன் அளிக்கப்பட்ட ஒரு ஆப்பிள் என் கைப்பையில் இருந்தது. எந்தவிதமான தாவர, காய், கனிகளையும் அமெரிக்காவினுள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்ட ஒன்று. அதனால், என் பையைச் சோதித்த சுங்க அதிகாரி அந்த ஆப்பிளைக் குப்பைத் தொட்டியில் போடச் சொன்னார். எனக்கு மனசே வரவில்லை. என்ன செய்தேன் தெரியுமா? அந்தப் பழத்தை அவர் முன்னாலேயே ‘கச்சக் பச்சக்’ என்று கடித்துத் தின்னத் தொடங்கினேன். அவர் திகைத்து ‘என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் தின்றுகொண்டே ‘என் வயிற்றினுள் வைத்து உங்கள் நாட்டில் இறக்குமதி செய்வதற்குத் தடை இல்லையே’ என்று சொல்லி மிஞ்சிய காம்பை குப்பைத் தொட்டியில் போட்டேன். இதற்குள் என் பின்னால் வரிசை ஊர்ந்துவிட்டது. பலர் வாயை மூடிக் கொண்டு சிரித்தனர்.

பிறகு என் குழுவின் பெண்களுடன் ஒப்பனை அறைக்குச் சென்றேன். வெளியில் கையைக் கழுவிக் கொள்ளும்போது ஒரு பெண்மணி சுவரில் இருந்த ஒரு இயந்திரத்தின் பட்டனைத் தட்டி வரும் காற்றில் கைகளை உலர்த்திக்கொள்வதைப் பார்த்தேன். நானும் அவ்வாறு உலர்த்திக்கொண்டு காற்றை நிறுத்த முயன்றேன். பட்டனைத் தட்டிப் பயனில்லை. அலுத்துப்போய் திரும்பியபோது அது தானாக நின்றுவிட்டது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ஓரிரு நிமிடங்கள் மாத்திரம் ஓடி தானாக நின்றுவிடும் என்று.

அடுத்து குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவற்றை ஒரு ஓட்டையில் காசு செலுத்திப் பேழை பொருளின் அருகில் உள்ள பொத்தானை அமுக்கினால் பொருள் வந்து விழுந்தது. பிறகு நடந்தது ஒரு வேடிக்கை. வேறு ஒரு மெஷினில் ஒரு பெண்மணி ஏறி காசு போட்டு அதிலுள்ள மூன்று பட்டன்களில் ஒன்றைத் தட்டினார். ஒரு நறுமணம் கழுத்தின் கீழ் பீச்சுவதைக் கண்டேன். நான் மெஷினில் ஏறி ஆசையுடன் காசு போட்டு பட்டனைத் தட்டினேன். என்ன நடந்தது தெரியுமா? நான் நினைவில் வைக்கத் தவறியது என்ன தெரியுமா? அந்தப் பெண்மணி அமெரிக்க சராசரி உயரம். நானோ தென்னிந்திய சராசரி உயரமான 5 அடி. கண்ணும் மூக்கும் சிவந்து தண்ணீர் ஒழுக, உதடுகள் எரிய முகத்தை கழுவ விரைந்தேன். எல்லாரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தார்கள்.

நியூயார்க்கிலிருந்து விமானம் மாறி ஹர்ட்ஃபோர்ட் என்ற ஊருக்குப் போனோம். அங்கிருந்து பேருந்துகளில் வடகிழக்கில் உள்ள ‘வெர்மாண்ட்’ என்ற இடத்தை அடையப் புறப்பட்டோம். கால மாற்றத்தால் கண்ணைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்தது. ‘சாமியாடி’க்கொண்டிருந்த நான் திடீரென்று விழிப்புற்று ஜன்னல் வழியாகப் பார்த்தபோது ‘சேலம் 25 மைல்’ என்ற ஒரு பலகையைக் கடந்துகொண்டிருந்தோம். அரைகுறை விழிப்பில் எனக்கு நான் எங்கே இருக்கிறேன் என்றே புரியவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகுதான், நான் அமெரிக்காவில் இருக்கிறேன். அங்கேயும் ஒரு ‘சேலம்’ இருக்கிறது என்று நினைவுக்கு வந்தது. ‘வெர்மாண்ட்’-டில் டெல்லியில் நடந்ததுபோல் அறிமுகக் கூட்டம் நடந்தது. அன்று மாலை ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினோம். இந்திய, இத்தாலிய, இஸ்ரேலிய பாட்டுகளும், நடனங்களும் நடைபெற்றன.

அங்கிருந்து குழுக்கள் பிரிந்து ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களுக்குப் பேருந்தில் புறப்பட்டோம். எங்கள் குழுவைச் சேர்ந்த ஒரு பெண் தனக்கு முட்டையோ அல்லது அது சேர்க்கப்பட்ட உணவோ தீவிர ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று சொல்லியிருந்தார். வழியில் மதிய உணவுக்காக சைவ காய்கறி ‘சாண்ட்விச்’ வாங்கினார். ஒரு கடி கடித்தவுடனேயே நாக்கு, தொண்டை, உதடெல்லாம் அரித்து வீங்கத் தொடங்கி, உடனே குழாயடிக்குப் போய் கொப்பளித்தார். நானும் கைப்பையில் இருந்த மாத்திரையைக் கொடுத்தேன். பிறகு விசாரித்ததில், அந்த ‘சாண்ட்விச்’சில் வெண்ணையுடன் கூட ‘மயோனீஸ்’ என்கிற முட்டை சேர்த்த பொருள் தடவப்பட்டிருந்தது. சைவ ‘சாண்ட்விச்’ என்று மட்டுமே சொல்லி முட்டை சார்ந்த பொருள் கூடாது என்று சொல்லாததன் விளைவு. நல்ல படிப்பினை.

உணவகத்தில் முதன்முறையாக ‘காட்டேஜ் சீஸ்’ (நம்முடைய பனீர் போல) உடன் ஆரஞ்சு சுளைகள், லெட்யூஸ் சேர்த்த சுவையான சாலட்டை அனுபவித்தேன். பெரிய பெரிய ‘பர்கர்’ (சுத்த சைவம்)களை வாயைப் பெரிதாகத் திறந்துகொண்டு கடித்தேன். கூல்டிரிங்ஸ் குடித்தேன். வேறொரு பானம் ‘ரூட்பியர்’ என்று. அதன் சுவை பற்பசையை நினைவூட்டியது.

இதுபோல் எனக்கு ஒருமுறை நடந்தது. இத்தாலியில் சூப் வேண்டும். அதில் மீனோ, ஆட்டிறைச்சியோ, மாட்டிறைச்சியோ, முட்டையோ இருக்கக் கூடாது என்று கூறியிருந்தேன். வந்த சூப்பில் மிதந்த ஒரு துண்டு சைவமாகத் தெரியவில்லை. பணியாளரிடம் கேட்டபோது, ‘‘நோ.. மேடம்.. நீங்கள் கூறிய ஒன்றும் சேர்க்கப்படவில்லை’’ என்றார். ‘‘அப்படியானால் இது என்ன?’’ என்றபோது ‘‘ஓ... அது பன்றி இறைச்சி’’ என்றாரே பார்க்கலாம். அந்த நாலுகால் பிராணியையும் தவிர்க்க வேண்டும் என்று நான் கூறாததுதான் வினை.

ஜென்ஸியோ பல்கலைக்கழகத்தை அடைந்து அங்குள்ள மாணவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டோம். அமெரிக்க மாணவ, மாணவியருடன் அறையைப் பகிர்ந்துகொள்ளும்படியான ஏற்பாடு. மறுநாள் காலை பல்கலைக்கழக முதல்வர் எங்களைச் சந்தித்து வரவேற்றுப் பேசினார். நாங்கள் எந்தப் பிரிவிலும் எந்த வகுப்பிலும் சேர்ந்துகொள்ளலாம் என்றார். நாங்கள் அவரவர் படிப்புக்கேற்ப பாடங்களையும் வகுப்புகளையும் தேர்ந்தெடுத்தோம். நானோ மருத்துவர். எதில் சேர்வது? ஆங்கில இலக்கிய வகுப்பில் போய்ச் சேர்ந்தேன்.

அந்த நேரத்தில் பல பாகங்களிலிருந்து வந்த மாணவர்களுடன் பழகியது நல்ல அனுபவம். ஒருநாள் மாலை ‘இந்தியா நாள்’ என்று நாங்கள் ஏற்பாடு செய்தோம். கொண்டு வந்திருந்த கலைப் பொருட்களை அடுக்கி, சிறிய விளக்கங்களை எழுதி வைத்தோம். பரதம், கிராமிய நடனம், ‘பங்க்ரா’, ‘தாண்டியா’ என்று ஆடினோம். கடைசியில் ஒரு தேசபக்திப் பாடலை நான்கு பேர் பாடப் பயிற்சி செய்திருந்தோம். அதில் பல்லவி கோரஸ் ஆகவும், ஒருவர் ஒருவராக அதிலுள்ள நான்கு பகுதிகளையும் பாட இருந்தோம். நான் கடைசிப் பகுதியை பாட வேண்டும். மெட்டை நன்றாக அறிந்தாலும் அந்த இந்தி வார்த்தைகளை மனப்பாடம் செய்யவில்லை. ஒரு காகிதத்தில் எழுதிவைத்து, அதைப் பார்த்துப் பாடுவதாக இருந்தேன். மேடையில் ஏறியதும் பார்த்தால் என் கையில் அந்தப் பாடலுக்குப் பதில் வேறு ஏதோ ஒரு காகிதம். அதனால் என் முறை வந்ததும் எனக்குத் தெரிந்த 10 பைசா இந்தியில் ‘காகிதம் மாறிவிட்டது. நான் ஏதாவது உளறுவேன். சிரிக்காதீர்கள்’ என்று அழகாக அந்தப் பாட்டின் மெட்டிலேயே ‘பாடி’விட்டேன். ஆனால், நான்காவது வரியில் என்னுள் குறும்பு கொப்பளிக்க ‘கல்சட்டி, மோர்க்குழம்பு, கீரை மசியல்’ என்று முடித்து ‘கோரஸ்’ பல்லவியில் சேர்ந்துகொண்டேன். குழுவில் இருந்த தென்னிந்தியர்கள் அறைக்குள் ஓடி உருண்டு சிரித்தார்கள்.

ஒரு சனிக்கிழமையன்று ஒரு பேராசிரியர், தான் அடுத்துள்ள மாலுக்குப் போவதாகவும், நான்கு பேரை அழைத்துப் போக முடியும் என்றும் அழைத்தார். நாங்கள் பெண்கள் மூவரும் சம்பத் என்கிற ஒரு குஜராத்தி இளைஞனுமாக அவருடன் போனோம். அங்கு கார்கள் பல அடுக்குகளில் நிறுத்தப்பட்டு இருந்தன. நாங்கள் போன காரை நிறுத்தியதும் அந்தப் பேராசிரியர், ‘‘காரின் எண்ணையும், எந்த அடுக்கு மாடியில் எந்த எண்ணுடைய நிறுத்துமிடம் என்றும் குறித்துக்கொள்ளுங்கள். சரியாக இரண்டு மணி நேரத்தில் இங்கு வந்துவிடுங்கள்’’ என்று கூறி அவர் வழி சென்றார். நாங்கள் கடைகளில் சுற்றத் தொடங்கிய சிறிது நேரத்தில் சம்பத், தான் தனியாகச் சுற்றப் போவதாகவும், கார் பார்க்கில் வந்து சேர்ந்துகொள்வதாகவும் கூறிப் பிரிந்து சென்றான். இரண்டு மணி நேரம் கழித்து நாங்கள் காரை அடைந்தபோது சம்பத் இல்லை. அந்தக் காலத்தில் கைபேசி, அலைபேசி கிடையாது. கால் மணி நேரம் கழிந்தும் நோ சம்பத். பேராசிரியர், ‘‘ஒருவேளை அவர் வேறு ஒரு அடுக்கில் இருக்கக் கூடும்’’ என்றார். நாங்கள் மூவரும் தேடிப் போனோம். அவர் ஊகம் சரிதான். சம்பத் கார் எண்ணையும் நிறுத்துமிட எண்ணையும் குறித்துக்கொண்டவன், அடுக்கின் எண்ணை மறந்துவிட்டான். கடைசியில் நாங்கள் வேறொரு அடுக்கில் திரிந்து கொண்டிருந்தவனைப் பிடித்தழைத்து வந்தோம்.

ஒரு மாதம் கழித்துக் குடும்பங்களுடன் தங்க மெளன்ட் வெர்னன் (Mount Vernan) என்கிற ஊருக்குப் போனோம். சோளம் விளையும் பிரதேசம். நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டோம். நான் தங்கியது ஓர் இளம் தம்பதியுடன். அவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருந்தது. பழக சுலபமானவர்கள். குடும்ப வேலைகளில் பங்குகொண்டேன். குழந்தையோடு விளையாடினேன். அவளைத் தள்ளுவண்டியில் அழைத்துக்கொண்டு மளிகை, காய்கறி கடைக்கு ஒருநாள் போனேன். குழந்தையின் நெற்றியில் ஒட்டுப்பொட்டு. நான் பட்டுப் புடவையில். பலர் புன்னகையுடன் ‘ஹாய்’ சொன்னார்கள். ஒருவர் ‘இது உங்கள் குழந்தையா?’ என்று கேட்டார். தெருவில் இறங்கினால் சில கஜ தூரம் போவதற்குள் யாராவது ‘ஹலோ’ என்று குசலம் விசாரிப்பார்கள். காபி குடிக்க, கேக் சாப்பிட அழைப்பார்கள். எங்காவது போக வேண்டுமா என்று கேட்பார்கள். அன்பைச் சொரிந்தார்கள். பள்ளிக் கூடத்தில் இந்தியாவைப் பற்றிப் பேசினோம். அப்போது அங்குள்ள ‘எல்ம்’ (Elm) என்கிற மரங்கள் ஒருவிதமான வியாதியால் வாடத்தொடங்கி இருந்தன. அதைத் தடுப்பது, நிவாரணம் செய்வது பற்றி அந்த ஊர்க் குழு கூடியது. அதில் நாங்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டோம்.

நம்மூர் கிரிக்கெட் மாதிரி அங்கே பிரபலமான விளையாட்டு ‘பேஸ்பால்’. ஒரு நாள் நான் ஒரு மேட்ச் பார்க்கப் போனேன். பந்தைப் பிடிக்க ஒரு விளையாட்டு வீரர் எம்பிக் குதித்தார். பின் தலையைப் பின்னால் உள்ள தூணில் மோதிக்கொண்டு மயங்கி விழுந்தார். ‘பார்வையாளர்களில் யாராவது மருத்துவர் இருந்தால் வரவும்’ என்று ஒலிபெருக்கியில் அழைத்தார்கள். சில நிமிடங்கள் கழிந்தன. யாரும் இறங்குவதைப் பார்க்கவில்லை. அதனால், நான் சென்றேன். முகத்தில் தண்ணீர் தெளித்து, ரத்தக் காயம் உள்ளதா, எலும்பு முறிவு உள்ளதா என்று பரிசோதித்து, கண்களில் வெளிச்சம் அடித்து, ஆழ்ந்த மயக்கமா என்று பார்க்கும்போதே அவர் கண் விழித்தார். முகத்தில் குழப்பம். இருக்காதா? காதில் ஜிமிக்கி, அரக்கு நிறப் புடவை, நெற்றியில் பெரிய பொட்டு. நான் ‘‘ஹலோ, இன்னும் பூலோகத்தில்தான் இருக்கிறீர்கள். நான் தேவலோகத்து தேவதை அல்ல. மருத்துவர்தான்’’ என்றேன். இந்த நிகழ்வும், நான் கூறியது உட்பட மறுநாள் உள்ளூர் நாளிதழில் செய்தியாக வெளிவந்தது.

அடுத்து ஒரு அமெரிக்க - இந்தியர் குடியிருப்புக்குப் போனோம். அவர்களுடைய நடனத்தில் பங்குகொண்டோம். வீட்டில் சில இந்திய உணவு வகைகளைச் சமைத்தேன். சாம்பார் பொடி கொண்டு போயிருந்ததால் இந்திய ருசியை அறிமுகப்படுத்த முடிந்தது. உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து சமையல் நிகழ்ச்சியில் பங்குபெற முடியுமா என்று கேட்டார்கள். குடைமிளகாயில் உருளை மசாலா அடைத்து வாட்டுவதையும், பூரியும் செய்து காண்பித்தேன். படப்பிடிப்புக் குழுவினர் வீட்டிலேயே வந்து நிகழ்ச்சியைப் படம் பிடித்தார்கள். அன்று (1964) வீடியோ கேமராக்கள் இருந்தனவா அல்லது சினி கேமராக்கள்தான் உபயோகித்தார்களா எனத் தெரியவில்லை. பூரி எண்ணெயில் போட்டவுடன் உப்பி வருவது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எப்படி என்று வினவினார்கள். தரமான கோதுமை மாவு. உப்புவதற்குக் கேட்பானேன்!

துணி துவைக்கும் இயந்திரம், சமையலறைக் கழிவுகளைக் கூழாக்கி வெளியேற்றும் இயந்திரம், நகலெடுக்கும் Photocopy கருவி, Punch Card கருவி எல்லாவற்றையும் கண்டும் உபயோகித்தும் மகிழ்ந்தேன். ‘மைக்ரோவேவ்’ அப்போதுதான் உபயோகத்துக்கு வந்திருந்தது. இன்றைய கருவிபோல் அல்ல. உபயோகிக்கும்போது தள்ளி நிற்க வேண்டும். அந்தக் கதிர் அலைகள் கண்களைப் பாதிக்கும்.
அங்குள்ள வீடுகள் செங்கல், கான்கிரீட் கட்டிடங்கள் அல்ல. ‘பிளாஸ்டர் போர்டு’. இரண்டு அடுக்குகள் நடுவில் இடைவெளி. இது சூடும், குளிரும் உள்ளே வராமல் தடுக்கும்.

எங்கள் தெருவில் ஒரு அமர்க்களம் நடந்தது. ஒரு வீட்டில் வெண் போர்டில் ஒரு துளை வழியே குளவிகள் போய் வருவதைக் கண்டு மருந்து அடிப்பவர்களை விளித்திருந்தார்கள். அவர்கள் ஒரு துளை மூலம் மருந்தைச் செலுத்தத் தொடங்கியவுடன்தான் அந்த அமர்க்களம். படை படையாக நூற்றுக்கணக்கான குளவிகள் வெளிவந்தன. எல்லாரும் ஓடினார்கள். ஒருவிதமாக ‘குளவி சம்ஹாரம்’ நடந்தேறியது. மருந்தடிப்பவர்கள் முகக்கவசமும், நீண்ட கையுறைகளும் அணிந்திருந்ததால் தப்பினர்.

ஒருநாள் அந்த சம்பத் (கார் பார்க்கில் காணாமல் போனவர்) என்னைத் தொலைபேசியில் ஏக்கத்துடன் அழைத்து ‘‘தீதி... நாக்கு செத்துவிட்டது. இந்திய உணவு சமைத்து என்னைச் சாப்பிடக் கூப்பிடுங்கள்’’ என்றான். ஆண் குழந்தைகளுக்குச் சமைக்கக் கற்றுக்கொடுங்கள் என்று இதற்குத்தான் சொல்வது! பரிதாபப்பட்டு அவன் தங்கியிருந்த குடும்பத்தினரையும் சாப்பிடக் கூப்பிட்டோம்.

ஒரு மாதம் முடியும் நாள் நெருங்கியது. நெருங்கிப் பழகியவர்களைப் பிரிய நேரிடும் வருத்தம். பெட்டி (Betty) என் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘‘நீ வருவதற்கு முன், நான் எப்படி இந்த விசேத விருந்தாளியைச் சமாளிக்கப் போகிறேன் என்று கவலைப்பட்டேன். என் கவலையைப் பார்த்து ஜாக், ‘அவர் போனதும் நாம் நான்கு நாட்கள் ஒரு ஹோட்டலில் தங்கலாம். உனக்கு ஓய்வாக இருக்கும்’ என்று முன் பதிவுசெய்திருக்கிறார். ஆனால், நீ இங்கு இருந்தபோதுதான் எனக்கு நல்ல ஓய்வும் மகிழ்ச்சியும் கிடைத்தது’’ என்று கண்களில் நீருடன் கூறினாள்.

அடுத்து நாங்கள் வாஷிங்டனில் மற்ற குழுக்களைச் சந்தித்து இரண்டு நாட்கள் சுற்றிப் பார்க்கவும், அதன் பிறகு நியூயார்க்கில் மூன்று நாட்கள் என்றும் ஏற்பாடாகி இருந்தது.

வாஷிங்டனில் எல்லா சுற்றுலாத் தலங்களையும் கண்டோம். மிருகக்காட்சி சாலையில் பெயர்பெற்ற ரீவா வெள்ளைப் புலியைப் பார்த்தோம். நியூயார்க்கில் ஒரு ஹோட்டலில் 23-வது மாடியில் தங்க வைக்கப்பட்டோம். முதல் முறையாக அவ்வளவு உயரத்திலிருந்து எறும்புச் சாரி போல் வாகனங்கள் செல்வதைப் பார்த்தேன். அடுத்த நாள் ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடத்தில் ஏறியபோது எங்கள் ஹோட்டல் ‘ஜுஜுபி’ ஆகிவிட்டது. உலக வர்த்தகக் கண்காட்சி, முதன் முறையாக நியூயார்க்கில் நடந்துகொண்டு இருந்தது. எங்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டிருந்தது. போனோம். ரங்க ராட்டினங்கள், ராட்சத சுழலும் சக்கரங்கள், மேலே ஏறி மிக வேகமாக அதல பாதாளத்துக்கு இறங்கும் ரயில்கள் முதலியவற்றில் ஏறியும் பெரிய்ய்ய நீல நிற பஞ்சு மிட்டாய் தின்றும் குழந்தைகளைப் போல் குதூகலித்தோம்.

இந்தியா திரும்ப விமானம் ஏறினோம். வரும்போது இருந்த மாதிரி கும்மாளம் இல்லை. தொலைபேசி எண், விலாசம் பரிமாறிக்கொண்டோம்.

திரும்பிய பின் நிறுவனத்தின் தலைமையிடமிருந்து எங்கள் அனுபவங்களைச் சுருக்கமாக எழுதி அனுப்பச் சொல்லி கடிதம் வந்தது. அவற்றை எப்படி வார்த்தைகளால், அதுவும் சுருக்கமாக சொல்ல முடியும்? நிகழ்வுகளை அட்டவணையிடலாம். ஆனால் உணர்வுகளை, நட்பை, பந்தத்தை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியுமா?

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 mins ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்